Wednesday, March 12, 2008

கோடரிக் காம்புகளாகும் தரப்புகள்

இலங்கையின் பாரம்பரிய பூர்வீக குடிகளுள் ஒன்றான தமிழ் இனத்தின் அபிலாஷை அல்லது வேணவா மூன்று மூலாதாரக் கோட்பாடுகள் மூலம் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.
அவை: தமிழரின் தாயகம், தமிழரின் தேசியம் மற்றும் தமிழரின் தன்னாட்சி அதிகாரம் அல்லது சுயநிர்ணய உரிமை.
அதிகாரப் பகிர்வுக்கான அல்லது பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான ஈழத் தமிழர்களின் இன்றைய கிளர்ச்சியின் அடிப்படையாக விளங்குபவை இந்த மூன்று விடயங்களும்தான்.
இந்த மூன்று அம்சங்களையும் அடியோடு அழித்துத் துவம்சம் செய்வதன் மூலம் தமிழினத்தை அடிமைப்படுத்தி, அவர்களின் தேசிய உரிமைகளை நிராகரித்து, பௌத்த சிங்களத் தனித்துவ மேலாண்மையை இந்த இலங்கைத் தீவில் ஏகபோக உரிமையாக நிலைநிறுத்தி விடலாம் எனக் கனவு காண்கின்றது தென்னிலங்கை.
திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் தாயகத்தின் புவியியல் விஸ்தீரணத்தைத் துண்டாடிச் சிதைத்து
ஒன்றுபட்ட ஒரு தேசிய இனக் கட்டமைப்பாகத் தமிழ் இனம் விளங்குவதற்கு அத்திபாரமான அடிப்படைகளை ஒவ்வொன்றாகத் தகர்த்து
தமிழரின் தன்னாட்சி உரிமையை மறுத்து, தான் போடும் எலும்புத் துண்டுப் பிச்சைகளை நன்றி விசுவாசத்தோடு வாலாட்டி ஏற்கும் புல்லுருவிகளைக் கொண்டு, அதிகாரப் பரவலாக்கம் செய்துவிட்டதாக உலகுக்கு மாயப்படம் காட்டி
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக் கோரிக்கைகளை அடியோடு நிர்மூலமாக்கி விடலாம் என்பதே சிங்களத் தலைமைகளின் தந்திரோபாய மூலமாகும்.
இந்தப் பின்புலத்தில்தான்
முதலில் தமிழரின் தனித்துவ இருப்புக்கு ஆதாரமான மொழி உரிமை பறிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை என்பன மறுக்கப்பட்டன.
பின்னர் பாரம்பரிய நிலங்கள் மீதான சொத்துரிமைக்கும், காணி உரிமைக்கும் ஆப்பு வைக்கப்பட்டது.
அதன் தொடராக சமய, பண்பாட்டு உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கப்பட்டது.
அந்த வரிசையில் இப்போது யுத்தம், கெடுபிடிச் சட்டங்கள் ஆகியவற்றின் பெயரால் தமிழரின் வாழ்வியல் உரிமையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றது.
இந்த உரிமை மறுப்புகளுக்கும், பறிப்புகளுக்கும் அரசுத் தலைமை பல்வேறு கருவிகளைக் காலத்துக்குக் காலம் பயன்படுத்தி வந்திருக்கின்றது.
தமிழரின் வாழ்வியல் கட்டமைப்பை அழித்துச் சிதைப்பதற்கு ஆரம்பத்தில் வேளைக்கு வேளை இனக்கலவரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றின் மூலம் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டு, அவர்களின் பெருந்தொகைச் சொத்துகள் சூறையாடப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டு, அழிக்கப்பட்டமை மட்டுமல்லாமல், சிங்களப் பேரின வெறி தொடர்பான ஓர் அச்சுறுத்தல் அல்லது பீதி, பயம், திகில் ஏற்படுத்தும் மிரட்டல் உணர்வைத் தமிழர் மனங்களில் நிரந்தரமாக விதைக்கும் மேலாதிக்கச் சிந்தனைக்கும் செயல்வடிவம் கொடுக்கப்பட்டது.
தென்னிலங்கை எதேச்சாதிகாரத் தமிழினத்தை அடக்கி, ஒடுக்குவதற்குக் காலத்துக்குக் காலம் கையில் எடுத்த மற்றொரு கருவி சட்டமாக்கும் அதிகாரமாகும்.
சிங்களக் கொடுங்கோன்மையின் இனவாத மேலாதிக்கம் அரசோச்சும் நாடாளுமன்றத்தை, குடியியல் ரீதியான பெரும்பான்மை என்ற அட்சரகணிதக் கணக்கை வைத்துக்கொண்டு இதற்கு வசதியாக வாய்ப்பாக பயன்படுத்தியது தென்னிலங்கை.
சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அவர்களின் நியாய பூர்வமான உரிமைகளைப் பறிக்கின்ற அநீதியான சட்ட மூலங்கள் இங்குதான் யாக்கப்பட்டன. தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதியையும் தானே தீர்மானிக்கின்ற அடக்கு முறைஅரசமைப்புகளைத் தமிழரின் சம்மதமோ, ஒப்புதலோ இன்றி, அவர்கள் மீது பலவந்தமாகத் திணிக்கும் நடவடிக்கை வரை சகல ஜனநாயகக் கேலிக் கூத்துகளுக்கும், சட்ட அநியாயங்களுக்கும் இலங்கை நாடாளுமன்றமே மையக் களமாகவும் ஊற்றுக்கண்ணாகவும் விளங்கியது.
ஈழத் தமிழர்களின் தனித் தாயகத்தைக் கூறு போட்டுப் பிரித்துத் துண்டாடும் பௌதிக நடவடிக்கையைத் தமிழர் தாயகத்தில் திட்மிட்ட சிங்களக் குடியேற்றங்களும், இனக்கலவரங்கள் மூலமான அச்சுறுத்தலும் ஆரம்பத்தில் முன்னெடுத்தன என்றால், இப்போது அதே செயற்பாடு நாடாளுமன்றப் பெரும்பான்மையுடன் கூடிய சட்ட வல்லாதிக்கம், அதற்கு அமைய இயங்கும் நீதித்துறை மற்றும் படைப்பல நடவடிக்கை ஆகியவற்றின் ஆதரவோடு மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழினத்தின் தனித்துவத்தைச் சிதைக்கும் தனது ஒரே சிந்தனை இலக்குக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு இப்போது நேரடியாகத் தனது படைப்பலத்தை இராணுவச் செயற்பாடுகள் மூலம் "பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கை' என்ற பெயரில் ஒப்பேற்றுகின்றது கொழும்பு அரசு.
"இலங்கைக்கு சுதந்திரம் அளித்தல்' என்ற நோக்கில், அதுவரை இலங்கையைத் தனது காலனித்துவப் பிடிக்குள் வைத்திருந்த பிரிட்டன், அப்பிடியைக் கைவிட்டு இலங்கைத் தீவின் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரத்தைக் கையளித்தமை முதல் இன்று வரையான ஆறு தசாப்த காலத்தில் நடந்தேறிய கொடூரத்தின் சுருக்கம் இதுதான்.
தமிழர் தாயகத்தின் தனித்துவத்தைச் சிதைத்து அழிக்கும் வகையில் பல்வேறு கபடத் திட்டங்களை இவ்வாறு முனைப்புடன் செயற்படுத்தி வரும் கொழும்பின் கைகளில் தெரிந்தோ, ö தரியாமலோ சிக்கியிருக்கும் சில தமிழர் தரப்புகள், பிரதேசவாதத்தின் பெயரால் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் கொழும்பின் சதி எத்தனத்துக்கு கருவிகளாக இருந்து உதவும் வகையில் "கோடரிக் காம்பு' களாகமாறியிருப்பதே தமிழினத்துக்கு நேர்ந்துள்ள பெரும் சாபக்கேடாகும்.
நன்றி :- உதயன்

0 Comments: