Sunday, March 16, 2008

அணுசக்தி ஒப்பந்தம் ஐ.நா.கண்காணிப்பகம் புலிகளின் அறிக்கை - இதயச்சந்திரன்

கடந்த 6 ஆம் திகதி வியாழனன்று மாமனிதர் கிட்டினன் சிவநேசன் கொல்லப்பட்ட துயரச் செய்தி தாயக புலம்பெயர் தமிழர் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது.

ஈழத் தமிழர் மீது அன்பு பாராட்டும் இந்திய அரசியல்வாதிகள் காதையும் கண்ணையும் வாயையும் மூடிய மூன்று குரங்குச் சிலைகள் போல் உள்ளார்கள்.

ஈழத் தமிழர்களின் எதிரியாகத் தம்மை பகிரங்கமாகவே அடையாளப்படுத்தும் இந்தியாவின் அவசரப் போக்கு எதிர்காலத்தில் மோசமான முரண் நிலைத் தளங்களையே உருவாக்கப்போகிறது.

அண்மையில் படைத் துறைச் சுற்றுலா சென்ற தளபதி சரத் பொன்சேகாவிற்கு தமது இõரணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை பார்வையிட அனுமதித்தது இந்தியா.

இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் தமது இந்திய நிலைப்பாடு குறித்து வெளியிட்ட அறிக்கை சர்வதேச மட்டத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.

கடந்த மாவீரர் தின உரையைப் புரிந்தும் புரியாததுபோல் மௌனம் சாதித்தவர்களின் சிந்தனைத் தளத்தினை அதிர வைத்துள்ளது இவ்வறிக்கை.

அரசாங்கத்தின் ஒரு தலைப்பட்ச ஒப்பந்தக் கிழிப்பிற்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் விடுத்த பதிலுரைப்பின் மீள் பதிப்பும் இவ்வறிக்கையில் இணைந்திருந்தது.

வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படாவிட்டால் சுயநலன் அடிப்டையில் எழும் புதிய தவறான அணுகுமுறைகள், நிரந்தர உறவிற்குள் நிச்சயம் சிதைவினை ஏற்படுத்தும்.

இதனைப் புரிந்து கொள்ளக்கூடிய சர்வதேச அரசியல் முதிர்ச்சியும், விரிந்த பார்வையும் இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

தமது பிராந்திய ஆதிக்க நலனில் மேற்குலகும் சீனாவும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள் என்பதற்காக தமிழ் மக்களின் நியாயபூர்வமான போராட்டத்தை துருப்புச் சீட்டாக கையாள்வது மோசமான பின்விளைவுகளையே இந்தியாவிற்கு ஏற்படுத்தும்.

திரும்பத் திரும்பத் தெரிந்தே இழைக்கப் படும் தவறுகள், அதைச் செய்பவர்களின் நலன் பாதிப்படையும் போது புரியப்படும்.

தமிழ்நாடு பிரியலாமென்கிற அச்சமும் சுப்ரமணிய சுவாமி எழுதிய மர்ம நாவலும் ஈழப் போராட்டத்தை நிராகரிக்க இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர் கூறும் நியாயப்படுத்தல்களாக இருக்கின்றன.

ஆனாலும் ஜனாதிபதி மஹிந்த கடைப்பிடிக்கும் இந்தியாவிற்கு புரியாத அரசியல் சூத்திரமொன்று உண்டு.

புலி அழிப்புப் போரிற்கான சகல உதவிகளையும் இந்தியாவிடமிருந்து பெறும் அதேவேளை இந்தியாவிற்கு விசுவாசமான தமிழ் குழுக்களுக்கு அரசியல் அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளை அவர் மிகத் தந்திரமாக தவிர்த்து வருகிறார்.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப். வரதர் அணி, ஈழவர் ஜனநாயக முன்னணி போன்ற இந்திய விசுவாசத் தமிழ் குழுக்களை ஓரங்கட்டியவாறு, அமைத்த தேர்தலில் கூட்டணி நிகழ்விலிருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.

அதாவது, சிங்களத்தின் ஆட்சியதிகார மையத்தில் இந்தியாவின் நேரடித் தலையீடுகள் உருவாகக் கூடாதென்பதில் மிகத் தெளிவாகவும் அவதானத்துடன் ஜனாதிபதி மஹிந்த செயற்படுகிறார்.

இந்தியாவிற்கு ஆதரவான தனக்கு விசுவாசமான குழுக்களையும் தனக்கு ஆதரவான இந்திய விசுவாசக் குழுக்களையும் வெவ்வேறு அரசியல் தளங்களில் நிறுத்தும், பிரித்தாளும் முறைகூட இந்தியாவிடமிருந்து ஜனாதிபதி மஹிந்த கற்றுக் கொண்ட விடயந்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை பலமான அரசியல் செல்வாக்குப் பெற்ற ஆதரவு அணியொன்று தமிழ் மக்கள் மத்தியில் கிடையாதென்பதே உண்மையாகும்.

நாடாளுமன்றத்தில் ஆசனங்கள் இல்லாத கூட்டணிகளையும் குழுக்களையும் தமக்கு ஆதரவான சக்திகளென்று கூறினால் செவிமடுக்கும் சர்வதேசம் தலையைச் சொறியலாம்.

ஜனநாயகம் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்தியா, தனது நலனிற்காக சில ஜனநாயக மறுப்புக்களையும் அரவணைத்துச் செல்கிறதென்பதை சர்வதேசம் உணர்ந்து கொள்ளும்.

இந்திய நகர்வுகள் யாவும் தமிழின வெறுப்பினையோ அல்லது சிங்களத்தின் மீதான மாறாக் காதலையோ, அடிப்படையாகக் கொண்டதல்லதென்பதை ஜனாதிபதி மஹிந்தவும் புரிந்து கொள்வார்.

ஆயினும் நாட்டை அடகு வைத்தாவது, தமிழர் போராட்டத்தை அழித்திட வேண்டுமென்கிற பேரினவாதத்தின் வன்ம உளவியல், பிராந்திய துருப்புச்சீட்டான திருமலைத் துறை முகத்தை இந்தியாவிற்கு தாரை வார்ப்பது போல் பாவனை காட்டுகிறது.

மேற்குலகைப் பொறுத்தவரை அது ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகக் கனவிலும் இந்தியாவுடன் ஏற்படுத்த அவசரப்படும் அணுசக்தி ஒப்பந்தத்திலும் தனது இந்து சமுத்திரப் பிராந்திய நலன் பாதுகாக்கப்படலாமெனக் கற்பிதம் கொள்கிறது.

ஆகவே, மஹிந்தவின் வன்னிச் சமர், மேற்குலகின் மனித உரிமைக் கண்காணிப்பகம், இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் என்கிற மூன்று விடயங்களும் இன்றைய கால கட்டத்தில் மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விவகாரங்களாகத் தென்படுகின்றன.

நேபாளம், இலங்கை குறித்த இந்தியாவின் பிராந்திய நலனோடு அமெரிக்கா உடன்பாடு கொள்வதையும் அணுசக்தி ஒப்பந்தத்தோடு இந்த நலன்கள் இணைத்துப் பார்க்கப்படுவதையும் நிக்கலஸ் பேர்ன்ஸ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இந்தியா இணங்காவிட்டால் அதன் அயல் நாடுகள் குறித்த பொது இணக்கப்பாடுகள் மாறுதல் அடையலாமென்பதே இங்கு புலப்படும் எதிர்நிலைச் செய்தியாகும்.

இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம் உருவானால் ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் அமைக்கும் விடயத்தை அமெரிக்கா கைவிடலாம் அல்லது ஒத்திபோடலாம். அதேவேளை புஷ்ஷின் ஆட்சிக்காலம் நவம்பரில் முடிவடையும் முன்பாக, அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களின் விருப்பமாகும்.

ஆகவே, அணு சக்தி ஒப்பந்தமானது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய பாத்திரத்தை வகிக்கும் அதேவேளை ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவிட மேற்குலகம் மேற்கொள்ளும் நகர்வுகளையும் அவதானித்தல் வேண்டும்.

நடைபெறும் 7 ஆவது ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங் கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த கண்டனங்கள், பல திசைகளிலும் இருந்து குவிகின்றன.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமைச் சங்க பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் யாவும் வதிவிடப் பிதிநிதித்துவமுள்ள ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கை யில் அமைக்கும் கருத்தினை வலியுறுத்துகின்றன.

பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீனக் குழுவின் விலகலும் ஐ.நா. கண்காணிப்பக நிலைப்பாட்டை மேலும் இறுக்கமடையச் செய்துள்ளது.மனித உரிமைக் கூட்டத் தொடரின் இறுதி அறிக்கை வெளியிடப்படும் 28 ஆம் திகதியன்று கண்காணிப்பகம் நிறுவப்பட வேண்டுமென்கிற தீர்மானம் ஜெனீவாவில் மேற்கொள்ளப்படும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே உள்ளது.

வன்னிச் சமரில் இராணுவத்திற்குச் சார்பாக வெண்ணெய் திரண்டு வருவதாக கற்பிதம் கொள்ளும் இந்தியா, கண்காணிப்பகச் சம்மட்டியால் தாழியை உடைக்கும் ஐ.நா. வின் தீர்மானத்தை நிச்சயம் தடுக்க முயற்சிக்கும்.

ஆயினும் தாழியை புலிகள் உடைத்தால் அரசியல் கள நிலைமைகள் வேறு திசையில் நகர ஆரம்பிக்கலாம்.

அதற்கு முன்பாக இராணுவ முன்னெடுப்பிலும் உளவியல் சமரிலும் தீவிரப் போக்கைக் காட்டும் அரசாங்கத்தின் நகர்வுகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய தேவையினை வன்னிச் சமர் ஏற்படுத்துகிறது. அண்மைக் காலமாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவரின் இருப்புக் குறித்து இலங்கை அரசாங்கமும், இந்திய ஊடகத்தார் சிலரும் இணைந்து வெளியிடும் பரப்புரைகள் அதிகரிக்கின்றன.

2004 டிசம்பர் ஆழிப் பேரலையில் அவர் இறந்துவிட்டாரெனத் தமது சுயதிருப்திப் பரப்புரைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.

சிறிது காலத்தின் பின்னர் நிகழ்ச்சியொன்றில் புலிகளின் தலைவர் தோன்றியவுடன் அவரின் காது, மூக்கின் நீள அகலம் பற்றிய சூடான விவாதத்தைக் கிளப்பி அவர் அவரில்லையென்கிற பாணியில் மறுப்புரைகள் வெளியிடப்பட்டன. சரியான தருணம் வரும்வரை, இந்த ஆள் மாறாட்டப் பிரசாரத்தை இப் பேரினவாதிகள் ஒத்தி வைத்தார்கள்.

தமிழ்ச்செல்வனின் படுகொலையோடு மறுபடியும் தலைவர் புராணம் பாடத் தொடங்கியது சிங்கள தேசம்.

புலிகளின் தலைவருக்கு நீரிழிவு நோய் முற்றி விட்டதாகவும் அண்மைய விமானத் தாக்குதலில் கால் ஒன்றை அவர் இழந்துவிட்டதாகவும் புதிய புனை கதைகளை "கோயபல்ஸ்' பாணியில் வெளியிடத் தொடங்கினர்.

சிவநேசனின் இறுதி மரியாதை நிகழ்வில் தலைவரின் கால்களைத் தரிசித்த சிங்களம் தனது உளவியல் சமருக்கு ஓய்வு கொடுத்ததுள் ளனர்.

ஆனாலும் ஒரு மனிதனின் காலை வைத்து அரசியல் நடத்தும் இந்நிலையை சிங்கள தேசம் அடைந்துள்ளதென்பதே பெரும் சோகமாகும்.

அதை முழுமையாக நம்பி கருத்துக் கணிப்பு வெளியிடும் ஊடக அபத்தங்களும் அடுத்த தலைவர் எவரென்று ஆராயும் இந்தியக் கனவான்களின் கனவுகளும் விரைவாகக் கரைந்து போவதை மக்கள் அறிவார்கள்.

தமிழின அழிப்புப் பாதையில் பயணிக்கும் பேரினவாதம் படிப்படியாக தமது இனத்தின் சமூக விழுமியங்களையும் மானுட நேசிப்பினையும் வேர் அறுத்தவாறு தன்னை கட்டமைத்துக் கொள்கிறது.

பிறிதொரு இனத்தின் அழிவு தரும் கட்டற்ற மகிழ்ச்சியை மூலதனமாக்கும் அரசியல் உதிரும்போது தட்டையான தளத்தில் எதுவுமே இருக்காது.

வன்னிச் சமர்க் களத்தில் சுற்றிச் சுழலும் சிங்களத்திற்கு ஐ.நா. கண்காணிப்பகத் தாற்பரியம் புரியும்.

ஆனாலும், அணுசக்தி ஒப்பந்த விவகாரம் ஏற்படுத்தப் போகும் எதிர்விளைவுகளை ஊகித்தறியும் ஆளுமை கிடையாது போலும். இந்தியா குறித்து அறிக்கை வெளியிட்ட விடுதலைப் புலித் தலைமை, இச்சிக்கல்களின் நுண்ணரசியலை புரிந்துள்ளார்களென்பதே சரியான கணிப்பாகும்.

[நன்றி வீரகேசரி]

0 Comments: