தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கையை தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்தி வந்த மற்றொரு ஜனநாயகக் குரல், வன்முறை மூலம் அடக்கப்பட்டிருக்கின்றது.
"மஹிந்த சிந்தனை' தென்னிலங்கையின் ஆட்சி அதிகார சுலோகமாக மந்திரமாக மாறியபின்னர், நான்காவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
முதலில் ஜோஸப் பரராஜசிங்கம். அடுத்து ரவிராஜ். பின்னர் மகேஸ்வரன். இப்போது சிவநேசன்.
தவிரவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவமகாராஜா, சந்திரநேரு, தமிழத் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. பதவியை ஏற்கவிருந்த திருகோணமலையின் விக்னேஸ்வரன் போன்றோரும் இக்கால கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இலங்கைத் தீவின் நாடாளுமன்றத்தில் கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் ஆகக் கூடியதாக இலங்கைத் தமிழர்கள் 24 பேர் நாடாளுமன்றத்தில் இருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓரிடமும், மகேஸ்வரன் எம்.பியின் ஓரிடமும் முஸ்லிம் உறுப்பினர்களுக்குப் போய்விட்டமையால் இலங்கைத் தமிழ் எம்.பிக்களின் எண்ணிக்கை இப்போது 22 ஆகக் குறைந்துவிட்டது.
ஆக, 24 தமிழ் எம்.பிக்களில் நால்வரை அதாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறில் ஒரு பகுதியினரை "மஹிந்த சிந்தனை' யின் நிர்வாகத்தின் கீழ் தமிழர் தரப்பு இழந்து நிற்கின்றது.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 24 இலங்கைத் தமிழர் தரப்பு எம்.பிக்களில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் பிரதான தரப்புகளுள் ஒன்று தமிழர் தரப்பு.
அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கை என்ற பெயரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது "மஹிந்த சிந்தனை'யின் கீழ் நிறுவிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் தெரிவுக்குழுவில் இந்த 22 பேரைக் கொண்ட தமிழர் தரப்பு முற்றாக ஒதுக்கப்பட்டது. அந்தத் தரப்பை மொத்தம் உள்ள இலங்கைத் தமிழ் எம். பிக்கள் 24 பேரில் 22 பேரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் நாடாளுமன்றக் கூட்டமைப்பு மூலம் இலங்கைத் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் எத்தனம் என்ற நாடகத்தை அவர் ஒப்பேற்றுகின்றார்.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியில் தமிழரின் ஜனநாயகப் பிரதிநிதிகளின் கருத்தைக் கேட்பதற்குத் தயாரில்லாமல் அவர்களை ஒதுக்கி வந்த தென்னிலங்கை, இப்போது அவர்களை ஒழித்துக் கட்டுவதையும் தனது "சிந்தனை'யில் சேர்த்துக்கொண்டு விட்டது போலும். வரிசையாக இடம்பெறும் தமிழ் எம்.பிக்களின் படுகொலைகள் அத்தகைய எண்ணத்தையே நமக்குத் தருகின்றன.
ஆட்கடத்தல்கள், பலவந்தமாகக் கடத்திக் காணாமற் போகச் செய்தல், குறிவைத்துப் படுகொலை செய்தல் போன்ற கொடூரங்கள் இலங்கையில் மிக மோசமடைந்திருக்கும் சமயத்தில்
மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பில் இலங்கையின் சீரழிவு நிலை குறித்தும் தற்போது ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஏழாவது கூட்டத் தொடரில் விரிவாக ஆராயப்பட்டு வருகையில்
ஆட்கடத்தல், பலவந்தமாகக் காணாமற்போகச் செய்தல் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு அரசும், அரசுப் படைகளும், அரச ஆதரவுடன் இயங்கும் ஆயுதக் குழுக்களுமே பிரதான காரணம் என்று பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனமும் அதிருப்தியும் வெளியிட்டு வரும் சூழ்நிலையில்
மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து நீதியான விசாரணை நடத்தப்படுகின்றது என்று உலகுக்குக் காட்டுவதற்காக அரசு நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழு, காத்திரமாக எதையுமே செய்யவில்லை என்ற உண்மையை சர்வதேச சுயாதீன பிரமுகர்களைக் கொண்ட கண்காணிப்பு அணி அப்பட்டமாகப் போட்டுடைத்து அறிவித்துள்ள பின்னணியில்
தமிழர் தரப்பின் ஜனநாயகப் பிரதிநிதி ஒருவரைக் கொன்றொழிக்கும் அட்டூழியமும் அரங்கேறி, இந்த ஆட்சி அதிகாரத்தின் நியாயச் செயற்பாட்டுப் போக்கை சர்வதேச அரங்கில் சந்தி சிரிக்க வைத்திருக்கின்றது.
இலங்கையில் தற்போது தொடர்ந்தும் கட்டுமட்டில்லாமல் பெருங் கொடூரமாக நீண்டுவரும் மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களும்
அவற்றைக் கட்டுப்படுத்தவோ, அக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவோ இசைவின்றி அதற்குக் காத்திரமான நடவடிக்கை எடுக்காமல் வாளாவிருந்தபடி அத்தகைய மோசமான செயல்களுக்கும் அரசுத் தரப்புக்கும் எந்தத் தொடர்புமேயில்லை என்று வெறும் வாய்ப்பேச்சு அறிவிப்புகளை அரசு விடுத்து வருவதும்
இவ்விவகாரங்களை ஒட்டி சர்வதேச மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் வெளியாகும் அறிவிப்புகள், அறிக்கைகளும்
இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்து, உண்மைகளைக் கண்டறிந்து, அறிக்கையிடக்கூடிய அதிகாரத்துடன் இங்கு சுயாதீனமான சுதந்திரமான சர்வதேசக் கண்காணிப்புக் குழு ஒன்று இருப்பது கட்டாயம் அவசியம் என்பதையே எமக்கு வெளிப்படுத்தி நிற்கின்றன.
நன்றி ;- உதயன்
Saturday, March 8, 2008
ஜனநாயகக் குரலை ஒதுக்கி வந்தவர்கள் இப்போது அதை ஒழித்துக் கட்டுகின்றனர்
Posted by tamil at 6:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment