Wednesday, March 26, 2008

தமிழர் தரப்பின் நியாயத்தை எடுத்துரைக்கும் இடதுசாரிகள்

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலம் தீர்வு காணும் எண்ணம் கொழும்பு அரசுக்கு அறவே கிடையாது என்ற உண்மை சர்வதேச ரீதியிலும் இப்போது அம்பலமாகி, சம்பந்தப்பட்ட தரப்புகளினால் நன்கு உணரப்படும் விவகாரமாகியிருக்கிறது.

போர்வெறித் தீவிரம் மூலம் தமிழர்களை மேலும்மேலும் அடக்கி, ஒடுக்கி ஆள்வதன் வாயிலாக நீதி, நியாயம் கோரும் அவர்களின் சுதந்திர உணர்வைச் சிதைப்பதே கொழும்பின் ஒரே எண்ணம் என்பதும் அப்பட்டமாகி வருகின்றது.

உலகில் உள்ள இடதுசாரி அமைப்புகள் பலவும் சேர்ந்து இம்மாத முற்பகுதியில் அம்ஸ்ரடம் நகரில் நடத்திய சர்வதேச மாநாட்டிலும் இலங்கை அரசின் இந்த நிலைப்பாடு குறித்து தீவிர கவனமும் சிரத்தையும் எடுக்கப்பட்டிருக்கிறது என வெளியாகும் தகவல்கள், இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்குடைய ஆதிக்க வெறியர்களின் திமிர்த்தனப் போக்குக் குறித்து உலகம் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டது என்பதையே காட்டுகின்றன.
சுமார் முப்பது நாடுகளைச் சேர்ந்த சர்வதேச இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையின் போக்குத் தொடர்பாக அம்ஸ்ரடம் மாநாட்டில் எடுத்த முக்கிய மூன்று தீர்மானங்கள் ஊன்றிக் கவனிக்கத்தக்கவை.

* யுத்தத் தீவிரப் போக்கை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாண கொழும்பு இணங்கும் வரை இலங்கைக்கு எந்த உதவிகளையும் வழங்கவே கூடாது என அடுத்த வாரம் கூடும் இலங்கைக்கு உதவி வழங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை வற்புறுத்திக் கோரவேண்டும்.
* யுத்தத் தீவிரத்தை இலங்கை கைவிடும்வரை உலக நாடுகள் இலங்கைக்குக் கடன் உதவிகளைக் கூட வழங்கக் கூடாது என உதவும் நாடுகளைக் கோரவேண்டும்.
* இலங்கையில் யுத்தத்தை நிறுத்தும்படி கோரி இடதுசாரி அமைப்புகள் சர்வதேச, தேசிய ரீதியில் போராட்டங்களை நடத்த வேண்டும். தத்தமது நாடுகளிலும் இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்களை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த சர்வதேச மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், இலங்கை விவகாரத்தில் கொழும்பின் கொடூரப்போக்கு உலகளாவிய ரீதியில் அம்பலமாகி வருவதை எடுத்துக் காட்டியிருக்கின்றன.

இன மத, மொழி வேறுபாடின்றி அரசியல் பக்கச்சார்பை முக்கியப்படுத்தாமல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக மனவுறுதியோடு குரல் எழுப்பி வரும் இடதுசாரிகள் தென்னிலங்கையில் இன்னும் இன்றும் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில மூத்த அரசியல் பிரமுகர்களும் ஓரிரு அரசியல் கட்டமைப்புகளுமாக சில தரப்புகள் இங்கு இருக்கவே செய்கின்றன.

அவற்றில் முன்னிலை வகிக்கும் இடதுசாரி முன்னணியே, மேற்படி சர்வதேச மாநாட்டில் ஈழத் தமிழர்களின் அவலத்தை அம்பலப்படுத்தி, உண்மையை உலகுக்கு உணரவைக்கும் உறைப்பாக உரைக்கும் உன்னதப் பணியை முன்னெடுத்திருக்கின்றது.
ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாஷையாக விளங்கும் தமிழர் தேசியம், தமிழர் தாயகம், அவர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து அவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு உலகம் முழுவதும் உள்ள இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள், முற்போக்கு ஊடங்கங்கள் ஆகிய தரப்புகள் ஆதரவு வழங்கவேண்டும் என இடதுசாரி முன்னணி கோரியிருக்கின்றமையும் முக்கிய விடயமாகும்.

ஈழத் தமிழ் மக்கள் தங்கள் தாயக பூமியில் வரலாற்று ரீதியாக அவர்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில் அந்நிய சக்திகளின் ஆதிக்கம், தலையீடு இன்றி சுதந்திரமாக, கௌரவமாக வாழவிரும்புகின்றார்கள். இந்த இலங்கைத் தீவைத் தாயகமாகக் கொண்ட பிற தேசிய இனங்களோடு சமத்துவமாகவும், சம உறவோடும் வாழும் அதேசமயம், தமது பண்பாட்டைப் பேணி, தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது இன அடையாளத்தையும், தனித்துவத்தையும் பாதுகாத்து, தமது தாயக மண்ணில் தம்மை தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு சீவிக்க விரும்புகிறார்கள்.
வேறு இனத்தவர்களை அடக்குவதையோ அல்லது பிற இனத்தவர்களால் அடக்கி ஆளப்படுவதையோ அவர்கள் விரும்பவில்லை.

இந்த உண்மையை சர்வதேச சமூகத்துக்கு உணர்த்துவதன் மூலம் தமிழர்கள் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துரைப்பது ஒரு முக்கிய பணியாகும்.

அக்கடமையை நடுநிலை நோக்கோடு முன்னெடுக்கும் இடதுசாரித் தரப்புகள், இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான தமிழர்களால் மதித்துப் பாராட்டப்படுவார்கள்
நன்றி:- உதயன்

0 Comments: