Saturday, March 1, 2008

தீர்வுக்கு இணங்கி வராத தென்னிலங்கை தீர்வு மறுப்பில் மட்டும் இணைந்து வரும்

இலங்கையின் சகல சமூகங்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய நீதியான தீர்வொன்று குறித்துப் புதிதாகச் சிந்திக்கும்படி இலங்கையின் பெரும்பான்மைச் சமூகத்தவரைப் பார்த்துக் கோரியிருக்கின்றது பிரிட்டன்.
இதேசமயம், இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான வழி வகைகளை ஆராய்வது என்ற நோக்கத்தின் பெயரில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசும் நிகழ்வும் இடம்பெற்றிருக்கின்றது.
பிரிட்டன் கோருகின்றமை போல இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு குறித்துப் புதிதாகச் சிந்திப்பதை நோக்கமாகக் கொண்டதுதான் இந்தச் சந்திப்பா என்பது தெரியவில்லை.
ஆனால் இந்தச் சந்திப்பின் உள்நோக்கம் வேறு இலக்குக் கொண்டது என இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கூறியிருக்கின்றார்.
""தமிழ் மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கி, கணிசமான அதிகாரங்களைப் பகிரும் நீதியான தீர்வு ஒன்றைக் காணும் நோக்கத்துக்காக அவர்கள் இணையவில்லை. மாறாக, தமிழர்களுக்குத் தற்போது இருக்கக்கூடிய கொஞ்ச, நஞ்ச அதிகாரங்களையும் பறித்து, தமிழ்த் தேசியத்தை ஒடுக்கி, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை அடக்கும் கைங்கரியத்துக்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ரணிலும் ஜனாதிபதி மஹிந்தவும் கைகோத்திருக்கின்றார்கள்.'' என்று குற்றம் சுமத்துகின்றார் இடதுசாரி முன்னணித் தலைவர்.
தமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு அங்கீகாரம் வழங்கும்படி முதல் தடவையாக ஐ.நா. செயலாளர் நாயகத்தைப் பார்த்து விடுதலைப் புலிகள் எழுத்துமூலம் கோரியிருக்கின்றார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டம் இத்தகைய தீர்க்கமான ஒரு கட்டத்தை அடைந்திருக்கின்றது.
இந்தச் சூழ்நிலையிலேயே தமிழரின் தேசியப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கும் கங்கணத்தோடு கொழும்பு அரசின் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்திக்கின்றனர். அரசியல் ரீதியான தமது பகையுறவையும், விரோதப் போக்கையும் துறந்து கூடிக்குலாவிப் பேசுகின்றனர். இது, இறுக்கமும், தீவிரமும் அடைந்து வரும் தமிழரின் தேசிய எழுச்சிப் போராட்டத்தை எப்படியும் துவம்சம் செய்து அழித்துவிட வேண்டும் என்ற இந்த இரு தலைவர்களினதும், அவர்கள் சார்ந்த கட்சிகளினதும் பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கான பொது இணக்கப்பாட்டில் உருவான சந்திப்பு என அடையாளப்படுத்துகின்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
தமிழரின் தேசிய இனப்பிரச்சினையை நேரிய நீதியான நியாயமான வழிமுறைகளில் தீர்த்து வைப்பதற்கு தென்னிலங்கைச் சிங்களத்தின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி. ஆகியவற்றிடம், தெளிவானதும், உருப்படியானதும், ஆழமான தரிசனத்துடன் நெறிக்கப்பட்டதுமான ஒரு திட்டமோ யோசனையோ என்றும் இருக்கவில்லை.
தமிழர்களுடைய அபிலாஷைகளாக தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம், தமிழர் சுயநிர்ணயம் என்ற அடிப்படைகளைத் திம்புக் கோட்பாடுகளாகத் தமிழர் தேசம் ஏற்கனவே பிரகடனம் செய்துள்ளது. எந்தவொரு சிங்களக் கட்சியும், சிங்கள அரசியல் உலகமும் இந்த அடிப்படைகளை இந்த மூலக் கோட்பாடுகளை நியாயமான முறையில், புறநிலை நோக்குடன் ஆழமாக அலசிப் பார்க்கவோ, ஆராயவோ முன்வரவில்லை.
ஈழத் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வை வழங்குவதில் சிங்கள அரசியல் உலகில் ஒத்திசைவும், ஒருமைப்பாடும், இணக்கமும், பற்றுறுதியும் என்றும் இருந்தமை கிடையாது என்பது தெட்டத்தெளிவு.
அதேசமயம், புறநிலையாக தமிழர்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வை வழங்கிவிடக் கூடாது என்பதில் குருட்டாம்போக்கிலான ஐக்கியமும், ஒத்திசைவும், கருத்தொற்றுமையும் சிங்களத்தின் மன மூளையத்தில் ஆழமாக வேரோடிப் பதிந்து கிடக்கின்றது என்பதும் வெள்ளிடைமலை.
அதன் பிரதிபலிப்பே மஹிந்த ரணில் சந்திப்பு என்று நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன.
அதாவது, மஹிந்த ரணில் சந்திப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதை நோக்காகக் கொண்டதல்ல. உரிமைக்கான தமிழர்களின் போராட்டம் தென்னிலங்கை அரசின் அடக்குமுறை எத்தனங்களின் எல்லையை மீறித் தனது இலக்கு நோக்கி நகர்ந்துவிடக்கூடிய ஆபத்தைத் தவிர்க்கச் செய்வது எப்படி என்ற ஆதங்கத்தின் விளைவாக இடம்பெற்றது என்பதே அர்த்தம்.
அதேசமயம், உலகமயமாதலில் அதீத ஈடுபாடு காட்டும் முதலாளித்துவக் கொள்கைகளை முன்னெடுக்கும் வல்லாதிக்க நாடுகளின் தேவைக்காகவும், அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவுமே மஹிந்த ரணில் சந்திப்பு இடம் பெற்றதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன சுட்டிக்காட்டுகின்றமையும் கவனிக்கத்தக்க அம்சமாகும்.
மாறிவரும் உலக ஒழுங்குப் போக்கில், பேரதிகாரங்களைக் கொண்டுள்ள வல்லாதிக்க சக்திகளின் அரூபக் கரங்கள், பின்தங்கிய அல்லது மூன்றாம் மண்டல நாடுகளில் மேற்கொள்ளக்கூடிய இரகசிய நகர்வுகளும் அருட்டுதல்களும் இலகுவில் ஊகித்து உய்த்தறிந்து இனங்காண கூடியவை அல்லவே. .........!
நன்றி :- உதயன்

0 Comments: