Tuesday, March 11, 2008

மேற்குலக இந்திய முரண்பாடுகளும் இணைவுகளும்

சமகாலத்தில் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளை உன்னிப்பாக அவதானித்தால் அதன் ரிஷி மூலத்தை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினைத் தடை செய்யுமாறு ஐ.நா.சபைக்கு வேண்டுகோள் விடுக்கிறது இலங்கை அரசாங்கம்.

ஆனாலும் புலிகளைத் தடை செய்த நாடுகள் யாவும், இலங்கை ஏன் புலிகளைத் தடை செய்யவில்லையென்கிற கேள்வியை முன்வைப்பதில்லை.

13ஆவது இணைப்புச் சட்டத்தின் முழுச் சரத்துக்களையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்தவை நிர்ப்பந்திக்கிறார் ரணில்.

அதனை உருவாக்கிய ரணிலின் கட்சியும் அச்சட்டத்தை அமுல்ப்படுத்தவில்லை என்பது வேறு விடயம். கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்களை அகற்றும் வரை உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு பவ்ரல் அமைப்பு தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

இவர்களின் கோரிக்கைகள் யாவற்றையும் தமது பரிந்துரைப்பாக வெளியிட்டுள்ளது. ஐ.சி.ஜி. என்றழைக்கப்படும் சர்வதேச நெருக்கடிக்களுக்கான ஆய்வுக் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய, மேற்குல சிந்தனைக்கான ஆலோசனை போன்று இவை தென்பட்டாலும் அவை யாவும் மேற்குலகிற்கு இசைவான நலன்களின் பிரதிபலிப்பாகவே கருத வேண்டும்.

ஐ.சி.ஜி.யின் (ஐணtஞுணூணச்tடிணிணச்டூ இணூடிண்டிண் எணூணிதணீ) ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படும் ஆலோசனைத் தொகுப்பில் எச்சரிக்கையொன்றும் முன் வைக்கப்பட்டுள்ளது.அதாவது இலங்கையில்

இராணுவ ஆட்சி உருவாகும் ஏது நிலைகளை அகற்ற வேண்டுமென்பதே பரிந்துரைப்பின் சாராம்சமாகும். இராணுவ மயமாகும் அரச இயந்திரம் படையாட்சிக்குரிய அடித்தளங்களை உருவாக்கக்கூடிய

வாய்ப்புக்களை அதிகரிக்கலாமென இக்குழு கணிப்பிடுகிறது.அதேவேளை கைப்பற்றப்பட்ட கிழக்கில் இராணுவ நிர்வாகம் நடைபெறுவதாக எச்சரிக்கிறார்கள்.

அரசோடு இணைந்த சில குழுக்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பங்கு கொள்வதனை ஜனநாயக விரோதச் செயற்பாடாகக் குறிப்பிடும் இவ் ஆய்வுக் குழு, தேர்தலை ஒத்திவைக்குமாறு அவசர ஆலோசனை வழங்குகிறது.

ஒப்பந்தத்தை முறித்தாலும் வெளியுலகின் பார்வையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை பேணும் நாடாக இலங்கை திகழ வேண்டுமெனக் கருதும் மேற்குலகின் கருத்தோடு ஐ.சி.ஜி. யின் பரிந்துரைப்புக்கள் முரண்படுவதை அவதானிக்கலாம்.

மேற்குலகின் விருப்பத்திற்கு மாறாக நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்களும் ஜனநாயக விரோத அரசியல் செயற்பாடுகளும் அவர்களின் நிகழ்ச்சி நிரலைச் சிதைத்துவிடும் அபாயத்தைத் தோற்றுவிக்கலாமென அச்சமுறுகிறது இவ்வாய்வுக் குழு.

கிழக்கு மாகாணத்தை ஜனநாயக விழுமியங்கள் பேணப்படும் ஒரு முன்மாதிரிப் பிரதேசமாக மாற்றியமைத்து, இராணுவ வெற்றிகளுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறப்படுவது அவசியமானதென வலியுறுத்தப்படுகிறது.

சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தக் கிழிப்பினையும் ஆட்கடத்தல், படுகொலைகளையும் ஜனநாயக முகமூடிக்குள் மறைத்திடலாமென்பதே மேற்குலகின் பலவீனத்திலிருந்து வெளிப்படும் உத்தியாகும்.

அதேவேளை ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவிட அவசரப்படும் மேற்குலகின் நகர்வுகளை இந்திய அரசானது வெளிப்படையாக ஆதரிக்காமல், மௌனம் சாதிப்பது ஏன் என்கிற சந்தேகங்களும் பல இராஜ தந்திர மட்டங்களில் எழுப்பப்படுகிறது.

இக் கண்காணிப்பக விவகாரத்தில் தலையை உள்ளிழுத்த ஆமை போல இந்தியா நடந்து கொள்வதற்கு தனது தனித்துவ பிராந்திய ஆதிக்கத்தை மேற்குலகுடன் பங்கிட விரும்பாமையே அதற்கான காரணியாகக் கொள்ளலாம்.

ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் கண்கõணிப்பகத்தை அமைப்பதற்கான அழுத்தங்களை இலங்கை மீது மேற்குலகு சுமத்தினாலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி இந்தியாவுடன் உரசலை தோற்றுவிக்க முற்பட மாட்டார்கள்.

ஏனெனில், இலங்கை அரசுக்கெதிரான கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இந்தியா என்கிற ஐ.சி.ஜி. விரும்பும் அரசியல் அணிச் சூத்திரத்தில் சிதைவுகள் ஏற்படலாமென்கிற அச்சம் மேற்குலகச் சிந்தனையில் உருவாகி இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்தியாவுடன் அனுசரித்துப் போவதே சீன வலைக்குள் இலங்கை அகப்படுவதைத் தடுத்து நிறுத்துமென மேற்குலகம் கணிக்கிறது.

அண்மையில் கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. சபை அரசியல் விவகார உதவிச் செயலாளர் அஞ்செலா கான், தமிழர் தரப்பினரை சந்திக்காமல் தவிர்த்ததின் பின்புலத்தில் மேற்குலகின் ஆலோசனை பெரும் பங்கினை வகித்திருக்க வேண்டும்.

தற்போது சிங்களத்தை மையம் கொண்டே சகல வல்லரசாளர்களின் பார்வைகளும் நகர்வுகளும் திருப்பப்பட்டுள்ளதென்பதே உண்மை நிலைவரமாகும்.

அரசாங்கத்தின் இராணுவச் சிந்தனைக்கேற்றவாறு, தனித்தும் அணி சேர்ந்தும் தமது நிகழ்ச்சி நிரலை இவர்கள் வகுத்துக் கொள்கிறார்கள்.

அதேபோல இலங்கை இராணுவத்தின் படை வலு குறித்து தாம் கொண்டுள்ள அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஆய்வுக் குழுக்களின் ஆலோசனைகளும் உத்திகளும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனாலும் இந்தியாவைப் பொறுத்தவரை வன்னிப் போர் அரங்கில் நடைபெறும், சமர்கள் குறித்த உண்மையான தகவல்களை ஓரளவிற்காவது அது தெரிந்து கொண்டிருக்கும்.

கடந்த மாதவன்னிச் சமரில் மட்டும் 104 படைச் சிப்பாய்கள் கொல்லப்பட்டு 822 பேர் படுகாயமடைந்ததாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

இந்நிலையில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் இடம்பெற் றுள்ளது. "வெற்றி நிச்சயம்' (ஜெய சிக்குரு) முறியடிப்புச் சமர் போன்று இன்னுமொரு புலிப் பாய்ச்சல் நிகழ்த்தப்படுவதற்கு முன்பாக சிங்கள தேசத்தைப் பலப்படுத்துவது அவசியமானதென இந்தியா கருதுகிறது.

தற்போதைய நிலைவரப்படி மேற்குலகும் இந்தியாவும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களோடு பயணிப்பது போலத் தென்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்தவின் புலி அழிப்புச் சூத்திரத்துள் தம்மை இணைத்தவாறு படைக்கல அனுசரணை வழங்குகிறது இந்தியா.

மனித உரிமை மீறல் விவகாரங்களை முன்னிலைப்படுத்தி ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவிட ஒற்றைக் காலில் பயணிக்கிறது மேற்குலகம்.

இரு திசையில் பயணிக்கும் இந்திய, மேற்குல நிகழ்ச்சி நிரல்களின் உள்நோக்கங்களை எடைபோடும் இலங்கை அரசானது,

தீவிர யுத்த முன்னெடுப்பே சகலவித இன அழிப்பு நடவடிக்கைகளையும் வெளியுலகிற்கு வெளிச்சமாக்காமல் மூடிமறைக்குமென எண்ணுகிறது.

ஆயினும் ஏதோவொரு வகையில், தமது இழந்த இருப்பினை மறுபடியும் நிலைநாட்ட, மேற்குலகம் விரிக்கும் கண்காணிப்பக வலைக்குள் சிக்காதிருப்பதற்கு தற்போதைய நிலையில் இந்தியாவிடம் சரணடைவதே சரியான உத்தியென இலங்கை எண்ணுவதில் வேறு சில காரணிகளும் உண்டு.

தனது நிரந்தர நட்பு அணியான சீனா பாகிஸ்தானோடு இணைய முயற்சித்தால் இந்தியாவும் மேற்குலகமும் ஓரணி சேர்ந்து ஐ.நா. சபைக் கூடாக மோசமான அழுத்தங்களை தம்மீது திணித்து ஈரான் போலாக்கி விடுவார்களென்கிற அச்சம் இலங்கை ஆட்சியாளர்க ளிடம் உள்ளது.

தற்போது நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் சிக்கல்கள் உருவானால் இறுதி ஆட்டத்தில் சீனாவையும் பாகிஸ்தானையும் பயன்படுத்திக் கொள்ளலாமென்பதே அரசாங்கத்தின் உத்தியாக இருக்கிறது.

மேற்குலகின் அரசியல் ஆலோசகரான ஐ.சி.ஜீ.ஐ பொறுத்தவரை பரிந்துரைக்கும் மேற்குலக இந்தியா கூட்டுப் பயணத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் உள்முரண்பாடுகளை நிவர்த்தி செய்யக்கூடிய வழி வகைகளை முன்வைக்கவில்லை.

மாறாக மேற்குலகின் ஓருலகக் கோட்பாட்டை பலமடையச் செய்வதற்கான ஆலோசனைகளையே தமது பரிந்துரைப்பில் முதன்மைப்படுத்துகிறது.

இதுவரை அவசரப்பட்ட விடயங்களை சுருக்கமாகப் பார்த்தால், வல்லரசாளர்கள் பிரயோகிக்கும் இராஜ தந்திர நுண்ணரசியலை புரிந்துகொள்ள முடியும்.

1. சீனா பாகிஸ்தான் அணிக்குள் இலங்கை சரியாமல் இருக்க, ஆழமான அரசியல் புரிந்துணர்வு கொண்ட இந்தியா மேற்குலக அணியொன்று உருவாக வேண்டுமென மேற்குலக சிந்தனை பரிந்துரைக்கிறது.

2. படையாட்சி உருவாகாமல் தடுக்க (பர்மா போன்று) ஜனநாயகக் கட்டமைப்பைக் காப்பாற்றும் வகையில் சர்வகட்சித்தீர்வுத் திட்டத்தை உடனடியாக வெளியிடவேண்டுமென ஐ.சி.ஜீ. வலியுறுத்துகிறது.

3. சர்வதேச மனிதாபிமான சங்கங்கள் ஊடாக மனித உரிமை மீறல் விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் அமைக்க உறுதி பூண்டுள்ளது மேற்குலகம்.

4. இலங்கையில் கண்காணிப்பகம் நிறுவப்படுவதைத் தடுக்க இந்தியாவின் தோளில் சாய்ந்துள்ளது சிங்கள தேசம்.

5. சிங்கள தேசத்தின் தடுமாற்றத்தை பலவீனமாகக் கருதும் இந்தியா, கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகக் கையாள்வதற்கு, ஆயுத விநியோகத்தோடு முதலீடுகளையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

6. கண்டியில் நடைபெறவுள்ள "சார்க்' உச்சி மாநாட்டிற்கு முன்னர் 13 ஆவது இணைப்புச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்தும்படி இலங்கையிடம் வேண்டுகோள் விடுக்கிறது இந்தியா.

7. தீர்வுத் திட்டம் நடைமுறைக்கு வருவது போன்று காலத்தை இழுத்தடித்தால் அக்கால இடைவெளியில் புலிகளைப் பலவீனப்படுத்துவதோடு, ஐ.நா. கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவ வேண்டிய தேவையும் ஏற்படாதென்பதே இந்திய இராஜ தந்திர நிலைப்பாடாகும்.

8. வன்னியைக் கைப்பற்றினால் எல்லாமே தலைகீழாக மாற்றமடைந்து மேற்குலக அழுத்தத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாமென்பதே சிங்கள தேசத்தின் நம்பிக்கை.

ஆயினும் சிங்கள தேசத்தின் அரசியலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியான விடுதலைப் புலிகளின் நிகழ்ச்சி நிரல், எவ்வாறு அமையுமென்பதை இவர்களால் அனுமானிக்க முடியாது.

நன்றி: வீரகேசரி- சி.இதயச்சந்திரன்

0 Comments: