இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றிய சமிக்ஞைகள் மீண்டும் குளறுபடித்தனமாகவே வருகின்றன.
""இலங்கை விவகாரத்தை இந்தியா கையாளும்போது, இலங்கைத் தமிழர்கள் பற்றிய சிரத்தை இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் விடயமாகும். அதை விலக்கி இந்தியா நடந்து கொள்ளவே முடியாது.'' என்ற சாரப்பட இந்திய நாடாளுமன்றத்தில் அறிவிக்கின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
அது வெறும் நாடாளுமன்றப் பேச்சு மட்டுமல்ல. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை இந்திய நாடாளுமன்றத்துக்கும் இந்திய தேசத்துக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறும் கொள்கை விளக்க உரையாகும்.
இலங்கை விவகாரத்தில் இலங்கைத் தமிழரின் சிரத்தை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று தனது கொள்கை விளக்கத்தை ஒருபுறம் வெளியிடும் இந்தியா, மறுபுறம் இலங்கையில் தமிழரின் இருப்பையே வாழ்வாதார அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கும் இலங்கை அரசின் தீவிர இராணுவ நெறிப்போக்குக்கு முண்டு கொடுக்கும் விதத்தில் சமிக்ஞைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது.
அதுவே இன்றைய விசித்திரமான நிலைமையாகும்.
விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னியை இதோ மீட்கிறோம் என்றும்
இந்த ஓகஸ்ட் மாதத்துக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைக் காலி செய்து விடுவோம் என்றும்
இனிமேல் அடுத்த பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்குப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கவே மாட்டார் என்றும்
வரிசையாக சூளுரைத்த கொழும்பு அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர்கள், இப்போது தமது காலக்கெடுவை சுமார் ஒன்றரை வருடத்துக்குப் பின் நகர்த்தி அடுத்த வருட இறுதிவரை அதனைத் தள்ளிப் போட்டிருக்கின்றார்கள்.
முகமாலை முன்னரங்கிலும், மன்னாரிலும், மணலாறிலும் கடந்த ஒருவருடமாக முன்நகர்வு முயற்சிகள் எதிர்பார்த்த பலனைத் தராத விரக்தியில் தடுமாறும் பாதுகாப்புத் தரப்பு வெறும் அறிக்கைப் பிரசாரத்தை மட்டும் நம்பி இனிமேலும் மணலைக் கயிறாகத் திரிக்க முடியாது என்ற யதார்த்தம் விளங்கிய பின்னணியில் மீண்டும் புதுடில்லிக்குக் காவடி தூக்கத் தொடங்கியிருப்பது துலாம்பரமாகத் தெரிகின்றது.
அதைத்தான் அவர்கள் செய்யவேண்டும். வேறு மாற்று மார்க்கமில்லாததால் என்பது புரிகிறது.
ஆனால் அவர்களின் காவடி ஆட்டத்துக்கு ஏற்றாற்போல புதுடில்லி காவடிச்சிந்து இசைப்பதுதான், இவ்விவகாரத்தில் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவரும் தரப்பான ஈழத் தமிழர்களுக்கு ஆச்சரியத்தையும், விசனத்தையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
அதுவும், இலங்கைத் தமிழர்களின் நலன் பற்றிய சிரத்தையே எமக்கு முக்கியமானது என்று தனது வெளிநாட்டுக் கொள்கை நிலைப்பாட்டை வெளியிட்டுக்கொண்டே மறுபக்கத்தில், இலங்கைக்கு ஆயுத தளபாட வசதிகளையும் உதவிகளையும் வழங்கி, அங்கு தமிழர் விரோத யுத்தத் தீவிரத்துக்கு எண்ணெய்யும் வார்க்கின்றது பாரதம்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரரும், இலங்கையில் ஜனாதிபதிக்கு அடுத்து பாதுகாப்புத் துறையில் அதி உச்ச அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவருமான கோட்டாபய ராஜபக்ஷவும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவும் இந்தியாவில் டேராப் போட்டிருக்கின்றார்கள். இலங்கை இராணுவத் தளபதிக்கு இந்தியா விசேட இராணுவ அணிவகுப்பு மரியாதை கொடுக்கின்றது. இலங்கையின் வான் பாதுகாப்பு வலுவை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதத்தில் புதிய "ராடர்' வேவுக் கருவிகளை இலங்கைக்கு வழங்குகின்றது இந்தியா.
இதுமட்டுமல்ல. இவற்றுக்கும் அப்பால் மேலும் பல ஆயுத தளபாட வசதிகளையும் இந்தியா வழங்கப்போவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்தியப் பத்திரிகைகளுக்கு அண்மையில் அளித்த பேட்டிகளில் இந்தியாவைப் புகழ்கின்றார் இலங்கை ஜனாதிபதி. அதேபோல அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவும் இந்தியாவை விதந்துரைக்கின்றார். இலங்கை இராணுவத் தளபதியும் அதேமாதிரி இந்தியாவுக்குக் குஞ்சம் கட்டுகின்றார்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இத்தகைய நிகழ்வுகள், ஒழுங்குகள், செயற்பாடுகள் மூலம் இந்தியா வெளிப்படுத்தும் அதன் இரட்டைவேட கருத்து நிலைப்பாடு ஆரோக்கியமானதல்ல.
" இலங்கையில் விடுதலைப் புலிகளின் கைகள் ஓங்குவதற்கு இந்தியா அனுமதிக்கக்கூடாது.' என்ற சாரப்பட இந்திய உயர் இராணுவ அதிகாரி ஒருவர் அண்மையில் வெளியிட்டவை எனக் கூறப்படும் கருத்துகள், இந்தியாவின் இன்றைய நிலைப்பாட்டின் உட்பக்கத்தைப் பிரதிபலிக்கும் அம்சமாகக் கொள்ளத்தக்கன.
எது, எப்படியென்றாலும், இந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமக்கு மிக நெருக்கமான நம்பிக்கைக்குரிய அயலவர்கள் யார் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தியா தொடர்ந்தும் தவறிழைத்து வருகின்றது என்றே தோன்றுகின்றது.
இராஜதந்திர அரசியலில் கௌரவத்தைப் பார்ப்பதை விட நியாயபூர்வமான நீதியை நிலைநாட்டுவதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
இலங்கை விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு நீதி செய்வதை விடுத்து, கௌரவம் பார்க்கின்றது பாரதம். அதனால்தான் அது கொழும்பை அரவணைத்து நின்று, மீண்டுமொரு வரலாற்றுக் குற்றத்தை இழைக்கின்றது.
நன்றி :- உதயன்
Wednesday, March 5, 2008
இலங்கை விவகாரத்தில் இந்தியா குளறுபடித்தனமான நிலைப்பாட்டில்
Posted by tamil at 8:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment