Sunday, March 2, 2008

தமிழீழத்தை இருட்டாக்கிய சிங்கள வெறியருக்கு தமிழக மின்சாரம்!

இலங்கை தமிழீழப் பகுதிக்குக் கடந்த 25 ஆண்டுகாலமாக மின்சாரம் அளிப்பதை சிங்கள அரசு அறவே நிறுத்திவிட்டது. இரவு நேரங்களில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். மண்ணெண்ணெய் விளக்குகள் எரிப்பதற்கு மண்ணெண்ணெயும் வழங்க சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழ்க் குழந்தைகளின் படிப்பு இதன் விளைவாகக் கெடுகிறது. மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவர்கள் தடுமாறுகிறார்கள். நோயாளிகள் படும் துயரம் அளவுகடந்ததாகும்.

தமிழ்நாட்டிலும் மின்சாரப் பற்றாக்குறையினால் மக்கள் படாதபாடுகின்றனர். விவசாயிகளுக்கு போமான அளவு மின்சாரம் கிடைக்காததினால் விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தொழிற்சாலைகள் மின்சாரப் பற்றாக்குறையின் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டில் அமையப்போகும் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து அடுத்த ஆண்டு முதல் இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்திய அரசு முன்வந்துள்ளது.

இலங்கையில் மிகக் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவிவருவதால் அதைப்போக்குவதற்கு பல்வேறு மின் திட்டங்ளை நிறைவேற்றித்தர இந்தியா முன்வந்து இதற்கான உடன்பாடு அண்மையில் இருநாடுகளுக்கிடையேயும் கையெழுத்தாகியுள்ளது. ஆனால் புதிய மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு இலங்கைக்கு மின்சாரம் கிடைக்கக் குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடனடியாக அடுத்த ஆண்டிலிருந்து கூடங்குளம் மின்சாரத்தினை இலங்கைக்கு வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய அதிகாரிகள் அடங்கிய குழு கொழும்பு செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் தமிழர்களால் உற்பத்திசெய்யப்படுகிற மின்சாரம் தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையைப் போக்குவதற்கு முழுமையாகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்க இந்திய அரசு முன்வரவில்லை. அவ்வாறு செய்யவேண்டும என வலியுறுத்த தமிழக அரசும் தயாராக இல்லை.

ஆனால் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்கிற சிங்கள அரசுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்களால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாரி வழங்க இந்திய அரசு முன்வந்திருக்கிறது.

நமது விரலைக்கொண்டே நமது சகோதரத் தமிழர்களின் கண்களில் குத்தும் வேலை இதுவாகும்.

இப்போது பகல் வேளைகளில் சிங்கள வெறியர்கள் தமிழர்களை வேட்டையாடுகின்றனர். இனி இந்தியா வழங்கவிருக்கும் மின்சாரத்தின் துணையோடும் இரவு நேரங்களிலும் தமிழர்களை அவர்கள் வேட்டையாடுவார்கள்.

தமிழகத் தமிழர்கள் உணர்வற்றவர்களாக ஏமாளிகளாக இருக்கும் வரையில் இந்நிலை ஒருபோதும் மாறாது.

நன்றி - தென்செய்தி

0 Comments: