Sunday, May 11, 2008

கிழக்கில் ஜனநாயகப் படுகொலை

ஈழத் தமிழர் தாயகத்தின் தென்புறத்தில் கிழக்கிலங்கையில் "வெற்றிகரமாக' ஒரு தேர்தலைத் தான் நடத்தி முடித்திருப்பதாகக் காட்டியிருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு.
தமிழர்களின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கில் அவர்களின் தாயக மண் மீதான பிறப்புரிமைக் கோரிக்கையைச் சிதைத்து அழிக்கும் எண்ணத்துடன், வடக்கையும், கிழக்கையும் நிர்வாக ரீதியாகத் துண்டித்துப் பிளக்கும் தனது கபடத் திட்டத்தில் வெற்றி கண்டு விட்டதாகக் கருதும் தென்னிலங்கை, அந்த வெற்றியை நிலைநிறுத்தும் கற்பனையோடு இப்போது ஒரு மோசடித் தேர்தலையும் அங்கு நடத்தி முடித்திருக்கின்றது.

தமிழர் தாயகத்தைப் பிளந்து துண்டாடி மாகாண நிர்வாகம் என்ற பெயரில் கிழக்கில் கொழும்பு அரசினால் உருவாக்கப்படும் இந்தப் பொம்மைக் கட்டமைப்புக்குப் பொறுப்பாளராக, அரசுத் தரப்பின் ஏவலாளராக, யார் நியமிக்கப்படப் போகின்றார்கள் என்பதில் தமிழர்களுக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாண ஆட்சியும் சரி, வடக்கு மாகாண செயலணி நிர்வாகமும் சரி, தமது விடுதலையின் வேணவாவில் ஊறித் திளைத்திருக்கும் தமிழர்களைப் பொறுத்தவரை,"இராவணன் ஆண்டாலென்ன, இராமன் ஆண்டாலென்ன, கூட வந்த குரங்கு ஆண்டாலென்ன?' என்ற சிந்தனைப் போக்கில் அளவீடு செய்யப்படுபவைதான்.
என்றாலும், இந்தக் கிழக்குத் தேர்தலும் அதை மஹிந்த அரசு நடத்திய விதமும், அதையொட்டி ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறிய அசிங்கங்களும் இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகம் சரியான ஒரு படத்தை வரைந்து கொள்ள உதவியிருக்கும் என்பது நிச்சயம்.
பிரகடனப்படுத்தப்பட்ட வாக்குப் பெறுபேறுகள் பற்றிய எண்ணிக்கை அல்லது தேர்தல் முடிவு பற்றிய அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசுக்குத் தனியாக தலைப்பாகை கிரீடம் சூட்டுவதாக அமையலாம்.

ஆனால் அந்தத் தலைப்பாகையில் கிரீடத்தில் ஊழல், மோசடி, ஆள் மாறாட்டம், குளறுபடி, வன்முறை, அச்சறுத்தல், கள்ளவாக்கு என்று வரிசை வரிசையாக நெய்யப்பட்டிருக்கும் ஜரிகைகள் அப்பட்டமாக வெளியில் தோற்றுகின்றன. அரசுத் தரப்பின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி, ஆவணப்படுத்தி, அரங்கேற்றுவதிலும், பறைசாற்றுவதிலும் இந்தத் தேர்தல் ஒரு சாதனை படைத்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

இந்தக் கண்கட்டு வித்தைத் தேர்தல் நாடகத்தின் முடிவின்படி, பிள்ளையான் அணி என்ற ஆயுதக் குழுவைக் கைகோத்து, அரவணைத்து போட்டியிட்ட ஆளும் தரப்புக்கு இரண்டு போனஸ் ஆசனங்களுடன் சேர்ந்து கிழக்கு மாகாணசபையில் இருபது இடங்கள். ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டுக்குப் பதினைந்து இடங்கள். திருகோணமலை மாவட்டத்தில் ஜே.வி.பிக்கு ஓரிடமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்புக்கு ஓரிடமும் கிடைத்திருக்கின்றன.

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் மிகப் பெரிய மோசடி வாக்களிப்பு என இதனை வர்ணித்துள்ள இலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகள் எல்லாம், இதனைப் பெரும் ஜனநாயகப் படுகொலைச் செயற்பாடு என்றும் விமர்சித்துள்ளன.

ஆயுதக் குழு ஒன்றை அரவணைத்து, அதனுடன் அரசே கூட்டுச் சேர்ந்து, அராஜகங்களையும், சட்ட அத்துமீறல்களையும் கட்டவிழ்த்துவிட்டு, உச்ச மோசடியோடு இந்த ஜனநாயகப் படுகொலையைப் புரிந்திருக்கின்றது என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் கூட்டுச் சேர்ந்து குரல் எழுப்பியிருக்கின்றன.

ஆயுதக் குழுக்களை இலங்கை அரசு தனது துணைப்படையாக வைத்துக்கொண்டு, "புலிகளை ஒழிக்கும் செயற்பாடு' என்ற பெயரில் புரிந்துவரும் கொடூரங்களும், அரச பயங்கரவாதமும் இப்போது வெளிப்படையானவை. அவற்றைக் கண்டு உலகமே அதிர்ந்து போய் நிற்கின்றது.
அதே அரச பயங்கரவாதம் இப்போது கிழக்கு மாகாணத் தேர்தலிலும் அரசின் "ஜனநாயக வெற்றிக்கான' தேர்தல் நடவடிக்கைகளிலும் மிகத் தாராளமாகக் கட்டவிழ்ந்திருக்கின்றது.

பெரிய எடுப்பில் ஆள் மாறாட்டங்களும், கள்ள வாக்குத் திணித்தலும், அச்சுறுத்தி வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தலும், வாக்குகளை அள்ளிக் கொட்டலும் வரையறை தாண்டி மிக மோசமாக இடம்பெற்றிருக்கின்றன என்பதை நேற்று முன்தினம் வாக்களிப்பு முடிவதற்கு முன்னரே பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜே.வி.பி. போன்றவை வெளிப்படுத்தி விட்டன.

"பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பொய்த் தந்திரோபாய சுலோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சர்வதேச சமூகத்தின் காதில் பூச்சுற்றியபடி தமிழர்களைக் கொன்றொழிக்கும் அரச பயங்கரவாதத்தை வெற்றிகரமாகத் தொடரும் கொழும்பு அரசு, அதேபோல, இப்போது இந்த ஜனநாயக மோசடித் தேர்தலையும் ஜனநாயகத்துக்குக் கிடைத்த பெரு வெற்றியாகப் பிரசாரப்படுத்தி, முன்நிறுத்த முயலும் என்பது திண்ணம்.

ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் கொழும்பின் அரச பயங்கரவாதத்தைக் கண்டும், காணாமலும் இருந்து,மௌனம் சாதித்து, அத்தவறுக்கு இடமளித்து, பெரும் குற்றமிழைக்கும் சர்வதேச சமூகம், இலங்கை அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையின் பிறப்பாக்கமாக உயிர்ப்பித்த இத் தேர்தல் முடிவு தொடர்பான அரசின் வெற்றிப் பிரகடனத்தையும் மௌனத்தோடு ஏற்று அங்கீகரிக்கும் என்பது உறுதி.


நன்றி - உதயன்

0 Comments: