Monday, March 3, 2008

''மேற்குலகை வழிநடத்தும் ஆய்வுக்குழுக்கள்''

தொடரும் அழிவுகளை மட்டுப்படுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது என்கிற நிலைப்பாட்டின் அடிப்படையில் மனித உரிமைகளைப் பேணும்படி அரசினையும், வன்முறைப் போராட்டத்தைக் கைவிடுமாறு விடுதலைப் புலிகளையும் நோக்கி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. நீடிக்கும் யுத்தம் ஏற்படுத்தும் அழிவுகளை நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாப்பதனூடாக இலங்கையின் ஜனநாயக விழுமியங்களைத் தக்க வைப்பதே சர்வதேசத்தின் கடமையாகுமென மேற்குலகம் கருதுகிறது. ஆனாலும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்ட நியாயப்பாடுகளை கருத்திற் கொள்வதற்கோ அல்லது நீதியான போராட்டமென்கிற வரையறைக்குள் அதனை நிறுத்தி மதிப்பீடு செய்வதற்கோ இந்த மேற்குலக ஜனநாயகவாதிகள் அக்கறை கொள்ளவில்லை. மாறாக தமிழீழத் தனியரசு என்கிற கோட்பாட்டை கைவிடுவதாக வெளிப்படையாக அறிவித்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினைக்காண விரும்புவதாக விடுதலைப் புலிகள் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டுமென இம்மேற்குலக கருத்துருவாக்கக் குழுக்கள் விரும்புகின்றன.

இக்குழுக்களின் இலங்கையின் நெருக்கடித்தீர்விற்கான பரிந்துரைப்புக்கள், இப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் நோக்கி சமகால அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் வரையப்பட்டிருப்பதையும் கவனிக்க வேண்டும். தற்போது, சர்வதேச ஊடகப் பரப்பில் பரவலாகப் பேசப்படும் ஐ.சீ.ஜீ. (ஐ.இ.எ) என்றுஅழைக்கப்படும் "சர்வதேச நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு'(ஐணtஞுணூணச்tடிணிணச்டூ இணூடிண்டிண் எணூணிதணீ) என்கிற கருத்து மதிப்பீட்டு மையமானது பெல்ஜியத்தின் பிரசல்ஸை தளமாகக் கொண்டு இயங்குகிறது.

இந்த ஆய்வு மையமானது நெருக்கடிகளுக்குள்ளாகும் உலக நாடுகளில் ஏற்படும் முரண்பாட்டுச் சூழல் குறித்தான தமது ஆய்வுப் பகிர்தலை நெறிப்படுத்தி, அதற்கான தீர்வுகளை அறிவியற் தளத்திலிருந்து முன்வைப்பதாகக் கற்பிதம் கொண்டுள்ளது. ஒருவகையில் புதிய உலக ஒழுங்கிற்குரிய சிந்தனைக் கள மையமாகத் (கூடடிணடு கூச்ணடு) தன்னை உருவகித்துக் கொண்டுள்ளதெனவும் கூறலாம்.

பெரும்பாலான மேற்கத்தைய நாடுகளில் வெளியுறவுக் கொள்கைத் திட்டமிடல், சர்வதேச ராஜரீக தொடர்பாடல் குறித்த விவகாரங்களுக்கென்று தனியான சிந்தனைக்குவிமைய நிலையமொன்று உண்டு. அதிலும், வளர்ச்சி பெற்ற நாடுகளில் உணர்திறன் மிக்க நெருக்கடியான பிரதேசங்களுக்கென விஷேட நிபுணத்துவக் குழுக்களும், அவர்களோடு இணைந்த சர்வதேசப் புலனாய்வுப் பிரிவினரும் வெளியுறவுக் கொள்கை வகுப்பதில் பெரும் பங்காற்றுகின்றனர்.

இவர்களுக்கிடையே கருத்து மோதல் உருவாகும் போது நாட்டின் வெளியுறக் கொள்கை தோல்வியடைவதை இந்திய வரலாற்றில் அதிகமாகக் காணலாம். இவற்றைவிட நேரடியாகவே இந்த கொள்கைத் திட்டமிடல் குழுக்களுடன் தம்மை இணைத்துக்கொள்ளாமல் சுயாதீனமான தளமொன்றை உருவாக்கி அதற்குள் இருந்தவாறு புதிய உலக ஒழுங்கிற்கு இசைவான அரசியல் பார்வையொன்றினை முன்வைக்கும் பிரம்ம ரிஷிக்கள் போன்று சில அமைப்புக்கள் தொழிற்படுகின்றன. "ஜேன்ஸ் பாதுகாப்புச் சஞ்சிகையும் ' இந்த வரையறைகளுக்குள் அடக்கப்படக்கூடியதே.

ஆயினும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உலக வல்லரசாளர்களின் பார்வையைத் தம்பக்கம் ஈர்க்கக்கூடிய கருத்தாதிக்க வல்லாண்மையை ஐ.சீ.ஜீ. (ஐ.இ.எ) பெற்றிருக்கிறதென்றே கூற வேண்டும். இவ்வகையான கருத்துருவாக்கத்தளமொன்று இந்தியாவின் முன்னாள் படைத்துறை வல்லுனர்களாலும், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் முதன்மை ஊடகவியலாளர்களாலும், "சாக்' (குஅஅஎ குணிதtட அண்டிண்ச்ண அணச்டூதூண்டிண் எணூணிதணீ) என்கிற இணையத் தளமூடாக இயக்கப்படுகிறது.

இக்குழுக்களின் எதிர்வுகூறல்களை அப்படியே உள்வாங்கும் சில சர்வதேச ஊடகங்கள், தமது அரசியல் ஆய்விற்கான தரவுகளை இங்கிருந்து இலகுவாக எடுத்துக்கொள்கின்றன. அத்தோடு, யதார்த்தத்தை மறுதலிக்கும் கற்பனாவாத எதிர்வு கூறல்களின் சில பகுதிகளை தமக்கேற்றவாறு ஊதிப் பெருப்பித்து தனிநபர் மீதான தாக்குதல்களையும் கட்டவிழ்த்து விடுகின்றன. பி.இராமன், கேணல் ஹரிஹரன் போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத்தலைவர் பிரபாகரன் குறித்து வெளியிட்ட தனிமனித விமர்சனங்கள் பேரினவாதச் சிந்தனையைப் பலப்படுத்தும் ஆயுதமாக இன்றும் பல சிங்கள ஊடகங்களாலும் இந்திய தேசிய சஞ்சிகைகளாலும் பயன்படுத்தப்படுகிறது.

விமர்சனமென்பது ஆக்கபூர்வமான கருத்துக்கூறல்' என்பதைக் கடந்து, தமிழர் போராட்டத் தலைமையை சிறு கும்பல் போன்று சித்தரிப்பதனூடாக அவருக்குப்பின்னர் எவர் தலைமை தாங்குவாரென்ற வகையில் ஊடகச் சமரொன்றைத் திணிக்க முற்படுகிறது இந்த இந்திய அறிவு ஜீவிக் கூட்டம். இத்தகைய ஆய்வு முலாமிடப்பட்ட காழ்ப்புணர்வுக் கருத்துக்களை விழுங்கிக் கொள்ளும் சில புலம்பெயர்ந்த தமிழ்க் குழுக்கள் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், என்ன செய்ய வேண்டுமென இப்பொழுதே ஆராயத் தொடங்கிவிட்டன. பிணங்களின் மீது சாமரசம் வீசும் இம்மனிதர்களின் தேசியச் சேவையை அம்மணமாக்குகிறது. வன்னிக் கவிஞன் இளைய அப்துல்லாவின் வலிமிகுந்த கவி வரிகள்: "எங்கள் குமுறல்களையே உங்கள் இனிமைக்காய் பயன்படுத்துகிறீர்கள்.

எங்கள் கண்ணீர்தானே உங்கள் நீச்சல் தடாகம்'' ஈழ மண்ணில் கண்ணீருக்கா பஞ்சம்? தடாகங்கள் உலகெங்கும் கட்டப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு ஐ.சீ.ஜீ. என்கிற தடாகம் கட்டப்பட்டது. அறிவு சுரக்கும் அற்புதமான வளாகமது. நாடுகளும் ஆர்வலர்களும், புலனாய்வுப் புரவலர்களும் வழங்கும் அன்பளிப்பில் சுயமாக இயங்கும் முக்கண் பார்வைத் தளமது. இதன் ரிஷிமூலத்தில் வீற்றிருக்கும் உலகமயமாக்கலின் மூன்றாவது ஞானக் கண்ணாகதம்மை சுய பிரகடனம் செய்வதால் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆகர்ஷ சக்தி இவர்களுக்கு உண்டு.

ருவாண்டாவிலிருந்து ஆரம்பித்த இந்த அறிவுச் சேவை கென்யா ஸ்ரீலங்கா வரை நீண்டு செல்கிறது. சென்றவாரம் "போருக்குத் திரும்பிய ஸ்ரீலங்கா அழிவுகளை மட்டுப்படுத்தல்' என்ற தலைப்பிடப்பட்டு வழமையான மாதாந்த அறிக்கை யொன்று ஐ.சீ.ஜீ. யினால் வெளியிடப்பட்டுள்ளது. நடைமுறையிலிருந்து விலகி நிற்கும் தத்துவஞானிகள் கூறும் கருத்துரைப்புக்கள், எப்பொழுதும் புரியாத புதிராக இருக்க வேண்டுமென்பதற்கு இவ்வறிக்கை நல்ல சான்று.

இன அழிப்பிற்கும் (1985) இனக் கலவரத்திற்குமிடையேயுள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் போன்று சுயநிர்ணய உரிமைப் போரினை உள்நாட்டு யுத்தமாக (இடிதிடிடூ ஙிச்ணூ) வர்ணிக்கும் அறிவுஜீவித் தனம் தெளிவாகத் தெரிகிறது. அத்தோடு, அதிகளவில் யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகளை விடுதலைப் புலிகள் மீறியதாலேயே ஒப்பந்தத்தை ஜனாதிபதி மஹிந்த முறித்துக்கொண்டாரென வியாக்கியானங்கள் வேறு அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது. இருதரப்புக்களும் யுத்தம் புரிந்தாலும் மனித அழிவுகளும், ஜனநாயகக் கட்டமைப்பில் சிதைவுகளும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வது சர்வதேசத்தின் தலையாய கடமையென எச்சரிக்கை செய்தியொன்றும் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கிலிருந்து தந்திரோபாயப்பின்னகர்வினை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் படைவலு பலவீனமான நிலையில் உள்ளதென முழுமையாக ஏற்றுக்கொள்கிறது இக்குழு. ஆயிரக்கணக்கில் புலிகள் அழிக்கப்பட்டதோடு, மூத்த தளபதிகள் மீது குறிவைக்கப்படுகிறதென்கிற மிதமிஞ்சிய கற்பனைப் பரப்புரைகளை வரிபிசகாமல் உள்வாங்கிக்கொள்கிறது. அரசாங்கம் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்தாலும் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் வாழ்ந்த பெருந்தொகையான தமிழ் பேசும் மக்களை எவ்வாறு அரவணைத்துச் செல்லப்போகிறது இந்த அரசாங்கம் என்பதே இக்குழுவின் பெருங் கவலையாகும்.

அதேவேளை 13 ஆவது இணைப்புச் சட்டத்தின் சில உட்பிரிவுகளைச் செயற்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வென்றெடுக்கலாமென அரசாங்கம் கருதினாலும் இம்முயற்சிக்குத் தடையரணாக சிங்களத் தீவிரவாதிகள் இருப்பார்கள்களென்கிற அச்சம், ஐ.சி.ஜீ.க்கு ஏற்படுகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கில் ஜனநாயகத்தையும் அபிவிருத்திப் பணிகளையும் நிலைநாட்ட, அரசாங்கம் தவறிவிட்டதென மிகுந்த அக்கறையோடு, அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய இலங்கைக்கு அப்பாலும் தனியரசிற்கும் குறைவான இடை நிலையிலுள்ள நீதியான தீர்வொன்றினை எட்ட மிதவாதிகளையும் வன்முறை வழி விரும்பாத சக்திகளையும் இணைத்து, புதிய தந்திரோபாய நகர்வொன்றினை சர்வதேசம் மேற்கொள்ள வேண்டுமென்பதே ஐ.சி.ஜீ. யின் கருத்தாகும். இத்தகைய உடனடிச் செயற்பாடுகள், உருவாகும் பேரழிவினை தடுத்தாட் கொள்ளுமென்பதே இக்குழுவின் இறுதிப் பரிந்துரைப்பாகும். சர்வதேச நெருக்கடிகளுக்கான இவ்வாய்வுக்குழு இலங்கை அரசிற்கு வழங்கும் சில அறிவுரைகள் பற்றிப் பார்க்கலாம்.

1. யுத்த சூழலால் பாதிப்புறும் மக்களின் பாதுகாப்பினையும், மனிதாபிமானத் தேவைகளையும் உறுதிப்படுத்த இறுக்கமான சர்வதேச சட்டநியமங்களுக்குட்பட்ட வகையில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

2. ஐ.நா. நிறுவனங்கள் மற்றும் மனிதாபிமானச் சங்கங்களினால் மேற்கொள்ளப்படும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கான மருந்து விநியோகப் பாதையை திறந்து விட வேண்டும். அத்தோடு ஐ.நா. ஸ்தாபனங்கள், சர்வதேச மனித உரிமைச் சங்கப் பிரதிநிதிகள் மீது சிங்களத்தீவிரவாத அரசியல்வாதிகளினால் சுமத்தப்படும் போலிக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்து அவர்களின் செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

3. நாடு தழுவிய அளவில் மனித உரிமை மீறல்கள் குறித்த விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்க ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் காரியாலயமொன்று இலங்கை யில் நிறுவப்படுவதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

4. ஆயுதக் குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வந்து, சகல அரசியல் கட்சிகளினது பாதுகாப்பினை , சட்டபூர்வமான காவல்துறையும், இராணுவமும் உறுதி செய்யும்வரை, கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மற்றும் மகாண சபைக்கான தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும். புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், ஐ.நா. வின் தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதனை உறுதிசெய்ய வேண்டும்.

5. கிழக்கில் மாகாணசபை உருவாகும்போது, அதில் 13 ஆவது இணைப்புச் சட்டத்தின் முக்கிய சரத்துக்களான காவல்துறை, நிதி, காணி மற்றும் கல்வி சம்பந்தமான முக்கிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில், அரசியலமைப்புச் சீர்திருத்தங்களையும், மத்தியில் அதிகாரப் பகிர்வினையும் மேற்கொள்வோம் என்கிற கருத்தினை பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

6. 2008 ஏப்ரல் நடுப்பகுதியில் வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில், சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்த வரைபுகளை வெளிப்படுத்த வேண்டும். ஏகோபித்த கருத்தொன்று அக்கூட்டத்தில் உருவாகாவிட்டாலும் எட்டப்பட்ட அரை குறைத் தீர்வையாவது வெளியிட வேண்டு மென அழுத்திக் கூறுகிறது ஐ.சீ.ஜி. இக்குழு, முன்மொழியும், ஆலோசனைச் செய்தியில் இரண்டு முக்கிய விடயங்களை அவதானிக்கலாம்.

யுத்தத்தை தடுத்து நிறுத்தும் வழிவகைகளைக் கூறாமல் மனித உரிமைகளும், ஜனநாயகக் கட்டுமானங்களும் காக்கப்பட வேண்டுமென்கிற தொனியே இவ்வறிக்கையில் மேலோங்கியுள்ளது. சமாதானத்திற்காக யுத்தம் புரிந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா போல மனித உரிமை நிலைநாட்ட தற்போதைய ஜனாதிபதி மஹிந்த தொடுக்கும் யுத்தத்தை இக்குழு ஏற்றுக்கொள்கிறது.

இரண்டாவதாக, போர் நிறுத்த உடன்பாட்டினை மீறி கிழக்கை கைப்பற்றியிருக்கும் அரசாங்கத்திற்கு அப்பிரதேசத்தில் ஜனநாயக விழுமியங்களை எவ்வாறு நிலைநாட்டலாமென்று போதனைகளும் வழங்கப்படுகின்றன. இறுதியாக, சர்வதேச சமூகமொன்று இக்குழு கருதும் நாடுகளான ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஐக்கிய நாடுகள் சபைக்கும், தமது ஸ்ரீலங்கா நெருக்கடித் தீர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள்.

1. பலமான அரசியல் நலன் கொண்ட இணைப்புக் குழுவொன்றினை இந்தியா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா இணைந்து உருவாக்கவேண்டிய தேவையொன்று உண்டு.

2. விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப்பரிமாறல்களையும், விநியோகப் பாதைகளையும் மூட வேண்டும். இந்த அறிவுக்கூட்டம், சொல்ல நினைப்பதும், சொல்லாமல்போன விடயங்களும் என்னவென்பது இருதரப்பிற்கும் தெளிவாகத் தெரியும்.
ஆலோசனை என்கிற பெயரில் நவீன தந்திரோபாய உத்திகளை சிங்களத்திற்கும், மேற்குலத்திற்கும் தெரிவிக்கிறார்கள். ஆனாலும், சீனாவின் மறைமுகக் கரங்களின் தொழிற்பாடு குறித்து இவர்களின் அறிக்கையில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்கிற விடயம் உறுத்துகிறது. சொல்லாமல் வேண்டுமென்றே தவிர்த்த விடயங்களில் சீனாவும் ஒன்றாக இருக்கலாம். இந்திய, மேற்குலக அணிகள், ஒரே திசையில் பயணிக்கும் ஒற்றை முகமாக மாறிட வேண்டுமென்கிற அவசர அழைப்பொன்றும் இவர்களால் விடுக்கப்படுகிறது. ஒப்பந்தத்தை கிழித்தாலும், அரசாங்கத்தின் இராணுவ தீர்வோடு மேற்குலகின் சிந்தனை முரண்டப்போவதில்லை என்கிற இக்குழுவின் அரசியல் பார்வை நிரூபித்துள்ளது.

அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட வெற்றிச் செய்திகள் பொய்யெனப் புரிந்தாலும், அதனை நிஜமென்று அங்கீகரிக்க போலித் தனமும் போருக்குத் தூபமிடும் வேடமும், சீன நுழைவினை தடுக்குமெனக் கற்பிதம் கொள்ள வைத்துள்ளது. ஆனாலும், கருத்தை உருவாக்கும் குழுக்களை விட களத்தில் நிற்கும் போராட்ட சக்திகளே வரலாற்றை உருவாக்கும். கிழக்கின் பின்னகர்வு ஈழப்போராட்டத்தின் அழிவு நிலைகளுக்கான முதற்படியென இவ்வாய்வுக் குழுக்கள் கற்பிதம் கொண்டால், கொசோவா போன்று புதிய ஆலோசனைகளை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். பேரினவாதத்தில் மாறுதல்களை ஏற்படுத்த இவர்களால் மட்டுமல்ல அதனை சிங்களத்தாலும் முடியாதென்கிற கசப்பான உண்மையை தமிழர் தரப்பு உணர வைக்கும்.

நன்றி: வீரகேசரி

0 Comments: