கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் யாவும் ஒரு அணியாக நின்று ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று முஸ்லிம் பொதுமக்களும், அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கோரிக்கைகளை விடுத்ததோடு, அரசியற் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். எனி னும் முஸ்லிம் அரசியற் கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் ஒரு பொது அணியாக தேர்தலை சந்திப்பதற்கு தயாரற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.
கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியற் தலைமைகளில் 99 வீதமானவர்கள் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஸ்ரப்பின் பாசறையில் அரசியல்பாடம் கற்றவர்களாகவே உள்ளார்கள். தற்போது பிரிந்து நின்று ஒவ்வொரு அணியினரும் தனித்தனிக் கட்சிகளை வைத்துக் கொண்டு அரசியல் சித்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்களிடையேயுள்ள இந்தப் பிரிவினை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம்களின் உண்மைப் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை கொண்டு வருமென்ற அச்சத்தின் காரணமாகவே பிரிவினைகளை மறந்து, சமூக நலனில் அக்கறை கொண்டு, ஒரு பொது அமைப்பு அல்லது கூட்டமைப்பு யோசனை முன்வைக்கப்பட்டது. அந்த யோச னையை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது. இதனிடையே கடந்த 26.03.2008 இல் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் ஒலுவில் வளாகத்தில் பெருந்திரளாகத் திரண்டு முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒரு குடையின் கீழ் செயற்பட்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை சந்திக்க வேண்டுமென்றும் கோரி ஒரு கவனயீர்ப்புப் போராட்டத்தினை சுமார் 2 மணித்தியாலங்கள் மேற்கொண்டார்கள். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முஸ்லிம் தேசப் பிரகடனத்தின் பின்னர் மிகக் கூடியளவு மாணவ, மாணவிகள் பங்குபற்றியதோர் போராட்டமாக இதனைக் குறிப்பிட முடியும்.
""முஸ்லிம் மக்களை ஏமாற்றும் அரசியலைக் கைவிடுங்கள்'', ""முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் சமூகவாதிகளை தேர்தலுக்கு நிறுத்துங்கள்'' போன்ற பல்வேறு சுலோகங்களை மாணவர்கள் ஏந்தியிருந்ததோடு, அவற்றை சத்தம் போட்டுக் கோஷித்துக் கொண்டுமிருந்தார்கள். அவர்களின் சுலோகங்கள் யாவும் முஸ்லிம் அரசியற் தலைமைகள் மீது நம்பிக்கையிழந்து இருப்பதனையே காட்டியது. அரசியற் தலைமைகளில் நம்பிக்கையிழந்ததோடு மட்டுமன்றி, அதற்கு மாற்றீடாக முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கும் சமூகவாதிகளை தேர்தலில் நிறுத்த வேண்டுமென்றும் கோரியுள்ளார்கள்.
முஸ்லிம் மக்களின் இன்றைய அரசியற் தலைமைகள் பெரும்பாலும் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சமூகத்தின் தேவைப்பாட்டினை உணர்ந்து குரல் கொடுத்தவர்களாகவோ அல்லது அதற்காக சிந்தித்தவர்களாகவோ இருந்ததில்லை என்ற குற்றச்சாட்டும் பலமாக உள்ளது. அரசியலுக்கு வந்ததன் பின்னர்தான் சமூகத்தின் குறைகளைப் பற்றியும், பேரினவாத சக்திகளின் சூழ்ச்சிகளைப் பற்றியும் உணர்வு மிக்க பேச்சுக்கள் மூலமாக கூறினார்கள். அவர்களின் அப்பேச்சுக்கள் தேர்தலை வெல்லுவதற்கு உதவியதே தவிர, சமூகத்தின் உண்மையான குரலாக அவர்கள் செயற்படவில்லை என்றே விமர்சிக்கப்படுகிறது.
தேர்தல் முடிந்ததும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. முஸ்லிம் பிரச்சினைகள் தேர்தல் காலத்தில் மட்டும் தூசு தட்டப்படும் நிலையே தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இத்தொடர்ச்சி மே 10 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலிலும் இடம்பெறுகின்றது. இதனை நன்கு உணர்ந்தவர்களாகவே தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம், சமூகத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற சமூகவாதிகளை அரசியல்வாதிகளாக்கி பார்க்க வேண்டுமென்று சிந்தித்துள்ளார்கள். அரசியலுக்காக சமூகத்தைப் பற்றி பேசுபவர்களை விட, சமூகத்திற்காக அரசியலைப் பற்றி பேசுகின்றவர்கள் சமூகவாதிகள். இவர்களினால் நிச்சயமாக சமூகம், அரசியல்வாதிகளை விடவும் கூடுதலான நன்மைகளை அடையும் எனலாம். அரசியல்வாதிகளுக்கு பிடிக்காதவர்கள் சமூகவாதிகள். சமூகவாதிகள் யதார்த்தத்தைப் பற்றியே சிந்திப்பார்கள். யதார்த்தத்தைப் பற்றி சிந்திப்பதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயக்கம் காட்டுவதனால்தான் முஸ்லிம் அரசியலில் அவர்களின் விகிதாசாரத்தை விடவும் கூடுதலான அரசியற்கட்சிகளும் பிளவுகளும் காணப்படுகின்றன.
முஸ்லிம் அரசியற் தலைமைகள் ஒற்றுமைப்படுவதற்கு தடையாக இருப்பது அவர்களிடம் காணப்படும் வரட்டுக் கௌரவமாகும். மேடைகளில் ஒற்றுமைக்காக மற்றக் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில் காட்டும் தாராளத்தன்மை, ஒற்றுமைக்காக கலந்துரையாடும் போது காட்டுவதில்லை. ஒற்றுமைக்கு தடையாக இருப்பது, யார்? யாரின் பின்னால் செல்லுவது? என்பதாகும். நானுமொரு தலைவன், நான் அவர் பின்னால் சென்றால் என்னைத் தலைவர் என்று அழைக்கமாட்டார்கள். எனது கட்சி அழிந்து விடும். கட்சி அழியுமாயின் தமது முகவரியும் மறைந்து போய்விடுமென்ற சிந்தனைகள்தான் ஒற்றுமைக்கு தடையாகவுள்ள பிரதானமான காரணிகளாகும். முஸ்லிம் அரசியற் தலைமைகள் தமது கட்சியின் இருப்பினை விடவும், தமது தலைமைப் பதவி என்பதனை விடவும் சமூகத்தின் இருப்பினை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தின் இருப்பினை உறுதி செய்து கொள்ள முடியாத அரசியற் கட்சிகள் சமூகத்திற்காக எதனை சாதிக்கப் போகின்றன? சமூகம் சீரழிந்த நிலையில் கட்சிகளினால் நிலைத்திருக்க முடியுமா? ஆதலால் முஸ்லிம் தலைமைகள் சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் போது கட்சிகள் அழிந்து விடாது. சமூகத்திற்காக உண்மையான சேவை செய்தோரை சமூகம் ஒரு போதும் மறந்து விட மாட்டாது. டி. பி. ஜாயா, அறிஞர் சித்திலெவ்வை, சேர் ராசீக் பரீட், பதியுத்தீன் மஃமூத், எம். எச். எம். அஸ்ரப் போன்ற தலைவர்களை நல்ல உதாரணமாகக் கூற முடியும்.
கிழக்கு மாகாண சபையானது ஒரு அவசரத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. இத்தேர்தல் மூலமாக அரசாங்கம் கிழக்கில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட மக்களின் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு காட்டுவதோடு பிரதிநிதிகளால் சிங்கள மக்களின் அமோக ஆதரவை திரட்டிக் கொள்வதற்கும் முயன்று கொண்டிருக்கின்றது. இந்த முயற்சியினூடாக ஒரு திடீர் பொதுத் தேர்தலை சந்திப்பதற்கான சாத்தியங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் அரசாங்கம் எண்ணுகின்றது. ஆனால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பொறுத்தவரை இந்த அவசரத் தேர்தலை விரும்பவில்லை என்றே கூறுதல் வேண்டும். இருந்தபோதிலும் தமிழ் பேசும் சமூகங்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டேயாக வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் யார் பங்குபற்றா விட்டாலும் அரசாங்கக் கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவே செய்யும். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையினராக தமிழ் பேசும் சமூகங்கள் இருக்கின்ற நிலையில், சுமார் 25 சதவீதமாகவுள்ள சிங்களவர்களின் ஆதிக்கத்தின்கீழ் கிழக்கு மாகாணத்தைக் கொண்டு வருதல் வேண்டுமென்று மிக நீண்ட காலமாகவே முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் தமிழ்பேசும் சக்திகளிடம் இருந்து விலகிச் செல்லுமாயின் அவர்களின் நீண்டகால முயற்சியானது இலகுவாக நிறைவேறி விடும். இந்த விடயத்தில் தமிழ் பேசும் சமூகங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண சபையின் அதிகாரம் பெரும்பான்மையினராகவுள்ள தமிழர்களைச் சென்றடைய வேண்டும். அல்லது முஸ்லிம்களைச் சென்றடைய வேண்டும். மொழியால் ஒன்றுபட்டு நிற்பவர்கள் என்ற அடிப்படையில் செயற்படுதல் வேண்டும். மட்டுமன்றி தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
முஸ்லிம் அரசியற் தலைமைகள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தப்படுவதற்கு காரணம் கிழக்கில் தமிழ்பேசும் சக்திகளின் அதிகாரம் கையைவிட்டு விலகி மற்றத்தரப்பிற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே. ஏனெனில், முஸ்லிம்களின் காணிகள் மற்றும் கலாசார விழுமியங்கள் இன்று என்றுமில்லாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் கிழக்கின் அதிகாரத்தினை தமிழ்பேசும் தரப்புகள் கோட்டைவிடுமாயின் முஸ்லிம்கள் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடலாம்.
கிழக்கின் அதிகாரத்தை தமிழர்கள் கைப்பற்றும்போது முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்கு எதிராக அந்த அதிகாரம் பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று முஸ்லிம்கள் அதிகாரத்தினைக் கைப்பற்றும் போது அதனை தமிழர்களின் அபிலாஷைகளுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. இவ்விரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக செயற்படும் போது பேரினவாத சக்திகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகாரத்தினை கைப்பற்றுவதற்கு அல்லது அதிகாரத் தரப்பினை ஆட்டிப் படைப்பவர்களாக மாறி விடுவார்கள். மேலும் தமிழ் பேசும் சமூகம் எவர் அதிகாரத்தினைப் பெற்றாலும் கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் மனங்களையும் வென்றிட வேண்டும். அப்போதுதான் பேரினவாதத்தின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்வதோடு, தமிழ் பேசும் சமூகங்களின் நியாயங்களுக்கு துணையாகவும் கிழக்கிலுள்ள சிங்கள மக்கள் நிற்பார்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை தமிழ், முஸ்லிம், உறவுகள் மட்டுமன்றி சிங்களவர்களின் உறவுகளும் பேணப்பட வேண்டும். ஏனெனில் இலங்கையின் இனத்துவ அரசியலில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது கிழக்கு மாகாணமாகும். இங்கு மூவின மக்கள் வாழ்ந்த போதிலும் இனங்களிடையேயான சந்தேகங்கள் இன்னும் முற்றாகத் தீரவில்லை. இதனைத் தீர்க்க வைக்கும் கருவியாக கிழக்கு மாகாண சபையின் அரசியல் அதிகாரம் செயற்பட வேண்டும்.
முஸ்லிம் கட்சிகள் தங்களிடையுள்ள வேற்றுமைக்கிடையே ஒற்றுமை காணத் தவறியுள்ளதால் இனி ஒரு போதும் இவர்கள் ஒற்றுமைப்படப் போவதில்லை என்றதாகி விட்டது. இருந்தபோதிலும் கிழக்கில் தமது பிரதிநிதிகளை உறுதி செய்யும் துரும்புச் சீட்டு முஸ்லிம் வாக்காளர்களின் கைகளில் தங்கியுள்ளன. அதனை அவர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். முஸ்லிம் கட்சிகள் தமக்கு விரும்பியவர்களை வேட்பாளர்களாக நிறுத்தாது, மக்கள் விரும்பக் கூடிய, சமூகத்திற்காகக் குரல் கொடுக்கக் கூடியவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும்.
இதனையே தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கோரியுள்ளது. இதனை சாதாரணமாக கருதி விடாது இதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முஸ்லிம் வாக்காளர்கள் தமக்கு உறவினர், நண்பர், தெரிந்தவர் என்று எண்ணி வாக்களிக்காது சமூகத்தின் மீது அக்கறையுடையவர் யார்? என்று சரியாக கணித்து வாக்களிக்க வேண்டும். அப்போது தான் சமூகத்தின் உரிமைக் குரல் வெளிப்படும்.
நன்றி :- வீரகேசரி
Sunday, March 30, 2008
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலும் முஸ்லிம்களின் உரிமைகுரலும்
Posted by tamil at 6:31 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment