இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகமிக மோசமாக இடம்பெற்று வருவதை ஒட்டி சர்வதேச ரீதியாக எழுந்திருக்கும் கடும் விசனமும் எரிச்சலும் சீற்றமுமே இன்று மஹிந்தரின் அரசு எதிர்கொள்ளும் விஸ்வரூபப் பிரச்சினைகளாகியிருக்கின்றன.
யுத்த களத்தில் புலிகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயம் அல்லது யுக்தி என்ற பெயரில் மஹிந்தரின் அரசு வகுத்திருக்கும் செயற்பாடுகளின் திட்டம் நாட்டில் பெரும் மனித உரிமை மீறல் விவகாரமாகி விட்டிருக்கின்றது.
"புலிப் பயங்கரவாதத்தைப் பதில் பயங்கரவாதத்தால் வெற்றி கொள்ளுதல்' என்ற மஹிந்தர் அரசின் இரகசியக் கோட்பாட்டுத்திட்டம் அல்லது மறைமுகக் கொள்கைப் பின்பற்றல் போக்கு "பூமராங்' ஆக சர்வதேசப் பாய்ச்சலாக அந்த அரசின் மீதே திரும்பியிருக்கின்றது.
உலகில் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புகள் எல்லாம் ஒரே குரலில் கொழும்பு அரசுக்கு எதிராகக் கிளர்ந்து நிற்பதே இன்றைய அரசியல் நிலைவரமாகின்றது.
* இலங்கையில் இடம்பெறும் மோசமான ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல் போன்ற பயங்கரங்களுக்கு இலங்கை அரசே பொறுப்பு என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த வாரமும் பகிரங்க அறிக்கை மூலம் இலங்கை அரசின் கொடூரப் போக்கைத் தோலுரித்துக் காட்டியிருக்கின்றது.
* முக்கிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட குழு, விசாரணைகள் என்ற பெயரில் நடக்கும் கண்துடைப்பு நாடகத்தை பம்மாத்து நடவடிக்கையை பகிரங்க அறிக்கை மூலம் அம்பலப்படுத்திவிட்டுத் தனது பணியிலிருந்து வெளியேறுவதாகப் பிரகடனப்படுத்தி விட்டது.
* இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் மோசமாக ஈடுபட்டு வருகின்றது என்பதை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றது.
* மனித உரிமைகளைப் பேணுவதில் இலங்கை அரசின் மெத்தனப் போக்கை ஆசிய மனித உரிமைகள் மூலவள நிலையமும் வெளிப்படுத்தி வருகின்றது.
* மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் இலங்கை அரசு பெரும் குற்றம் இழைத்து வருவதை சர்வதேச மன்னிப்புச் சபையும் உலகுக்குத் தெளிவுபடுத்தியுள்ளது.
* அண்மைக்காலத்தில் உலகில் பலவந்தமாகக் கடத்திக் காணாமற் செய்யப்படுவோரின் எண்ணிக்கை இலங்கையில்தான் அதிகம் என்பதை பலவந்தமாகக் கடத்தி ஆட்களைக் காணாமற்போகச்செய்தல் தொடர்பான விடயங்களை ஆராயும் ஐ.நா. செயலணி அண்மையில் புள்ளிவிவர அடிப்படையில் தெளிவுபடுத்தியிருந்தது.
* இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருவதை தற்போது ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரான லூயிஸ் ஆபர் அம்மையாரும் தாம் சமர்ப்பித்த அறிக்கையில் புட்டுவைத்துள்ளார்.
* இதே கூட்டத் தொடருக்கு, சித்திரவதை, கொடூர மனிதாபிமானமற்ற அவமானப் படுத்துகின்ற நடத்துகை மற்றும் தண்டனைகள் தொடர்பான ஐ.நா. அறிக்கையாளர் மன்பிரட் நொவாக் சமர்ப்பித்த அறிக்கையிலும் இலங்கையில் சித்திரவதைகள் பரந்தளவில் இடம்பெறுகின்றன என்பது தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
* சர்வதேச ஜூரர்கள் சபையும் இலங்கையின் மனித உரிமைகள் பேணும் சீத்துவத்தை இப்போது வெளிவெளியாக அம்பலப்படுத்தி நிற்கின்றது.
*நெருக்கடிகளுக்கான சர்வதேசக் குழுவும் இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு என்ற பெயரில் அதில் சர்வதேசம் தலையிடுவதையும் ஐ.நாவின் சுயாதீனக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று இங்கு நிறுவப்படுவது மிக அவசரமும் அவசியமும் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கின்றது.
இவ்வாறு மனித உரிமைகள் நிலைவரம் இலங்கையில் சீர்கெட்டு வருவதைச் சுட்டிக்காட்டி, அபாய எச்சரிக்கை மணி அடித்து, குரல் எழுப்பி வரும் சர்வதேச அமைப்புகளைப் பட்டியலிட்டால் அது தொடர்ந்து நீண்டு கொண்டு செல்வதாகவே இருக்கும்.
ஆனால் இவ்வாறு சர்வதேச மட்டத்தில் நிலைமை மோசமடைந்து வருவதைத் தென்னிலங்கை அரசுத் தலைமை புரிந்துகொண்டதாகவோ அல்லது அதனை ஒட்டிக் கரிசனை காட்டுவதாகவோ அல்லது அலட்டிக் கொள்வதாகவோ தெரியவில்லை.
அரசுத் தலைமையின் இராணுவச் சிந்தனைப் போக்குக்கு அமையஆட்சிக் கட்டமைப்பின் ஆட்சி முறைமையின் சில்லுச் சுற்றத் தொடங்கிவிட்டது.
அதை நேர்வழிப்படுத்தும் சிந்தனை அரசுத் தலைமைக்கு ஏற்படாதவரை மனித உரிமைகளை மிதித்துக் கொடூர ஆட்சி புரியும் அதிகாரச் சேற்றிலிருந்து அது மீளப்போவதேயில்லை.
ஆனாலும், அந்த வினைக்கான விளைவை அது அறுத்துத்தானாக வேண்டியிருக்கும். அது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகும்.
நன்றி:- உதயன்
Monday, March 10, 2008
இலங்கைக்குக் கிட்டி வரும் சர்வதேச நற்சான்றிதழ்
Posted by tamil at 12:33 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment