இலங்கையில் பரவலாக இடம்பெறும் ஆட்கடத்தல்களும், பின்னர் காணாமற் போகச் செய்யப்படுதலும் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கின்றன. இலங்கை அரசே அவற்றுக்கு முழுப் பொறுப்பு என்று அப்பட்டமாக வெளிப்படையாக அம்பலப்படுத்தியிருக்கின்றது அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2006 இல் மீண்டும் ஆரம்பமானமை முதல் தனிப்பட்ட ஆட்கள் நூற்றுக்கணக்கில் பாதுகாப்புப் படையினராலும், அரசுத் தரப்புக்குச் சார்பான ஆயுதக் குழுக்களினாலும் காணாமற் போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அப்படிக் காணாமற் போகச் செய்யப்பட்ட பலர் உயிரிழந்துவிட்டனர் என்று அஞ்சப்படுகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் இவ்வாண்டுக்கான முக்கிய கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கையில் மிகவும் மோசமடைந்துவரும் மனித உரிமைகள் விவகாரமும் இந்தக் கூட்டத் தொடரில் அக்கு வேறு ஆணி வேறாகப் பிய்த்து உதறப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற சூழலிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வாறு இலங்கை அரசின் பொட்டுக்கேட்டைப் போட்டுடைத்து அம்பலப்படுத்தியிருக்கின்றது.
"தொடரும் பயங்கரம்: இலங்கையில் கடத்தல், காணாமற் போதல்களில் அரசின் பொறுப்பு' என்ற தலைப்பில் 241 பக்க அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டு, மஹிந்தர் அரசின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மைச் சொரூபத்தை உலகுக்கு அம்பலப்படுத்தியிருக்கின்றது மனித உரிமைகள் கண்காணிப்பகம்.
பல நூற்றுக் கணக்கில் இடம்பெற்றுள்ள ஆட்களைக் கடத்திப் பின்னர் காணாமற் போகச் செய்யப்பட்ட சம்பவங்களில் 99 துன்பியல் நிகழ்வுகள் குறித்து இந்த அறிக்கை விரிவாக ஆராய்கிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக அரசுத் தரப்பின் பதிலும், பிரதிபலிப்பும் திருப்திகரமானவையாக அமையவில்லை என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகின்றது.
2006, 2007 ஆம் ஆண்டுகளில் உலகில் வேறெந்த நாடுகளையும் விட இலங்கையேகாணாமற்போனோர் பற்றிய விவகாரத்தில் முன்னணியில் திகழ்வதாக "விருப்புக்கு மாறாக பலவந்தமாக ஆட்கள் காணாமற் போகச் செய்யப்படுதல் தொடர்பாக ஆராயும் ஐ.நா. செயலணிக்குழு' பதிவு செய்திருக்கையிலேயே, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் தற்போதைய அறிக்கை, இந்த "மகுடத்தை' மஹிந்தரின் அரசுக்குச் சூட்டியிருக்கின்றது.
அது மட்டுமல்ல. அது இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
""முன்னர் மனித உரிமைகளுக்காகப் போராடிய ராஜபக்ஷவே, இன்று பலவந்தமாக ஆட்கள் காணாமற் போகச் செய்யப்படுதலில் உலகில் மிக மோசமான சூத்திரதாரிகளைக் கொண்ட அரசு ஒன்றுக்குத் தலைமை வகித்து வழிநடத்துகின்றார்'' என்ற விருதும் வழங்கியிருக்கின்றது அந்த அமைப்பு.
இவ்வாறு உலகிலேயே மிக மோசமான கொடூரத்தை அதுவும் பல நூற்றுக்கணக்கில் ஆட்களைக் காணாமற் போகச் செய்யும் அராஜகத்தை வெறும் மனித உரிமை மீறலாக மட்டும் அடையாளப்படுத்தி விடமுடியாது.
அதுவும் சட்ட ரீதியான இறைமையுள்ள ஓர் அரசாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு நிர்வாகம் இப்படிப் பயங்கரவாத அமைப்புப்போலச் செயற்பட முடியாது.
அத்தகைய சட்டரீதியான அரசு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒரு கட்டமைப்பு இத்தகைய மனித உரிமை மீறல்களை "அரச பயங்கரவாதமாக' யுத்தம் ஒன்றின் பெயரால் கட்டவிழ்த்துவிடும்போது அது மனித குலத்துக்குச் எதிரான போரியல் குற்றக் கொடூரமாகக் கருதப்படவேண்டும்.
இத்தகைய குற்றங்களின் சூத்திரதாரிகள், முன்னாள் சேர்பியத் தலைவர் மிலோசிவிச் போல சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர்களாவர்.
இதேவேளை, இத்தகைய கொடூரங்களுக்குக் காரணமான இலங்கை அரசு குறித்து நீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கையின் சர்வதேச சகாக்களை குறிப்பாக இந்தியா, ஜப்பான் போன்ற இலங்கைக்கு உதவும் நாடுகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.
""மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குக் காரணமான நாடுகளுக்கும் அரசுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு உதவி புரியாதீர்கள்.
காணாமற் போகச் செய்தல் செயற்பாட்டை நிறுத்துவதையும்
அக்குற்றங்களைப் புரிந்தோருக்குத் தண்டனையிலிருந்து சட்ட விலக்களிப்பு வழங்கும் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதையும்
இலங்கையில் சர்வதேசக் கண்காணிப்புப் பொறிமுறை செயற்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்வதையும்
மனித நேய அடிப்படையில் அமையாத உதவிகளையும், இராணுவ உதவிகளையும் வழங்குவதற்கான முன் நிபந்தனைகளாக இலங்கைக்கு விதியுங்கள்'' என்று அந்த அமைப்பு இந்த நாடுகளைக் கேட்டிருக்கின்றது.
உலகில் இலங்கைத் தேசத்தின் கீர்த்தியை "ராஜபக்ஷ சகோதரர்கள் அன்ட் கம்பனி' முன்னிலையில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கின்றது என்பதையே மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தற்போதைய அறிக்கை மகுடம் சூட்டி அம்பலப்படுத்தியிருக்கின்றது.
நன்றி :- உதயன்
Friday, March 7, 2008
மஹிந்தரின் அரசுக்கு மகுடம் சூட்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்
Posted by tamil at 5:16 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment