Monday, March 3, 2008

விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகள்

மன்னார் வடக்கு, வவுனியாவின் தென்மேற்கு, மணலாற்றின் கொக்குத்தொடுவாய் கரையோரம் ஆகிய பகுதிகளில் மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசு தனது படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்ற அதேசமயம் படை அதிகரிகள் போர் தொடர்பாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மற்றும் கால எல்லைகள் தெடர்பான அறிவித்தல்களின் அழுத்தம் குறைந்து வருகின்றது.

அண்மையில் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ஒருகால அவகாசத்திற்குள் தற்போது நடைபெற்று வரும் போருக்கு முடிவைக் கண்டுவிட முடியாது என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளது அனைத்துலக மட்டத்தில் ஆச்சாரியங்களை தோற்றுவித்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அடுத்து, அடுத்து கால எல்லைகளை அறிவித்து வந்தவர் சரத் பொன்சேகா என்பதனை யாரும் மறந்துவிட முடியாது.

அதேபோன்ற கருத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவும் தெரிவித்திருந்தார். அதாவது போரை முற்றாக முடிவுக்கு கொண்டு வருவோம் என நாம் எப்போதும் கூறவில்லை, நாம் அதற்கான முடிவுத் நாளையும் அறிவிக்கவில்லை. விடுதலைப் புலிகளை பலவீனமாக்கி வருகின்றோமே தவிர அவர்களை முற்றாக முறியடிக்க முடியாது என அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த பல வாரங்களாக மன்னார் மற்றும் மணலாற்று களமுனைகளில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் படைத்தரப்பு தமது முன்னைய நிலைகளில் இருந்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதன் காரணம் என்ன? என்பது தான் பலரது கேள்விகள்.

படைத்தரப்போ அல்லது அரசு தரப்போ தென்னிலங்கை மக்களுக்கு தெரிவிப்பதை போல வட போர்முனை இல்லை என்பதும், அங்கு படையினரின் முன்நகர்வுகளும் அவர்கள் எதிர்பார்த்ததை போல இருக்கவில்லை என்பதும் அதற்கான காரணங்களாக இருக்கலாம்.

கடந்த ஆண்டு கிழக்கில் படை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த சமயத்தில் இராணுவம் புதிதாக 57 ஆவது தாக்குதல் டிவிசன் படையணியை அமைத்து வன்னிக்கான களமுனையை மன்னாரில் திறந்திருந்தது. பற்றைக்காடுகளும், திறந்த வெளிகளும் நிறைந்த மன்னாhரின் பெரும்பகுதி படையினருக்கு சாதகமானதாக இருக்கலாம் என்பது அரசின் கணிப்பாக இருந்திருக்கலாம்.

'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை காலப்பகுதியில் மேற்கொண்ட மன்னார் பகுதி மீதான படை நடவடிக்கைகள் அரசிற்கு இந்த நம்பிக்கையை கொடுத்திருந்கலாம். கடந்த ஆண்டு மடுப்பகுதியை கைப்பற்றும் முகமாக புதிதாக அமைக்கப்பட்ட 57 ஆவது டிவிசன் வவுனியாவின் தென்றகில் இருந்து தாக்குதலை ஆரம்பித்தது.

கடந்த ஆண்டின் மார்ச் மாதம் 15 ஆம் நாள் மன்னார் வவுனியா எல்லைப்புறக் கிராமங்களான முள்ளிக்குளம், குறிசுட்டான், பெரியபண்டிவிரிச்சான் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பில் பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதல்களை நடத்தப்பட்டதுடன், மார்ச் 23 ஆம் நாள் மடுவை நோக்கிய முன்நகர்வு முயற்சிகள் ஆரம்பமாகின.

வடபோர்முனையின் முகமாலை, நகர்கோவில், கிளாலி அச்சில் நிலைக்கொண்டுள்ள 53 ஆவது டிவிசன் படையணியின் தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்ட இந்த படையணி விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளை நோக்கி முன்நகர்ந்த போது விடுதலைப் புலிகள் எதிர்த்தாக்குதல்களை நடத்தி வந்திருந்தனர்.

எனினும் கடந்த ஜுன் மாதம் விளாத்திக்குளம் மற்றும் முள்ளிக்குளம் பகுதியில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலுக்கு பின்னர் அந்த டிவிசனின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் மானவடு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன், அந்த படையணியினால் அதிகளவில் நகர முடியவில்லை. அதாவது அந்த வலிந்த தாக்குதல் நடைபெற்று 8 மாதங்கள் கடந்த நிலையிலும் அவர்களின் மடு நோக்கிய முன்நகர்வுகள் எந்த பலனையும் கொடுக்கவில்லை.

அதன் பின்னர் இருமுனை நகர்வு திட்டம் தீட்டப்பட்டது. அதற்காக மேலும் ஒரு புதிய டிவிசனாக 58 ஆவது டிவிசன் உருவாக்கப்பட்டு மன்னாரின் வட மேற்கில் இருந்து கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் நகர்வு ஆரம்பிக்கப்பட்டது. அதாவது இரு முனைகளால் நகர்ந்து முதலில் மடுவை கைப்பற்றுவது தான் அதன் நோக்கம்.

தலா மூன்று பிரிகேட்டுகளை கொண்ட இந்த இரு படையணிகளும் ஆறு முனைகளில் நகர்வை மேற்கொள்ள முயன்று வருகின்றன.

அதாவது 57 ஆவது படையணியின் முதலாவது பிரிகேட் படையினர் பாலம்பிட்டியில் உள்ள விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் நிலைகளை குறிவைத்தும், இரண்டாவது பிரிகேட் படையினர் மடுவை கைப்பற்றும் முகமாக பெரிய பண்டிவிரிச்சான் நோக்கியும், மூன்றாவது பிரிகேட் படையினர் மடுவை குறிவைத்து வவுனியாவுக்கு வடக்காக விளாத்திக்குளம் நோக்கியும் நகர்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த படையணியின் நகர்வை இலகுவாக்கும் நோக்குடன் களமிறக்கப்பட்ட 58 அவது படையணி அடம்பன் நகர் பகுதியை நோக்கி நகர்வை மேற்கொண்டு வருகின்றது. இந்த டிவிசனின் முதலாவது பிரிகேட் படையினர் பரப்பக்கண்டல் வடக்கு நோக்கியும், இரண்டாவது பிரிகேட் படையினர் மாந்தை பகுதி ஊடாகவும், மூன்றாவது பிரிகேட் படையினர் பாலைஊற்று பகுதியை நோக்கியும் நகர்வை மேற்கொண்டு வருகின்றனர். அதாவது இரு திசைகளில் மேற்கொள்ளப்படும் ஆறு முனை நகர்வுகளின் மூலம் முதலில் மடுவை கைப்பற்றும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டின் இறுதிப்பகுதியில் தீவிரப்படுத்தப்பட்ட இந்த உத்தியும் இதுவரை எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இவ்வாறான ஒரு உத்தி 1990-களின் பிற்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அன்று நடைபெற்ற 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையின் போது மூன்று முறிப்பில் இருந்து தெற்காக 53 ஆவது டிவிசனும், மடுச்சந்தியில் இருந்து வடக்காக 55 அவது டிவிசன் படையணியினரும் நகர்ந்து பாலம்பிட்டியை கைப்பற்றியிருந்தனர். அதே உத்திதான் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் திசைகள் வேறு.

ஆனால் தற்போதைய தாக்குதல்கள் இலகுவானதாக இருக்கவில்லை. ஒரு வருடம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் மூலம் மடுவை கைப்பற்ற முடியாது போனது தென்னிங்கை ஊடகங்களில் மெல்ல, மெல்ல சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த படை நடவடிக்கைக்கு அரசு எந்த பெயரையும் சூட்டவில்லை. அதற்கான காரணமும் உண்டு. அதாவது பெயர் சூட்டப்பட்ட நடவடிக்கை வருடக்கணக்கில் இழுபட்டால் அது சந்திரிகா அம்மையாரின் 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையின் சாதனையை முறியடித்து விடலாம் என்பது ஆளும் தரப்பினது அச்சம்.

எனினும் பெயர் சூட்டப்படாத இந்த நடவடிக்கையும் 12 மாதங்களை நெருங்கிவிட்டதை தற்போது மெல்ல, மெல்ல தென்னிலங்கை ஆய்வாளர்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர். அரசிற்கும் இது சங்கடமான விடயம் தான். அதாவது சந்திரிகா அண்மையாரின் 18 மாதகால 'வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கை சாதனையை மடு மீதான படை நடவடிக்கை முறியடிக்கும் தருணத்தை நெருங்கி கொண்டு வருகின்றது.

எனவே தான் கடந்த வாரங்களாக மன்னார் மீதான ஆறுமுனை நகர்வுகள் தீவிரப்படுத்தப்பட்டள்ளன. அதனுடன் வன்னி பகுதி மீது அரசு தீவிர வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில் தான் படை அதிகாரிகள் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதுடன், பெருமளவான விடுதலைப் புலிகளை கொன்று வருவதாகவும் கூறி வருகின்றனர்.

எனினும் மன்னார் களமுனைகளில் முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் பொறிவெடிகள், மிதிவெடிகள், எறிகணைகள், சினைப்பர் தாக்குதல்களையே பெருமளவில் மேற்கொள்வதாகவும், நேரடி மோதல்களை தவிர்த்து வருவதாகவும் படைத்தரப்பு தெரிவித்து வருகின்ற போது, எவ்வாறு அதிகளவில் விடுதலைப் புலிகள் கொல்லப்படுவார்கள் என்பதில் அனைத்துலக ஊடகங்கள் பெரும் சந்தேகங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.

மன்னார் நோக்கிய இந்த இரு டிவிசன் படையினரின் நகர்வுகளுக்கு மத்தியில் புதிதாக அமைக்கப்பட்ட 59 ஆவது படையணியின் இரண்டு பிரிகேட் படையினர் மணலாற்றின் கொக்குத்தொடுவாய் கரையோரம் முன்நகர முயற்சித்து வருகின்றர். கடந்த வாரம் தொடக்கம் அந்த பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளினூடாக முன்நகர முயன்ற படையினருடன் விடுதலைப் புலிகள் கடுமையான மோதல்களில் ஈடுபட்டு வருவதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல்களில் கடுமையான சேதங்கள் எற்பட்டுள்ள போதும் இதுவரை எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.

இதனிடையே தென்னிலங்கையை சூழ்ந்து வரும் போர் அச்சம் புதன்கிழமை (20) மொனறாகல மாவட்டத்தின் புத்தள மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை (22) கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களுடன் மேலும் மோசமடைந்துள்ளது.

பெருமளவான படையினரை தென்னிலங்கை பகுதியில் குவித்தும் இத்தகைய தாக்குதல்களை தடுக்க முடியாது போனது அரச தரப்புக்கு கடுமையான அழுத்தங்களை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிலங்கையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகளுக்கு இரும்பு தகடுகள் பொருத்துவதன் மூலம் கிளைமோர்த் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என படைத்தரப்பு ஆராய்ந்து வருகையில் பேருந்தின் உட்புறம் இருந்து வெடிக்கும் குண்டுகள் பெரும் அச்சங்களை தோற்றுவித்துள்ளது.

கல்கிசை மற்றும் தம்புள்ள பகுதிகளில் பேரூந்துகளில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கள் பேரூந்தின் உட்புறம் இருந்தே வெடித்துள்ளன. இத்தகைய குண்டு வெடிப்புக்களில் இருந்து இருப்புத்தகடுகள் பதுகாப்பை தேடித்தராது என்பது ஒருபுறம் இருக்க பயணிகள் எதிர்கொள்ளும் சேதங்களை அதிகரிக்கவே இருப்புத்தகடுகள் வழிவகுக்கும் என படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய போரில் வன்னியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பெருமெடுப்பிலான வலிந்த தாக்குதல்களை நடத்தாத போதும், போரை இலங்கை முழுவதற்கும் விரிவாக்கி விட்டனர் என்பதை எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது முன்னைய ஈழப்போர்களில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் தற்போது நடைபெறும் ஈழப்போர் இலங்கை முழுவதையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது தென்னிலங்கையில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் ஒருவர் மீண்டும் வீடு திரும்புவது தற்போது நிச்சயமற்றதாகி விட்டது என்பது அவதானிகளின் வாதம்.

மேலும் வடபோர்முனையில் இழுபட்டு செல்லும் மோதல்கள் படையினருக்கு களைப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தலாம் என்பதுடன், விடுதலைப் புலிகள் புதிதாக திறக்கும் களமுனைகள் அதிக படை வளங்களையும் உள்வாங்கி வருகின்றது என்பது படைத்தரப்பின் ஒரு சாராரது கருத்துக்கள்.

மேலும் கடுமையான போர், அதற்கு தேவைப்படும் அதிக படைபலம், இலங்கைத் தீவை சூழந்து வரும் அச்சம் என்பன பொருளாதாரத்தின் ஆணிவேரை அசைக்க ஆரம்பித்துள்ளது என்பதும் பொருளியல் நிபுணர்களின் கருத்து. அதன் வெளிப்பாடாக தான் இந்த வருடம் மேலும் 300 மில்லியன் டொலர்களை கடனாக பெற அரசு முயன்று வருகின்றது.

ஓட்டுமொத்தத்தில் அரச படையினருக்கு களைப்பையும், சலிப்பையும் கொடுப்பதுடன், பொருளாதாரத்தையும் சீரழிப்பது தான் விடுதலைப் புலிகளின் முதன்மை உத்திகளாக தற்போது இருக்கலாம் என்ற கருத்துக்கள் தற்போது படைத்துறை ஆய்வாளர்கள் மத்தியில் வலுவாக தோன்ற ஆரம்பித்துள்ளது.

நன்றி -வேல்சிலிருந்து அருஸ்-

0 Comments: