Monday, March 24, 2008

மீண்டும் இந்தியா

முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது.

எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது.

விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை.

தற்போது மீண்டும் இந்தியா இலங்கை அரசியலில் அதிகளவில் தலையீடு செய்ய முயல்வதாக வெளிவந்த செய்திகளை படித்த போது சிறுவயதில் படித்த அந்த வேதாளத்தின் கதைதான் எனது ஞாபகத்திற்கு வந்தது.

ஒரு வகையில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான தலையீடு என்பது, குறிப்பாக தமிழர் விடுதலை அரசியல் மீதான குறுக்கீடு என்பது, அந்த வேதாளத்தின் கதை போன்றதுதான். தமிழர் தேசம் தனது தரப்பு நியாயங்களை தொடர்து சொல்லி வருவதும் ஆனால் இந்தியாவோ, மீண்டும் மீண்டும் சிங்களத்தின் முதுகில் ஏறிக்கொள்வதுமாக தொடர்கிறது இந்தியாவிற்கும் நமக்கும் இடையிலான பிரச்சினைகளின் கதை.

2006 இன் இறுதிப் பகுதியிலிருந்து யுத்த நிலைமைகள் தீவிரமடைந்தன. சிங்களத்திற்கும் தமிழர் தேசத்திற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போதே சிறிலங்கா அரசு பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை விடுதலைப் புலிகள் மீது தொடுத்தது.

இறுதியில் இவ்வருட ஆரம்பத்தில் உத்தியோக பூர்வமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொண்டதன் மூலம், சிறிலங்கா அரசு தனது போர் பிரகடனத்தை பகிரங்கப்படுத்தியது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அது நோர்வேயின் அனுசரணையுடனான புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தை, ஒரு அவதானிப்பாளர் நிலையிலேயே அணுகியது. ஆனாலும் இந்தியாவின் கடந்த கால அரசியல் அணுகுமுறைகளை கருத்தில் கொண்டு பார்ப்போமானால், நோர்வேயின் மத்தியஸ்த காலத்திலும் இந்தியா தனக்கே உரித்தான ஒரு பாதாள அரசியல் அணுகுமுறையையும் கைக்கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான முறுகல் நிலை தீவிரமடையத் தொடங்கியதும் இந்தியா படிப்படியாக தனது பாதாள நிலையை தவிர்த்து வெளிப்படையாகவே களமிறங்கத் தொடங்கியது.

தற்போது சிறிலங்கா இராணுவத்திற்கான பயிற்சி, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பொருளாதார ரீதியில் மிக மோசமான வீழ்ச்சியை நோக்கி சரிந்து கொண்டிருக்கும் அரசிற்கு முண்டு கொடுத்தல் மற்றும் வர்த்தக முதலீடு என பல வழிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள முயன்று வருகிறது இந்தியா.

தற்போது இந்தியா இலங்கை அரசியலில் அதிக ஈடுபாட்டைக் காட்டுவதற்கு வெளித் தெரியக்கூடிய இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஒன்று தனது பிராந்திய நலன்களுக்கு சவால் விடும் வகையில் அந்நிய சக்திகள் இலங்கை அரசியலில் தலையீடு செய்வதை தடுத்தல், மற்றையது குறிப்பாக சமீப காலமாக சீனா அதிகளவில் சிறிலங்கா அரசுடன் நெருங்கி வருவதை தடுத்தல்.

வெளித் தெரியக்கூடிய வகையில் இந்த இரண்டு காரணங்கள்தான் நமக்கு புலப்படுகின்றன. முதலாவது காரணத்தின் அடிப்படையில் நிகழ்ந்ததுதான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பதை நம்மில் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இந்த இடத்தில் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, அந்நிய சக்திகளின் தலையீடுகளை தடுக்கும் நோக்கில்தான் தற்போது இந்தியா அதிகளவில் இலங்கை அரசியில் தலையீடு செய்ய முயல்கின்றது எனின், நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஏன் இந்தியா தன்னை பார்வையாளராக சுருக்கிக் கொண்டது?

உண்மையில் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர்தான் இலங்கை அரசியலில் அமெரிக்க, ஜரோப்பிய தலையீடுகள்; முன்னர் எப்போதுமில்லாதளவிற்கு அதிகரித்தன. அதற்கு முன்னர் இலங்கையின் அரசியல் குறிப்பாக தமிழர்களின் பிரச்சனைகள் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால்தான் அதிகம் ஜரோப்பிய மயப்படுத்தப்பட்டது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த முயற்சிக்கு பின்னர்தான் ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் அமெரிக்க, ஜரோப்பிய அரசியல் மயப்பட்ட பிரச்சனையாக மாறியது. தவிர நோர்வேக்கு பின்னரான இக்காலகட்டம் தமிழர் விடுதலை அரசியலின் இராஜதந்திர பரிணாமத்திற்கான காலமாகவும் மாறியது.

எனவே அந்நிய சக்திகளின் தலையீட்டை தடுப்பதுதான் இந்தியாவின் நோக்கமாயின் அது நிச்;சயமாக நோர்வே பிரசன்னத்தின் போதே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒன்றும் நிகழவில்லை. மாறாக பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்பட்ட பின்னர்தான் இந்தியா தனது கைவரிசைகளை காட்ட முற்படுகின்றது.

இங்கு நாம் ஒரு தெட்டத் தெளிவான உண்மையை தரிசிக்க முடியும். இலங்கை அரசியலில் தனக்கு சாதகமான சூழல் வரும் வரைக்கும் இந்தியா மிகவும் அமைதியாக காத்திருந்திருக்கிறது என்பதுதான் அந்த உண்மை.

தமிழர் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதில் வேறு எவரைக் காட்டிலும் தடையாக இருக்கப்போவது தானே என்பதை இந்தியா ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வந்திருக்கிறது.

மிகவும் சமீபத்தில் கூட அதனை இந்தியா நிரூபித்திருந்தது. 2000 இல் பலாலி இராணுவத் தளத்தை நோக்கி புலிகள் முன்னேறியது போது இந்தியா தனது படைபலத்தை காட்டி அச்சுறுத்தியது. பாகிஸ்தான் அரசு இராணுவத் தளபாடங்களை வழங்குவதற்கு அனுசரணையாக இருந்தது.

நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் ஜே.வி.பியின் அரசியல் நிகழ்சி நிரலின் பின்பலமாக தொழிற்பட்டது. இந்தியாவின் அரசியல் தலையீட்டை சுருக்கமாக சொல்வதானால், தமிழ்த் தேசிய இறைமையை அரசியல் அர்த்தத்தில் இல்லாதொழிப்பதுதான் இந்தியாவின் அனைத்து நிகழ்ச்சி நிரல்களினதும் உள்ளடக்கமாக இருக்கின்றது. ஆனால் இதில் இந்தியா தொடர்ந்தும் அவமானகரமான தோல்விகளையே சந்தித்து வருகின்றது.

இந்த இடத்தில் அது சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்பட்டு வருகிறது. இதிலுள்ள சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியா வேதாளமாகவும், விக்கிரமாதித்தியனாகவும் தொழிற்படுவதுதான்

நான் மேலே குறிப்பிட்ட இந்திய தலையீட்டிற்கான காரணங்கள் பொதுவாக இந்திய நலனை பாதுகாத்தல் என்ற அர்த்ததிலேயே முதன்மை பெறுகின்றது. ஆனால் இதிலுள்ள முரண்நகை அரசியல் என்னவென்றால் எப்போதுமே இந்தியா தனது பிராந்திய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கான பலிக்கடாக்களாக கையாள்வது ஈழத் தமிழர்களைத்தான்.

எனவே மீண்டும் நாம் ஒரு கேள்விக்கு செல்லலாம், இந்தியா தனது பிராந்திய நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏன் சிங்களத்தை பலிக்கடாவாக கருதவில்லை? அது ஏன் மீண்டும், மீண்டும் தமிழ்த் தேசிய இறைமையின் மீதே மேலாதிக்கம் செலுத்த முற்படுகின்றது? இதில் இந்திய கொள்கை வகுப்புப் பிரிவினருக்கு இருக்கும் பிரத்தியேக ஈடுபாடு என்ன?

சமீபத்தில் இந்திய தலையீடு குறித்து இந்தியாவினை எச்சரிக்கும் தொனியில் எழுதியிருந்த முன்னாள் ‘றோ’ அதிகாரியும் உத்திகள் தொடர்பான கற்கைகள் அமைப்பின் (னுசைநஉவழச ழக வுழிiஉயட ளுவரனநைள) இயக்குநருமான இராமன் தற்போதைய இந்திய தலையீட்டிற்கான இரண்டு காரணங்களை குறிப்பிட்டிருக்கிறார். ஒன்று, ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென இந்தியா கருதுகிறது. மற்றையது, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைளில் இந்தியா தொடர்ந்தும் ஆற்றலுடன்தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பது. உண்மையில் இராமன் குறிப்பிடும் இந்த இரண்டுமே மிகவும் மேலோட்டமானது என்பதுடன் இந்திய தலையீட்டில் மறைந்து கிடக்கும் காரணங்களை திட்டமிட்டு மறைக்கும் நோக்கம் கொண்டதாகவும் தெரிகிறது.

ஆரம்பத்தில் இந்தியாவின் இலங்கை அரசியல் மீதான மேலாதிக்கம் என்பது, சிங்கள ஆட்சியாளர்களை எப்போதுமே தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்வதும், சிங்கள ஆட்சியாளர்கள் தனது எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்லும் போது அதனை கட்டுப்படுத்துவதற்கான வலுவான ஆதரவுத் தளமொன்றை இலங்கையில் வைத்திருப்பதும் என்ற இரண்டு நோக்கங்களைக் கொண்டதாக இருந்தன.

இந்த பின்புலத்தில்தான் ஈழப் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியளித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றது. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து இயக்கங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் இந்தியா வெற்றியும் பெற்றது. 1987 இல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்ற பேரில் சட்ட ரீதியாகவே இலங்கை அரசியலில் நேரடியாகத் தலையிடும் அதிகாரத்தைப் பெற்றது. இறுதியில் மிகவும் அவமானகரமான தோல்வி அனுபவங்களுடன் இந்தியா வெளியேறியது.

அன்று விடுதலைப் புலிகள் குறித்து மிகவும் சாதாரணமான மதிப்பீட்டைக் கொண்டிருந்த இந்திய உளவுப்பிரிவான ‘றோ’ தனது தோல்வி அனுபவங்களில் புலிகள் தொடர்பான தமது மதிப்பீடையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் பலம்பொருந்திய இந்தியப் படைகளுடன் மோத முற்படமாட்டார்களென்றும் அவர்களை சாதாரணமாக அச்சுறுத்தி அடிபணிய வைத்துவிடலாம் என்றுமே இந்திய கொள்கை வகுப்பினர் கருதியிருந்தனர்.

இந்த அடிப்படையில்தான் தீட்சித் 'எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை இருந்த இடம்தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என புலிகளின் தலைவர் பிரபாகரனை எச்சரித்தார்.

ஆனால் புலிகளோ இந்தியப் படையுடன் மோதியது மட்டுமல்லாமல், இந்தியாவின் இராணுவ நகர்வுகளின் வரலாற்றிலேயே ஒரு கெரில்லா அணியிடம் படுமோசமான தோல்வியைச் சந்தித்த அனுபவத்தையும் இந்தியப் படைகளுக்கு வழங்கினர். இந்திய ஆய்வாளர்களின் கருத்துப்படி 1962 சீன - இந்திய எல்லலைப்புற யுத்தத்திற்கு பின்னர் இந்தியா அடைந்த படுமோசமான வரலாற்றுத் தோல்வி இலங்கையில் புலிகளிடம் தோல்வியடைந்ததுதான் என குறிப்பிடுகின்றனர். எனவே இந்த இடத்தில் மீண்டும் ஒரு கோள்வி தவிர்க்க முடியாததாக இருக்கின்றது.

தொடர்ந்தும் இந்தியா தனது பிராந்திய மேலாதிக்க அரசியலின் பலிக்கடாக்களாக, ஈழத் தமிழர்களை கையாளமுற்படும் கொள்கை முன்னெடுப்பின் பின்னணியில், அதன் கடந்த கால அவமானகரமான தோல்வி அனுபவம் செல்வாக்கு செலுத்தி வருகின்றதா? அதுவே இந்தியா தொடர்ந்தும் திரைமறைவிலும், பகிரங்கமாகவும் விடுதலைப் புலிகள் பலப்படுவதையும், தமிழர்கள் தமது உச்ச இலக்கை அடைவதையும் எப்பாடுபட்டேனும் தடுத்துவிட கங்கணங்கட்டிக் கொண்டிருப்பதன் பின்னணியா?

நான் இப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு காரணங்கள் உண்டு. புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருந்தது இராணுவ வலுச்சமநிலையாகும்.

ஒருவரை ஒருவர் வெல்ல முடியாதவாறான இராணுவ வலுவைக் கொண்டிருக்கின்றனர் என்பதே இராணுவ வலுச்சமநிலையின் அடிப்படையாகும். உண்மையில் ஒப்பந்த காலத்தில் இந்தியா இலங்கையில் அமைதி நிலவ வேண்டுமென்பதில் தான் அக்கறையுடன் இருப்பது போன்று பாசாங்கு காட்டினாலும், இராணுவ வலுச்சமநிலை அடிப்படையிலான பேச்சுவார்த்தையை விரும்பியிருக்க வாய்பில்லை. ஏனெனில் இராணுவ வலுச்சமநிலை வாதமானது விடுதலை இராணுவத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரத்தை மறைமுகமாக வழங்கி விடுகின்றது.

இதனை நிச்சயமாக இந்தியா விரும்பியிருக்காது. அதேவேளை சிறிலங்கா படைத்தரப்பு கணிப்பாளர்கள் போலல்லாது இந்தியப் புலனாய்வுதுறையினர் புலிகள் குறித்தும், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் குறித்தும் துல்லியமான சில கணிப்புக்களை கொண்டிருப்பர்.

புலிகள் இதனை ஒரு தந்திரோபாயமாக கைக்கொள்வர் என்ற பயம் இந்தியாவிற்கு நிச்சயமாக இருந்திருக்கும். எனவே இவற்றை கூட்டிக் கழித்து பார்த்தால், இலங்கை அரசியலில் மீண்டும் மோதல் சூழல் வலுவடைய வேண்டுமென்பதில் இந்தியா மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டிருந்தது என்ற முடிவுக்கே நாம் வரமுடியும்.

இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு பிறிதொரு முக்கியமான காரணமும் உண்டு. இந்தியா தன்னைச் சுற்றி இருக்கும் நாடுகளில் சுமூகமான நிலைமை இருக்க வேண்டும் என்பதையே தனது பிராந்திய நலனுக்கு சாதகமான விடயமாக குறிப்பிடுவதுண்டு. அதேவேளை இந்தியா அந்த காரணத்தினையே தன்னை சுற்றி இருக்கும் நாடுகளில் தலையீடுவதற்கான வாய்பாகவும் பயன்படுத்திக் கொள்கின்றது.

இலங்கையில் ஒரு முரண் அற்ற சூழல் நிலவ வேண்டும் என்பதே தனது அக்கறையென இந்தியா அடிக்கடி கூறிவந்தாலும் அது தனது மேலாதிக்க கண்காணிப்பின் கீழே நிகழ வேண்டுமென்றே இந்தியா கருதுகிறது. ஆனால் நோர்வேயின் மத்தியஸ்த காலத்தில் பெருமளவிற்கு இந்தியா தலையீடுவதற்கு வாய்பற்ற சூழலே காணப்பட்டது, ஏற்கனவே கையை சுட்டுக்கொண்ட அனுபவத்தைக் கொண்ட இந்தியாவால் அதிகம் அந்தச் சூழலில் தலையீடு செய்ய முடியவி;ல்லை.

இன்று மீண்டும் இலங்கை அரசியல் யுத்தத்திற்கு மாறியிருக்கும் சூழலில் முரண் தணிப்பு என்ற பேரில் மீண்டும் தனது வலுவான தலையீடுகளை செய்வதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்பிற்காகவே இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் மிகவும் சாதுவாக நடந்து கொண்டது.

இன்று இந்தியாவின் வலுவான தலையீடுகளின் பின்புலமாக இருப்பது இந்தியா சமீப கால நிலைமைகள் தொடர்பாக அச்சப்படுவதுதான்.

தற்போதைய சூழலில் இந்தியா இரண்டு விடயங்கள் குறித்து அச்சப்படுகின்றது. ஓன்று, சிறிலங்கா அரசு தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மத்தியில் தோன்றியிருக்கும் பாதமான அபிப்பிராயங்கள். மற்றையது கள நிலைமைகள் தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் இராணுவ நிலைப்பட்ட சுய மதிப்பீடுகள். சர்வதேச அளவில் புதிய தேசங்களின் உதயம் தொடர்பான விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. கொசோவோ சுதந்திர அரசு அங்கீகாரத்தின் பின்னர் தனியரசு குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்தச் சூழலில் சிறிலங்கா அரசு நாளுக்கு நாள் சர்வதேச அளவில் மதிப்பிழந்து வருகின்றது. இந்த இரண்டு விடயமும் ஒரு நேர்கோட்டில் சந்தித்து விடுமோ என இந்தியா பயப்படுகின்றது. அதேவேளை கிழக்கில் கருணா விடயத்தைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் பெற்ற வெற்றிகளை இந்தியா கருத்தில் கொண்டாலும் கள நிலைமைகள் தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்புகளின் மத்திபீடுகளை பெருமளவு இந்தியா கருத்தில் கொள்ளவில்லை.

கள நிலைமைகள் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு சார்பாக இருப்பதாகவே இந்தியா அச்சப்படுகின்றது. ஏனெனில் சிறிலங்கா படைத்தரப்பு கொள்கையாளர்கள் போன்று உணர்ச்சிவசப்பட்ட ஆய்வுகளை இந்திய படைத்துறை ஆய்வாளர்கள் கொண்டிருக்கவில்லை.

ஓப்பந்த காலம் விடுதலைப் புலிகளின் போராற்றலை பெருமளவு பாதிக்கும் என்ற ஆய்வுகள் சில சர்வதேச அனுபவங்களின் வழியாக எதிர்பார்க்கபட்டிருந்தாலும��
�, கிழக்கிலிருந்து புலிகள் பின்வாங்கியதை தவிர படைக் கட்டமைப்புக்களிலோ அல்லது புலனாய்வு தந்திரோபாயங்களிலோ புலிகள் சிறிதளவு தளர்வுகளைக்கூட காட்டவில்லை என்பதை இந்தியா மிகவும் சரியாகவே மத்திப்பிட்டிருக்கும். ஏனென்றால் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிக்கலுக்குள்ளாகிய பின்னர்தான் புலிகளின் விமானப்படை களத்தில் இறங்கியது. வெற்றிகரமாக கொழும்பிலேயே தாக்குதல்களை மேற்கொண்டது.

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அனுராதபுர விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. இவையெல்லாம் புலிகளின் இராணுவ திட்டமிடல் ஆற்றலையும், புலனாய்வு பரிவர்த்தனை ஆற்றலையும் துலாம்பரமாக்கியது.

இவ்வாறான பின்னணியில்தான் இந்தியாவின் தலையீடடினை நாம் நோக்க வேண்டியிருக்கிறது. விடுதலைப் புலிகளின் தற்போதைய தாக்குதல் உத்திகள் எதிரியை களைப்படையச் செய்தல் என்ற அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது.

பலமான படையணிகளையோ பாரியளவிலான போர் முன்னெடுப்புக்களையோ விடுதலைப் புலிகள் களத்தில் பிரயோக்கிக்காத சூழலில் புலிகளின் தாக்குதல் திறனை வெறுமனே வெற்றி கீதங்களால் சிறிலங்கா அரசு மறைத்து வருவதையிட்டு இந்தியா மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது.

புலிகள் பாரியளவிலான நகர்வுகளை முன்னெடுத்ததால் களநிலைமைகள் முற்றாகவே புலிகளுக்கு சாதகமாக மாறிவிடும் என இந்தியா கருதுகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் கிழக்கில் ஏற்ப்பட்டிருக்கும் புலிகளுக்கு பாதகமான சூழல் மற்றும் அதிகம் புலிகள் வடக்கில் கவனம் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் என்பவற்றை இடைவெளியாக பயன்படுத்திக் கொண்டு கிழக்கில் தனக்கு சார்பான சூழலை நீண்டகால நோக்கில் கையாள இந்தியா தீவிரமாக முனைந்து வருவதன் வெளிப்பாடுதான் இந்தியாவின் தற்போதைய அதிகரித்த தலையீடுகளின் அரசியல்.

இந்தியாவின் கடந்த கால அனுபவம் இந்தியாவால் நேரடியாக விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியாதளவிற்கு சில மட்டுப்பாடுகளை கொண்டிருக்கிறது.

விடுதலைப் புலிகளின் அரசியலை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்தியா, ஒரு கட்டத்திற்கு மேல் தான் தலையீடுவது விடுதலைப் புலிகளை மீண்டும் நேரடியாக சந்திக்க வேண்டிய சூழலை ஏற்படுத்திவிடும்; என்பதிலும் கவனம் கொண்டிருக்கிறது. அது மீண்டும் தனது சர்வதேச செல்வாக்கிற்கு இழுக்காகி விடும் என இந்தியா கருதுகிறது.

ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நீண்டகால நோக்கில் தனது நலன்களை அடைந்து கொள்வதற்கான தந்திரோபாயங்களிலேயே இந்தியா கவனம் கொள்கின்றது. எனவே மீண்டும், மீண்டும் நாம் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும் என்பதிலேயே நாம் கவனம் கொள்ள வேண்டும்.

இந்தியா தொடர்பான கதை பழைய கதைதான், ஆனால் புதிய காட்சிகள் இணையும் போது அது மீண்டும் புதிய கதை போன்ற தோற்றத்தை பெறுகின்றது. இப்பொழுது மீண்டும் சில புதிய காட்சிகளுடன் இணைந்திருக்கும் இந்தியா புதிய கதையாக நம்முன் வலம் வருகிறது.

இன்றைய சூழலில் இது குறித்த விரிவான உரையாடல்கள் நமக்கு அவசியம். இது குறித்த உரையாடல்களை நூண்டுவதில் இக்கட்டுரை பயன்பட வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

நன்றி: -தாரகா- தினக்குரல் வார ஏடு (23.03.08)

2 Comments:

Anonymous said...

நான் மலேசியாவில் வசிக்கிறேன். இங்கு வசிக்கும் ஈழ தமிழர்கள் ஏன் தட்டுகழுவிகளாகவும் கழிப்பிடம் கழுவும் வேலையை செய்பவர்களாக இருக்கிறார்கள்? இந்த தட்டுகழுவிகளை இலங்கைக்கு அழைத்து சென்றாலே விடுதலை கிடைத்து விடுமே

Anonymous said...

இந்த தட்டுகழுவிகளை இலங்கைக்கு அழைத்து சென்றாலே விடுதலை கிடைத்து விடுமே//

அவர்கள் சென்ற பிறகு அந்த வேலைகளை நீங்கள் செய்து கொள்ள உள்ளீர்களோ விசாலஆட்சி முருகன்