Saturday, March 8, 2008

விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக க.வே.பாலகுமாரன் எழுதிய - 'எவரேனும் சொல்க இன்னும் மீதம் ஏதுமுள்ளதா?"

'எவரேனும் சொல்க" என விடுதலைக் கவிஞன் சு.வி. கேட்டது! 'இன்னும் மீதமாய் இருக்கின்றனவா? புத்தரின் அன்பு, கருணை நற் செயல்கள் துளியேனும்?" என்பவை பற்றி. நாம் கேட்பது சிங்களத்தின் திகைப்பூட்டும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இன்னமும் கண்டிக்க யாருமுள்ளனரா? என்பது பற்றி 09.11.2000 ஆம் ஆண்டே சு.வி. எழுதிய நெஞ்சைப் பிளக்கும் உணர்வின் வரிகளோடு இக் கட்டுரையைத் தொடங்க வேண்டியுள்ளது.

'வடக்கு உனக்கு" கிழக்கு அவைக்கு
பிணக்குப்படு என பிரித்தாளு
பஞ்சத்து ஆண்டிகளுக்கு பொதியை அவிழ்த்து வைத்து
பரிமாறு பழைய சோறு
இனியென்ன?
நித்திரைப் பாயை விட்டு எழும்புவதற்குள்
வெட்டு கோடரியால்
நெஞ்சைப் பிள
ஈரக்குலையைப் பிடுங்கு
இரத்தக் காட்டேறிகளிடம் போடு"...

மீண்டும் மீண்டும் முதலிலிருந்தே எல்லாம் தொடங்க வேண்டியுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை வகைப்படுத்தி அவைபற்றி உலகிற்கும் ஐ.நா. வின் உயர் பீடத்திற்கும் அறி விப்போர் ஐ.நா.வின் விசேட தூதராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மிகுந்த தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்ற இவர்கள் அனைவருமே இத்தீவின் இழிநிலை பற்றி உலகுக்கு அறிவித்துள்ளனர். ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயி ஆர்பர், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் என நீளும் பல வகை சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டறியும் பிலில் அஸ்ரன், வதைகளை ஏனைய கொடூரங்களைக் கண்டறியும் ஆணையாளர் மான் பிறெட்நொவாக், சருவதேச மன்னிப்பு அமையம், மனித உரிமைக் காப்பு இயக்கங்கள், செய்திச் சுதந்திர அமைப்புக்கள், ஐரோப்பிய ஒன்றியம், இலங்கையின் அமெரிக்கத் தூதர் பிளேக், செருமனியத் தூதர், ஐஐபுநுP எனப்படும் சருவதேச மனித உரிமை ஆர்வலர், மதிப்பு மிக்க நீதியாளர் அடங்கிய உலகின் மனச்சான்றின் பிரதிநிதிகள் எல்லோருமே சொல்லியாகிவிட்டது.

மிக அண்மையில் இவை யாவற்றையும் தொகுத்தாற்போல பிரித்தானிய நாடாளுமன்றிலே தாராண்மை வாதக் கட்சித் தலைவர் பேசியதற்குப் புறம்பாக பிரித்தானிய அரசின் குரலாக அதன் மேற்காசிய அமைச்சரும் துணை வெளிநாட்டமைச்சருமான கிம் கொவெல்ஸ் என்ன கூறினார்? நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டது. சருவதேச அழுத்தம் போடவேண்டிய காலம் வந்து விட்டது. என்றார் அவர். எனவேதான் எம் மக்கள் வினவுகின்றனர், இன்னமும் சொல்ல ஏதாவதுள்ளதா? அல்லது சொல்ல எவரும் உள்ளனரா?

மீண்டும் இனக்கொலை பற்றி எமக்கு நாமே சொல்ல வேண்டியதாகின்றது. இன்றா? நேற்றா? இனக்கொலை பற்றி அதைத் தடுப்பது பற்றி அதற்கான குற்றம், தண்டனை பற்றி எல்லாமே 1948 டிசம்பர் 9 ஆம் திகதியே ஐ.நா. தெளிவான வரையறுப்பொன்றினைத் தீர்மானமாக எடுத்துள்ளது.

அது என்ன சொல்கின்றது?

அ. கொல்லப்பட்டோர் ஒரு தேசிய இனப் பிரிவு, இன மரபு அல்லது மதக் குழுமத்தைச் சேர்ந்தவர்களாகவிருக்க வேண்டும்.

ஆ. இக்குழும உறுப்பினர்கள் இக்குழுமத்தின் உறுப்பினர்கள் என்ற காரணத்தினால் கொல்லப்பட வேண்டும்.

இ. ஆட்சியில் உள்ளவர்களால் அல்லது அவர்கள் சார்பாக அல்லது வெளிப்படையான அல்லது மறைமுகமான இசைவுடன் இழைக்கப்படும் ஒரு கூட்டுக் குற்றம் இனக் கொலையாகும்.

ஈ. இனக்கொலை புரியும் அனைவரும் அவர்கள் அரசியலமைப்பின் படி பொறுப்புள்ள ஆட்சியாளர்களாகவிருந்தாலும் அரச அதிகாரிகளாக விருந்தாலும் தனி மனிதர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறாகப் படிப்படியாக ஒரு பன்னாட்டு நீதி வழங்கும் முறைமை உருவாக்கப்படுவதாக உலகம் சொல்லிக் கொள்கின்றது. 1991 ஐ.நா.வின் தீர்மானமொன்றின்படி நெதர்லாந்து தி கேக் நகரில் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றை உதாரணமாக உலகம் காட்டுகின்றது. இதற்கப்பால் காலத்திற்குக் காலம் நடைபெறும் பயங்கரமான இக்குற்றங்களை விரைவாக விசாரிப்பதற்காக தற்காலப் பன்னாட்டுப் போர்க் குற்றங்கள் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த வகையில் கேக் நகரில் 1993 மேயில் முன்னாள் யூகோசிலாவாக்கியா போர்க் குற்றங்கள் தீர்ப்பாயம், தான் சானியாவின் ஆருசாவில் அமைக்கப்பட்டது. ருவாண்டாவின் 1994 ஆம் ஆண்டு இனக்கொலை பற்றிய தீர்ப்பாயம், தற்போது லைபீரியாவின் போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்ப்பாயம் எனப் பல இயங்கி அங்கு விசாரணைகள் நடந்து ஒரு சில தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதும் உலகில் இன்னமும் நீதி, அறம் என்பன உள்ளதற்குச் சான்றெனவும் விளம்பப்படுகின்றது. ருவாண்டாவின் தீர்ப்பாயம் (ருவாண்டா மக்களிடம் இத்தீர்ப்பாயம் முழுமையாகக் குற்றவாளிகளை விசாரிக்க வில்லையென்கிற குறைகள் இருக்கும் நிலையிலும்) இவ்வருட முடிவில் தனது பணியை நிறைவேற்றி விடுமெனக் கூறப்படுகின்றது. அப்படியாயின் இலங்கையின் நிலையென்ன? இப்பொழுது இறுதியாகவும் ஒரு அறிக்கை ஐ.நாவின் முன்வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரின் மனித உரிமைகள் பற்றிக் கண்டறியும் ஐ.நாச் செயலாளரின் விசேட தூதரான வோல்ரர்கலின் 1990 இல் இருந்து 1 மில்லியன் மக்கள் இங்கு இடம்பெயர்ந்து படும் அவலம் பற்றி ஐ.நா விற்கு அறிவித்துள்ளார். இந்திய மேலாண்மையினை வெளிப்படுத்தும் புரொன்லைனின் பெப்ரவரி இதழில் முரளிதர் ரெட்டி இவ்வறிக்கை 'நடுக்குற வைக்கிறது" என்கிறார்.

வன்முறை மிகுந்த கடந்த காலத்தினைக் கடந்து ஏதோ ஒரு வகையில் விடுதலை பெற்ரோராலே கடந்த காலத்தோடு சமரசம் செய்ய முடியாத நிலையிருப்பது வெளிப்படை. 2000 ஆம் ஆண்டிலிருந்தே தென்னாபிரிக்கா, சிலி, குவாத்த மாலா, கம் போடியா, ருவாண்டா, ருசியா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வுகள் வன்முறை நினைவினை மறக்க முடியாத மக்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இது தொடர்பில் யுனெஸ்கோ கூரியர் ஒரு விசேட இதழையே 2000 ஆம் ஆண்டு பெப்பரவரியில் வெளியிட்டது. அப்படியாயின் துளியேனும் நீதி வழங்கப்படாத தமிழ் மக்கள் நிலையென்ன? இவ்விடத்திலே அப்போது ருவாண்டாவிற்கான பன்னாட்டு குற்றத் தீர்ப்பாயத்தின் தலைமை அரச வழக்கறிஞராக விருந்த லூயி ஆர்பர் அம்மையார் கூறிய கருத்தொன்றை இங்கே தொடர்புபடுத்துகின்றோம். கனடாவைச் சேர்ந்த இப் புகழ்மிக்க அம்மையார் இத்தகைய பல பணிகளை மேற்கொண்டவர்.

குற்றவியல் தீர்ப்பாயங்கள் நிறுவுவது உலகில் மிகப் பெரும் மாற்றமுடியாத நடவடிக்கையாகும். இது இயங்கத் தொடங்கும் போது நிகழ்வுகளை நீங்கள் புரிய முடியும். குற்றவாளிகள் மீண்டும் படுகொலைகளில் இறக்க முன்னர் அவர்கள் குற்றவாளிகளெனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவார்கள். எனவே பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் தேவையான அளவு வலிமையைக் கொண்டிருக்குமானால் விரைவாகத் தலையீடுகளைச் செய்யமுடியும். 'மறுக்க முடியாத உண்மைகளை நிலை நாட்டுவதன் மூலம் நீண்டுவரும் பன்னாட்டுச் சட்டத்தின் கரம் கடந்த காலம் வெறும் புராணக் கதையாக்கப்படுவதைத் தடுக்கும். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் தடுக்கும்" இச் செவ்வி லூயி ஆர்பர் அம்மையாரால் 2000 ஆம் ஆண்டு சனவரியளவில் யுனெஸ்கோ கூரியர் ஏட்டிற்கு வழங்கப்பட்டது. இன்று மதிப்பிற்குரிய ஆர்பர் அம்மையார் ஐ.நா வின் மனித உரிமைக் காவலர். அவரால் கூட இலங்கையில் இன்று நடைபெறும் மனித குலத்திற்கு, மாந்த நேயத்திற்கெதிரான கொடும் குற்றங்களை ஐ.நாச் சட்டங்கள் தடுப்பதாகக் கூற முடியாத நிலையிருப்பது நாமறிந்ததே.

இன்று ஐ.நாவின் அனைத்து உறுப்பு அமைப்புக்களும் இங்கு பெரும் இழிவுபடுத்தப்படுகின்றன. மிகக் கேவலமாக வசை பாடப்படுகின்றன. மேற்கத்தைய நாடுகள் மகிந்தரின் தூண்டுதலின் பெயரில் ஜே.வி.பியால் துச்சமாக மதிக்கப்படுகின்றன. இவை யாவற்றையும் இலங்கையின் பிரதேச ஒருமைப்பாடு இறைமை என்கிற மாயத் திரைக்குள் மறைக்கும் உலகிற்கு இவை தமது இறைமையை ஐ.நா வின் நன்மதிப்பை, தமது குடிமக்களின் வரிப்பணத்தை விரயமாக்கும் செயல்கள் என்பது புரியாதா? இனக்கொலையில் அரசின் பங்கேற்பை அதன் இறைமை மூலம் மறைக்க முடியுமா என்பதற்கான மிக விளக்கமான தீர்ப்பொன்று சென்ற ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி சருவதேச நீதிமன்றால் (ஐஊது - ஐவெநசயெவழையெட ஊழரசவ ழக துரளவiஉந) வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலே சிறிலங்கா போல திமிராகவும் காட்டமாகவும் மேற்குலகைப் பேசியும் ஏசியும் வந்த சேர்பியா மீது 1995 இல் பொசுனியாவில் இனக் கொலை தொடர்பில் வழக்குத் தொடுக்கப்பட்டபோது சேர்பியா தனது இறைமையைக் காரணம் காட்டிச் சேர்பியாவை கூண்டிலேற்ற சருவதேச நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாதென இறுமாப்புடன் வாதிட்டது. ஆனால் முதன் முறையாக (இதுவரை இனக் கொலை தொடர்பான குற்றங்களுக்கு அரசுகளை விடுத்து தனிநபர்கள் மீதே குற்றங்கள் சுமத்தி விசாரணைகள் தீர்ப்பாயங்களால் மேற்கொள்ளப்பட்டன) 16 பேர் கொண்ட நீதியாளர் ஒருவர் தவிர அனைவருமே இனக்கொலைக்கு அரசுகளையும் பொறுப்பாக்க முடியு மென கொள்கையளவில் ஏற்றுத் தீர்ப்பளித்ததோடு ஐ.நாவின் 1948 ஆம் ஆண்டு விதிகளை சேர்பியா மீறியதாகவும் எல்லைக் குறியாக கருதப்படும் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் 1983 யூலை இனக்கொலைக்கு மட்டுமல்ல தற்போதைய மகிந்த அரசு 1948 ஆம் ஆண்டின் மனித உரிமை காப்பினை மீறி (ஒரு தேசிய, இனக்குழு, மதம் சார்ந்த குழுமத்தை முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கையும் இனக்கொலையே) யாழில் மேற்கொண்டுள்ள இராணுவ முற்றுகை தென்தமிழீழத்தின் ஆக்கிரமிப்பும், இனப்பரம்பல் மாற்றமும், கடத்தல் படுகொலைகள் யாவுமே தமிழினத்தை முற்றாகவோஃ பகுதியாகவோ அழிக்கும் செயலென வரையறுக்கப்பட்டுப் பொறுப்பாக்க முடியுமென வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இங்கே முக்கிய பதிவொன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். ருவாண்டாவில் நடந்ததை இங்கு நடப்பவைக்கு முன்னுதாரணமாகக் கொள்கின்றோம். ருவாண்டா மக்களின் கூட்டுநினைவினை அழிக்க அங்கு வந்தேறிய வாதிகளால் (குடியேற்ற வாதம்) முயலப்பட்டது போலவே இங்கும் வந்தேறிய எம் வாழ்வை அழித்தது. 1962 இல் ருவான்டா சுதந்திரம் பெற்றபோது பெரும்பான்மைக் கூட்டு (ர்ரவர) இன ஆட்சியாளர் துட்சி மக்களின் மரபுத்தற்பண்பை கூட்டு நினைவாற்றலை அழிக்க முயன்றது போலவே சிங்கள ஆட்சியாளரால் செய்யப்பட்டது. இங்கு தரப்படுத்தல் போலவே அங்கு சமூகச் சமநிலையென்கிற பெயரில் உயர்கல்வி வேலை வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட வெற்றிடத்தில் கூட்டு இனப்பிரிவு புகுந்தது. துட்சியினத்தார் கேவலமான மனிதத்தன்மையற்றவர்களாக வருணிக்கப்பட்டனர். யூதரை கரப்பான்கள் என கிட்லர் கூறியதுபோல துட்சிகள் ஒட்டுண்ணிகள் எனப்பட்டனர். எம்மக்களும் இவ்வாறே இழிவுபடுத்தப்பட்டனர்.

இரண்டு நாட்டிலுமே துட்சிகளும் தமிழரும் கொல்லப்பட்டமை இதன் மூலம் நியாயப்படுத்தப்பட்டது. இதன் விளைவாகவே 1994 இனக்கொலை நடந்ததும் அதையடுத்து போல் ககாமே தலைமையில் துட்சிகள் போராடி வென்றதும். இன்று வாழ்வதும் ஆள்வதும் வரலாறு. ருவான்டா இனக்கொலையின் போது உலகம் பாராமுகமாக இருந்தமை உணரப்பட்டதால் “நேஎநச யபயin” 'இனி எப்போதுமில்லை" என்ற தொடர் உலகால் உச்சரிக்கப்பட்டது. (இன்று பல்லாயிரக் கணக்கான றுவான்டா மக்கள் கடந்தகாலக் கொடூர வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து வாழ்வதால் 'உயிர் வாழ்ந்தும் இறந்தவர்கள்" எனப்படுகின்றனர். பலர் மறதிக் கோளாறு நோயாhல் வாடுகின்றனர்)

தமிழ் மக்கள் தாயகத்திலோ இனக்கொலை படிப்படியாக நுட்பமாக உலகை நயத்த வண்ணம் நடைபெறுவதை உலகம் புரியுமா? இதுவே இன்றைய கேள்வி. ஒன்றில் போர்க்குற்றங்களை திமிருடன் புரியும் சிங்கள அரசிற்கு யப்பான் போன்றவை தமது சொந்த நலன்களுக்கப்பால் மனிதகுல நலத்தினை முன்னிறுத்தி உதவிகளை முற்றாக நிறுத்தவேண்டும். அன்றேல் போர்க்குற்றங்களுக்காகச் சிங்கள அரசைப் பொறுப்பாக்கும் செயற்பாடுகளில் இறங்கவேண்டும். இன்றேல் இனக்கொலைக்கு உலகமும் உடந்தை யென்றே எம் மக்கள் தீர்ப்பளிக்க நேரிடுவதோடு காலமும் கடந்து விடும். அதுவரை எம்மக்கள் வதைபட வேண்டும். என்பதுதான் உலக நீதியென்றால் பின்னாட்களில் உலகம் இவ் விடயத்தில் வருந்த நேரிடும். இவை யாவற்றையும் கருத்தில் கொண்டே விடுதலைப் புலிகளின் அரசியற்றுறைப் பொறுப்பாளர் நடேசன் ஐ.நாச் செயலாளருக்கு எழுதிய மடலில் 'ஐம்பது ஆண்டிற்கு மேலாக முடிவின்றி நீண்டு செல்லும் தமிழ் மக்களின் சிக்கல்களுக்கு முடிவினைக் காணவும் அவர்கள் மீதான காரசாரமான மனித உரிமை மீறல்களை முடிவிற்குக் கொண்டுவரவும் ஆக்க பூர்வமான அணுகு முறையாகவும் தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு" வேண்டியுள்ளார். விரைந்து நீவிர் செயற்படாவிட்டால் துட்சிகள் போராடிவென்றது போல இங்கு நாமும் வெல்வோம் என்பது இதன் மறை பொருளல்லவா?.

நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)

0 Comments: