Sunday, March 23, 2008

தமிழர்களின் தன்மானத்திற்கு அறைகூவல் இனியும் தயக்கம் ஏன்?

தமிழகத்தின் மய்யத்தில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலில் மாபெரும் போராட்டத்திற்கு பின் ஒரு வழியாக தேவாரம் பாடப்பட்டது.

உண்மை.. சிற்றம்பல மேடையில் தேவாரம் முழங்கியது. ஆனால் இது உண்மையிலேயே தமிழ் வழிபாட்டு ரிமைக்குக் கிடைத்த வெற்றியா?

சிதம்பரம் நடராசர் கோவில் பல நூற்றாண்டு பழமையானது. பன்னெடுங் காலமாக சைவர்களுக்கு (சிவனை வழிபடுபவர்கள்) இதுதான் முக்கிய வழிபாட்டு தலமாக இருக்கிறது.

வரலாற்று ரீதியாகவும் சிதம்பரம் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தே இருந்தது. சோழ மன்னர்களின் முடி சூட்டு விழா சிதம்பரம் கோயிலிலேயே நடந்ததாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. பிற்காலச் சோழ மன்னர்களான முதலாம் ஆதித்தனும் அவனைப் பின் தொடர்ந்து முதலாம் பராந்தகனும் சிதம்பரம் கோயிலுக்குப் பொன் கூரை வேய்ந்தனர் என்றும் வரலாறு கூறுகிறது.

சோழ மன்னர்கள் மட்டுமல்லாது பாண்டிய மன்னர்களும், நாயக்க மன்னர்களுமே சிதம்பரம் கோவிலுக்கு முக்கயத்துவம் அளித்து பல மானியங்களையும் புனரமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.

சிவபக்தர்களில் முதன்மை யானவர்களாக கருதப்படும் நாயன்மார்களில் முக்கியமானவர்களான திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வருமே சிதம்பரத்தைப் பற்றி பாடியுள்ளனர்.

இன்று வரை எங்கு சிவ பூசை நடந்தாலும் பூசை தொடங்குவதற்கும் முன்னும் முடித்தப் பிறகும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லியே நடத்துவது வழக்கமாக உள்ளது. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த தலம் அது.

அதிலும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் சிதம்பரம் கோயிலைத் தரிசிப்பதை முக்கியமாக கருதுகின்றனர்.

இந்த அளவிற்கு சிதம்பரம் கோயிலுக்கு முக்கியத்துவம் அளித்த இன்று வரை தொடர்ந்து அளிக்கக் கூடிய சிவ பக்தர்கள் யாரும் வட நாட்டினரோ அல்லது வேற்று மொழியினரோ அல்ல. அனைவருமே சுத்தமான தமிழர்கள். வட நாட்டில் சிவனை வழிபடுபவர்கள் முக்கியமாகக் கருதுவது வடக்கில் காசியையும் தெற்கில் இராமேசுவரத்தையும் மட்டுமே.

ஆனால், இவ்வாறு தமிழர்கள் போற்றி துதிக்கும் நடராசனின் காதில் தமிழ் விழுந்தால் அது அந்த நடராசனைத் தீட்டுப் படுத்திவிடும் என்று ஒரு கும்பல் கூச்சலிடுகிறது. அதை பல நூற்றாண்டுகளாக சாதித்தும் வருகிறது.

ஏறத்தாழ ஏழாம் நூற்றாண்டு காலத்தில் சிதம்பரத்தில் குடியமர்ந்த தீட்சிதர்கள், இன்று சிதம்பரம் கோவிலே சட்டப்படி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகின்றனர். அதில் தாங்கள் வைத்ததே சட்டம் எனவும், வேறு எந்த சட்டமும் அங்கு செல்லுபடியாகாது எனவும் துணிச்சலாகக் கூறுகின்றனர்.

சிதம்பரம் கோயில் ஒரு பொதுக் கோயில் என்பதும் அதன் மீது தீட்சிதர்களுக்கு எந்த சட்டப்படியான அதிகாரமும் கிடையாது என்றும், இக்கோயில் தீட்சிதர்களின் சொந்த சொத்து என்பதற்குத் துளியளவு கூட ஆதாரம் கிடையாது என்றும் 1888-இலும், 1951-இலும் நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. அதிலும் 1888-இல் சர். டி. முத்துசாமி அய்யர் என்ற பார்ப்பனரும், 1951-இல் சத்தியநாராயண ராவ், ராஜ கோபாலன் என்ற இரண்டு பார்ப்பன நீதிபதிகளை கொண்ட டிவிசன் பெஞ்சுமே இத்தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

1922-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை நீதிக்கட்சி அரசால் ஏற்படுத்தப்பட்டு அது 1925-இல் செயலாக்கத்திற்கு வந்த உடனேயே தீட்சிதர்கள் இந்த சட்டம் சிதம்பரம் கோயிலுக்குச் செல்லாது என வாதிடத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர்கள் வாதம் தவறு என்று நீதிமன்றம் தெளிவுற உரைத்த பின்னும், 60 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் சிதம்பரம் கோயில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டுவரப்படவில்லை.

முழுமையாக தீட்சிதர்களின் நிருவாகத்தின் கீழ் இருக்கும் சிதம்பரம் கோயிலில் அம்பாள் கழுத்திலிருந்த தாலி உட்பட கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மட்டுமல்ல சோழ மன்னர்கள் வேய்ந்த பொன் கூரையின் பகுதிகளே காணாமல் போய்விட்டதாக இதே தீட்சிதர்கள் பல முறை அறிவித்திருக்கின்றனர்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஒரு நாள் கோயில் நகைகள் அனைத்தும் காணாமல் போவதும், பொன் கூரை தகரக் கூரையாக மாறுவதற்கும் பெரும் வாய்ப்பிருக்கிறது.

இது மட்டுமல்ல. பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலக்கட்டங்களில் கோயிலுக்கு மானியமாக அளிக்கப்பட்ட நிலங்களைக்.. கொஞ்சம் நஞ்சமல்ல.. ஏறத்தாழ ஆயிரம் ஏக்கர் நிலங்களை முழுவதுமாக தீட்சிதர்களே அனுபவித்து வருகின்றனர்.

தமிழகத்தின் மய்யத்தில் இருந்து கொண்டு, சுற்றிலும் தமிழர்களுக்கு நடுவே வாழ்ந்து கொண்டு, தமிழர்கள் இடும் தட்சிணைக் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு, தமிழர்களின் கோயிலையும் நிலங்களையும் ஆக்கிரமிக்கவும், தமிழைத் தீட்டு மொழி என்று சொல்லவும், தமிழர்களைக் கோயிலுக்குள் விட மாட்டோம் என்று சொல்லவுமான துணிவு எங்கிருந்த வந்தது இவர்களுக்கு?

தீட்சிதர்களின் கணக்குப்படியே வைத்துக் கொண்டாலும், சிதம்பரத்தில் இன்று அவர்கள் முன்னூறு குடும்பங்களாக வாழ்கின்றனர். இந்த முன்னூறு குடும்பங்களுக்காக, அவர்களின் மிரட்டலுக்கும் பார்ப்பனத் திமிருக்கும் அடி பணிந்து, ஒட்டு மொத்தத் தமிழினமும் தமிழ் மன்னர்களால் தமிழ் மக்களை கொண்டு கட்டப்பட்ட, தங்களுக்கு உரிமையான, தாங்கள் போற்றி வழிபடக் கூடிய கோயிலை, அக்கோயிலில் தங்கள் தாய் மொழியில் வழிபடும் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டுமா?

இதை விட அவமானம் தமிழர்களுக்கு நேர முடியாது.

பல்லவ மன்னர்கள் காலத்தில் கோயில்களில் வட மொழி நுழைந்த காலம் தொட்டு இன்று வரை ஏறத்தாழ 13 நூற்றாண்டுகளாக தமிழர்கள் நடுவே, தமிழ் நீச மொழி என்றும் வட மொழியே உயர்ந்த மொழி என்றும் கைப்பிடி அளவு கூட இல்லாத பார்ப்பனர்கள் தொடர்ந்து துணிவாகச் சொல்லி வருகிறார்கள், நாம் இன்று வரை அரசாணை மேல் அரசாணையாகப் போட்டு கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்

கோயிலகளில் வடமொழியில் மட்டுமல்லாது தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அரசாணைப் போட்டால், "தமிழிலிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுதி வைத்து அவமானப் படுத்துகிறான். அதற்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

"தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" என்று அரசாணை போட நமக்கு இன்னமும் துணிச்சல் வரவில்லை. தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பது அப்படி என்ன பஞ்சமா பாதகமா? உண்மையில் அதுதானே இயற்கையாக இருக்க இயலும்? வடமொழி வழிபாடு என்பது இடையில் வந்ததுதானே?

ஆங்கிலேயர் பெயர் சூட்டிய மதராஸ் சென்னையாக மாற்றம் கொள்வது போலத்தானே இடையில் வந்த வடமொழி வழிபாட்டை நீக்கிவிட்டு தமிழ் வழிபாட்டை உறுதியாக்குவது?

இதை நடைமுறைப்படுத்த நமக்கு எதனால் அச்சம்? யாரைக் கண்டு பயம்? நிச்சயம் வாக்குக்காக இருக்க இயலாது. ஏனெனில் பார்ப்பனர்கள் மொத்தமே 3 விழுக்காட்டினர்தான். அப்படியானால், பன்னெடுங்காலமாக நமக்குள் ஊறிப் போன சூத்திர அடிமை மனோபாவம்தான் இன்றளவிலும் பார்ப்பனர்களை எதிர்க்கத் தடையாக இருக்கிறதா?

சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட அனுமதி அளித்து அரசே ஒரு ஆணையிடுகிறது. அந்த ஆணையை செயல்படுத்த சென்றவர்களையும், அரசாணையை மதிக்காமல் அதனை செயல்படுத்த விடாமல் தடுத்தவர்களையும் ஒன்றாக பாவித்து இரு தரப்பினரையும் அதே அரசு கைது செய்கிறது.

இந்த செய்கையால் துணிவுப் பெறப் போவது யார்? யாரை திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை?

தமிழ் வழிபாடு, தமிழ் வழிக் கல்வி, நீதிமன்றத்தில் தமிழ், தமிழ்த் தேசிய சிக்கல்களான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஈழம் என எல்லாவற்றிலும் தமிழர்களின் நலனுக்கு, தமிழ் மொழிக்கு எதிர் நிலை எடுத்து தமிழர்களிடமே அது குறித்து வெளிப்படையாகப் பேசி தொடர்ந்தும் தமிழ்நாட்டில் இவர்களால் வாழ முடிகிறது என்றால் எந்த அளவிற்கு நாம் தன்மானம் அற்றவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புலப்படும்.

"உங்களை சூத்திரர்களாகவே விட்டுச் செல்கிறேனே" என்று பெரியார் தனது இறுதி காலத்தில் மனம் நொந்து கூறினார். அவர் இறந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் இன்னமும் சூத்திரர்களாக, அடிமை மனோபாவத்தோடே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது மிகுந்த அவமானத்திற்குரியது. சூத்திர இழிவை நீக்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட போதிலும்,, அரசாங்கம் மட்டுமல்லாது மக்களும்.. அதனைச் செயல்படுத்துவதில் விழிப்புணர்வோடு வேகம் காட்டாவிடில், செயல்படுத்த தடையாய் இருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக அணி திரளாவிடில், எத்தனை நூற்றாண்டுகளானாலும் நாமும் நம் தலைமுறையினரும் சூத்திரர்களாக நீச மொழியைப் பேசிக் கொண்டு வாழ்ந்து மடிய வேண்டியதுதான்.

நன்றி:- பூங்குழலி

3 Comments:

Anonymous said...

சிறப்பான பதிவு. எல்லோருக்கும் இருக்கும் ஆதங்கம் இதுதான். இதைச்செய்வதில் அரசுக்கு அப்படி என்னதான் சிக்கல்?

-குமரேசன்

ஏகலைவன் said...

கால‌த்திற்கு ஏற்ற‌ சிற‌ப்பான‌ ப‌திவு. மிக‌வும் நேர்த்தியாக‌ இத‌னை எழுதியுள்ளீர்க‌ள், ம‌கிழ்ச்சி வாழ்த்துக்க‌ள்.

த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌ன்மான‌மில்லை என்ப‌தை ஆணிய‌றைந்து சொல்லியிருப்ப‌துவும் பாராட்டுக்குரிய‌து.

இவ‌ர்க‌ளின் த‌ன்மான‌த்திற்கு பெருந்த‌டையாக‌ இங்கே இருப்ப‌து வெறும் சூத்திர‌ அடிமை ம‌நோபாவ‌ம் ம‌ட்டும் அல்ல‌. இவ‌ர்கள் பார்ப்ப‌ன‌ர்க‌ளின் மீது வைத்துள்ள 'ப‌ரிதாப‌ப்பார்வை'யும்தான்.


"பாவ‌ம் இவ‌ர்க‌ளா த‌மிழுக்கு எதிரிக‌ள்?, இவ‌ர்க‌ளுக்கு எதிராக‌வா இத்த‌னை போராட்ட‌ங்க‌ள்?" என்றெல்லாம் ப‌ரிதாப‌மாக‌ கேட்கிறார்க‌ள் ப‌ல‌ர். இந்த பார்ப்பனக் கேடிகள் அநுதாப‌த்துக்குரிய‌வ‌ர்க‌ளாக தமிழர்களாலேயே பார்க்க‌ப்ப‌டும் அவ‌ல‌ம்தான் இன்னும் இங்கே நில‌வுகிற‌து. இதற்குத் தீணிபோடும் வ‌கையில் தின‌ம‌ணி, துக்ள‌க் போன்ற‌ பார்ப்ப‌ன‌ ப‌த்திரிக்கைக‌ள் திட்ட‌மிட்டு எழுதிவ‌ருகின்ற‌ன‌. உட‌ன‌டியாக‌ இந்த‌ மாய‌த்தோற்ற‌த்தை நாம் உடைத்தாக‌வேண்டும்.


நந்தனைக் கொளுத்திக்கொன்றது முதல் வள்ளலாரை ஜோதியில் கலக்கவைத்தது வரை ஏராளமான குற்றங்களை இந்த தீட்சிதப்பார்ப்பனர்கள் நிகழ்த்தியதன் நீட்சியாகத்தான் த‌மிழில் பாடி இறைவ‌னை வ‌ழிப‌டுவ‌த‌ற்காக‌ ம‌ட்டுமே கோயிலுக்குள் சென்ற முதியவர் சிவ‌ன‌டியார் ஆறுமுக‌சாமியை க‌டுமையாக‌த் தாக்கி அவ‌ரின் கையை உடைத்து வீதியில் வீசினார்க‌ள். இதில் ப‌ரிதாப‌த்திற்குரிய‌வ‌ர்க‌ள் யார்? தீட்சித‌ப்பார்ப‌ன‌ர்க‌ளா?


நீதிம‌ன்ற‌ங்க‌ள் வ‌ரை தீட்சித‌ப்பார்ப்ப‌ன‌ர்க‌ளின் வ‌லிமையான‌ க‌ர‌ம் நீண்டிருப்ப‌தை ஆறுமுக‌சாமி, ம‌னித‌ உரிமைபாது காப்பு மைய‌ம், ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌த்தின் ஆத‌ர‌வோடு க‌டந்த‌ 8 ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌மே சான்று.

மேலும் காவல் துறை மாவ‌ட்ட‌ க‌ண்கானிப்பாள‌ரையே தாக்கிய‌ தீட்சித‌ர்க‌ள் அப்பாவிக‌ளா? க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டும் தீட்சித‌ர்க‌ளின் மீது கை அல்ல‌ த‌ன‌து விர‌லைக்கூட‌ ப‌தியாமல் திரும்பிய‌ போலீசு அதிகாரிக‌ள், அர‌சானையை நிறைவேற்ற‌ அமைதியாக‌ப் போராடிய மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த தோழ‌ர்க‌ளின் மீது சீறிப்பாய்ந்த‌தும் தீட்சித‌ர்க‌ளின் வ‌லிமையே ந‌மக்கு எடுத்துக்காட்டுகின்ற‌ன‌.


என‌வே, பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிய‌ர்க‌ளின் ஓல‌த்திற்கு செவிம‌டுப்ப‌தும், தீட்சித‌ப்பார்ப்ப‌ன‌ ர‌வுடிக‌ளின்மீது அனுதாப‌ப்ப‌டுவ‌துவும் பார்ப்ப‌ன‌ர்க‌ளுக்கே சாத‌க‌மாக‌ இருக்கும்.


தோழ‌மையுட‌ன்,

ஏக‌லைவ‌ன்.
http://yekalaivan.blogspot.com

இறக்குவானை நிர்ஷன் said...

//ஆனால், இவ்வாறு தமிழர்கள் போற்றி துதிக்கும் நடராசனின் காதில் தமிழ் விழுந்தால் அது அந்த நடராசனைத் தீட்டுப் படுத்திவிடும் என்று ஒரு கும்பல் கூச்சலிடுகிறது. அதை பல நூற்றாண்டுகளாக சாதித்தும் வருகிறது.
//
கடவுளின் பெயரை வைத்து சம்பாதிக்கும் கூட்டம் பலகாலமாக இருந்து வருகிறது. இறைவன் குணங் குறிகள் அற்றவன்.இந்நிறத்தான் இவ்வண்ணத்தான் இப்படியிருப்பான் இந்நிலையிலான் எனக் கூற முடியாதவன். ஆன்மாக்களுக்காக படியிறங்கி உருவம் கொள்வது இவ்வாறு சண்டையை உருவாக்குவதற்காக அல்ல. சங்கமமாக வர்ணித்து சிவனின் அமிசங்களாக பார்க்கப்படவேண்டிய சிவனடியார்களே இவ்வாறு புண்படுத்திப் பேசி நடந்துகொள்வது கவலையடையச்செய்கிறது.
இறைவா ஏன் சிலையாகிப்போனாய் என்ற பழைய பாடல் இப்போதுதான் நினைவுக்குவருகிறது.

தரமான பதிவு.