Monday, March 17, 2008

மூன்று முனைகளில் யுத்தத்தை திறந்திருக்கும் அரசுத் தரப்பு

ஒரே சமயத்தில் மூன்று களங்களில் மூன்று வெவ்வேறு விதமான யுத்தங்களை மஹிந்த ராஜபக்ஷ அரசு எதிர்கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒரு யுத்தம் வடக்கு, கிழக்கு யுத்த முனையில் புலிகளுடன் நடக்கின்றது. கொடூரப் போராக அது வடிவெடுத்திருக்கின்றது.
அடுத்தது மேற்குலகோடு ஓர் இராஜதந்திர யுத்தம். அது இப்போது உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவுக்கும் சவால் விடும் அளவுக்கு மஹிந்தரின் தலைமையைக் கொண்டுபோய் முன்நிறுத்தியிருக்கின்றது.
மூன்றாவது யுத்த களம் இலங்கையின் ஒவ்வொரு குடிமனையினதும் அடுப்பங்கரையில் கட்டவிழ்கிறது. அது விலைவாசிப்போர்.
இப்படி மும்முனை யுத்தத்தை ஒரே சமயத்தில் திறந்துவிட்டு படுகுஷியாக இருக்கின்றது மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம்.
நிஜ யுத்தத்தில் கிழக்கில் போர் முனையில் குறிப்பிடத்தக்க வெற்றி.
அதுபோல, மேற்குலக நாடுகளுடனான இராஜதந்திரப் போரிலும் விடயம் இதுவரை வெறும் வாய் வீச்சு விவகாரமாகவும் அறிக்கைப் போராகவும் இருப்பதால் இன்றைய நிலைமை வரை வெற்றி ஏதோ தம்முடையதுதான் என்று இலங்கை இராஜதந்திரம் மனக்கோட்டை கட்டி மனதில் மகிழ்ந்து கொண்டிருக்கின்றது.
மூன்றாவது முனை அடுப்படி யுத்தம். நிஜயுத்தம் பற்றிய பிரசாரங்களை வைத்து, அடுப்படி யுத்தத்தில் தாம் எதிர்கொள்ள வேண்டிய குடும்பத் தலைவிகளை வெற்றிகரமாக சமாளித்து விடலாம் என்ற முழு நம்பிக்கை கொழும்பு அரசுக்கு.
ஆனால் ஆரம்பத்தில் இப்படி வெற்றி பற்றிய மாயையைக் காட்டும் இந்த யுத்த முனைகள், போகப் போகத்தான் தமது கைவரிசையை ஆழத்தையும், அகலத்தையும் அரசுக்கு வெளிப்படுத்தும் என்பதுதான் யதார்த்தம். அப்போது நிச்சயம் அரசுக்கு அதிர்ச்சி காத்திருக்கும் என்பதும் உறுதி.
தமிழரின் தேசிய இனப் பிரச்சினையை தனது ஆயுத வலிமை மூலம் அடக்கி விட வேண்டும் என்ற பௌத்த சிங்கள மேலாண்மை வெறிப்போக்கில் செயற்படும் மஹிந்தரின் அரசு, அதற்காக யுத்தத் தீவிரமுனைப்புக் கொண்டு காய்களை நகர்த்துகின்றது.
இந்தக் கொள்கைப் போக்குக் காரணமாக கருத்தியல் நிலைப்பாடு காரணமாக மேற்குலக ஆலோசனைகளைப் புறக்கணித்து, உதாசீனம் செய்து, மேற்குலக நல்லுறவையே நிராகரித்து, பாகிஸ்தான், சீனா போன்ற ஆசிய நாடுகளையும், ஈரான் போன்ற மேற்குலகின் அதிருப்தி அணி நாடுகளையும் அரவணைக்கவும் அது முயல்கின்றது.
இதனால் வெளிவிவகாரத்தை ஒட்டிய இராஜதந்திரப் போரில் கொழும்பின் தந்திரோபாயம் மோதி அழியப்போகின்றது என்பது வெளிப்படையாகவே தோற்றுகின்றது.
மறுபக்கத்தில் அடுப்படிப் போரின் போக்கும் அப்படித்தான் தோன்றி வருகின்றது. எகிறிவரும் விலைவாசி உயர்வின் போக்கும், பண வீக்கமும், நாட்டின் பொருளாதார சீர்கேடும், தவறான ஆட்சி நிர்வாக முறைகளும், திருத்தவே முடியாத அளவுக்கு ஊறிப் பருத்துவிட்ட ஊழல் மோசடிகளும் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் அடுப்படி யுத்தத்தில் அரசுத் தரப்பு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொள்ளப் போகின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றன. அடுக்களை அம்மணிகளின் பொறுமையை நீண்ட காலத்துக்கு வடக்கு, கிழக்கு யுத்த வெற்றிகள் பற்றிய தந்திரோபாயப் பிரசாரத்தை வைத்து ஏமாற்றிச் சமாளிக்க முடியாது. ஒருநாள் எல்லை மீறும்போது அது உடைப்பெடுத்த வெள்ளமாகிச் சீறிப்பாயும்.
அதுபோலவே நிஜ யுத்தத்தின் போக்கும் கூட. இப்போதைக்கு மஹிந்தர் அரசுக்கு சார்பானது போலத் தென்பட்டாலும் காலக்கிரமத்தில் அதன் நிலை 180 பாகை தலைகீழாகத் திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இவ்விடயத்தில் கடந்த காலத்தின் அனுபவப்பாடம் பட்டறிவு அத்தகைய எண்ணப்பாட்டைத்தான் நமக்குத் தந்து நிற்கின்றது.
அதுவும், இந்த யுத்தத்தை முன்னெடுக்கும் தீவிரம் தொடர்பாக அதிகாரத்தலைமை வாய்ப்பந்தல் போட்ட வேகம் இப்போது சோடாப்புட்டி "காஸ்' போல மெல்லக் குறைந்து வரும் சூழ்நிலையில் களமுனையில் படை முனை முன்நகர்வுகளும் எதிர்பார்த்த வேகத்தை விட மந்த நிலைக்குச் சென்றிருக்கும் பின்னணியில் இத்தகைய சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாததே.
தான் திறந்திருக்கும் மும்முனை யுத்தங்களிலும் மஹிந்தரின் அரசுக்கு முட்பாதையே காத்திருக்கின்றது என்பது தெளிவாகவே வெளிப்படுகின்றது. அதை அரசு எப்படித் தாண்டப் போகின்றது என்பதற்குக் காலம்தான் பதில் கூறும்.
இந்த மும்முனை யுத்தங்களும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கின்றன என்பதும்
ஒன்றில் ஏற்படக்கூடிய பின்னடைவு மற்றதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதும்
மஹிந்தரின் நிர்வாகத்துக்கு உள்ள மற்றொரு தலையிடி விவகாரமாகும்.


நன்றி :- உதயன்

0 Comments: