Friday, May 2, 2008

மறுபடியும் கச்சதீவு

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் கச்சதீவுக்குக் கைகால்கள் முளைத்து விடும். இந்தப் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வரக் கூடாது என்று இலங்கை கடற்படை எச்சரிக்கை செய்துள்ளது. இதுபோதாது என்று இலங்கை மீனவர்களும் எச்சரிக்கை செய்யும் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
கச்சதீவைச் சுற்றிய கடற்பகுதிகளே மீன்வளம் மிகுந்த பகுதியாக இருப்பதால் தங்கள் தொழில் உரிமையை இழக்க இவர்கள் தயாராக இல்லை; ஆண்டாண்டு காலமாக பல தலைமுறைகளாக இருந்து வரும் உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பது இங்குள்ள மீனவர் சங்கங்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்த மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான கடலோர மீனவர்களின் கதி என்ன? தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததே இத்தனை துயரங்களுக்கும் காரணம் என்னும் மறுபரிசீலனை மறுபடியும் விவாதத்துக்கு வந்துள்ளது.

இந்திய பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர்: தமிழக அரசியல் கட்சிகளும் இப்பிரச்சினை பற்றிய கோரிக்கைகளை எழுப்பத் தொடங்கியுள்ளன.

கி.பி.1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும், அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன. இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

இந்தத் தீவுகளில் ஒன்றுதான் கச்சதீவு என்பது, இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது.

இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும், வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3.75 சதுர மைல், அவ்வளவுதான்.

இந்தத் தீவுகள் எல்லாம் இந்தியாவுக்கும், இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன.

1947 இல் நாடு விடுதலையடைந்ததும் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது.

சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக்குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் சோலைவனமாகவும் இருந்தது.

இராமநாதபுரம் மக்கள் `உமிரி' என்ற செடிவகையைத் தீராத நோய்களுக்குச் சிறந்த மருந்தாக நம்பினர். அத்துடன் `சாய வேர்' போன்ற வேர் வகைகளும் பயன்பட்டன.

இந்தத் தீவுக்குச் சென்று இந்த மூலிகைகளைக் கொண்டு வருவதையே தொழிலாகச் சோழமண்டல மரக்காயர்கள் கொண்டிருந்தனர்.

இங்கே முத்துக்குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெற வேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி, 1822 இல் ஓர் ஒப்பந்தம் மூலம் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சதீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சதீவு.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, கச்சதீவு குறிக்கப்படவில்லை. இராமநாதபுரம் அரசரைப் பற்றிய குறிப்பில் கச்சதீவு அவருக்கு உரியதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.ஈ.பியரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களில் இத்தீவைப் பற்றிய விவரம் ஏதுமில்லை. டச்சுக்காரர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களின் ஆட்சி எல்லைக்குள் கச்சதீவு இடம்பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆட்சி ஆவணங்களிலோ, குறிப்பேடுகளிலோ `கச்சதீவு' குறிப்பிடப்படவில்லை.

17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை வந்த வரலாற்று ஆய்வாளர் பர்னோஃப். அந்நாட்டின் தேசப்படம் ஒன்றை உருவாக்கினார்.

இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம், ராஜாவளி, ராஜரத்னாசரியை இவற்றின் துணையோடு அவர் உருவாக்கிய தேசப்படத்தில் `நெடுந் தீவு' வரைதான் இலங்கையாக காட்டப்படுகிறது. நெடுந் தீவுக்கு அப்பாலுள்ள கச்சதீவு காட்டப்படவில்லை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அரேபியர்களும், ஐரோப்பியர்களும் வணிகம் செய்ய இலங்கைக்கு வந்தபடி இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த தாலமி, பிளினி ஆகியோர் இலங்கையின் கடற்பகுதி மற்றும் உட்பகுதிகளைத் தேசப்படங்களாக வரைந்தனர். அவர்கள் வரைந்த இலங்கை தேசப்படத்தில் கச்சதீவு குறிப்பிடப்படவில்லை.

இராமநாதபுரம் மன்னருக்கு உரிமையுடைய கச்சதீவு, ஆங்கில இந்திய அரசோடு இராமநாதபுரம் சமஸ்தானம் இணைந்தபோது இந்தியாவோடு சேர்ந்துவிட்டது. இந்தச் செய்தியே அப்போதைய மத்திய அரசுக்குத் தெரியவில்லையா?

1974 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி - சிறிமாவோ பண்டார நாயக ஒப்பந்தத்தின்படி கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டது.

அதன் பின்னர் இருநாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன் பிடிக்கும் உரிமை பற்றி கடிதப் போக்குவரத்து நடந்தது. இந்தக் கடிதங்களே 1976 ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முதல் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்பட்டன.

இலங்கையின் இனக்கலவரம் உள்நாட்டுப் போராக உருவெடுத்ததும், இந்திய - இலங்கை கடல்வழிப் பாதை முக்கியத்துவம் பெற்றது.

இலங்கை தமிழ் அகதிகள் வருகை, போராளிகளுக்கு ஆயுத உதவி எனக் காரணம் காட்டி இலங்கை கடற்படை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுபவை தமிழக மீனவர்களின் தொழிலும், வாழ்வும்.

`தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்' என்ற முழக்கத்தை அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.அரசு முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு சுதந்திர நாளை முன்னிட்டு கோட்டையில் கொடியேற்றிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா `கச்சதீவை மீட்போம்' என்று சூளுரைத்தார்.

1991 அக்டோபர் 4 அன்று சட்டப்பேரவையில் கச்சதீவை இலங்கை அரசிடம் இருந்து மீட்க கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரையிலும் அறிவிக்கப்பட்டது.

இப்போது தமிழக முதல்வர், பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். சர்வதேசக் கடல் எல்லையைக் கடந்து செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வருகிறது.

எனினும் கச்சதீவுக்கு அருகில் ஏராளமான மீன்கள் கிடைக்கின்றன என்பதால் செல்கிறார்கள். கச்சதீவு நீண்ட காலத்துக்கு முன் தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடி பகுதியாக இருந்து வந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றுக் காலம் தொட்டு தமிழக மீனவர்களின் தாய் வீடாக இருந்துவரும் கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 1974 ஒப்பந்த விதிகளின்படி மீன் பிடிப்பதற்கான உரிமைகளையாவது பெற்றுத் தர வேண்டும்.

தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யக் கூடாது. தாமதம் மனித உயிர்களையே மலிவாக்கிவிடும்.

தினமணி ஆசிரிய தலையங்கம் 30 ஏப்ரல் 2008

நன்றி தினக்குரல்

0 Comments: