Tuesday, April 29, 2008

அடக்குமுறைக்கு எதிராக மாறிவரும் உலகப் போக்கு

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் க. விக்னேஸ்வரன் கடந்த சனியன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப் பேருரையில் இலங்கை இனப் பிரச்சினை குறித்துக் கூறிய கருத்துகள் முக்கியமானவை.

இலங்கை இனப்பிணக்கு விவகாரத்தில் இலங்கை அரசு, நோய்க்கு வைத்தியம் செய்வதை விடுத்து நோயின் அடையாளங்களுக்கு குணங்குறிக்கு மருத்துவம் செய்கின்றது. இதை விடுத்து நோயின் மூலத்தைக் கண்டறிந்து, அதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும் என இப்பத்தியில் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றோம். அதை மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டியிருக்கின்றார் விக்னேஸ்வரன்.

தமிழர்களின் போராட்டம் என்ற நோயை அடக்குவதற்கு அரசியல் தீர்வே தேவை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தான் முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழர்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர், அவர்கள் மீது எத்தகைய திட்டத்தையும் தீர்வாகத் திணித்து அவர்களை அதற்கு இணங்க வைக்கலாம் என்று அரசு கருதுகின்றது. அது தவறு என்ற சாரப்பட விக்னேஸ்வரன் கருத்துக் கூறியிருக்கின்றார்.
2002 டிசம்பரில் ஒஸ்லோவில் அப்போதைய இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுகளின்போது "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் இலங்கை இனப்பிரச்சினைக்கு இணக்கமான தீர்வுத்திட்டம் ஒன்றைக் காண்பது குறித்து ஆராய்வதற்கு இரு தரப்பும் உடன்படுகின்றன' என்ற தீர்மானம் எட்டப்பட்டது. அந்த அமைதிப் பேச்சின் பின்னர் வெளியான அறிக்கையில் இது குறித்து விவரிக்கப்பட்டது.
அதன் பின்னர், இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறைத் தீர்வு காண்பது குறித்து அதிகம் கூறப்பட்டு வந்தது. ஆனால் அமைதி முயற்சிகளில் ஈடுபட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசு கலைக்கப்பட்டு பொதுமக்கள் ஐக்கிய முன்னணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் சமஷ்டித் தீர்வு முயற்சி பற்றிய பேச்சுகள் மெல்ல மெல்ல அடங்கின.
இப்போது போர்வெறித் தீவிரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சிக் கட்டமைப்பு பதவிக்கு வந்த பின்னர் கடந்த சுமார் இரண்டரை ஆண்டு காலத்தில் சமஷ்டித் தீர்வு பற்றிய எண்ணக்கருவே கிடப்பில் போட்டு மூடப்பட்டு விட்டது. அதற்கான வாய்ப்புகள் அடியோடு நிராகரிக்கப்பட்டு விட்டன.

சமஷ்டி முறைத் தீர்வு முயற்சியை முற்றாக ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்ட அரசு,போரினால் தமிழ் மக்களை முழுமையாக வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் எனக் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றது என்பதை சுட்டிக்காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
தமிழ் மக்களையும் அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பும் போராட்ட சக்தியான விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் வேறுபடுத்திக் காட்ட அரசு முயல்கின்றது. புலிகள் மட்டுமே வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களை அழித்து ஒழித்தால் அரசு முன்வைக்கும் எந்தத் தீர்வையும் தமிழ் மக்கள் தாராளமாக ஏற்றுக்கொள்வர் என்ற எண்ணத்தில் கருத்தில் அரசு செயற்படுகின்றது என்ற நிலைவரத்தை வெளிப்படையாக எடுத்துக் காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் தனது எத்தனத்தில் இலங்கை அரசு புரியும் மற்றொரு கபடத்தனத்தையும் அவர் அம்பலப்படுத்துகின்றார்.
புலிகளின் போராட்டத்துக்கு பயங்கரவாத முத்திரை குத்துகின்றது அரசு. அங்குதான் சூட்சுமம் உள்ளது.

வன்முறையில் புலிகள் ஈடுபட்டால் அது பயங்கரவாதம். அரசின் அட்டூழியங்களுக்கு எதிராக எவரேனும் கிளர்ந்து எழுந்தால் அது பயங்கரவாதம்.
ஆனால் அதை அடக்கும் பெயரால் அரசு வன்முறைகளை முன்னெடுத்தால் அது நாட்டைக் காக்கும் உன்னதப் பணி.

இதுதான் அரசின் கணிப்பீடும்,பரப்புரையும் என்று வெளிப்படுத்துகின்றார் விக்னேஸ்வரன்.
இவ்வாறு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி அதை அடக்கி ஒடுக்க முற்படுவது பலன் தராது, தீர்வை வழங்கவே வழங்காது.

உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான தமிழ் இளைஞர்களின் எழுச்சியையும், கிளர்ச்சியையும், போராட்ட வீறையும் அடக்குவது நோயின் அடையாளங்களை அடக்க முனைவது போன்றது. நோயை போராட்ட நோயை அடக்க வேண்டுமானால் தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்யும் அரசியல் தீர்வே அவசியமானது என்பதையும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகின்றார் விக்னேஸ்வரன்.
நோயின் மூலத்தை அடக்காமல் நோயின் அடையாளங்களை அல்லது குணங்குறிகளை அடக்க முயன்றால் நோயின் வெளிப்பாடு வேறு குணங்குறியாகத் தோற்றும் என்பதையும் கூட அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

விடிவை நோக்கிப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் அயராத முயற்சி, அந்த மக்கள் கூட்டத்தினருடன் அடங்கிவிடும் விவகாரம் அல்ல. இன்று உலகமே அதில் தலையிடும் சாத்தியம் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அடக்கப்பட்ட மக்களுக்காக உலகமே ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் எழுப்பும் சூழ்நிலை இன்று உருவாகி வருகையில் ஈழத் தமிழ் மக்களும் அவர்களது உரிமைக்கான போராட்டமும் உலகின் எங்கோ ஒரு மூலையில் தனித்து விடப்படவில்லை என்பதையும் ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரன் எடுத்துக் காட்டுகின்றார்.

விடிவை நோக்கித் தமிழர்கள் மட்டுமே போராடுகின்றார்கள் என்பது அல்ல. உலகமே அந்த விடிவை நோக்கிய யாத்திரையிலேயே முனைப்பாக ஈடுபட்டுள்ளது. அதனால்தான் "பாதுகாப்பிற்கான உரித்து' (the right to protect) என்ற எண்ணக்கரு உலகில் மேலோங்கி வருகின்றது. இந்தக் கொள்கைப் போக்கின்படி ஒரு நாட்டில் இடம்பெறும் அட்டூழியங்களை இன்னொரு நாடு பார்த்துக்கொண்டு வாளாதிருக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தட்டிக் கேட்கும் உரித்து உண்டு என்கிறது இந்த எண்ணக்கரு. தட்டிக்கேட்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகள் சேர்ந்து பாதுகாக்கும் பிரயத்தனங்களில் ஈடுபட வேண்டும்'' என்றும் வலியுறுத்தப்படுகின்றது.

""உலகின் கண்ணோட்டம் இன்று மாறியிருக்கின்றது. அட்டூழியங்களுக்கும், இம்சைக்கும் ஆளான மனித சமூகம் அல்லது மக்கள் கூட்டம் இன்று தனித்து விடப்படவில்லை. உலகமே அதற்காகக் குரல் எழுப்பும் நிலைமை வந்துவிட்டது.'' என்பதை முன்னாள் நீதியரசர் விளக்கியுள்ளார்.

""கொடூரமான தொடர் மனித உரிமை மீறல்களில் இருந்து ஒவ்வொரு நாடும் அதன் மக்களைப் பாதுகாப்பது அதன் தலையாய கடமை. நாடுகளால் தமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாவிட்டால் ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் வேறு சர்வதேச ஆவணங்களின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் சட்டபூர்வமாக இடையில் புகுந்து தலையிட வேண்டும். இவ்வாறு இடைபுகுவதைத் தேவையற்ற குறுக்கீடாகவோ அல்லது நாடுகளின் இறைமையைக் கட்டுப்படுத்துவதாகவோ அர்த்தப்படுத்த முடியாது.'' என்று பரிசுத்த பாப்பரசர் கூறியிருப்பதையும் அவர் ஆதாரம் காட்டியிருக்கின்றார்.
தமிழரை அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தி ஆளக் கங்கணம் கட்டி நிற்கும் தென்னிலங்கைக்கு உலகின் மாறி வரும் சிந்தனைப் போக்கு கண்ணோட்டம் புரிந்தால் சரி.

நன்றி - உதயன்

0 Comments: