Saturday, March 15, 2008

வெறும் வார்த்தைகள் வயிற்றை நிரப்புமா?

இலங்கையானது தற்போது குறைந்த வருமானமும் உணவுப் பற்றாக்குறையுமுள்ள நாடாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவில் அதிகளவானோர் பசியால் வாடும் நிலைமை இங்கு காணப்படுவதாக உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் மதிப்பீட்டின் பிரகாரம் அறியவருகிறது.
உணவு கிடைப்பதற்கான உரிமையானது அடிப்படை மனித உரிமைகள் யாவற்றிலுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய உரிமையாகும்.

அத்துடன், மனிதர்கள் யாவருக்குமே முதலாவதாக தேவைப்படுவது உணவாகும். இரண்டாவதாக சுகாதாரம் உள்ளது. இவையிரண்டுமே பரஸ்பரம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாகும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான போஷாக்கு உணவிலிருந்தே கிடைக்கின்றது. ஆதலால், பொதுமக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை நீடித்த ஆயுள், குறைந்தளவிலான சிசு மரணம், கல்வியறிவு உயர்மட்டம் என்பவற்றில் சிறப்பான விதத்தில் முன்னேற்றம் கண்டிருக்கின்றபோதும் வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை மிகத்தாழ்ந்த மட்டத்திலேயே இருக்கின்றது.

இதற்கு பிரதான காரணமாக சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளேயென்று பொருளியல் நிபுணர்கள் சாடுகின்றனர்.

செல்வந்தர்- ஏழைகள் இடைவெளியானது மிகவும் மோசமாக அதிகரித்து வருகின்றது. 1977 இல் ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியதிலிருந்து இந்த உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி மிகவும் மோசமான முறையில் விரிவடைந்து வந்துள்ளது.

ஆட்சிக்குவரும் சகல அரசாங்கங்களுமே தமது ஆட்சியைத் தக்க வைப்பதிலும் மீண்டும் ஆட்சிக்கதிரையை கைப்பற்றுவதிலுமே குறியாக இருந்து வருகின்றமையே முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக அலட்சியப் போக்கைக் கடைப்பிடிப்பதற்கு பிரதான காரணமாகும்.

இனநெருக்கடி உட்பட எந்தவொரு பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அரசியல் ரீதியான ஆதாயம் கிடைக்குமா என்று கூட்டிக்கழித்து கணக்குப் பார்ப்பதிலேயே பெரும்பாலான அரசியல்வாதிகள் ஈடுபடுவதும் அதிகாரத்திலுள்ளோரின் விருப்பு வெறுப்புகளுக்கமையவே கொள்கை வகுப்பாளர்களும் அமுலாக்கத்திற்கு பொறுப்பானவர்களும் செயற்படுவதும் தொடர் நிகழ்வாகிவிட்டமையே சகல பிரச்சினைகளும் தீர்வின்றி முடங்கிக் கிடப்பதற்கு முக்கிய காரணமாகத் தென்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களின் கட்டுப்பாடில்லாத வகையிலான விலையேற்றங்கள், மின்சாரம் , எரிபொருட்களின் கட்டண அதிகரிப்புகள், போக்குவரத்து உட்பட சேவைகளுக்கான கட்டண உயர்வுகள் என்பன ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவாறு வறுமைக் கோட்டின் கீழ் பெருந்தொகையானோரை தள்ளிவிடுகின்றன.

குடித்தொகை , புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட குடும்பங்களின் வருமானம் , செலவீனம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்குக்கு வெளியேயுள்ள 17 மாவட்டங்களின் புள்ளிவிபரம் வெளியாகியிருந்தது. அவற்றில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் மூன்றிலொரு தொகையினர் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வட கிழக்கு மாவட்டங்கள் இவற்றில் உள்ளடக்கப்படவில்லையானாலும் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமானதாகும். தொடரும் மோதல்களினால் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்கின்றனர்.

ஐ.நா. முகவரமைப்புகளின் புள்ளிவிபரத்தின் பிரகாரம் இவர்களின் எண்ணிக்கை சுமார் 4 இலட்சமாகும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த இந்த மக்கள் தொழில் வசதிகளை இழந்து நிவாரணத்திலேயே தங்கியிருப்பதுடன் போதியளவு உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடும் அந்த மக்களின் போஷாக்கு நிலைவரம் குறித்து வார்த்தைகளால் வர்ணிக்கத் தேவையில்லை.

உணவுப் பற்றாக்குறை உட்பட மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு கிட்டுவதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை. சிவில் சமூகமும் இந்தப் பிரச்சினைக்கு செயற்றிறனுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கான சாத்தியமும் அருகியே காணப்படுகின்றது.

பயங்கரவாத ஒழிப்பின் பின்னரே பிரகாசமான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்குமென்ற உறுதிமொழிகள் தென்னிலங்கையில் தாராளமாக அள்ளிவிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த அறிவிப்புகளும் உறுதிமொழிகளும் மக்களின் வயிற்றை நிரப்புமா என்பது ஒருபுறமிருக்க எவ்வளவு காலத்துக்குத்தான் மக்கள் உணவு உட்பட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வெறும் வார்த்தைகளை நம்பிக் காலத்தை கழிப்பார்கள்?

நன்றி :- தினக்குரல்

0 Comments: