Tuesday, March 25, 2008

வாய்ச்சவடால் அறிக்கைகளால் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது

மனித உரிமை மீறல்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களில் இலங்கை அரசு மீது சர்வதேச சமூகமும் பன்னாட்டு நிறுவனங்களும் சுமத்திவரும் குற்றச்சாட்டுப் பத்திரங்கள் பெருகிக் குவிந்துகொண்டு போக, அவற்றைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசுத் தரப்பினால் வெள்ளம்போல பாயவிடப்பட்ட ஏமாற்று அறிவித்தல்களும், அத்தியாயங்கள், அத்தியாயங்களாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைகளும், உச்ச ஸ்தாயியில் முன்னெடுக்கப்பட்ட பிரசார செயற்பாடுகளும் கடைசியில் பயனின்றித் தோற்றுப் போய்விட்டன என்று ஆங்கில வார இதழ் ஒன்று தனது வாராந்த அரசியல் விமர்சனத்தில் அப்பட்டமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

ஒட்டுமொத்தத்தில் விடயங்களைத் திசை திருப்புவதற்கு அரசுப் பக்கத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் "பிள்ளையார் பிடிக்கக் குரங்கான கதையாக' போய் முடிந்திருக்கின்றது என்பதை அப்பத்திரிகை நாசூக்காகவும் அதேசமயம் வெளிப்படையாகவும் அம்பலப்படுத்தியிருக்கின்றது.
சம்பந்தப்பட்ட சர்வதேச தரப்புகளுக்கு எதிராக அரசுப் பக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிலடி நடவடிக்கைகள் இலங்கை அரசின் "நற்பெயரை' காப்பாற்றத் தவறிவிட்டன. தன்னுடைய மனித உரிமை பேணும் சீத்துவத்தைப் பாதுகாப்பதற்காக அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட புள்ளி விவரங்களும், வாதங்களும் முழுத் தவறானவை என்பது அம்பலமாகியிருப்பது அரசுப் பக்கத்துக்கு விழுந்த பேரடி பேரிடி என அந்தப் பத்திரிகை வெளிப்படுத்தியிருக்கின்றது.
மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கை அரசின் மிக மோசமான போக்கை அம்பலப்படுத்தும் வகையில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வெளியானதால் குழம்பிப்போன கொழும்பு, அதைச் சமாளிப்பதாக நினைத்துக்கொண்டு குளறுபடியான போக்கில் செயற்பட்டுத் தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருப்பதை அந்த வார இதழ் விலாவாரியாகப் புட்டுவைத்திருக்கின்றது.

முதலில் கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவரை அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் தமது ஆட்சேபனையை நேரில் தெரிவித்தார். ஆனால் அமெரிக்கா கிறங்கவில்லை. தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை எல்லாம் நீதி, நேர்மையானவை, அவற்றைத்தான் மீளவும் உறுதிப்படுத்துகிறது எனப் பதிலடி தந்தது அமெரிக்கா.
அத்துடன் அடங்கிப்போக விரும்பாத இலங்கை, அமெரிக்காவின் அந்த அறிக்கைக்கு மேலும் தக்கபதில் அளிப்பதாக நினைத்துக்கொண்டு பிழையான அஸ்திரத்தைக் கையில் எடுத்து, இப்போது தனக்குத்தானே வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது.

""மிகவும் மதிக்கப்படுகின்ற சர்வதேச மனித நேய அமைப்பான செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, வடக்கு, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு எல்லாம் சென்றுவர வசதிகொண்ட அமைப்பு. அது, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 2007 ஆம் ஆண்டின் இரண்டாம், மூன்றாம் காலாண்டுப் பகுதிகளில் காணாமற் போதலும், விளக்கமளிக்கப்படாத கொலைகளும் வீழ்ச்சி அடைந்திருப்பதை உறுதி செய்திருக்கின்றது. செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் புள்ளி விவரக்கணக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கைக்கு மாறாக இத்தகைய சம்பவங்கள் குறைந்து செல்வதை யாழ். மாவட்டத்திலும் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றது. இலங்கை அரசுக்கும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவுக்கும் இடையிலான இந்த இரகசியப் பரிவர்த்தனை அறிக்கைப் பரிமாற்றங்களை அமெரிக்கா தனது கொழும்புத் தூதரகம் ஊடாகப் பார்த்தறியும் வசதியைப் பெற்றிருந்தும்கூட அதைக் கவனத்தில் எடுக்காமல், அமெரிக்கா புறக்கணித்தமையும், இவ்வாறு சீரடைந்துவரும் கள நிலைவரத்தை உதாசீனம் செய்து, விடுதலைப் புலிகளின் பிரசார இயந்திரத்துக்குத் தீனி போடும் மோசடி வட்டாரங்களில் அமெரிக்கா தங்கிச் செயற்படுகின்றமையும் ஆழ்ந்த கவலைக்குரியவை.'' என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு பொரிந்து தள்ளியது.

இலங்கையின் இந்த அறிவிப்பு செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் சீற்றத்துக்கு வழி செய்து விட்டது. "மனித நேயப் பணியில் ஈடுபடும் மதிப்பார்ந்த அமைப்பு' என்று இலங்கைத் தரப்பினாலேயே அதன் அறிக்கையில் போற்றப்பட்ட செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, இலங்கையின் இந்த அறிவிப்பைக் கடுமையாகச் சாடி கொழும்பின் முகத்திரையைக் கிழித்து உண்மையை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

பகிரங்க விவாதத்தில் ஈடுபட்டு தரப்புகளோடு அதிருப்திகளை நீடிக்க விரும்பாத ஓர் அமைப்பாக இருந்தபோதிலும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு இவ்விடயத்தில் உறுதியான ஒரு நிலைப்பாடு எடுத்து, நிலைமையைத் தெளிவுபடுத்தி, இலங்கைத் தரப்பின் முகத்தில் கரி பூசிவிட்டது.

* செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் இரகசிய அறிக்கையைத் தவறான வகையில் வழிப்படுத்தும் விதத்தில் இலங்கை பகிரங்கப்படுத்தியமையைக் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.
* இலங்கை அரசுத் தரப்புடன் மட்டும் பரிமாறப்படும் இரகசிய அறிக்கையை பிற தரப்புடனும் இலங்கை பகிர்ந்து கொள்வதும், அதைப் பகிரங்கப் படுத்துவதும் விசனத்துக்குரியவை.
* சட்டவிரோதக் கொலைகளும், காணாமற்போகச் செய்தலும் இலங்கையில் இடம்பெறும் கோரமான மனித உரிமை மீறல் பாணிகளில் அடங்கும். அவை கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும்.
* செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு தனது இரகசிய அறிக்கைகள் மூலமும் நேரடி உரையாடல்கள் மூலமும் இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப் பாடுபடும். இக்காரணத்தால் இலங்கையில் இடம்பெற்றுள்ள பல எண்ணிக்கையிலான காணாமற்போதல் விடயம் குறித்துப் பகிரங்க விவாதத்தில் இறங்க செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு விரும்பவில்லை.

இப்படித் தெரிவித்து செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு கொழும்பிலும், ஜெனிவாவிலும் வெளியிட்ட அறிக்கைகளையடுத்து கப்சிப்பென்று அடங்கிப்போயிருக்கிறது அரசுத் தரப்பு.
சர்வதேச மட்டத்தில் போட்டுக்கொடுத்து பொல்லைக் கொடுத்து வாங்கிக்கட்டியிருக்கிறது இலங்கை.

களத்தில் மனித உரிமைகளைப் பேணுவதில் பற்றுறுதியும் திடசங்கற்பமும் கொள்ளாமல், தனது படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்களைக் கொண்டு கொடூர அராஜக செயல்கள் தலைவிரித்தாடத் தாராளமாக அனுமதித்து, அதற்கு இசைவு தந்துவிட்டு, வெறும் அறிக்கைகள், அறிவிப்புகள், வாய்ச்சவடால்கள் மூலம் சர்வதேசத்தைச் சமாளிக்கலாம் எனக் கொழும்பு முட்டாள் தனமாக எண்ணுமானால், அதற்கு இந்த அனுபவம் தகுந்த பாடமாக அமையும்.

நன்றி உதயன்

0 Comments: