Saturday, March 29, 2008

இந்தியாவின் கரிசனையில் பொதிந்துள்ள அர்த்தங்கள்

"இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அதிகாரப் பகிர்வுத்திட்டம் பற்றிய சிந்தனையே இலங்கை அரசுக்குக் கிடையாது. அது விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரேயொரு இராணுவ நோக்கத்துடன் மாத்திரமே செயற்படுகின்றது.''
இவ்வாறு விசனத்துடன் கருத்துக்கூறியிருக்கின்றார் இந்திய மத்திய அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன்.

அவர் அலங்கரிக்கும் பதவி வெறும் ஆலோசகர் கதிரை அல்ல. அது, இந்திய மத்திய அரசின் அமைச்சரவை அந்தஸ்து உள்ள ஓர் அமைச்சருக்குரிய இராஜதந்திர பதவி நிலையாகும். இந்தியாவின் போர் அல்லது சமாதானம் மற்றும் அவை போன்ற பாதுகாப்பு விடயங்களில் ஆட்சித் தலைவரான பிரதமரின் சார்பில் முடிவெடுக்கும் தகுதியும் அதிகாரமும் இப்பதவியில் இருக்கும் பிரமுகருக்கு உண்டு. அந்த வகையில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சரை விட இவ்விடயங்களில் முக்கியமானவராகின்றார் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.
அத்தகைய ஒருவரே இப்போது ஈழத் தமிழரின் நலனுக்காக நீலிக் கண்ணீர் முதலைக் கண்ணீர் வடிப்பவர் போல கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை விவகாரத்தை ஒட்டி புதுடில்லி அதிகார வர்க்கத்தின் முக்கிய குரல் ஒன்று வெளியிட்டிருக்கும் இத்தகைய கருத்துக்கள் ஈழத் தமிழர்களுக்கு எவ்வளவு தூரம் சாதகமானவையாக பயனுள்ளவையாக இருக்கும் என்று கருதமுடியும்?

இலங்கைச் சிக்கலை இனப்பிரச்சினையை எப்போதுமே அந்தக் களத்தில் அதனை எதிர்கொள்ளுபவர்களின் சூழ்நிலையில் இருந்து நோக்குவது புதுடில்லியின் பண்பியல்பல்ல. தன்னுடைய அரசியல், புவியியல், கேந்திர நலன்களின் அடிப்படையிலே அவற்றை நோக்குவதையே தன்னுடைய புத்தி சாதுரியமான நடவடிக்கையாக பலமான செயற்பாடாகக் கருதிக் காரியமாற்றுவது புதுடில்லியின் போக்காகும்.

தனித்துவமாகவும், தூரநோக்கோடும், உலகில் பாதிப்புற்ற மக்களின் இரட்சகராகத் தன்னைக் கருதும் தாராளத்தோடும் விடயங்களை அணுகி வந்த அன்னை இந்திரா காந்திக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோருமே ஒரு புறம் தமது கருத்தியல்புச் சிந்தனையே காரியமாக ஆற்றப் பட வேண்டும் என்று திட்டவட்டமாக வழிப்படுத்தும் ஆளு மையோ, அதிகாரமோ, செல்வாக்கோ, உறுதியோ இல்லாதவர்களாக இருந்து வருகின்றார்கள். அந்தக் காரணத்தால் மறுபுறத்தில் இலங்கைப் பிரச்சினை போன்ற சர்வதேச அரசியல் சிக்கல் விவகாரங்களில் அதிகாரவர்க்கத்தின் மகுடிக்கு ஏற்ப ஆடவேண் டியவர்களாகவும் ஆடுபவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள்.

இவ்வாறு புதுடில்லி அரசியல் தலைமைகளை ஆட்டுவிக்கும் அதிகாரவர்க்கப் பிரகிருதிகளுள் ஒருவராகக் கருதப்படவேண்டிய நாராயணனின் உள்ளத்திலிருந்துதான் கொழும்பு அரசைக் குறைகூறும் வார்த்தைகள் இப்படி வந்திருக்கின்றன.

ஏற்கனவே இந்தியாவின் உளவுத்துறையான றோ மற்றும் மத்திய புலனாய்வுத்துறையான ஐ.பி. போன்றவற்றின் தலைவராக இருந்து பல குசும்புத்தனங்களைப் பண்ணிய நாராயணனுக்கு இலங்கை விவகாரம் பாலர் விளையாடும் மைதானம் போன்றது.
இப்போது ஏதோ ஓர் அந்தரங்கத் திட்டத்தோடு காய்களை நகர்த்துவதற்காக இப்படிக் கொழும்பைக் கரித்துக் கொட்டுபவர் போல பாவனை பண்ணுகின்றார் அவர் என்றே கருதவேண்டியுள்ளது.

மோசமான மனித உரிமை மீறல் போக்குக்காகவும், தீவிர யுத்த வெறி முனைப்புக்காகவும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மேற்குலகின் கடும் கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் கொழும்பு இலக்காகியிருக்கின்றது.

இச்சமயத்தில் மேற்குலகோடு ஒத்துப்போகின்றமைபோலக் கருத்து வெளியிடாமல் விட்டால், பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவையே ஒதுக்கித் தள்ளிவிட்டுத் தம்பாட்டில் காரியம் பண்ணும் வேலைக்கு மேற்குலகமும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் போய்விடும்.

அதேசமயம், கொழும்பின் யுத்த வெறித் தீவிரத்துக்கு எதிராகத் தமிழகத்திலும் உணர்வலைகள் கொதித்து எழும்பி வருகின்றன.

இவற்றையெல்லாம் சமாளித்து, தானும் நீதி, நியாயத்தோடு செயற்படுகின்றது என்று காட்டவேண்டிய இக்கட்டு புதுடில்லிக்கு உண்டு. அதற்காகத்தான் கொழும்பை வைகின்றவர்போல ஒரு முகமூடியணிந்து நாடகமாடுகின்றார் நாராயணன்.
இலங்கை விவகாரத்தில் உண்மையாகவே இதய சுத்தியுடன் நேர்மை, நாணயத்தோடு செயற்பட இந்தியாவும், நாராயணன் உட்பட்ட அதிகார வர்க்கமும், அந்தத் தரப்பினால் ஆட்டுவிக்கப்படுகின்ற அரசியல் தலைமைகளும் விரும்புமானால் முதலில் அவை இவ்விடயத்தில் தமது உண்மையான நண்பன் யார், சதித்திட்ட உள்நோக்கோடு காரியமாற்றும் எதிரி யார் என்பதை ஒரு தடவை எண்ணிப்பார்க்கவேண்டும்.

அந்த அளவுகோலைக்கொண்டு எதிர்காலக் காரியங்களைக் கட்டவிழ்க்க புதுடில்லி முனையுமானால், இந்தப் பிராந்தியத்தில் நீதி, நியாயமான அமைதித் தீர்வுக்குச் சாத்தியம் ஏற்படும் என நம்பலாம்.

நன்றி :- உதயன்

0 Comments: