Saturday, March 8, 2008

'மக்கள் போரின் இராணுவப் பரிமாணம்"

-சோமாஸ்கந்தன்-


'இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்தவொரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது" - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்


மக்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு விடுதலைப்போர் வெற்றி அடைவது மிக மிகக் கடினம். விடுதலைப் போரின் பங்காளிகளாகவும் அதை முன்னெடுப்பவர்களாகவும் மக்கள் இடம்பெறும் போது விடுதலைப்போர் தனது வெற்றி இலக்கை அடைந்தே தீரும். சீனா, வியற்நாம் ஆகிய நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடத்திய விடுதலைப்போர் மக்கட் போர் (PEOPLE’S WAR) எனப்படும். ஆசியாவின் மூன்றாவது மக்கட் போர் இப்போது தமிழீழத்தில் நடந்து கொண்டிருக்கிறது. புலிகள் தலைமையில் தமிழீழ மக்கள் நடத்தும் விடுதலைப்போர் பல வியப்பூட்டும் இராணுவப் பரிமாணங்களைக் கொண்டது.

மக்கட் போரின் தாக்குப்பிடிக்கும் வலு அதன் வெற்றி இலக்கை அடைய உதவுகிறது. பிடித்து வைத்திருக்கும் நிலப்பரப்பு பெரிதல்ல, கொன்று குவித்த எதிரிகளின் எண்ணிக்கை பெரிதல்ல, நெடுங்காலம் அணைய விடாது விடுதலைப் போரை முன்னெடுப்பதுதான் முக்கியம். தமிழீழ விடுதலைப்போர் 30 வருடங்களை எட்டிவிட்டது. எமது தமிழீழத் தாகம் தணியாமல் இருக்கிறது. எமது கட்டுக்கோப்பு உறுதியாக இருக்கிறது. எந்த இடரையும் எம்மால் எதிர்கொள்ள முடிகிறது. இவை எமது வெற்றியின் வெளிப்பாடாக அமைகின்றன. போரியல் விஞ்ஞானத்திற்கு நாங்கள் முக்கிய பங்களிப்புச் செய்து வருகிறோம். கெரில்லாப் படையணியாகவும் மரபுப் படையணியாகவும் எம்மால் தேவைக்கேற்ற விதத்தில் மாற்றம் அடைய முடிகிறது. புலிகள் ஒரு இராணுவ அமைப்பு மாத்திரமல்ல எம்மால் சர்வதேச மட்டத்தில் அரசியல் அமைப்பாகவும் செயற்பட முடிகிறது.

மக்கட் போரின் முக்கிய அமிசங்கள் தெட்டத் தெளிவாகத் தெரிகின்றன. நிலைமைக்கேற்ற விதத்தில் தந்திரோபாயங்களை மாற்றும் திறமை அதில் முதலிடம் வகிக்கிறது. சதா தாக்கிக் கொண்டிருந்து சோர்வைச் சந்திக்காமல் ஓய்வாக இருந்து எம்மைப் பலப்படுத்தவும் எம்மால் முடிகிறது. தரை அமைவு, இயற்கைச் சூழல், காத்திருக்கும் பொறுமை என்பன எம்மை வலுவூட்டுகின்றன. காத்திருக்கும் காலத்தில் எமது படையணிகளைப் பலப்படுத்தி, எமது பயிற்சிகளை முடுக்கி விட்டு, தாக்குதல் நேரத்தைத் தெரிவு செய்யும் தந்திரோபாயத்தில் நாம் வல்லவர்களாக இருக்கிறோம். எதிரி தனது பிரசார வெளியீடுகளை நம்புவதற்குத் தயாராகி விட்டான். இதுதான் அவனுடைய மீள முடியாத பலவீனம். புலிகள் பற்றிய அவனுடைய ஒவ்வொரு கணிப்பீடும் தவறானவை. இதுதான் எங்கள் பலம்.

தனது தற்காப்பு ஏற்பாடுகளை எதிரி தெரிந்து கொள்ளாமல் அமைக்கும் தளபதி தாக்குதல் நடத்துவதில் சமர்த்தனாவான். எங்கே தாக்குதல் நடக்கலாம் என்று எதிரியைத் திகைக்க வைக்கும் தளபதி கூடிய திறமைசாலியாவான் என்று கூறப்பட்டுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு மாவோவும் அவருடைய முதற்தளபதி சூ தேயும் (CHU - TEH) தங்கள் மக்கட்போரை நடத்தி வெற்றி கண்டனர். நீ வரமாட்டாய் என்று எதிரி எண்ணும் இடங்களில் வேகமாகப் பாய்ந்து செல் என்பது காலத்தால் அழியாத இராணுவக் கோட்பாடு. இதன் சூட்சுமத்தை நாம் நன்கு அறிவோம். விலகிச் செல்லவும், விரைந்து தாக்கவும், புதிய களமுனையைத் திறக்கவும் எம்மால் முடியுமென்றால் அதற்கு நாம் நடத்தும் மக்கட் போர் தான் காரணம்.

நாம் எண்ணிக்கையில் குறைந்தவர்கள், எமது பொருளாதார வளம் ஒப்பீட்டில் சிறியது, எமது நட்பு சக்திகள் மிகச் சில. நாம் நிமிர்ந்து நிற்கி றோம் என்றால் அதற்கு எமது மக்கள் பலம் தான் காரணம். 'நம்முடைய பலவீனங்களைப் பலமாக மாற்றிக் கொள்ள வகை செய்வது நீண்டகாலம் நடைபெறும் போர்தான். ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய வெற்றிகள் ஒன்றாகச் சேரும் போது ஒரு மகத் தான வெற்றிகிடைக்கிறது" என்றார் வியற்நாமிய ஜெனரல் வோ குவன் கியாப். (VO NGUYEN GIAP) ஆயுத தளபாடங்களாலும், போர் வீரர் எண் ணிக்கையிலும் குறைந்தவொரு இனம் ஒரு உன்னதமான இலட்சியத்திற் காகச் சிறந்த தலைமைத்துவத்தின் வழிகாட்டலில் போரிடும்போது வெற்றி கிடைத்தே தீரும்.

போரியல் வல்லுநர்கள் தாக்குதல் நேரத்தெரிவுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். வெற்றியைத் தீர்மானிப்பது நேரத் தெரிவு என்றும் சொல்கிறார்கள். வியற்நாம் போரில் சரியான தாக்குதல் தருணம் மிகப் பெரிய பங்களிப்புச் செய்தது. சிறந்த தாக்குதல் தருணத்தை வியற்நாமியர்கள் தொயிகோ (THOI CO) என்றார்கள். அது நீண்ட காலம் கூட எடுக்கலாம். உடனடியாகவும் நடக்கலாம். எதிரியின் நிலவரம், புறச் சூழல், வேவுத் தரவு, தட்ப வெப்பம், தனது தயார் நிலைபோன்ற பல்வேறு தரவுகள் கணக்கில் எடுக்கப்படு கின்றன. அரசியல் மற்றும் இராசதந்திர உபாயங்கள் பயனற்ற நிலைக்கு வந்து விட்டனவா என்றும் பார்க்கப்படும். அரசியல் இராசதந்திர நகர்வுகளை முன்னோக்கிச் செலுத்துவதற்குப் போர் வெற்றி தேவை என்றால் அதற்கான ஒழுங்கமைப்புகளையும் செய்தல் வேண்டும்.


[URL=http://imageshack.us][IMG]http://img360.imageshack.us/img360/5360/vp3sw0.jpg[/IMG][/URL]


உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெற்றிருந்தாலும் அதுவே எமது மேம்பாட்டின் அடித்தளமாக இருந்தாலும் தமிழீழ மக்களாகிய நாம் உண்மையில் ஒரு விவசாயச் சமூகம் தான். எதிரி எமக்குச் சுருக்குக் கயிறு போட்டு முற்றுகையிட்டுப் பொருளாதாரத் தடை செய்யும் போதெல்லாம் எம்மைக் காப்பாற்றியது மண்ணின் உற்பத்திப் பொருள்கள் என்பதை மறுக்க இயலாது. மக்கட்போரின் அங்கமாக விவசாயம் இடம்பெறுகிறது. போரின் ஒரு பகுதியாக விவசாய உற்பத்தி இடம்பெறுகிறது. மக்கட் போருக்கான தயார்படுத்தலில் விளை பொருள்களின் கூடுதல் வெளியீடு விலைவாசிகளின் உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் உதவுகிறது.

மக்கட் போருக்கான படையணிகளைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னோடியாக மக்கள் மத்தியில் எதிர்வரும் போர் பற்றிய விளக்கங்களைத் தரவேண்டிய பொறுப்பு இருக்கிறது. எதிரியின் கொடூர முகம் பற்றிய அறிவுறுத்தல்களை மக்கள் மத்தியில் இடைவிடாது பரப்பும் பணியைச் செய்யவேண்டும். விடுதலைப் போருக்கான போராளிகளை மக்கள் மத்தியில் இருந்துதான் திரட்ட வேண்டும். மக்கள் படையைத் திரட்டும் பணியைக் குறுகிய காலத்தில் நிறைவேற்ற இயலாது. மெதுவாக ஆனால் உறுதியாகச் செய் யும் பணியாக அது அமைகின்றது. இலட்சிய வேட்கையில் ஊறிய இனம் போருக்குத் தன்னைக் காலப்போக்கில் தயார்ப்படுத்தி விடும்.

வியற்நாம் போரின் முதன்மைத் தளபதி கியாப் தனது படையணிகள் திரட்டப்பட்ட விதம்பற்றித் தனது விரிவான கட்டுரையில் (PEOPLE’S WAR, PEOPLE’S ARMY... HANOI, FOREIGN LANGS PUBLISHING HOUSE 1961) விளக்கியுள்ளார். கட்டுரையின் தலைப்பு மக்கட் போர், மக்கள் இராணுவம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்திரட்டத் தொடங்கிய காலத் திலேயே நீண்ட காலப் போருக்கான திட்டம் தீட்டப்பட்டது. எதிரி பலம் வாய்ந்தவன், நவீன ஆயுதங்கள் வைத்திருப்பவன் என்ற விபரம் கருத்தில் எடுக்கப்பட்டது. மக்கள் படை மிகவும் மெதுவாக பிரமிற் எனப்படும் கூம்பு வடிவத்தில் கட்டியெழுப்பப்பட்டது. அதன் அடித்தளம் விவசாயப் பெரு மக்களாகவும் அவர்களுடைய தற்காப்பு அணிகளாகவும் அமைந்தது. தற்காப்பு அணிகளில் இருந்து கெரில்லா அணிகளும் வேகமாக இடத்திற்கு இடம் மாறித் தாக்கும் அணிகளும் உருவாக்கப்பட்டன. இதில் திறமையையும் விசேட தகமையையும் வெளிப்படுத்தியவர்கள் நாடு தழுவிய மரபுப் படையணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த விதமாக ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் படை தனது ஆட்பற்றாக் குறையைத் தானாகவே நிரவிக் கொள்ளும் வலுவைப் பெற்றுவிடும். எப்போதும் விவசாயப் பெருமக்களின் அணிகளில் இருந்து கெரில்லாக்கள் தோன்றுவார்கள். கெரில்லாப் போர் முறையில் சிறந்தவர்கள் மரபுப் படையணியில் இணைவார்கள். இதனால் ஒரே இராணுவம் மக்கட் படையாகவும் கெரில்லாப் படையாகவும் மரபுப் படையாகவும் செயற்படும் திறமையுள்ளதாக அமையும். சுருக்கமாகக் கூறுவதானால் ஒரே படையணி இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் இலக்குகளைக் கொண்ட தாக அமைகிறது. உள்ளுர் மற்றும் அனைத்துலக மட்ட அரசியல் கற்பித்தலை எமது படையணிகளுக்கு மேற்கொண்டோம். தனது கையாலேயே வியற் லாப் (VIET LAP) என்ற கையெழுத்துப் பத்திரிகையை மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ஹோசீமின் தயாரித்து வெளியிட்டார். கடதாசி, மை தட்டுப்பாடு காரணமாக அவருடைய கட்டுரைகளில் ஐம்பது சொற்கள் மாத்திரம் இருந்தன. இதை இலவசமாக விநியோகிக்க அவர் மறுத்துவிட்டார். மிகவும் சிறிய தொகைக்கு அது விற்பனையாகியது. வேறு ஆர்வலர்களால் விடுதலைக் கவிதைகள் இயற்றப்பட்டுச் சொற்ப படிகள் மாத்திரம் வெளிவந்தன. பதனிடப்பட்ட மூங்கில் இலைகளில் கவிதைகளும் செய்திகளும் வெளியிடப்பட்டன.

1945 இல் தொடங்கிய ஆட்சேர்ப்பு 1950 இல் முதலாவது டிவிசனை உருவாக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்தது. வியற்நாமின் மக்கள் தொகை 30 மில்லியன் பரப்பளவு 330 ஆயிரம் சதுர மைல்கள். மலைகள், குகைகள், சமவெளிகள், காட்டாறுகள், அடர்காடுகள் நிறைந்த வடக்குத் தெற்காக நீண்ட நாடு. மக்கள் படையின் தாக்குதல் திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமான தரை அமைவு. வியற்நாம் மக்கள் படை நடத்திய முதற் கட்டப் போரில் வரை படத்தில் நன்கு அடையாளப்படுத்தக்கூடிய போர்க்களம் இல்லை எனலாம். எங்கு எதிரி அணிகள் காணப்படுகின்றனவோ அங்கு ஓர் போர்க்களம் திறக்கப்பட்டது. தாக்க வேண்டிய நேரம் தாக்குதல் நடத்தப்பட்டது, இழப்புகள் கணிசமானளவு ஏற்பட்டவுடன் பின்வாங்க நேரிட்டது. எந்தச் சந்தர்ப்பத்திலும் படையணிகளின் பலத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிர கவனம் எடுத்தோம் என்கிறார் கியாப்.

1949 இல் நவசீனா பிறந்ததோடு விடுதலைப்போர் புதிய பலம் பெற்றது. ஒரு விடுதலை பெற்ற நாட்டிற்கு அருகாமையில் புவியியல் ரீதியாக வியற்நாம் இடம்பெறும் வாய்ப்பைப் பெற்றது. 1950 இல் சீனா, சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்பன வியற்நாம் விடுதலைப்போரை அங்கீகரித்தன. அத்தோடு ஆயுத வழங்கலையும் சீனா ஊடாக ஆரம்பித்தன. நீண்ட காலம் எடுக்கும் விடுதலைப்போர் அரசியல் அனுகூலங்களுக்கு வழிவகுக்கும் என்பது இப்போது மெய்யாகியது. மிகப்பெரியதொரு இராணுவ வெற்றி அரசியல் இராசதந்திர நகர்வுகளுக்கு இடமளிக்கும். ஆனையிறவு வெற்றியின் பின் புலிகளின் சர்வதேச அந்தஸ்து உயர்ந்தது. அடுத்து வரும் காலத்தில் எமக்காகக் காத்திருக்கும் வெற்றிகள் பல சாதகமான அரசியல் வெற்றிகளை ஈட்டித்தரும்.

வியற்நாம் வரலாற்றிலும் இதுதான் நடந்தது. 20 ஆம் நூற்றாண்டின் திருப்புமுனைப் போர்களில் ஒன்றான டியன் பியன் பூ (DIEN BIEN PHU) போர் வட வியற்நாம் விடுதலை பெறுவதற்கும் அதற்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதற்கும் வகை செய்தது. இந்தச் சண்டை மார்ச்சு 13, 1954 இல் தொடங்கி மே 07, 1954 இல் முடிவுற்றது. 55 பகலும் 55 இரவுமாக நடந்த இந்தப்போரில் 10,000 வியற்நாம் போர் வீரர்கள் களப்பலியாகினர் போர் தொடங்கிய போது 16,200 பிரெஞ்சு வெள்ளையர்களும் ஆபிரிக்கக் கறுப்பர்களும் 11 மைல் நீளம் 5 மைல் அகலமுள்ள டியன் பியன் பூ முகாமில் இருந்தனர். உட்புறத்தில் 3 விமான ஓடுபாதைகளும் 12 விமானங்களும் இருந்தன. அதியுச்ச பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டி ருந்தன. அவற்றைப் பார்வையிட்ட அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் அதை வெல்லப்பட முடியாத கோட்டை என்று தீர்மானித்தனர். இதே அபிப்பிராயத்தை அமெரிக்கர்கள் ஆனையிறவு பற்றியும் கொண்டிருந்தனர்.

தேசிய விடுதலைப் போரில் மக்கள் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்களை நாம் வியற்நாமியர்கள் நடத்திய போரில் பார்க்கலாம். டியன்பியன் பூ போரில் அத்தனை போராளிகளுக்கும் உணவு வழங்கும் பொறுப்பைப் பொதுமக்கள் ஏற்றனர். இது போன்ற மாபெரும் கோட்டையைச் சுற்றிய ஆழமான காப்பகழிகளை வெட்டுவதற்குப் பொதுமக்கள் உதவினர். இராணுவ வரலாற்றில் வியற்நாமின் சுரங்கப் பாதைகள், ஆழமான காப்பகழிகள், நிலத்தடியில் அமைக்கப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் என்பன உலக அதிசயங்களில் ஒன்றாகியுள்ளன. விமானக் குண்டு வீச்சின் அகோரம் கூடியபோது அந்த மக்கள் நிலத்தின் கீழ் வாழக் கற்றுக்கொண்டனர். மகப்பேற்று நிலையங்கள் கூட நிலத்தடியில் அமைக்கப்பட்டன.

டியன் பியன் பூ போரில் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழி நடைமுறைக்கு வந்தது. இரண்டாயிரத்திலும் கூடிய மிதி வண்டிகள், ஆயுத தளபாடங்கள், உணவுப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றைக் களத்திற்கு எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டன. வேகமாகப் பாயும் நதியைக் கடப்பதற்கு மூங்கில் படகுகள் கட்டப்பட்டன. பல மைல் தூரம் செல்லும் மலைப் பாதைகளை ஆண்களோடு இணைந்த பெண்களும் சிறுவர்களும் வலுக் குறைந்த சிறு கருவிகளின் உதவியோடு அமைத்தனர். எதிரிவசம் அதி சக்திவாய்ந்த ஆட்லறி, குண்டு விச்சு விமானங்கள் என்பன இருந்தன. வியற்நாமிய மக்களிடம் மனோபலம், சமயோசிதம், உயிரைக் கொடுத்தும் வெல்லவேண்டும் என்ற உறுதி இருந்தது. மக்கட்படையின் வெற்றி இரகசியம் இதுதான். மக்கட் படை என்பது முழு நாடே ஒன்றிணைந்த படை என்பது பொருள்.


நன்றி: விடுதலைப் புலிகள் ஏடு (தை-மாசி 2008)

0 Comments: