Thursday, March 6, 2008

இந்தியாவின் "முதலமைச்சர்கள் பேரமும்- எம்.ஜி.ஆரின் கோபமும் விளைவுகளும்": பா.நடேசன் வெளியிடும் தகவல்கள்

1980-களின் இறுதிப் பகுதிகளில் இந்திய தலைநகர் புதுடில்லியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடத்திய முதலமைச்சர்கள் பேரம், எம்.ஜி.ஆர் கொண்ட கோபம், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்பன குறித்து அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கிளிநொச்சியில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் "இரு இந்தியத் தலைவர்களும் விடுதலைப் புலிகளும்" மற்றும் "விடுதலை" ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வில் பா.நடேசன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி:

இந்த விடுதலைப் போராட்டத்தில் தனது பங்களிப்பை பாலா அண்ணா பெரிய அளவில் செய்திருக்கின்றார்.

பாலா அண்ணா தொடர்பாக நாம் நிறைய கதைத்துக் கொண்டிருக்கலாம். எதிரி, பாலா அண்ணையை எவ்வாறு இல்லாது செய்யலாம்- எவ்வாறு அவரைக் கொல்லலாம் என்று நீண்ட காலமாகவே- அவர் இந்தியாவிலிருந்த காலத்திலிருந்து இறுதிக் காலம் வரை முயற்சித்தான்.

இந்தியாவில் அவர் இருந்தபோது அவரது உயிரைப் பறிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் குண்டு வைத்தது. அவர் இறுதிக் காலத்தில் நோய் வாய்ப்பட்ட காலத்தில் கூட- அவர் வெளியில் சென்று சிகிச்சை பெறுவதற்குக் கூட சிறிலங்கா அரசு அவரை அனுமதிக்கவில்லை.

நாம் சிறிலங்காவுக்கு எதிராகப் போராடும் நிலையில் அவர்கள் எப்படி நம்மை அனுமதிப்பார்கள் என்று நீங்கள் எண்னலாம்.

உண்மையில் பல விடுதலைப் போராட்டக் களங்களில் இத்தகையதொரு மனிதாபிமானச் செயற்பாடுகள் நடைபெறுவது வழக்கமாக இருந்திருக்கின்றது.

பாலா அண்ணாவின் உயிர் பறிக்கப்பட வேண்டும் என்பதிலும் அவர் இறக்க வேண்டும் என்பதிலும் சிங்கள அரசு மிகவும் தீவிரமாக இருந்தது.

எங்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்படுகிற பல சக்திகள், பாலா அண்ணாவின் உயிரை எவ்வாறு பறிக்கலாம்- அவரை எவ்வாறு சாகடிக்கலாம் என்பதில் தீவிரமாக இருந்தார்கள்.

இவையெல்லாம் அவர் எதிர்நோக்கிய ஆபத்துகள் மட்டுமே.

அவரின் இராஜதந்திர நடவடிக்கைகள் ஏராளம். ஒரு நாள் முழுவதும் மட்டுமல்ல- நாட்கணக்கில்- மாதக் கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கும் வகையிலான நிறைய சம்பவங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

எமது தேசியத் தலைவர் அவர்கள் இந்தியாவிலிருந்து தமிழீழத்துக்கு திரும்பிய பின்னர் நாம் சென்னையில் தங்கியிருந்தோம்.

அப்போது ஒரு நாள், மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களை அழைத்து "நீங்கள் டில்லிக்கு வர வேண்டும். அங்கே டில்லி அரசு உங்களோடு கதைக்க வேண்டுமாம்" என்று கூறினார்.

நானும் பாலா அண்ணாவுடன் கூடவே அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் டில்லிக்கு நாம் சென்றிருந்தோம்.

அங்கு டில்லிக்குச் சென்று நாம் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டோம். எம்.ஜி.ஆர். அவர்கள், தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார்.

அப்போது டில்லியில் உள்ள இராஜதந்திரிகள் மற்றும் உளவுத்துறையினர் எம்மைச் சந்தித்து ஒரு அரைகுறையான தீர்வுக்கு முதலில் போகும்படியும் அதனிலிருந்து தொடர்ச்சியாகப் போகலாம் என்றும் கூறி எங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்து கொண்டிருந்தனர்.

அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைத் தனியாக அழைத்து உரையாடும் போது, வடக்கும்-கிழக்கும் இணைந்திருந்தால் 2 முதலமைச்சர்-

வடக்கு வேறு கிழக்கு வேறாக இருந்தால் 2 முதலமைச்சர் என்று இந்திய அரசு எமக்குக் கூறியதாக தெரிவித்தார்.

இந்திய அரசு இப்படிச் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களிடம் கேட்டார்.

அதற்குப் பாலா அண்ணா, எம்.ஜி.ஆரிடம் இந்தியாவின் நயவஞ்சகமான சூழ்ச்சியை மிக இலகுவாக விளங்கப்படுத்தக் கொண்டிருந்தார்.

எவ்வாறு

திருச்சியையும் சென்னையையும் பிரிக்கலாமோ

எவ்வாறு

தூத்துக்குடியையும் சேலத்தையும் பிரிக்கலாமோ

அப்படிப் பிரித்து கலெக்டர் (ஆட்சியர்) என்ற வேலையைச் செய்யச் சொல்வதுதான் அதன் அர்த்தம் என்று விளங்கப்படுத்தினார்.

அத்துடன் மட்டுமல்ல-

இந்திய மத்திய அரசு எவ்வாறு எங்களை ஒரு பொறிக்குள் வீழ்த்தப்போகிறது என்பதனையும் பாலா அண்ணா, முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரிடம் விளக்கினார்.

அப்போது பாலா அண்ணா அளவளாவிய முறையைத்தான் குறிப்பிட வேண்டும்.

எமது தேசியத் தலைவர் மீது கொண்ட பாசம்-பற்றுக் காரணமாக, "இப்படிச் செய்கிறார்களே" என்று எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் கோபம் வந்து உடனடியாகவே எங்களையும் அழைத்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார்.

மேலும் "சிறிலங்கா அரசாங்கத்துடன் போராட உங்களுக்கு என்ன தேவை?" என்று எம்.ஜி.ஆர். அவர்கள் கேட்டார்.

தேசியத் தலைவரின் அனுமதியோடு அப்போது பாலா அண்ணா, பல வேண்டுகோள்களை எம்.ஜி.ஆரிடம் முன்வைத்தார்.

அதனை உடனே எம்.ஜி.ஆர். நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல்- தமிழக சட்டசபையில் பல தீர்மானங்களையும் நிறைவேற்றினார்.

தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழத்திலிருந்து பல அரசியல் கோட்பாடுகளைக் கூறியபோது அதற்குத் தத்துவ வடிவம் கொடுத்து செயற்படுத்திய விதத்தை இதுவரை எந்த அரசியல் அறிஞரிடமும் நாம் கண்டதில்லை என்றார் அவர்.

நன்றி :-
நிருபர் குளக்கோட்டன்
சங்கதி

0 Comments: