Sunday, May 11, 2008

மன்னார் கரையோரத்தை கைப்பற்ற படையினர் திட்டம்

வடக்கே மன்னாரை மையப்படுத்தியே போர் தொடர்கிறது. வவுனியா, மணலாறு, யாழ். குடாவில் படை நடவடிக்கைகளுக்கு பலத்த பின்னடைவுகள் ஏற்பட்ட நிலையில் மன்னார் களமுனையில் மட்டுமே சில வெற்றிகள் கிடைத்தன. எனினும் மடுவைக் கைப்பற்றிய பின்னரும் அந்த வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

மடுத் தேவாலயத்திற்கு படையினர் சென்ற போது அங்கு மாதா சொரூபம் இருக்கவில்லை. அடம்பன் பகுதிக்கு படையினர் சென்றபோது அங்கு எதிர்ப்பே இருக்கவில்லை. இது படையினரின் இலக்குகள் குறித்த கேள்விகளை எழுப்பும் அதேநேரம் மன்னார் களமுனையில் அடுத்து என்ன நடக்கப் போகிறதென்ற கேள்விகளையும் எழுப்புகிறது.

மடுத் தேவாலயத்தை நோக்கி கடந்த வருட முற்பகுதியில் படையினர் புறப்பட்ட போது அதற்கொரு அரசியல் நோக்கமிருந்தது. அடம்பன் பகுதியை நோக்கி கடந்த வருட பிற்பகுதியில் படையினர் புறப்பட்ட போது அதற்கொரு இராணுவ நோக்கமிருந்தது. ஆனால் இவ்விரு பகுதிகளுக்கும் இன்று படையினர் சென்றுவிட்ட பின்னரும் அடுத்த இலக்குகள் என்னவெனத் தெரியாது படையினர் குழப்பமடைந்துள்ளனர்.

மடுத் தேவாலயத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டுள்ள போதும் அங்கு மாதாவின் சொரூபத்தை கொண்டு வர மதகுருமார் தயாரில்லை. அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க படையினர் தயாரில்லையென்பதால் அந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாத வரை மாதாவின் சொரூபத்தை அங்கு கொண்டுவர குருமார்களும் தயாரில்லை. இது, மடுவைக் கைப்பற்றியதன் நோக்கத்தையே தலை கீழாக்கிவிட்டதால் அங்கு அடுத்து என்ன செய்வதெனத் தெரியாது படையினர் தடுமாறுகின்றனர்.

இந்த நிலையில் தான் மன்னாருக்குள் படையினர் சுழல்கின்றனர். `ஏ9' வீதியூடாக கிளிநொச்சி நோக்கிச் செல்வதா அல்லது `ஏ32' (மன்னார் - பூநகரி வீதி) வீதியூடாக யாழ்.குடாவுக்குச் செல்வதா எனத் தடுமாறிய படையினர், தற்போது மன்னாரில்பரந்த வெளிகளுக்குள் சிக்குண்டுள்ளனர். புலிகளும் அவர்களை அலைக்கழித்து வருகின்றனர்.

மடுவைக் கைப்பற்றும் நோக்கில் 57 ஆவது படையணி புறப்பட்டது. அடம்பனை கைப்பற்ற 58 ஆவது படையணி புறப்பட்டது. 57 ஆவது படையணி மடுவுடன் நின்றுவிட 58 ஆவது படையணி அடம்பனுக்கு வந்து அடுத்த இலக்கு குறித்து ஆலோசிக்கும் நிலையிலுள்ளது. ஏனெனில் உயிலங்குளம் - அடம்பன் - பாப்பாமோட்டையென ஒரே நேர்கோட்டில் தொடர்ந்து வடக்கே முன்னேறுவதா அல்லது அடம்பனிலிருந்து வலது பக்கமாக கிழக்கே ஆண்டான்குளத்தை நோக்கிச் செல்வதா என்பது குறித்து படையினர் சிந்திக்கின்றனர்.

மன்னாரின் கரையோரமாக மன்னார், பூநகரி வீதியிலேயே பாப்பாமோட்டை உள்ளது. மன்னார், பூநகரி வீதியூடாக வடக்கே நகர்ந்து புலிகள் வசமுள்ள மன்னாரின் கரையோரப் பகுதிகளை முற்று முழுதாகக் கைப்பற்றி தமிழகத்திற்கும் புலிகளுக்குமிடையிலான கடல் வழி விநியோகத்தை தடுத்து நிறுத்துவதே இந்தப் படை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். மன்னார், வவுனியா வீதியிலுள்ள உயிலங்குளத்திலிருந்து நகர்ந்த படையினர் உயிலங்குளம், பாப்பமோட்டை வீதியில் நடுவில் அடம்பனைச் சென்றடைந்துள்ளனர். இங்கிருந்து இதேவீதியில் மேலும் முன்னேறிச் சென்றால் பாப்பாமோட்டையை அடைந்து மன்னார்- பூநகரி வீதியில் மேலுமொரு முன்னேற்றத்தை அடைந்து விடலாம். ஆனால் அடம்பனிலிருந்து நேரே வடக்காக பாப்பாமோட்டையை நோக்கி படையினர் முன்னேற முயல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உயிலங்குளத்திற்கும் அடம்பன் சந்திக்குமிடையிலான தூரம் சுமார் நாலரை மைல்களாகும். இந்தத் தூரத்தை கடக்க படையினர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாரிய படை நகர்வை ஆரம்பித்தனர். எனினும் சுமார் ஆறு மாதங்களின் பின்பே உயிலங்குளத்திலிருந்து நேர் வடக்கே அடம்பன் சந்தியை வந்தடைந்துள்ளனர். இங்கிருந்து மேலும் வடக்கே நேராக சுமார் நாலரை மைல் தூரம் சென்றால் பாப்பாமோட்டையை அடைந்துவிடலாம்.

ஆனால் அடம்பனிலிருந்து பாப்பாமோட்டையை நோக்கிய நகர்வு பெரும் பொட்டல் வெளிகளுக்கூடானது. இந்தப் பொட்டல் வெளிகளைத் தாண்டுவதாயின் படையினர் பேரிழப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். மிக நீண்ட தூரத்திலிருந்தே எதிரியை மிகச் சுலபமாக இலக்கு வைக்கக் கூடிய களமுனை இதுவாகும். இதைவிட இப்பகுதி மிக மோசமான வரட்சிக்குரிய பிரதேசமாகும். தண்ணீரை மருந்துக்கும் காணமுடியாத காலநிலை கொண்டது. இதனால் அடம்பனிலிருந்து பாப்பாமோட்டை நோக்கிய நகர்வு சாத்தியமற்றதென்பது படையினருக்கு நன்கு தெரியும்.

இந்தப் பிரதேசத்தில் மழையென்றால் சேறும் சகதியும் நிறைந்து விநியோகப் பிரச்சினை ஏற்படும். கடும் வெயிலென்றால் குடி நீர்ப்பிரச்சினை மிகப்பெரும் பிரச்சினையாகிவிடும். இதனால் தான், பெரும் பரப்பளவு கொண்ட இந்தப் பிரதேசத்தில் காலாகாலமாக வாழும் மக்கள் தொகை வெறும் 3,500 பேராகும். அந்தளவுக்கு மக்கள் வாழ முடியாத வரட்சிமிக்க பிரதேசமாகும்.

ஏற்கனவே 1991 இல் `கிறீன் பெல்ற்' என்ற பெயரில் இங்கு இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கையில் படையினர், மன்னார், பூநகரி வீதியில் மாந்தைச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக அடம்பன், ஆண்டான்குளம், ஆட்காட்டிவெளி, பரப்புக்கடந்தான் வரையான பிரதேசத்தை கைப்பற்றிய போதும் பின்னர் இரு நாட்களில் இந்தப் பகுதிகளைக் கைவிட்டு பழைய இடத்திற்குத் திரும்பி விட்டனர். புலிகளின் பலத்த எதிர்ப்பின்றி இந்தப் பிரதேசத்தை கைப்பற்றிவிட்டு புலிகளின் பலத்த எதிர்த் தாக்குதலின்றியே இரு நாட்களில் இப்பகுதிகளை படையினர் கைவிட்டுச் சென்றனர்.

இதுபோல் 1999 இல் ரணகோச 3 மற்றும் 4 படை நடவடிக்கைகளின் போதும் படையினர் இந்தப் பிரதசேங்களை சிரமமின்றிக் கைப்பற்றிவிட்டு சுமார் இரு மாதங்களின் பின் இப்பகுதிகளிலிருந்து விலகிச் சென்றனர். அந்தளவிற்கு இந்தப் பிரதேசங்களில் மழை, வெயில் காலத்தை தாக்குப் பிடித்து விநியோகங்களை மேற்கொள்வது மிகக் கடினம். அதனையும் மீறி நிலைகொள்ளும் போது யுத்த முனையில் இழப்புகள் அதிகமாகுமென்பதை முன்னர் படையினர் நன்குணர்ந்திருந்தனர். இதனால் தான் அடம்பனிலிருந்து சுமார் நாலரை மைல் தூரத்திலுள்ள பாப்பாமோட்டை நோக்கி படையினர் நகராது அடம்பனிலிருந்து கிழக்கே ஆண்டான்குளம், ஆட்காட்டி வெளிநோக்கிச் சென்று அங்கிருந்து வடக்கே முன்நகர்ந்து, பின்னர் பூநகரி வீதியில் பள்ளமடு சென்று மன்னார் விடத்தல்தீவை கைப்பற்றிவிட படைத்தரப்பு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேநேரம் உயிலங்குளத்திற்கு வடக்கே கறுக்காய்குளம் ஊடாக உட்புறத்தால் மற்றொரு படைநகர்வு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது. கறுக்காய்குளம் - வட்டக்கண்டல் - ஆண்டான்குளம் - ஆட்காட்டிவெளிநோக்கி பாரிய படைநகர்வுக்கான முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அடம்பனிலிருந்து ஆண்டான்குளம் நோக்கியும் கறுக்காய்குளம் ஊடாக ஆண்டான்குளம் நோக்கியும் ஒரே நேரத்தில் பாரிய படைநகர்வுகளை மேற்கொள்ளும் போது ஒரு கட்டத்தில் இடையில் சிக்கும் புலிகள் பொறிக்குள் சிக்கிவிடுவரென்பதால் தந்திரமாக, கடும் எதிர்ப்பின்றி இரு முனைகளாலும் ஆண்டான் குளத்தை நோக்கிச் சென்றுவிடலாமென படைத்தரப்பு திட்டமிட்டுள்ளது.

மன்னார் களமுனையை பொறுத்தவரை அது பொட்டல்வெளிகளையும் சிறு சிறு பற்றைக் காடுகளையுமே கொண்ட பிரதேசமென்பதால் ஒரேநேரத்தில் ஒரு இலக்கை மையமாக வைத்து இரண்டு அல்லது மூன்று முனைகளில் முன்னேறி புலிகளை பொறிக்குள் சிக்க வைத்து அவர்களால் கடும் சமர் செய்ய முடியாதொரு நிலைமையை உருவாக்கி அவர்களைப் பின்வாங்கச் செய்துவிட்டு நிலங்களைப் பிடித்துச் செல்வதே படையினரின் தந்திரமாகும். மடுக்கோயில் பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு படையினர் இத்தகையதொரு தந்திரத்தையே கடைப்பிடித்து கடைசி நேரத்தில் பாரிய மோதல்கள் எதுவும் ஏற்படாதவாறு புலிகளைப் பின்நகர்த்தியிருந்தனர்.

எனினும் படையினரின் பொறியை புலிகள் இங்கு தந்திரமாக உடைத்து உடைத்து படையினருக்கு பலத்த இழப்புக்களையும் அலைச்சலையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வந்ததுடன் மடுத்தேவாலயத்திலிருந்து சுமார் 700 மீற்றர் தூரத்திற்கு படையினர் வந்த பின்பே, அதுவும் தேவாலயத்தின் புனிதத்திற்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக புலிகள் அங்கிருந்து விலகியிருந்தனர். இல்லையேல் தேவாலயத்தை கைப்பற்றும் சமரில் படையினர் மேலும் இழப்புகளைச் சந்தித்திருக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கும்.

மன்னார் களமுனையை பொறுத்த வரை ஒரே நேரத்தில் ஒரு இலக்கை நோக்கி பல முனைகளைத் திறந்து புலிகளை பொறிகளுக்குள் சிக்க வைத்து அவர்களுக்கு பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி தங்களுக்கான இழப்புகளைக் குறைத்து பெருமளவு நிலப்பிரதேங்களைத் தந்திரமாகக் கைப்பற்றுவதே படையினரின் நோக்கமாகும். எனினும், படையினரின் இந்தத் தந்திரங்களை உணர்ந்து படையினர் விரிக்கும் வலைக்குள் விழாது தந்திரமாக அதிலிருந்து தப்பி அந்த வலைக்குள் படையினரை விழவைத்து அவர்களுக்கு பலத்த இழப்பையும் சலிப்பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும் தந்திரங்களை மேற்கொள்ள புலிகளும் முயன்று வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை அழித்து விட்டதால் அவர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுக்கு பலத்த தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாகவும் தற்போது தமிழகத்திலிருந்தே அவர்கள் இவற்றைப் பெற்று வருவதால் மன்னார் - பூநகரிப் பாதையைக் கைப்பற்றி தமிழகத்திற்கும் அவர்களுக்குமிடையிலான விநியோகத்தை முழுமையாக நிறுத்திவிட வேண்டுமென்பதே தங்கள் பிரதான நோக்கமென படைத்தரப்பு கூறுகின்றது. அதேநேரம் இந்தியாவில் அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதேநேரம் தமிழக சட்ட சபைக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் மட்டுமன்றி இந்திய பொதுத் தேர்தலிலும் ஈழத் தமிழர் பிரச்சினை முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இதன் முன்னோடியாகவே, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்காகாந்தி தமிழக சிறையிலிருக்கும் நளினியை சந்தித்துள்ளார். தமிழக மக்கள் மத்தியிலும், ஈழத் தமிழர்களுக்கு சார்பாக தற்போது தமிழகத் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வருவதால் அவர்கள் மத்தியிலும், காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழருக்கெதிரான கட்சியல்ல. சோனியாவும் பிள்ளைகளும் ராஜீவ் கொலையால் ஏற்பட்ட கசப்புணர்வுகளை மறந்துவிட்டனர். அவர்கள் ஈழத் தமிழர்கள் விடயத்தில் பரிவு காட்டுகிறார்களென்பது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழகத்தில் அடுத்த பொதுத் தேர்தலிலும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுக்க முனைவது நன்கு தெரிகிறது. ஈழத் தமிழர் பிரச்சினை இந்தியப் பொதுத் தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தப் போவதை இலங்கை அரசும் நன்குணர்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கும் வன்னிக்குமிடையிலான நெருங்கிய தொடர்பு இலங்கை அரசுக்கும் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தலாமென உணர்வதால் முடிந்தவரை விரைவில் மன்னார் கரையோரத்தை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்து புலிகளுக்கும் தமிழகத்திற்குமிடையிலான தொடர்பைத் துண்டித்து விடவேண்டுமென இலங்கை அரசு கருதுகிறது. இல்லையேல் தமிழக வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அரசுகள் எதனையும் கண்டுகொள்ளாத நிலையேற்பட்டால் புலிகள் தமிழகத்திலிருந்து தாராளமாக அனைத்தையும் கொண்டு வந்து சேர்த்து விடுவார்களென்ற அச்சமும் அரசுக்குள்ளது.

இதைவிட வடபகுதி போர் முனையில் யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட பாரிய பின்னடைவும் மணலாறில் முன்நகர முடியாத நிலைமையும் தொடர்ந்தும் மன்னார் களத்தில் முன்நகர்வுகளைத் தூண்டி வருகிறது. முகமாலையில் ஏற்பட்ட பின்னடைவும் ஏனைய பகுதிகளில் ஏற்படும் இழப்புகளும் அரசுக்கும் இராணுவத் தலைமைப் பீடத்திற்கும் பெரும் தலைவலியாக உள்ளது. இது குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் வெளிவருவதால் தென்பகுதி மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். கடந்த இரண்டரை வருடப் போரில் 1000 இற்கும் குறைவான படையினரே கொல்லப்பட்டுள்ளதாக படைத் தரப்பு உத்தியோக பூர்வ தகவல்களை வெளியிடுகையில் 9000இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் அதைவிட மூன்று மடங்கு படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ தரப்பை ஆதாரம் காட்டி ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட தகவல்கள் அரசையும் படைத்தரப்பையும் மட்டுமன்றி தென்பகுதி மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.

வன்னிக்குள் படையினரை இழுத்து அலைக்கழித்து புலிகள் தினமும் அவர்களுக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அரசும் படைத்தரப்பும் இதனை முற்றாக மூடி மறைக்க முற்படுவதாகவும் மக்கள் விசனமடையத் தொடங்கியுள்ளனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி முகமாலையில் மட்டும் 200 படையினர் வரை கொல்லப்பட்டதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளே ஒப்புக் கொண்ட நிலையில் கடந்த மாதம் முழுவதும் 120 படையினர் மட்டுமே கொல்லப்பட்டதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா பாராளுமன்றில் கூறியது தென்பகுதி மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. வடக்கே தினமும் பெருமளவு படையினர் கொல்லப்படுவதும் உண்மையே என்பதை, இப்போது இந்தப் பொய்கள் மூலம் உணரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் ஊடகங்களுடனும் போர் தொடுக்க அரசும் படைத் தரப்பும் தீர்மானித்துவிட்டன. களமுனைத் தகவல்கள் எதனையும் எந்தவொரு ஊடகத்திற்கும் தெரிவிக்கக் கூடாதென இராணுவத் தளபதி சகல கட்டளைத் தளபதிகள் ஊடாகவும் களமுனைத் தளபதிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவித்துள்ளார். இதனை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர்கடுமையாக எச்சரித்துள்ளார். களமுனையில் தினமும் கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கையின் மர்மம் என்ன என்பதை இப்போதாவது தென்பகுதி மக்கள் உணர்ந்திருப்பர்.

மூழ்கடிக்கப்பட்ட கப்பல்

திருகோணமலைத் துறைமுகத்தில் கடற்படையினரின் வழங்கல் கப்பலொன்றை நேற்று சனிக்கிழமை அதிகாலை தாக்கி மூழ்கடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து யாழ்.குடாநாட்டிலுள்ள படையினருக்கு ஆயுதங்கள் மற்றும் போர்த் தளபாடங்களை ஏற்றிச் செல்வதற்குத் தயாராக நின்றபோதே அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் கப்பலை கடற்கரும்புலிகளின் கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகள் தாக்கியழித்து மூழ்கடித்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிலிருந்து அவசர அவசரமாக படையினர் அண்மையில் பெருமளவு ஆயுதங்களையும் போர்த் தளபாடங்களையும் தருவித்திருந்தனர். கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு துறைமுகத்திலிருந்து பல கொள்கலன்களில் இராணுவத் தளபாடங்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட செய்தியை புலிகள் தெரிவித்துள்ளனர்.

`எம்.வி.இன்வின்சிபிள்' (ஏ520) என்ற சரக்குக் கப்பலே திருமலைத் துறைமுகத்தினுள் வைத்து மூழ்கடிக்கப்பட்டதாகவும் எனினும் இதனைப் படையினர் பயன்படுத்துவதில்லையெனவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

எனினும், இந்தக் கப்பல் தகர்த்தழிக்கப்பட்டமை படையினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு கடற்பரப்பினூடாக வந்தே கடற்கரும்புலிகள் நீருக்கடியில் இந்தக் கப்பலைத் தாக்கி அழித்துள்ளமை கடற்படையினருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலைத் துறைமுகம் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்பதுடன் துறைமுகத்திற்குள்ளும் வெளியேயும் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. இதைவிட புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் தாக்குதலை எதிர்கொள்ளும் விதத்தில் நீரடி பாதுகாப்பு ஏற்பாடுகளும் இங்குள்ளன.

அப்படியிருந்தும் கடற்கரும்புலிகள் மிக நீண்டதூரத்திலிருந்து வந்து எப்படி இவ்வாறானதொரு தாக்குதலை நடத்தினார்களென்ற கேள்வி எழுந்துள்ளது.

குடாநாட்டுக்கு ஆயுதங்களை ஏற்றிச்செல்லத் தயாராயிருந்த 80 மீற்றர் நீளமான ஆயுதக் கப்பலே இதுவென புலிகள் கூறுகின்றனர். எனினும் இது ஆயுதக் கப்பலல்ல, பழுதுபார்ப்பதற்காக அஷ்ரப் இறங்குதுறையில் நிறுத்தப்பட்டிருந்ததென படையினர் கூறுகின்றனர்.

துறைமுகத்தினுள் நுழைந்து கடலடி பாதுகாப்பு பொறிமுறையிலும் சிக்காது எவ்வாறு கடற்கரும்புலிகள் இதனைத் தகர்த்தழித்தனர் என்ற கேள்வி படையினரை உலுக்கியுள்ளதுடன், இனிமேல் இந்தத் துறைமுகத்தினுள் நிற்கும் கப்பல்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏற்கனவே முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் ரோந்து சென்ற அதிவேக டோரா பீரங்கிப் படகு கடற்கரும்புலிகளின் நீருக்கடியிலான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதன் மர்மம் தெரியாது கடற்படையினர் தடுமாறி வந்த நிலையில், தற்போது திருமலை கடற்படைத் தளத்துடன் இணைந்த துறைமுகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல் நீருக்கடியிலான தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டுள்ளதால் கடற்புலிகள் தங்கள் நீரடித் தாக்குதல் உத்தியை விரிவுபடுத்தத் தொடங்கிவிட்டார்களென்பதை உணரமுடிகிறது.

இது திருகோணமலைக் கடற்படைத் தளத்தினதும் துறைமுகத்தினதும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் அல்லது கடற்புலிகளின் புதுவகைத் தாக்குதல் உத்திகளுக்கெதிராக என்ன செய்வதென்ற குழப்பமானதொரு நிலையை படையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் ஆயுதக் கப்பலை இலக்கு வைத்ததாயிருந்தால் நிலைமை மிக மோசமடைந்து விட்டதென்பதை படையினர் உணர்ந்திருப்பர். கொழும்பிற்கும் குடாநாட்டுக்கும் அல்லது திருமலைக்கும் குடாநாட்டுக்கும் இடையிலான படையினரின் விநியோகம் கடல் வழியாகவே நடைபெறுவதாலும் திருமலைக்கும் குடாநாட்டுக்கும் இடையே ஆயிரக்கணக்கான படையினர் துருப்புக்காவிக் கப்பல்களிலேயே போக்குவரத்துச் செய்வதாலும் அந்தக் கப்பல்களின் பாதுகாப்புக் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தக் கப்பல் மீதான தாக்குதலுக்கு கடற்கரும்புலிகள் முல்லைத்தீவிலிருந்து வந்தார்களா அல்லது வேறு எங்காவது அருகிலிருந்து வந்தார்களா என்ற கேள்விகளும் எழுகிறது. எனினும் இயற்கை அரண் நிறைந்த இந்தத் துறைமுகத்தினுள் இடம்பெற்ற நீரடித் தாக்குதலானது கடற்படையினருக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகும். அத்துடன் கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவின் இவ்வகைத் தாக்குதல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைத் துறைமுகத்துடன் நின்றுவிடுமா அல்லது அனைத்துப் பகுதியிலும் தொடருமா என்ற கேள்வியும் எழுகிறது.

நன்றி - தினக்குரல்

0 Comments: