Friday, March 21, 2008

தேர்தல்: இன்னுமோர் போரியல் உத்தியா?

உள்ளுராட்சி சபைத் தேர்தல் என்று அரசாங்கத்தால் வருணிக்கப்பட்ட சம்பவம் கடந்த பத்தாம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது.

தேர்தலில் தொடர்புபட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் மகிந்தர் தரப்பு, இனிமேல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிள்ளையான் குழு கலந்துகொள்ளலாம், தடையில்லை என்று பச்சைக்கொடியும் காட்டியிருக்கிறது.

மகிந்தரைப் பொறுத்தளவில், ஒரு போலித் தேர்தலைத் தயார்படுத்தல் மற்றும் நடத்துதல் ஆகிய கட்டங்களில் அவர் வென்றுவிட்டார் என்றே கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தான் விரும்பும் நிருவாகம் ஒன்றை சனநாயகச் சாயத்தோடு கதிரையேற்றவேண்டும். அதற்கு முன்னோடியாக தனது விருப்புக்கேற்ப வாக்குகள் விழக்கூடியதான முன்னோடித் தேர்தல் ஒன்றை மட்டக்களப்பில் நடத்தியிருக்கிறார் அவர்.

அதற்கான ஆயத்தங்களை அவர் நீண்ட நாட்களுக்க முன்னரே தொடங்கிவிட்டார். அடாவடித் தேர்தல் ஒன்றைச் சுடுகாட்டு அமைதியோடு நடத்துவதற்கான ஆலோசகராக அருமைத் தம்பி பசில் ராஜபக்ச முழுமூச்சோடு செயற்பட்;டிருக்கிறார்.

தேர்தல் ஒன்றில் கவர்ச்சியாக அமையக்கூடிய தனிநபர்களைத் தனித்தனியாக அணுகி, தம்மோடு இணையும்படி சிலரையும், விலகி நிற்கும்படி சிலரையும் அச்சுறுத்தியது பிள்ளையான் குழு. கடந்த பாதீட்டு வாக்களிப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் உறவினர்கள் பணயமாக வைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு அதைவிட மோசமான நிலைமைகள் ஏற்படலாம் என்ற வெருட்டல்களும் தாராளமாகப் புழங்கின.

'முன்னர் ஒட்டுக்குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட உங்கள் பிள்ளைகளை உயிருடன் பார்க்கவேண்டுமானால் படகுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்," என்ற பரப்புரையும் செய்யப்பட்டது.

'வேறு சின்னத்திற்கு வாக்களிப்பதை அறிந்தால் நடப்பதே வேறு," என்று ஒட்டுக்குழு அறிவித்தால், முன்பு கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களுக்கு 'நடந்ததை" அறிந்து வைத்துள்ள வாக்காளர் பெருமக்கள், தேர்தல் தினத்தன்று முரண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற பசிலின் கணிப்பும் ஓரளவு சரியாகவே இருந்தது.

தேர்தலுக்கான அடாவடிகள் அனைத்தும் பல வாரங்களுக்கு முன்னரே செய்து முடிக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 285 சாவடிகளில் 90 ஐ மட்டும், அதுவும் 15 நடமாடும் குழுக்களை அனுப்பி அவதானித்துவிட்டு, தேர்தலன்று ஒப்பீட்டளவில் வன்முறைகள் நிகழவில்லை என்று ஒப்புக்குச் சப்புக்கொட்டியது பவ்ரல். அதற்கு முன்னர் நடந்த வன்முறைகளும் பின்னர் நடக்கும் என்று சொல்லப்படுபவையும் வாக்களிப்பைப் பாதித்திருக்காதா என்ற கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்கிறார் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன்.

இந்தத் தேர்தலில் தமிழ் மக்களை அதிகமாக வாக்களிக்கச் செய்யும் நோக்கோடு, ஆரையம்பதி போன்ற இரு சமூகமும் ஒட்டிவாழும் இடங்களில் தமிழ்- முஸ்லிம் மக்களுக்கு இடையோயான போட்டி உணர்வு சில வாரங்களுக்கு முன்னதாகவே கொம்பு தீட்டப்பட்டது. இத்தனை காலம் பட்டுத் தேறிய பின்னரும், இரு தரப்பிலும் சிலர் சிங்களப் பேரினவாத வலையில் விழுந்திருப்பது வருந்தத்தக்க உண்மை.

மறுபுறம், தேர்தல் நடந்த விதமும் அதைச் செய்தியாக்கிய விதமும் கூட அலாதியாகத் தெரிந்தது.

பாலாமுனை போன்ற மக்கள் சற்று அதிகமாகக் காணப்பட்ட வாக்குச் சாவடிகளையே அரச ஊடகங்கள் அடிக்கடி காட்டின. மட்டக்களப்புப் பட்டணம் வெறிச்சோடிக் கிடந்ததை வேறு சில ஊடகங்கள் காட்டின.

இந்நிலையில், மாலை ஆறு மணியளவில் நகரம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் மின்சாரம் தடைப்பட்டு, பின்னர், இரவு ஒன்பது மணிக்கே மீண்டும் விளக்குகள் உயிர்பெற்றன. அதற்கு இடைப்பட்ட நேரத்திலேயே பெரும்பாலான 'வாக்களிப்புக்கள்" நிகழ்ந்ததை, பெயர் வெளியில் வராது என்று தாயின் மீது ஆணைபெற்றபின், சில தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

இது இவ்வாறிருக்க, அந்தத் தேர்தல் வெற்றியை மூலதனமாக்கி போரை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை மகிந்த அரசு ஏலவே ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. அனைத்துக் கட்சி மாநாட்டுக்குப் பிள்ளையான் உடனடியாக அழைக்கப்பட்டதிலும், இந்தத் தேர்தலின் பெறுபேறுகள் புலிகளைப் பயீனப்படுத்திவிட்டன என்று அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த சமரசிங்க சுடச்சுட வெளியிட்ட அறிக்கையிலும் இருந்து அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தது என்பதை ஊகிக்கமுடிகிறது.

கிழக்கின் பிரச்சினை தீர்க்கப்பட்டு விட்டது, இதேபோல வடக்கிலும் பிரச்சினை தீர்க்கப்படும் என்ற தோற்றத்தை தெற்கிலும் மேற்குலகிலும் ஏற்படுத்திவிடக் கங்கணங்கட்டுகிறார் மகிந்தர்.

கடந்த பெப்ரவரி நடுப்பகுதியில் இணைத்தலைமைத் தூதுவர்களைச் சந்தித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவும், தாங்கள் முன்பு கணித்திருந்ததுபோல களமுனை இலக்குகளை எய்தமுடியவில்லை என்றும், புலிகளின் எதிர்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அண்மையில் புலிகளுக்கு வந்ததாகக் கருதப்படும் ஆயுதங்களும் ஒரு காரணம் என்றும், கணித்திருந்ததை விட மேலதிகமாக ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடமளவில் அவகாசம் தேவைப்படும் என்றும் அசடு வழிந்துள்ளார்கள்.

ஆயுத வருகைக்கு அயல் நாடுகளின் அசட்டையும் காரணம் என்று சரத் கடுப்படிக்க, மேலும் கால நீடிப்புக்கு வாய்ப்புக்கள் இருக்குமா என்று ஜெர்மனியத் தூதுவர் மாறிக் கடித்தார் என்பது கொசுறு தகவல். அதேநேரம், இலங்கையின் மனித உரிமை நிலைமை தொடர்பான பன்னாட்டுச் சமூகத்தின் அதிருப்தியையும் இணைத்தலைமையினர் அச்சந்தர்ப்பத்தில் எடுத்துரைத்துள்ளார்கள்.

இந்த அதிருப்திகளைக் கொஞ்சக்காலம் தணித்து வைக்கும் தீர்த்தச் செம்பாக, தமிழர் தாயகத்தின் ஒரு பகுதியில் சனநாயக்ததை நிறுவிய சம்பவமாக, மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல் அமையாலாம் என்ற மகிந்தரின் சிந்தனைக்கு மறுநாளே இடி விழுந்தது.

நாடுகளில் நிலவும் மனித உரிமைகள் மற்றும் நல்லாட்சி பற்றிய தனது ஆண்டறிக்கைத் தொடரின், 2007 ஆம் ஆண்டுக்கான சிறிலங்கா மீதான அறிக்கையில் 'கொழும்பின் சிங்கள மேலாதிக்க" வன்முறை ஆட்சியில் ஒட்டுப்படையான பிள்ளையான் குழு தனது படைக்குச் சிறுவர்களையும் பெரியவர்களையும் வலிந்து சேர்ப்பதற்காக 'மிரட்டல், கப்பம், வன்புணர்வு, கொலை என்பவற்றைச் செய்துவருகிறது" என்றும் பிய்த்து உதறியிருக்கிறது அமெரிக்கா.

அமெரிக்காவின் அரசதுறைச் செலயகத்தால் மார்ச் 11 இல் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையிலே துட்டத்தனத்தின் திருவுருவாகக் காட்டப்பட்டிருக்கும் பிள்ளையான் குழுவுடனான தனது 'சனநாயகக் கூட்டணியை" எந்த முகத்தை வைத்துக்கொண்டு நியாயப்படுத்தப் போகிறார் மகிந்தர் என்பது அவருக்கே வெளிச்சம்.

ஆயினும், உலகமே அவதானித்துக்கொண்டிருந்த பாதீட்டு வாக்களிப்பில் அவர் புரிந்த அசிங்கமான அசைவுகளைப் பார்க்கும்போது, மனிதர் மானம் மரியாதைக்குக் கட்டுப்பட்டவராகத் தெரியவில்லை என்பதே பொதுவான கணிப்பாக இருக்கிறது.

இந்தத் தேர்தல்களை நடத்துவதன் மூலம், கிழக்கில் அபிவிருத்தி ஒதுக்கீடுகளைச் செய்வதற்கு ஏற்ற சூழல் வந்துவிட்டது என்று காட்டி, நிதி பெறுவதும், சிறுபான்மையினருக்குப் பாதகமான நில ஆக்கிரமிப்பபைச் செய்வதும் அவரின் இன்னுமோர் குறியாக இருக்கிறது.

கொழும்பையும் திஸ்ஸமாகராமையையும் குண்டுவெடிப்புக்கள் இன்றிப் பார்த்துக்கொள்ள முடியாத அவர் மட்டக்களப்பை எப்படி அபிவிருத்திக்கு ஏற்றதென்று நிறுவுவார், அந்த நிறுவலை எவ்வெந்த நாடுகள் ஏற்கும் எனப்பட்ட விடயங்கள் களயதார்த்த நிலைமையில் அன்றி இராசதந்திர உறவுகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதை வாசகர்களுக்கு விளக்க வேண்டியதில்லை.

கிழக்கில் தான் அமைக்கவிருக்கும் ஒட்டுக்குழு நிருவாகம், தமிழரின் தாயகக் கோட்பாட்டை நலிவுறுத்தும் என்பதே மகிந்தரின் அடுத்த கனவு. வெற்றியின் சூடு இறங்கிவிடுமுன் மே மாதத்தில் மாகாணசபைத் தேர்தலை வைத்து முடித்துவிடவேண்டும் என்பது அவரின் வேணவா.

எவ்வெந்த வாக்குச் சாவடிகளில் எத்தனை எத்தனை கள்ள வாக்குகள் அளிக்கப்பட வேண்டும் என்பதை அங்கே அராஜகம் செய்துவரும் ஒட்டுப்படைக்கு பசில் ராஜபக்ச அறிவுறுத்தல் கொடுத்துள்ள நிலையில் அங்கு ஒரு சனநாயகத் தேர்தல் நடக்கும் என்று யாராவது எதிர்பார்த்தால், அவர்கள் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அரசியல் அப்பாவிகளாகவே இருக்கமுடியும்.

இருந்தாலும், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்குடன் ஐ.தே.கவும் ஜே.வி.பியும் கூட வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்குகின்றன. தேர்தல் முடிவடைந்த பின், அது முறையாக நடத்தப்படவில்லை என்ற வழமையான ஓலத்தை அவர்களிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம். அப்படியானால், ஏன் தான் போட்டியிடுகிறார்கள் என்றால், அதுதான் தென்னிலங்கை அரசியல்.

அதேவேளை, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது. தமிழர் தாயகத்தைத் துண்டாடும் இந்த நிருவாக அலகைத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்பதே த.தே.கூ.வின் நிலைப்பாடாக உள்ளது.

தமிழ்நெற் இணையத்தளத்திற்கான செவ்வியொன்றில், 'ஒற்றை அலகாக இணைந்த வடகிழக்கே எமது கோட்பாட்டு மூலைக்கல்" என்று வலியுறுத்தியிருக்கும் மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி, சிறிலங்கா அரசாங்கம் 2007 சனவரியில் வடகீழ் மாகாணத்தைப் பிரித்ததைத் த.தே.கூ. காட்டமாக எதிர்ப்பதாகவும், அந்நிலைப்பாட்டின் அடிப்படையில் தனிக் கிழக்கிற்கான மாகாண சபையில் போட்டியிடுவது, தமிழர்களின் நியாயபூர்வ உரிமையை விட்டுக்கொடுப்பதாக அமைந்துவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்.

யுத்தத்தைப் போலவே தேர்தல்களையும் கொடூரமாக நடத்தும் மகிந்தர், தமிழருக்கு எதிரான போரிற்கான தனது ஒட்டுமொத்த மூலோபாயத்தின் ஒரு அங்கமாகவும் அத்தேர்தல்களைப் பயன்படுத்த விளைகிறார்.

மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்பை வைத்து, வடகீழ் மாகாணத்தின் பிரிப்பை நிறுவ முற்படுவதும் அவரின் கள்ள நோக்கங்களில் ஒன்று.

தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுவிழக்கச் செய்வதும், வட போரரங்கினை உக்கிரப்படுத்துவதற்கான நியாயங்களையும் ஆதரவையும் நிறுவுவதும், தமிழருக்கு எதிரான ஒட்டுமொத்த யுத்தத்தில் கொழும்பு வெற்றி பெறுவதாகக் காட்டுவதுமே கிழக்குத் தேர்தல்களின் ஊடான அவரின் முக்கிய உண்நோக்கங்கள்.

மறுவளத்தில், அந்த மூலோபாயத்தில் உள்ளடங்கி நிற்கவேண்டிய இரு முக்கிய கூறுகளான களமுனையும், இராசதந்திர வெளியும் அவருக்குச் சாதகமற்ற சமிக்ஞைகளைக் காட்டத் தொடங்கிவிட்டன. மூன்றாவது கூறான தென்னிலங்கையிலும் அதன் எதிரொலி சன்னமாகக் கேட்கத்தொடங்கி விட்டது.

நன்றி: -சேனாதி-
வெள்ளிநாதம் (21.03.08

0 Comments: