Wednesday, March 19, 2008

அரசுத் தலைமை தன்போக்கை திருத்திக்கொள்ள இறுதி வாய்ப்பு

இலங்கை நிலைவரம் குறித்து நேரில் ஆராய இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு பல்வேறு தரப்புகளையும் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கின்றது.
தனது விஜயத்தின் முடிவில் அக்குழு ஊடகவியலாளர்களையும் சந்தித்திருக்கின்றது. எனினும், இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்துவதை ஒட்டி இலங்கை அதற்கு விதித்திருந்த கெடுபிடி ஒழுங்கு விதிகளை அனுசரித்து, அதற்கு அமைவாக அங்கு கருத்துத் தெரிவித்துச் சென்றிருக்கின்றது அக்குழு.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் செய்தியாளர் மாநாடும் அதில் வெளியிடப்பட்ட கருத்துகளும் அவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தாமல் அடங்கிப்போய்விட்டன போல் படும். ஆனால் அந்தச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் வரிகளுக்கு இடையில் பொதிந்துகிடக்கும் அர்த்தங்களையும், அச் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட இராஜதந்திர சொல்லாடல்களையும் ஊன்றி நோக்கினால் பல்வேறு விடயங்கள் அவற்றுள் ஊறிக்கிடப்பது புரியவரும்.

* இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத்தலைமைகளும், இலங்கை இனப்பிரச்சினைக்கான அமைதி முயற்சிகளின் அனுசரணைத் தரப்பான நோர்வேயும், விடுதலைப் புலிகளின் தலைமையகம் செயற்படும் கிளிநொச்சிப் பகுதிக்குச் சென்றுவர அரசு தடைவிதிக்கக் கூடாது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
* இலங்கையில் மோசமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலைப்படுகிறோம்.
* மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோரைத் தயவு தாட்சண்யம் காட்டாது நடவடிக்கை எடுத்து நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணையாளரின் கூற்றையும், சர்வதேசப் பிரமுகர்களைக்கொண்ட கண்காணிப்புக்குழுவின் வலியுறுத்தலையும் இலங்கை அரசு தீவிரமாகக் கவனத்தில் எடுத்து அதன்படி செயற்பட வேண்டும்.
* இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வை விடுத்து, அமைதி வழித் தீர்வில் அரசு நாட்டம் காட்டவேண்டும். இராணுவ வழித் தீர்வு சாத்தியமற்றது என்பதை இலங்கை அரசும் அரசின் பாதுகாப்புத் தரப்பும் உணர வேண்டும்.
* இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிய விசாரணைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேசப் பிரமுகர்கள் குழு தனது பொறுப்பிலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டமைக்காக வருத்தமும் கவலையும் அடைகிறோம்.
இத்தகைய கருத்துக்களை நாசூக்காக வெளியிட்டிருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு.

இக்கருத்துக்களை ஒட்டிய விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்தால் இவை அனைத்துமே தற்போதைய அரசுத் தலைமையின் யுத்த தீவிரப் போக்கால் எழுந்த பெறுபேறுகள் என்பதும்
அப்பெறுபேறுகள் குறித்த கவலையையே ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டக்குழு வெளியிட்டுச் சென்றிருக்கின்றது என்பதும் தோற்றும்.

இந்த உயர்மட்டக்குழு ஐரோப்பிய ஒன்றியத்துக்குத் தனது இலங்கை விஜயத்தின் அவதானிப்புகள் குறித்து விளக்கமான அறிக்கை ஒன்றை வழங்கும் என்றும்
எதிர்காலத்தில் இலங்கைக்கு விசேட ஊக்குவிப்பு நன்மைகள் உட்பட்ட ஏற்றுமதி மற்றும் சலுகைகளை ஐரோப்பிய நாடுகள் வழங்குவதா என்பது பற்றிய தீர்மானத்தை இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தீர்மானிக்கும் என்றும் அறியவருகின்றது.

ஆனால் இப்போது வந்துள்ள இந்த உயர்மட்டக் குழு கொழும்பில் பல்வேறு தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடிய சமயம் பரிமாறிக் கொண்ட கருத்துக்களையும், ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அக்குழு வெளியிட்ட தகவல்களின் தெளிவையும் நோக்கும்போது, இலங்கையின் தற்போதைய அரசின் நிர்வாகப் போக்கு மற்றும் மேற்படி விசேட ஊக்குவிப்பு வசதிகளைப் பெறுவதற்கான இலங்கையின் தகைமை ஆகியவை குறித்து இக்குழுவுக்கு நிறைவு திருப்தி ஏற்படவேயில்லை என்பதை அறியமுடிகின்றது.
எது, எப்படியென்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்கு நாடுகளின் இலங்கைக்கான தற்போதைய விசேட ஊக்குவிப்புத் திட்டம் வரும் ஒக்டோபர் மாதம் முடிவடையும்போதுதான், அதை மீளத் தொடர்ந்தும் பெறுவதற்காக இலங்கை விண்ணப்பிக்கமுடியும். அப்போதுதான் இவ்விடயம் குறித்துப் பரிசீலித்து இறுதி முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கும்.

அதற்குள், மனித உரிமையைப் பேணுவதை மேம்படுத்தி, மேற்படி ஊக்குவிப்பைத் தொடர்ந்தும் பெறுவதற்குரிய அனுமதியைப் புதுப்பிப்பதற்கான தகுதியை தகைமையை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

அப்படித் தன்னைத் திருத்திக் கொள்வதற்கு இலங்கைக்கு இன்னும் ஐந்து, ஆறு மாத கால அவகாசம் உள்ளது.
ஆனால் அப்படித் தன்னைத் திருத்திக் கொள்வதற்கான அரசியல் திடசங்கற்பம் மனோரீதியான பற்றுறுதி இலங்கைத் தலைமையிடம் உண்டா? அதுவே கேள்விக்குரிய விடயமாகும்.
இந்தக் கடைசிச் சமயத்திலாவது இலங்கை அரசுத் தலைமை தன்னைத் திருத்திக்கொண்டு, மனித மாண்புகளை மதித்துப் பேணும் உயர்வழியில் நடக்குமாயின் ஐரோப்பிய ஒன்றிய ஊக்குவிப்புத் திட்டத்தின் அனுமதி தொடர்ந்தும் இலங்கைக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லையேல் கதை கந்தல்தான்

நன்றி :- உதயன்

0 Comments: