Tuesday, May 6, 2008

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழக சட்ட மன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசு

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தையைத் தொடங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே காலகட்டத்தில் இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு 400 கோடி ரூபாவை இந்திய அரசு வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ்நாட்டு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது என தமிழர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
"முதல்வருக்கு வேண்டுகோள்" என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்ட தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டிருக்கும்போது அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு உண்டு. இந்திய அரசின் மேற்கண்ட நடவடிக்கை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் முன்மொழிந்த தீர்மானத்திற்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, அத்தீர்மானத்தை கொஞ்சமும் மதிக்க இந்திய அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் செயல் தமிழக முதலமைச்சரை மட்டுமல்ல தமிழக சட்ட மன்றத்தையே அலட்சியப்படுத்தி அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் அவர் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழக சட்ட மன்றத்தில் இலங்கை இனப்பிரச்சினை குறித்து பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசும்போது முதலமைச்சர் கருணாநிதி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"போராளிகளுடைய முக்கிய குறிக்கோளே போராளிகளுக்குள் போராடுவது என இந்தப் போராளிகளுக்குள்ளே நடந்த போராட்டம்தான் இன்றைக்கு நாம் இந்த அவையிலேயே அவர்களுக்காகப் பரிந்துரை பேச வேண்டிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் இடைக்காலத்திலே நான் விடுதலைப் போராளிகளுக்குச் சொன்ன அறிவுரை சகோதர யுத்தத்தை நிறுத்துங்கள் என்பதுதான்.

அந்தப் போராளிக் குழுக்கள் ஒரே போராளிக் குழுவாக இருந்து ஒற்றுமையோடு இலங்கையிலேயே நடைபெறுகிற அக்கிரமங்களைக் கண்டிக்க வேண்டும். தமிழர்களுக்குள்ள உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலே செயல்பட்டதா என்றால் எதுவும் இல்லை. ஒரு குழுவை இன்னொரு குழு வீழ்த்த வேண்டும். ஒரு குழுவை இன்னொரு குழு மாய்க்க வேண்டும். ஒரு குழுவுக்கு செல்வாக்கு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற முறையிலேதான் ஒவ்வொரு குழுவின் தலைவர்களும் அங்கே கொல்லப்பட்டார்கள் என்பதையெல்லாம் மறந்துவிடக்கூடாது. இப்படிப்பல போராளிகள் அவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு சுட்டுக் கொண்டு செத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் தான் இந்தப் போராட்டத்தைப் பலவீனப்படுத்தியது. இத்தகைய விடுதலைப் போராட்டம் எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்போது இந்த சின்னஞ்சிறு நாடான இலங்கையிலே வலுவிழந்ததற்கு காரணம் நமக்குள்ளே ஒற்றுமை இல்லாததுதான். நாம் வலுவிழந்து போய் பகைவர்களுக்கு இடம்கொடுத்துவிட்டோம். ஆனால், இதிலே இந்திய அரசை குறை கூறிப் பயனில்லை' என்று கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம் தமிழர்கள் அனைவராலும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டிய தீர்மானமாகும். ஆனால், இந்தத் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்துகள் உண்மையில் வருந்தத்தக்கவையாகும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் அந்தப் போராட்டத்திற்கு எதிராக இந்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதை மறைத்து நியாயப்படுத்தும் விதத்திலும் அவருடைய கருத்துகள் அமைந்துவிட்டன. வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி முயலுகிறார். தமிழீழப் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயலாற்றாததால்தான் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன என முதலமைச்சர் கூறியுள்ள கருத்து சரியானதுதானா? அந்தக் கூற்றில் சிறிதளவேனும் உண்மை உள்ளதா?

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் ஷ்ரீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத் தலைவர் பத்மநாபா, ஈரோஸ் இயக்கத் தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி கீழ்க்கண்ட கூட்டறிக்கையை வெளியிட்டார்கள். "புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையைத் தழுவி களத்தில் போராடும் இந்த நான்கு விடுதலை இயக்கங்கள் மத்தியில் ஒருமைப்பாடு ஏற்பட்டமை எமது விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். ஈழத் தமிழரின் சுதந்திரப் போரில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ள இந்நிகழ்ச்சி புரட்சிகர சக்திகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஒருமுகப்படுத்தி வலுப்படுத்த வழிகோலியுள்ளது. இராணுவ பயங்கரவாத அட்டூழியங்களையும் இனக் கொலையையும் எதிர்நோக்கி தாங்கெணாத் துன்பத்தை அனுபவித்து வரும் மக்களுக்கு எமது விடுதலை அணிகள் ஒன்றுபட்ட செய்தி பெரு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிப்பதோடு, அவர்களது ஆன்ம உறுதியையும் விடுதலை உணர்வையும் பலப்படுத்தும் என்றே கருதுகிறோம். இந்த நான்கு இயக்கங்களின் கூட்டமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணி கீழ்க்கண்ட அரசியல் ரீதியான அடிப்படை கொள்கைகளில் ஒன்றுபட்டு செயல்பட தீர்மானித்துள்ளது.

1. சிங்கள ஆதிக்கத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் எமது தாயகத்தின் சுதந்திரத்தையும் இறைமையையும் வென்றெடுத்தல். 2. இலங்கை வாழ் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டுகின்ற தனி அரசைத் தவிர்த்த வேறு எந்த குறைந்த பட்ச சமரசத் திட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை. 3. பரந்துபட்ட மக்களின் பங்களிப்போடு பரிணாமம் பெறும் வெகுஜன ஆயுதப் போராட்டத்தை எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல். 4. தேசிய சுதந்திரப் போராட்டத்தோடு சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்து சுதந்திர தாய்நாட்டில் சோசலிச சமுதாயத்தைக் கட்டி எழுப்புதல்.

5. உலக ஏகாதிபத்திய நவ காலனித்துவ பிடியிலிருந்து எமது தேசத்தை பூரணமாக விடுவித்து அணி சேராக் கொள்கையை கடைப்பிடித்தல். தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் முக்கிய அரசியல் பிரச்சினைகள் குறித்து ஒன்றுகூடி கலந்தாலோசித்து முடிவெடுப்பதெனவும் சிங்கள அரச படைகளுக்கு எதிரான எமது ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை ஒன்றுபடுத்திச் செயல்படுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம். எமது இந்த ஒருமைப்பாடு விரிவுபட்டு வலுப்பெற ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு எமது மக்களின் விடுதலையில் அபிமானம் கொண்ட சகல தமிழ் மக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து வெளியிட்ட இந்த அறிக்கை கண்டு தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பிரச்சினைகளில் போராளிக் குழுக்கள் ஒன்றுபட்டு செயல்பட்டன.

1985 ஆம் ஆண்டு பூட்டான் தலைநகரான திம்புவில் இந்திய அரசின் முயற்சியின் பேரில் கூட்டு மாநாடு ஒன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் மேற்கண்ட நான்கு இயக்கங்கள் மட்டுமல்ல, மற்றொரு போராளி இயக்கமான புளொட் இயக்கமும் ஜனநாயக அரசியல் இயக்கமான தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து நின்று குறைந்தபட்சத் திட்டமொன்றினை திம்பு மாநாட்டில் அளித்தன. சிங்கள அரசு பிரதிநிதிகள் இதை ஏற்க மறுத்தனர். இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி தமிழர் பிரதிநிதிகளை சிங்கள அரசுடன் இணக்கமாகப் போகுமாறு வெளிப்படையாகவே நிர்ப்பந்தித்தார். திம்பு மாநாட்டில் சமரச முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கைத் தமிழர் பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட செய்தி கிடைத்து தமிழர் பிரதிநிதிகள் மாநாட்டிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். அனைத்துப் போராளி இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதைக் கண்டு வெகுண்டெழுந்த இந்திய அரசின் வெளியுறவுத் துறைச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்தார். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், டெலோ இயக்கத்தைச்சேர்ந்த சத்தியேந்திரா மற்றும் சந்திரகாசன் ஆகிய மூவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. இந்திய அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் இயங்கிய டெசோ அமைப்பு போராட முடிவு செய்தது. இந்த அமைப்பில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் நண்பர் கி.வீரமணியும் நானும் அங்கம் வகித்தோம். நாங்கள் மூவரும் ஒன்றுகூடித்தான் தமிழகமெங்கும்போராட்டம் நடத்துவதென முடிவு செய்தோம். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதன் விளைவாக நாடு கடத்தும் உத்தரவை இந்திய அரசு இரத்துச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அனைத்துப் போராளிக் குழுக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து செயல்படுவதற்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட நாடு கடத்தும் உத்தரவிற்கு எதிராகத்தான் அன்றைக்கு டெசோ அமைப்பு போராடியது என்பதை அன்றைய டெசோ அமைப்பின் தலைவரும் இன்றைய முதல்வருமான கருணாநிதி அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக தற்காலிகமாக இந்திய அரசு பின்வாங்கிய போதிலும் தனது திட்டத்தைக் கைவிடவில்லை. போராளிக் குழுக்களை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை இந்திய றோ உளவுத்துறை வகுத்தது.

1986 ஆம் ஆண்டு மதுரையில் மே 5 ஆம் திகதி அன்று டெசோ அமைப்பின் சார்பில் தமிழீழ ஆதரவாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக நான் இருந்தேன். இம்மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார். ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், லோக்தளத் தலைவர் பகுகுணா உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிலும் அனைத்துப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஆனால், மாநாட்டிற்கு சில நாட்களுக்கு முன்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவரும் 1985 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது எனக்குப் பாதுகாப்பாக வந்த படைக்குத் தலைமை தாங்கியவருமான கப்டன் லிங்கம், ரெலோ இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இதைத் தொடர்ந்து ரெலோ இயக்கத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையே மோதல்கள் நடந்தன. இது குறித்து 1986 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி சென்னையில் பிரபாகரனை சந்தித்து பேசினேன். அப்போது இந்த மோதல்களின் பின்னணி குறித்து எனக்கு விரிவாகக் கூறினார். "லிங்கத்தின் மரணச் செய்தி வந்தபேது நானே கொதிப்படைந்தேன். தளத்திலிருந்த எங்கள் தோழர்கள் எவ்வளவு பெரிய கொதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். தங்கள் படையின் கப்டன் லிங்கத்தை படுகொலை செய்ததை கண்டிக்கவும் கைதான இரு வீரர்களை விடுவிக்கவும் அவர்கள் உடனடித் தாக்குதல் தொடங்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்கள். எங்கள் தோழர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை. ஏனெனில், லிங்கத்தின் படுகொலையும் எங்களின் முக்கியத் தோழர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் ஏதோ தற்செயலாக நடந்த நிகழ்ச்சியாக நாங்கள் கருதவில்லை. ஆழமான சதியின் விளைவாக இவை நிகழ்ந்தன என்று கருதுகிறோம். றோ உளவு அமைப்பின் தூண்டுதலின் பேரிலேயே சிறீ சபாரத்தினம் இங்கே வந்து முகாமிட்டு இருக்கிறார் என்பதும் எங்களுடன் மோதி எங்களை ஒழித்துக் கட்டுவதே அவரின் திட்டம் என்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன. எனவே, எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம்.

ரெலோ இயக்கத்தைத் தொடர்ந்து 1986 ஆம் ஆண்டின் இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப்.இயக்கமும் றோவின் வலையில் விழுந்து விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தது. எனவே, வேறு வழியில்லாத நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தினரிடமிருந்த ஆயுதங்கள் விடுதலைப் புலிகளால் களையப்பட்டன . ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்தாமல் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தை விடுதலைப் புலிகள் நிராயுதபாணிகளாக்கி அவரவர் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பினர். ராஜீவ்- ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தான பிறகும் கூட தனது சீர்குலைவு வேலைகளை றோ நிறுத்தவில்லை. ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு விடுதலைப் புலிகள் நிராயுத பாணிகளாகக் காட்சிதரும் வேளையில் அவர்களை ஒழித்துக்கட்ட போட்டி இயக்கங்களைச் சேர்ந்தவர்களை இந்திய இராணுவ விமானங்களின் மூலம் இலங்கை கொண்டு வந்து இறக்கியது.

விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு பிற போராளி இயக்கங்களை றோ உளவுத்துறை பயன்படுத்தி வருவது குறித்து மனம் வருந்திய பிரபாகரன் அவர்கள் தங்களோடு இணைந்து போராட முன் வருமாறு பிற போராளி இயக்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் அறிக்கை ஒன்றினை 25.9.1987 அன்று வெளியிட்டார். அன்றும் சரி இன்றும் சரி இயக்க முரண்பாடுகளுக்கும் மோதல்களுக்கும் எந்த சக்தி பின்னணியிலிருந்து இயங்குகிறது என்பதை நான் பகிரங்கமாகவே அம்பலப்படுத்தியுள்ளேன். இந்திய அரசின் அங்கமாக உள்ள றோ உளவுத்துறையின் நாசகார நடவடிக்கைகள் குறித்து தமிழீழ மக்கள் நன்கு அறிவார்கள்.

தமிழீழ இலட்சியத்தில் உறுதிப்பாடும் இயக்கக் கட்டுப்பாடும் உடைய ஒரு தேசிய இயக்கம் தோன்றுவதை இந்த சக்தி அன்றிலிருந்து எதிர்த்து வருகிறது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் வளர்வது கண்டு அஞ்சிய இந்திய உளவுத்துறை ஏனைய அமைப்புகளை வளர்த்துவிட்டு இயக்க மோதல்களை உருவாக்கி எம்மை அழிக்க முயன்றது. ஆனால், மக்கள் பலம் எமக்கு பக்கபலமாக இருப்பதால் எம்மை அழிக்க முடியவில்லை. தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த அளப்பரிய இழப்பிற்கு இந்திய உளவுத்துறை மட்டும் காரணமல்ல.

இந்த உளவுத்துறையின் நயவஞ்சக சூழ்ச்சிக்கு பலியாகிய ஏனைய அமைப்புகளின் தலைமைகளும் இதற்கு காரணமாவர். பதவி வெறிபிடித்த அந்த தலைமைகள் இந்திய உளவுத்துறையின் ஐந்தாம் படையாக இயங்கினார்கள். இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்? என்று கூறிய பிரபாகரன் பிற இயக்கங்களில் உள்ள தோழர்களை இலட்சியப் போராட்டத்தில் இணைய முன்வருமாறு அன்பழைப்பும் விடுத்தார். மேற்கண்டவை எல்லாம் வரலாற்று ரீதியான ஆதார பூர்வமான உண்மைகளாகும்.

போராளிக் குழுக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த மோதல்களைத் தூண்டிய றோ உளவுத்துறை, தனது முயற்சியில் தோல்வி கண்டது. பிற போராளி இயக்கங்கள் புலிகளிடம் மோதி தோற்ற பிறகு புலிகள் இயக்கத்தையே பிளவு படுத்தவும் றோ உளவுத்துறை முயன்றது. 1992 ஆம் ஆண்டு மாத்தையா 2004 ஆம் ஆண்டில் கருணா ஆகியோர் றோ உளவுத்துறையின் வலையில் வீழ்ந்து புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து அம்முயற்சியில் படுதோல்வி அடைந்தனர்.

ஆகத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தவும் இந்திய அரசின் றோ உளவுத்துறை தொடர்ந்து செயற்பட்டு வருகிறது என்பது எவராலும் மறுக்க முடியாத ஆதாரபூர்வமான உண்மைகளாகும். இந்த சூழ்நிலையிலும் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஆயுத உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.

நன்றி :- தினக்குரல்

0 Comments: