Friday, March 14, 2008

மனித உரிமை மீறல் விவகாரத்தில் சர்வதேசம் தொடுக்கும் ஏவுகணை

மோசமான மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையைப் பிய்த்து உதறியிருக்கின்றது அமெரிக்கா.
உலக நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் வருடாந்த அறிக்கையிலேயே இலங்கை காட்டமாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் போக்குத் தொடர்பாக "சர்வதேசப் பொலிஸ்காரனான ' அமெரிக்காவின் போக்கும் பார்வையும் எப்படி அமைந்திருக்கின்றது என்பதைப் பிரதிபலிக்கும் ஆவணமே இப்போது வெளியாகியிருக்கின்றன.
இந்த அறிக்கையில் இலங்கை முற்றாகக் கண்டிக்கப்பட்டிருக்கின்றது; காட்டமாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றது; மனித உரிமை பேணும் போக்கும் ஆட்சிமுறையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் மோசமான மனித உரிமை மீறல்களின் சூத்திரதாரிகள் அரசுப் படையினரும் அவர்களோடு கூட்டாக இயங்கும் துணைப்படைக் குழுவினருமே என்பதைச் சுட்டிக்காட்டி இத்தவறுகளுக்கு இலங்கை அரசைப் பொறுப்பாக்கும் அமெரிக்க அரசின் இந்த அறிக்கை, இத்தகைய மோசமான மனித உரிமை மீறல்களினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுபான்மையினரான தமிழ் இனத்தைச் சேர்ந்த இளம் ஆண்களே என்பதையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
இதன்மூலம் ஒரு விவகாரத்தை இந்த அறிக்கையின் வரிகளுக்கு இடையில் எழுத்தில் குறிப்பிடாத வாசகங்கள் ஊடாக அமெரிக்கா சொல்ல முயல்வதையும் நாம் உய்த்துணர்ந்து கொள்ள முடியும்.
இலங்கையில் "இன அழிப்பு யுத்தம்' ஒன்றை சிறுபான்மை இனத்துக்கு எதிராக ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றார்கள் என்ற கருத்து நிலைப்பாட்டையே அமெரிக்கா தனது இந்த அறிக்கையின் வாசகங்களுக்கு இடையில் அச்சில் வராத எழுத்துகள் வாயிலாக பூடகமாக, நுட்பமாக முன் மொழிய எத்தனிக்கின்றது என்பதே அது.
ஏற்கனவே இலங்கையின் மனித உரிமை மீறல் போக்கைக் கவனத்தில் எடுத்துள்ள அமெரிக்கா, இலங்கைக்கு ஆயுதத் தளபாடங்களை வழங்குவதைத் தடைசெய்து முடிவெடுத்திருக்கின்றது. இலங்கை மனித உரிமைகளைச் சரிவரப் பேணுகின்றது என்பது உறுதிப்படுத்தப்படும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் அமெரிக்கா தீர்மானித்திருக்கின்றது. அதேசமயம் அமெரிக்காவின் மிலேனியம் உதவித் திட்டத்தின் கீழான உதவிகளையும் இதே காரணத்துக்காக இலங்கை இழந்து தவிப்பதும் கவனிக்கத்தக்கது.
"புலிப் பயங்கரவாதத்தை அழித்தல்' என்ற வெளிவேடப் பூச்சோடு இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண்மைப் போக்கிலான ஆட்சிபீடம் புரியும் அரச பயங்கரவாதத்தைக் தெரிந்தும் தெரியாமலும் பார்த்தும் பாராமலும் விட்டுப்பிடிப்பதற்கு உலக நாடுகள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதையே அமெரிக்காவின் தற்போதைய அறிக்கை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தான் சேர்த்து, தானே தடை விதித்த விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதையும் கண்டிப்பதையும் இந்தத் தடவை தனது அறிக்கையில் அமெரிக்கா சற்று அடக்கி அமுக்கி வாசித்திருப்பதையும் கூட அவதானிக்க முடிகின்றது.
பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் தான் சேர்த்துள்ள புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவின் அறிக்கை கூறும் மிதமான போக்கு வாசகங்களோடு இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பின் செயற்பாடு தொடர்பாக அதே அறிக்கை கூறும் காட்டமான சூடான வாசகங்களை ஒப்பிடும்போது, பயங்கரவாத ஆட்சியமைப்புகளின் பட்டியலில்தான் இலங்கையை அமெரிக்கா சேர்க்கவேண்டிய நிலைமை உருவாகுகின்றது என்பதையும் கூட உய்த்துணர முடிகின்றது.
இத்தகைய மோசமான ஆட்சி நிர்வாகம் ஒன்று இலங்கையில் ஏற்பட்டமைக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகளும் அவர்களது வழிகாட்டலில் வடக்கு கிழக்கைத் தாயகமாகக் கொண்ட தமிழர்களும் நடந்து கொண்ட போக்கே முக்கிய காரணம் என்று பலரும் குற்றம் சுமத்துவதும் நமக்குத் தெரிந்ததுதான்.
என்ன நோக்கத்திற்காக இலக்கிற்காக இத்தகைய ஆட்சிக்கு வழி செய்யப்பட்டதோ, அது கனகச்சிதமாக நிறைவேறி வருகின்றது என்பதை அமெரிக்காவின் தற்போதைய அறிக்கையும் தெளிவுபடுத்தி நிரூபிக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.
ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய மறுத்து, அவர்களை அடக்கி, ஒடுக்கி, அடிமைப் படுத்துவதே தென்னிலங்கையின் மாற்ற முடியாத பரவணிப் போக்கு என்பதை இவ்வளவு விரைவாக சர்வதேசத்துக்கும் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துக் காட்ட இந்த ஆட்சியைத் தவிர வேறு எதனால்தான் முடிந்திருக்கும்?
ஒருபுறம் தமிழர் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனும் தமிழ் மக்களுடனும் யுத்த களம் ஒன்றைப் பெரும் எடுப்பில் திறந்திருக்கும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்துக்கு, அதன் விளைவாக மறுபுறம் சர்வதேச அரங்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பரந்த கள அரங்கு ஒன்றையும் சந்திக்க வேண்டிய இக்கட்டு இப்போது உருவாகியிருக்கின்றது.
யுத்த களத்தில் புலிகளின் ஏவுகணைகளை எதிர்கொண்டு சமாளிக்க முற்படும் மஹிந்தவின் அரசினால் சர்வதேச மட்டத்தில் அமெரிக்க அரசு முதற்கொண்டு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வரை பல தரப்பும் ஏவும் மனித உரிமை மீறல் தொடர்பான கணைகளைச் சமாளிக்கக் கூடியதாக இருக்குமா? காலம் பதில் கூறும்.


நன்றி :- உதயன்

0 Comments: