Saturday, March 22, 2008

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறா? இந்தியாவிற்குப் புலிகளின் கேள்வி

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கெளரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத் தமிழர்களை வேதனைக் குள்ளாக்கியுள்ளது.

போர் நிறுத்த உடன் படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில், தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரசு கெளரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின் செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

சிறிலங்கா அரசின் இராணுவ வழித்தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக. உலகளாவிய ரீதியில் சிங்கள அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது. ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளி விட்டு அதிகளவிலான ஆட் கடத்தல்கள். படுகொலைகள், இன ரீதியான கைதுகள் என்பனவற்றை சிங்களப் படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன. இந்த உண்மையை மூடி மறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு தொடரும் போருக்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள் இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.

சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பற்குத் துணைபோகக்கூடிய உதவிகளை நிறுத்தியுள்ளன.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளி விடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக் காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக் கொள்கின்றது.

நாம் போர் நிறுத்த உடன் பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்க ளுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக தற்காப்புப் போரையே நடத்தி வருகின்றோம்.

நாம் இன்னமும் நார்வேயின் தலைமையிலான அமைதி வழி முயற்சி களிலிருந்து விலகவில்லை. நார்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.

இந்த நிலையில் அரசியலில் இராணுவ பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முட்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கி யுள்ளது.

புலிகளுடனான போரில் சிங்கள படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை. என்ற இந்தியப் படையதிகாரிகளின் கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முட்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.

இந்திய அரசின் இத்தகைய செயற் பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப் போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தென்செய்தி

0 Comments: