Saturday, March 8, 2008

'மடு"த்தலம் மகிந்தவுக்கு தூரத்துக் கோவிலா?

ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்டு 2052 ஆண்டுகளும், சிறிலங்காப் படைகள் மடுவைக் கைப்பற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து ஒரு ஆண்டும் வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதியோடு முடிவடைகின்றன.

2007 மார்ச் 15 காலை 9:00 மணியளவில் இரணைஇலுப்பங்குளம் பீரங்கித் தளத்தில் இருந்து முள்ளிக்குளம், கீரிசுட்டான், பெரியபண்டிவிரிச்சான் ஆகிய ஊர்களின் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு புதிய களமொன்றை நோக்கி சிறிலங்காப் படைகள் அடியெடுத்து வைத்தன. சமகாலத்தில் புளியங்ககுளத்தை நோக்கியும் பூவரசங்குளத்தில் இருந்து கணைகள் வீசப்பட்டன.

மாலையில் பாலைமோட்டைக்கு மேற்காக இருக்கும் முள்ளிக்குளத்தில் விடுதலைப் புலிகளுக்கும் முன்னேறிவந்த படையினருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்றன.

புலிகளின் காவலரண் வரிசை வரை வந்த படையினர் அதற்குமேல் முன்னேற முடியாமல் பாதுகாப்பான தொலைவிற்குப் பின்வாங்கினர். அதன் பின்னான தேடுதலின் போது படையினர் விட்டுச் சென்ற படையப் பொருட்களையும், பல படையினர் படுகாயம் அடைந்ததற்கான தடயங்களையும் விடுதலைப்புலி வீரர்கள் அவதானித்தனர்.

விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் ஒன்றைத் தாங்கள் முறியடித்த சம்பவமாக அதைத் திரித்துக் காட்டிய அரச தரப்பு, புலிகளுக்கு அதில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டது.

அரசாங்கம் அன்று அவ்வாறு நடந்துகொண்டதற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் இருந்தன.

அந்நாட்களில் போர்நிறுத்த உடன்படிக்கையை கொள்கையளவில் மதிப்பதாக பன்னாட்டுச் சமூகத்தின் முன்னால் வேடங்கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு இருந்தது. முக்கிய பன்னாட்டு நிதி ஒப்பந்தங்கள் இயங்க ஆரம்பிக்கும் வரை சமாதான நாட்டம் தமக்கு இருப்பதாகக் காட்டுவது ஒரு நோக்கம்.

அடுத்தது, நடவடிக்கை ஒன்று ஆரம்பித்தால் அதன் இலக்கு சொல்லப்பட வேண்டும். காலம் நிருணயிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு குறித்த காலத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியும் என்ற நம்பிக்கை சிறிலங்காவின் படைத்தலைமைக்கோ அரச தலைமைக்கோ இருக்கவில்லை. அதனால், கௌரவமாகப் பெயர் சொல்லக்கூடிய ஒரு இடத்தை அடையும் வரை நடவடிக்கையை அறிவிப்பதில்லை என்றும், இலக்கு எய்தப்படும் வரை அதைப்பற்றிப் பேசுவதில்லை என்றும் ராஜபக்சர்கள் முடிவெடுத்திருந்தனர்.

இன்று, சிறிலங்கா படையினர் பெரியபண்டிவிரிச்சானிலும், தட்சணாமருதமடுவின் தென்புறக் காடுகளிலும் தங்களை நிலைப்படுத்திக்கொள்வதற்குத��
� துடியாய்த் துடிப்பதில் இருந்து அவர்களின் இலக்கு என்னவாக இருந்தது என்பது கேள்விக்கு இடமின்றி வெளிச்சமாகிவிட்டது.

இராசதந்திரிகள் மட்டத்திலும் கத்தோலிக்கத் திருச்சபையின் உச்சத்திலும் அறியப்பெற்றுள்ள மடு ஆலயப் பகுதியைக் கைப்பற்றுதல், மன்னார்-பூநகரி கரையோரத்தைத் தமது ஆதிக்கத்தினுட் கொண்டுவருதல் எனும் முதன்மை இலக்குகளை நோக்கிய அவர்களின் பெறுபேறுகள் எவை என்பதே இப்போது அவதானிகளின் பார்வையைக் கவர்ந்துள்ள விடயம்.

கடந்த ஞாயிறன்று சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இந்தியவிற்குப் புறப்பட முன்பதாக இந்தியப் படை அதிகாரிகள் சொன்ன கட்டியத்தில் இருந்து, இவர்களுடைய கெட்டித்தனம் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது.

~புலிகளுடனான போரில் சிறிலங்காத் தரைப்படை 'தொய்ந்துபோவதை" நாங்கள் விரும்பவில்லை,| என்று இந்தியப் படைய அதிகாரிகள் சொன்னதை இந்தோ ஆசியச் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தச் செய்தியில் பலதும் பத்தும் தொக்கு நிற்பதாக அவதானிகள் சொல்கிறார்கள்.

இதுவரை சொல்லத் தயங்கிய இந்தியாவின் உண்மை நிலைப்பாட்டை, அதாவது, புலிகளுக்கு எதிராகப் போர் நிகழவேண்டும், அதிலே புலிகள் பலவீனமடைய வேண்டும் எனத் தென்மாடம் என்று அழைக்கக்கூடிய இந்தியக் கொள்கை வகுப்பு மையமான 'சவுத் புளொக்" ஆசைப்படுவதை அது வெளிச்சமாக்கியிருக்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சனைக்கு யுத்தம் ஒரு தீர்வாக அமைய முடியாது என்று இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் வலியுறுத்திய செய்தி, மற்றும் ஈழத்தமிழர் மீதான இந்தியக் கரிசனை பற்றிய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பொழிவு என்பவை காதில் இருந்து உலருமுன் இந்த முரணிலைச் செய்தி வந்திருப்பது தருணப்பிசகாக இருக்குமோ என்றால், அதுவும் இல்லை.

முடிவெடுக்கும் தகுதியும் அதைச் செயற்படுத்தும் ஆற்றலும் உள்ள தென்மாட வாசிகளின் ஆட்டுவிப்பிற்கு அரசியல் தலைவர்களும் அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதே இந்தியக் கொள்கை வகுப்பு யதார்த்தம். இவ்விதமான சங்கதிகளில், அந்நாட்டின் நடைமுறை நிலைப்பாடும் வெளிச்சொல்லப்படும் உத்தியோகபூர்வ நிலைப்பாடும் மாறுபடுவது ஈழத்தமிழருக்குப் பழஞ்செய்தி.

அடுத்ததாக, மடுவைக் கைப்பற்றுவதற்கான படைய எத்தனங்களில் சிறிலங்கா தரைப்படையின் வினைத்திறன் பற்றிய இந்தியப் படைய வல்லுநர்களின் பார்வையையும் அது காட்டி நிற்கிறது. ~தொய்ந்துபோவதை| விரும்பவில்லை என்னும்போது, சிறிலங்காவின் படை நடவடிக்கை தளர்ச்சியடைந்துள்ளது, அதை நாங்கள் நிமிர்த்த விரும்புகிறோம் என்பதே அதன் பொருள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தனது காத்திரமான பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற தென்மாடத்து விருப்பு முன்னரும் வெளிப்பட்டிருந்தது. கடற்படை ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட அறிக்கைகள் மற்றும் சிறிலங்கா எங்களிடம் உதவி கேட்கலாம்தானே என்ற பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணின் கூற்று என்பவை எடுகோள்கள்.

விடுதலைப் புலிகளை வெடிப்பொருள் வலுவின் மூலம் (pழறநச ழக pழறனநச யனெ அயவநசயைடள) வென்றுவிடலாம் என்ற உத்தியில் அதீத நம்பிக்கை வைத்திருந்த சரத் பொன்சேகா தனது திட்டங்கள் அத்தனைக்கும் பெருந்தொகையான எறிகணைகளைக் கோரியிருந்தார். கொள்ளுப்பிட்;டிக் கூட்டுச் சந்தையில் பலநூறு ரூபாவிற்கு விற்கப்படும் பொருட்களை புறக்கோட்டை நடைபாதை அங்காடியில் சோடி நாற்பது ரூபாவிற்குக் வாங்குவது போல சீனப் படைக்கலன்களை சிறிலங்கா எக்கச்சக்மாக அள்ளிக்கட்டியதை இந்தியா ரசிக்கவில்லை.

இதில் போட்டிச் சந்தை என்பதைவிட, அருகிருக்கும் நாடு தனது இறைமையின் வீச்செல்லைக்குள் நில்லாது திமிறப் பார்ப்பதே இந்தியாவின் நெருடல்.

படைப்பொருட்களுக்காக பாகிஸ்தான், சீனா போன்ற தனக்கு வில்லங்கமான நாடுகளில் சிறிலங்கா சார்ந்திருப்பதால் சங்கடமாகிய இந்தியா, தமிழ்நாட்டைக் குழப்பாத வகையில் சிறிலங்காவிற்கான படைய உதவிகளை எவ்வாறெல்லாம் செய்யமுடியும் என்று பலமாக யோசித்து வந்தது.

குறிப்பாக நாலாம் கட்ட ஈழப்போரின் போது, விடுதலைப் புலிகளின் பலமான தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் இந்தியா தன் அபயக்கரத்தைச் சிறிலங்காவை நோக்கி நீட்டத் தவறவில்லை.

விடுதலைப் புலிகள் முதன்முதலில் விமானத் தாக்குதல் நடத்தியவுடன், காச்சல் காரனுக்கு விசுக்கோத்துப் பெட்டி கொடுக்கும் கணக்கில் ராடர் கருவிகளைத் தந்து உதவியது இந்தியா. அந்த ராடர்கள் எல்லாம் வெத்துவேட்டுச் சங்கதிகள் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர்; நையாண்டி பண்ணியும், அதன் உதவிக்கரம் சுருங்கவில்லை.

அனுராதபுரத்தின் மீது விடுதலைப் புலிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதல் நிகழ்ந்த போது, அதைக் கையாள்வது எப்படியென்று டெல்லியோடும் பேசுவதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறிலங்காப் படைகளுக்கு மின்னியற் புலனாய்வுப் பயிற்சி போன்ற முக்கிய பயிற்சிகளும் அதற்கான கருவிகளும் தரப்படுவது அண்மையில் தெரியவந்தது.

இவ்வித உறவு விருத்தியின் ஒரு கட்டமாக, ஆறு நாள் ஆர்ப்பாட்டப் பயணத்தில் பொன்சேகாவை உள்ளெடுத்திருக்கிறது இந்தியா. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, இராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூர், கடற்படைத் தளபதி அட்மிரல் சுரேஸ் மேத்தா, விமானப்படைத் தளபதி எயர் சீப் மார்சல் பாலி கோம் மேஜர், பாதுகாப்புச் செயலர் விஜெய் சிங் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த பல முக்கியமானவர்கள் அவரைச் சந்திக்கிறார்கள்.

மிசோரத்தில் இருக்கும் தீவிரவாத முறியடிப்புப் பயிற்சித் தளம், கர்நாடகத்தில் இருக்கும் காட்டுப் போர்முறைப் பயிற்சித்தளம், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் காலாட்படைப் பள்ளி என்று அவரின் பயணப் பட்டியல் நீள்கிறது. அப் பள்ளியின் பொறுப்பதிகாரி லெப். ஜெனரல் கே.எஸ்.யாதவ் உடன் சிறப்புச் சந்திப்பு ஒன்றும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வருங்காலத்தில் சிறிலங்காவின் இடைநிலை அதிகாரிகள் பலர் இந்தியாவில் துறைசார் பயிற்சிகளைப் பெறுவதற்கான ஏது நிலைகளும் தென்படுகின்றன.

தென்மாடத்தில் படைய அணிவகுப்பு வரவேற்பு முடிந்த கையோடு காஷ்மீரின் எல்லைப்புறக் காவற் கட்மைப்பைச் சென்று பார்த்தார் சரத் பொன்சேகா. எதிர்காலத்தில் இலங்கையிலும் அதைத்தான் செய்யவேண்டியிருக்கும் என்பதைத்தான் இந்திய இராசதந்திரம் குறிப்பால் உணர்த்துகிறது என்றும் சில செய்தி ஊடகங்கள் கடித்தன.

இப்போது அவர் இலங்கை-இந்தியப் படைகளுக்கிடையேயான அதிகரித்த கூட்டுறவை நாடியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

சிலங்கா தளபதி எங்கே சென்றாலும், என்ன செய்தாலும், மன்னாரில் அவர் என்ன செய்வார் என்ற கேள்விக்கே இப்போது மதிப்பு.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 104 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 822 பேர் காயப்பட்டிருப்பதாகவும் மகிந்த அரசாங்க முக்கியர்களில் ஒருவரான நிமால் சிறிபால டி சில்வா அவையில் பேசியிருக்கிறார்.

இவ்வகையில், கடந்த ஒரு வருட கால சிறிலங்காத் தரப்பு இழப்பைக் கணிப்பதானால் அந்தத் தொகையைக் குறைந்தது பன்னிரண்டால் பெருக்கிப் பார்க்க வேண்டும்.

கணிப்புக்கள் எவ்வாறு அமைந்தாலும், மடுத்தலம் போன்ற ஒரு இடத்தைப் பலமுறை கைப்பற்றுவதற்குத் தேவையான ஆளணியை சிறிலங்கா ஏற்கனவே இழந்து விட்டது, இருந்தும் அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை என்பதே கள யதார்த்தம்.

உத்தி, வியூகம், படைக்கலப் பயன்பாடு என்பவற்றின் வகையில் சில மாற்றங்கள் தென்பட்டாலும், ஜெயசிக்குரு கால வாய்ப்பாட்டு மீட்சியே இது என்னும் முடிவைத் தவிர வேறெதுவும் இதிற் புலப்படவில்லை. சிறிலங்கா படையினர் தங்கள் இலக்கை நோக்கி முன்னேறும் ஒவ்வொரு அங்குலத்திற்கும் செலுத்தும் விலையின் அளவு மற்றும் படைய இலாபமற்ற இடங்களில் அரசியற் காரணங்களுக்காக துருப்புக்கள் புதையுண்டு நிற்கவேண்டிய சூழல் என்பன ஜெயசிகுருவைப் போலவே மீண்டும் எழுந்துள்ளன.

தற்காப்புப் போரின் ஒரு பகுதியான தூண்டற்பேற்றுப் போர்முறை அல்லது துலங்கற் போர்முறையை (சநளிழளெiஎந றயசகயசந) விடுதலைப் புலிகள் மிக வெற்றிகரமாக நடத்துவதை, அவர்களின் கண்ணிவெடிகளின் தாக்கம், குறிச்சூட்டாளரின் வினைத்திறன், மற்றும் அரணமைப்பு என்பவை புலப்படுத்துவதாக ஐரோப்பிய ஆய்வாளர் ஒருவர் சொன்னார்.

அதேவேளை, சடுதியான மீட்சித் திறனைப் புலிகள் பலமுறை நிரூபித்திருப்பதாக ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தெற்காசிய ஆய்வாளர் சைமன் கார்டினர் கூறுகிறார். இன்னுமொருபடி மேலே போகும் இக்பால் அத்தாஸ், பாரிய தாக்குதலொன்றுக்குப் புலிகள் தயாராவதாகச் சொல்கிறார். இரண்டாம் உலகப் போரின்போது ஆண்ஹெம் பாலத்தைக் கைப்பற்றும் நோக்கில் நேசப்படையினர் நடத்திய மார்கெட் கார்டன் நடவடிக்கையில் நேசப்படையைச் சேர்ந்த 14,084 பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமற் போயினர். எதிரணியான ஜெர்மனியத் தரப்பில் ஏறத்தாழ 2000 வீரர்களே உயிரிழந்திருந்தனர்.

பாலத்தை அண்மித்த நிலையில், அந்தப் பாலம் உங்களுக்குத் தூரத்துப் பொருள் ஆகிவிட்டது எனக்கூறி நடவடிக்கைத் துருப்புக்களைப் பின்வலித்தது நேசநாட்டுப் படைத்தலைமை.

அவ்வாறான கள யதார்த்தக் கணிப்புக்களின் அடிப்படையில் ஒரு படை நடவடிக்கையைப் பின்னிழுக்கும் முடிவைச் எடுக்கக்கூடிய அரசியல் உறுதிப்பாடு கொழும்பில் ஒருபோதும் இருந்ததில்லை. அளவுக்கு மீறிய விலைசெலுத்துதல் அல்லது சங்குலமான பின்வாங்கல் என்பவையே கொழும்பின் நிரந்தரத் தேர்வாக இருந்துள்ளன.

மகிந்தருக்கு மடுத்தலம் தூரத்துக் கோயிலா அல்லது விலைவீங்கிய கொள்வனவா என்பது இவ்வருட நடுப்பகுதிக்கு முன்னர் தெரியவரலாம் என்பதே இப்போதைய பன்னாட்டுப் பார்வை. கிமு 44 இல் சீசர் கொல்லப்பட்ட நாளையும் மாதத்தையும் ஐரோப்பியர்கள் சகுனப்பிழையானவை என்று கருதுகின்றனர். சரத் பொன்சேகா அதைப்பற்றியும் சிந்திக்கத் தொடங்கியிருப்பார்.

நன்றி: வெள்ளிநாதம்
-சேனாதி-

0 Comments: