Wednesday, March 5, 2008

தென்னிலங்கை ஊடகங்கள் பின்னியுள்ள கருத்தாதிக்க வலை

பெரும் உள்நாட்டுப் போராக வெடித்திருக்கும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, அமைதி முறையில் தீர்க்கப்பட முடியாத சிக்கல் விவகாரமாக உருவெடுத்து வருகின்றது.
ஈழத்தமிழர்களின் விடுதலை வேணவாவை சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை எப்படியேனும் தகர்த்தெறிந்து, பூண்டோடு அழித்து ஒழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கும் கொழும்பு ஆட்சி அதிகாரம் அதற்கு ஆயுத பலத்தையும் படை வலிமையையும் மட்டும் பயன்படுத்துவதுடன் அடங்கி விடவில்லை. அடுத்த முக்கியமான ஒரு கருவியையும் தென்னிலங்கை தனது கையில் எடுத்துக் கனகச்சிதமாகப் பயன்படுத்துகின்றது.
கருத்தாதிக்கத்தையும் ஓர் ஆட்சிமுறைக் கருவியாகப் பிரயோகிக்கின்றது தென்னிலங்கை.
தமிழரின் தாயகத்தை பிரதேசங்களாகப் பிரித்து, வலயங்களாக வகுத்து, இராணுவ அரண்களை அமைத்து, முட்கம்பி வேலிகளால் விலங்கிட்டு, சோதனைச் சாவடிகளால் நிறைத்து, உயர் பாதுகாப்பு வலயங்களாக ஒதுக்கி, அடக்கி ஆள்வது ஒருபுறம் நடக்க
மறுபுறத்தில் கருத்து விலங்கிட்டு, மனித மனங்களைச் சிறைகொள்ளும் ஒரு நுட்பமான அடக்குமுறை யுக்தியும் தென்னிலங்கையால் கட்டவிழ்க்கப்படுகின்றது.
உலகெங்கும் உள்ள அடக்குமுறையாளர்கள் தமது ஆதிக்க வெறியை நிலைநாட்டுவதற்கு இந்தக் கருத்தாதிக்கக் கருவியைப் பயன்படுத்தும் யுக்தியை வெகு சாதுரியமாகக் கையாண்டார்கள். அதனைக் கொழும்பு அரசும் கைக்கொள்கின்றது.
அடிமை கொண்ட மக்களைத் தொடர்ந்து நசுக்க புரட்சிகளை முறியடிக்க விடுதலைக் கிளர்ச்சிகளைத் துவம்சம் செய்ய மக்களை விழித்தெழவிடாது, அறியாமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கவைக்க கருத்தாதிக்கம் என்ற கனரக ஆயுதத்தை அடக்குமுறையாளர்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். இலங்கையில் மாறிமாறி அரசுப் பீடத்துக்கு வந்த ஆட்சியாளர்களும் இது விடயத்தில் இவர்களுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்.
மெய்மையைத் திரிவுபடுத்தி, பொய்மையை மெய்மையாகக் காட்டும் ஒரு தந்திரோபாயக் கலை இந்தக் கருத்துருவாக்கம். சமூக சிந்தனை உலகைத் தவறாக வழிநடத்தி, தனக்கேற்ப காய்நகர்த்தும் இந்த சூட்சுமத்தில் தென்னிலங்கை ஆட்சிப் பீடங்கள் சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்து வருகின்றன.
இவ்விடயத்தில் அதிகார ஆதிக்கம் பெற்ற அரசியல்வாதிகளுக்கும், பௌத்த சிங்களப் பேரினவாத மேலாதிக்க நலன் பற்றிய விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கும் தென்னிலங்கையின் பெரும்பாலான ஊடகங்களுக்கும் இடையில் நெருங்கிய உறவுண்டு; தொடர்புகள் உண்டு; பின்னிப் பிணைந்த நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் உண்டு. பொதுவான இலக்குகளும் நோக்கங்களும் உண்டு.
பேரினவாத மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் தீவிர வெறிகொண்டு நிற்கும் ஆட்சிப் பீடங்களுக்கு முண்டுகொடுத்து உறுதிப்படுத்துவதே தமது தலையாய கடமையும் பொறுப்பும் என்று கருதும் தென்னிலங்கை ஊடகங்கள் பலவும் அதன் காரணமாக ஆட்சியாளர்களின் அநீதிகளை அடாவடித்தனங்களை அராஜகங்களை நியாயப்படுத்துகின்றன; அல்லது மூடிமறைக்கின்றன. அடக்கப்படும் இனத்துக்கு எதிரான அநீதிகளை நீதியாகக் காட்ட விழைகின்றன. அடக்கப்படும் இனத்தின் நீதிகளை, அநீதிகளாகவும், அநியாயங்களாகவும் சமூகத்துக்குப் படைக்க முயற்சிக்கின்றன.
வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீதான கொடூர வான் தாக்குதல்களும், கிளைமோர் தாக்குதல்களும் விசித்திரமான தகவல்களோடு கொழும்பில் சித்திரிக்கப்படுவதன் பின்புலம் கூடஇதுதான்.
இந்தக் கொடூரங்களில் சிறுபான்மையினத்தவரான அப்பாவிகளுக்கு நேரும் பேரவலம் மூடி மறைக்கப்படுகின்றது; உண்மைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. இல்லாத, பொல்லாத விடயங்கள் எல்லாம், கை, கால்கள் கட்டி புனைகதைகளாக வனையப்பெற்று பறக்கவிடப்படுகின்றன.
இப்படி சிருஷ்டிக்கப்படும் பொய்மையான கருத்துருவாக்கத்தில் தென்னிலங்கை மூழ்கி, இதே கொடூரத்தை ஆட்சிப்பீடம் தொடர்வது சத்தியமான நியாயமான நீதியான செயன்முறை என்று அதற்கு அங்கீகாரம் வழங்கி, தொடர்ந்து செயற்பட ஊக்குவிக்கின்றது.
தமிழர் தேசம் மீது கொடூரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் தென்னிலங்கை ஆட்சி அதிகாரத்துக்கும், தென்னிலங்கை ஊடகங்களுக்கும் இடையிலான ஒட்டுறவின் அசிங்கமான முகம் இதுதான்.
தகவல்களைத் தந்து கருத்துக்களை விதைக்கின்றன ஊடகங்கள். பேசும் மொழியாக, எழுத்தாக, படமாக, பாடலாக, காட்சித் தோற்றமாக,போதனையாக, பிரசங்கமாக, பிரசாரமாக, செய்தியாக, தகவலாக, பொழுதுபோக்கு நிகழ்வுகளாகப் பல்வேறு வடிவங்களில் கருத்துத் திணிப்பு இடம்பெறுகின்றது.
இப்படி மனித மனங்களில் தொடர்ச்சியாக, இடையறாது, முடிவில்லாது, கொட்டப்படும் கருத்துகளின் இயல்புகள் மற்றும் அவற்றின் தன்மைகளை விழிப்புணர்வுடன் விசாரணை செய்துபார்க்க சமூகம் தவறிவிடுகின்றது. இதனால் தவறான கருத்தாதிக்கத்தின் விலங்குகளுக்குள் அந்த மனித மனங்கள் சிறைப்பட்டு விடுகின்றன.
தென்னிலங்கை ஊடகங்கள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இவ்வாறு நுட்பமாக பூடகமாக பின்னியிருக்கும் கருத்தாதிக்க வலையில் சிங்கள சமூகம் முற்றாக வீழ்ந்து சிக்கிக் கிடக்கின்றது.
அதிலிருந்து அந்தத் தவறான கருத்தாதிக்க வலையிலிருந்து தென்னிலங்கைச் சிங்கள சமூகம் வெளியே வந்தாலன்றி இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு சாத்தியமேயற்றது.
பொய்மைகளால் பின்னப்பட்ட தனது கருத்தாதிக்க வலையிலிருந்து சிங்களம் வெளியே வந்து தமிழர்களுக்கு நியாயம் செய்வதற்கு, தென்னிலங்கை ஊடகங்கள் அனுமதிக்குமா? அதற்கான சாத்தியங்கள் பெரும்பாலும் குறைவே.

நன்றி :- உதயன்

0 Comments: