Friday, March 28, 2008

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் "வகிபாகம்"

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இருதலை கொள்ளி எறும்பாக செயற்படுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய நடுவன் அரசின் நிலைப்பாடு தான் என்ன? ஈழத்தமிழர் பிரச்சினையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் அது எத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறது?

ஈழத்தமிழர்களின் இனரீதியான விடுதலையை அது அங்கீகரிக்கிறதா? பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் கொழும்பு அரசுக்கு அது கற்பிக்க விரும்புவது என்ன? விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அது எந்த கோணத்தில் பார்க்கிறது? இவ்வாறான கேள்விகளுடன் ஈழத்தமிழர்களின் இன விடுதலை என்ற வட்டத்துக்குள் இந்திய அரசின் பங்களிப்பை ஆராய்வோம். ஆரம்பத்தில் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்த பெருமை இந்தியாவையே சாரும்.

ஈழத்தில் முளைவிட்ட அத்தனை போராளிக் குழுக்களுக்கும் இந்தியாவே ஆதரவு வழங்கி வந்துள்ளது. இந்தியாவின் ஒத்தாசையோடு இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்திருந்த தமிழ் போராளி அமைப்புகள் பிற்பட்ட காலங்களில் தங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளால் ஒன்றை ஒன்று வெட்டிகொண்டன.

இவற்றுள் விடுதலைப்புலிகள் இயக்க அமைப்பு வடகிழக்கில் இயங்கிய ஏனைய இயக்கங்களை தடைசெய்து தனியாக செயற்பட ஆரம்பித்தது.ஏனைய போராட்ட அமைபுகள் தமிழர் தாயக பகுதிகளில் இருந்து விடுதலை புலிகளால் விரட்டப்பட்டன. . இவை எல்லாம் 1987ஐ யொட்டி இடம்பெற்ற நிகழ்வுகள் ,முன்பு மறைமுகமாக தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்தவந்த இந்தியா பின்பு இலங்கை விவகாரத்தில் நேரடியாக தலையிட ஆரம்பித்தது.

இதன்போது ஒரு கட்டத்தில் விடுதலைப்புலிகளின் பகையையும் அது சம்பாதித்ததுகொண்டது.இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்ட சிக்கல் நிலமையை கடுமையாக்கியது.

இத்தகைய மாற்றங்களோடுதான் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்விற்க்கான பங்களிப்பில் இந்தியாவின் பயணம் தொடர்கிறது.

வடகிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப்பகுதி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை-இந்தியா ஒப்பந்தம் அமைந்து .ஒப்பந்த்தின் படி வடகிழக்கு இணைப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

பிற்பட்ட காலங்களில் மாறி மாறி ஆட்சி ஏறிய தென்னிலங்கை அரசுகள் வடகிழக்கு இணைப்பை சரியான முறையில் நடைமுறைப்படுத்த தவறிவிட்டன.

தற்போதைய ஆட்சியில் பிரிக்கப்பட்டும் விட்டது.இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான போர் உக்கிர நிலையில் இருகிறது.

பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்ப்ட்டுவிட்டது.

அடுத்து என்ன நடக்கபோகிறது? இந்தியாவை பொருத்தவரையில் அது தன்னுடைய பிராந்திய நலனுக்கும் தேசத்தின் இறைமையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினையை கையாண்டு வருகிறது.

விடுதலைப்புலிகளின் தனி அரசு கொள்கையை அது ஏற்றுகொள்ளவில்லை.மாறாக தமிழர்களின் தாயகப்பகுதியான வட கிழக்குக்கு அதி உச்ச அதிகாரப்பகிர்வு என்ற கோட்பாட்டை வலியுறுத்தி வருகிறது,

ஆனால் தென் இலங்கை அரசுகள் இதற்கும் செவிசாய்ப்பதாக இல்லை.

விடுதலைப் புலிகளை அழிப்பதையே குறியாக கொண்டு அது செயாலாற்றி வருகிறது.

இதேவேளை இந்தியா தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுப்பட்ட அனைவரையும் இனப்பிரச்சினைகான தீர்வு விடயத்தில் சேர்த்துக்கொள்ளவே விரும்புகிறது.ஆனால் விடுதலைப்புலிகள் ஏனைய தமிழ் தரப்புகளை எற்றொக்கொள்ளவில்லை.

இவ்வாறான காரணங்கள், மற்றும் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை போன்றவற்றால் விசனமடைந்துள்ள இந்திய மத்திய அரசு விடுதலைப்புலிகள் தொடர்பில் தொடர்ந்தும் கடும் போக்கை கடைப்பிடித்துவருகிறது.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கை தமிழருக்கு ஆதரவு கிடைக்கின்ற போதும் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றங்களும் தென்படவில்லை. அவ்வப்போது தமிழ் மக்களுக்கு ஆதரவாக அறிக்கைகள் மட்டும் தான் விடப்படுகின்றன.

மறுபுறத்தில் இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை வழங்குகிறது.இன்னொரு புறத்தில் இலங்கை ஏனைய நாடுகளிடமிருந்து ஆயுத இறக்கிமதி செய்வதை அது விரும்பவில்லை என்று கூறுகிறது.

இப்படியே அதனுடைய குத்துக்கரணம் தொடர்கிறது.இதேவேளை இலங்கை விவகாரத்தில் மேற்குலகின் அதிகபட்ச தலையீட்டையும் நிராகரிக்கிறது.

இந்தியாவின் இந்த குழப்ப நிலையால் இலங்கை தமிழர்கள் வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.இந்தியாவின் இத்தகைய மயக்கமான போக்கு தெற்காசிய பிராந்தியத்தில் பாரிய சிக்கல்களை எதிர்காலத்தில் தோற்றுவிக்கப் போகிறது

இப்போக்கு ஈழத்தமிழர்கள் அவர்களது உரிமைகளை தென் இலங்கை அரசிடம் இருந்து பெறுவதில் சிக்கல்களை தோற்றுவிக்கவும் போகிறது.

எனவே இவ்விடயத்தில் இந்தியா தெளிவான கொள்கையோடு செயற்படவேண்டும். இந்தியாவின் கொள்கை அற்ற போக்கு தவறான பாதையில் தொடர்ந்து செல்லவே வழிசமைக்கும்,

வடகிழக்குப் பிரிப்பும் இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் அரங்கேறியுள்ளது. இவ்விடயத்தில் இந்தியா நிதானமாக இருந்திருந்தால் வடகிழக்கு பிரிப்பை தடுத்து நிறுத்தி இருக்காலாம்.

தற்போதைய இந்திய மத்திய அரசின் போக்கு கவலைக்கிடமாக உள்ளது.இந்தியா புலிகளை தொடர்ந்து பகையாளிகளாவே மறைமுகமாக நோக்குகிறது.

இது தான் இந்தியாவின் திரிசங்கு நிலைக்கு காரணம் இவ்வாறான போக்கு மேலும் தொடர்ந்தால் எதிர்காலத்தில் இலங்கையில் நிலமை இன்னும் மோசமாகலாம்.

இந்தியாவின் தயவு இலங்கை தமிழர்களுக்கு நிச்ச்சயம் தேவை. இந்தியா நினைத்தால் இலங்கையில் இடம்பெறும் போரை உடனடியாக கட்டுக்கொள் கொண்டுவர முடியும். எனவே இந்தியா இருதலை கொள்ளி எறும்பாக செயற்படாமல் நேர்வழியில் செயற்படவேண்டும்.

ஆக்கம் வீரகேசரி இணையம்

0 Comments: