Friday, May 9, 2008

வெறும் கணக்கு வாய்ப்பாடாக மாறியிருக்கும் ஜனநாயகம்

இலங்கை உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தேசியங்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறை தலை விரித்தாடுவதற்கு வழியும் வசதியும் செய்துள்ள கட்டமைப்பு முறைமை எது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் தாம் ஆற்றிய கன்னி உரையில் தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

உலகம் என்ற புவிப் பந்தில் குடியாட்சிக்கு வழி செய்யும் முக்கிய கட்டமைப்பாக இன்று ஜனநாயகம் மதிக்கப்படுகின்றது. அதுவே உயர்ந்த ஆட்சிமுறை என்றும் போற்றப்படுகின்றது. ஆனால் ஜனநாயகம் என்ற இந்தச் சூத்திரம் வெறும் எண்ணிக்கையில் பெரும்பான்மை கொண்ட ஆள்களின் கூட்டுப் பலத்தை மட்டும் கணக்கில் எடுத்து அதனடிப்படையில் அதிகாரத்தை வழங்கும் ஒரு வெறும் கணித வாய்ப்பாடாகவே இன்று பல நாடுகளிலும் விளங்குகின்றது நடை முறைப்படுத்துகின்றது.

இதுவே, உலகில் பேரினவாதம் தலை தூக்கவும், இன மேலாதிக்கமும், மேலாண்மையும் அதிகாரப் பலத்துடன் விஸ்வரூபம் கொள்ளவும் வழி சமைத்து நிற்கின்றது. இந்த உண்மையையே சொலமன் சிறில் எம்.பி. வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
பெரும்பான்மை என்ற எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட தன்மையில் ஆட்சிமுறையையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் இந்தப் போக்கு, நீதியான வாழ்வியலுக்கு அடிப்படையாக அமையவே மாட்டாது என்பதுதான் உலகப் பட்டறிவாக நமக்கு இப்போது வெளிப் பட்டிருக்கின்றது.

பல நாடுகளில், அந்நாடுகளின் பன்மைத்துவ சமூக அமைப்பில் நீதியான ஆட்சிமுறையையும் இன ஒடுக்கு முறை இல்லாத சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதில் ஜனநாயகக் கட்டமைப்பு பெரும் தோல்வி கண்டு வந்திருக் கின்றது. அதற்கு நல்லதோர் உதாரணம் இலங்கைத் தீவு.
முடியாட்சி முறையிலிருந்து குடியாட்சி முறைமைக்கு புவிப்பந்தின் அலகுகளாக தேசங்கள் மாறியபோது, அத்தகைய குடியாட்சி நெறிக்கு உயரிய பண்புடைமையாக ஜனநாயகம் மதிக்கப்பட்டது. இன்னும் மதிக்கப்படுகின்றது. அது வேறு விடயம்.

ஆனால் நீதி, நியாயம், சமத்துவம், சமவுரிமை, சமரசம் போன்ற விடயங்களைக் கவனத்தில் எடுக்காமல் அந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வெறும் பெரும்பான்மை என்ற அடிப்படைக்கு மாத்திரமே ஏகோ பித்த முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜனநாயகக் கோட்பாடுகள் அர்த்தப்படுத்தப்பட்டபோதே "ஜனநாயகக் கேலிக் கூத்து' அங்கு அரங்கேறியது.

ஒரு தேசத்துக்குரிய அடிப்படைக் கட்டமைப்புகளையும் பண்பியல்புகளையும் கொண்ட ஒரு சிறிய தேசிய இனம், மற்றைய பெரும்பான்மை இனத்தோடு அல்லது இனங்களோடு வல்வந்தமாக ஒன்றிணைக்கப்பட்டு ஒரு தேசமாக உரு வாக்கப்படும்போது, அத்தகைய சிறிய தேசிய இனத்தின் அபிலாஷைகளும், பண்பியல்புகளும் அத்தேசக்கட்டமைப் பில் மதிக்கப்படுவது முக்கிய அம்சமாகின்றது. அத்தகைய சிறிய தேசிய இனத்தை அரவணைத்து, அதன் தனித்துவத் தையும் அரசியல் எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து, தாராளப் போக்கோடு ஒன்றிணைந்து செல்வதை உறுதிப்படுத்தும் கடப்பாடு பெரிய தேசிய இனங்கள் மீது சுமத்தப்படுகின்றது.

ஆனால் இத்தகைய கடப்பாட்டைப் பெரிய அல்லது பெரும்பான்மை மக்களைக் கொண்ட தேசிய இனம் நிறைவு செய்ய மறுதலித்து, பிடிவாதம் பிடிக்கும்போது, சட்ட மற்றும் அதி கார ரீதியாக அத்தகைய பெரும்பான்மை இனத்தை வழிக் குக் கொண்டுவரும் கட்டுப்பாட்டு விதிகளை நமது ஜனநாயக ஆட்சிமுறை கொண்டிருக்கவேயில்லை.
உலகின் பல நாடுகளிலும் மதிப்புக்குரியதாகப் "பீற்றப் படும்' ஜனநாயகக் கட்டமைப்புப் பொறிமுறையின் பிரதான பின்னடைவு அம்சமே இந்தக் குறைபாடுதான்.
இதுவே, இலங்கைத் தீவிலும் தமிழ்,சிங்களத் தேசியங் களுக்கு இடையிலான பெரும் பிளவுக்கும், இன முரண்பாட் டுக்கும், பகையுறவுக்கும், விரோதப் போக்குக்கும் இட மளிக்கும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

எண்ணங்களின் நியாயம் குறித்துக் கவனிக்காமல், எண் ணிக்கையின் அளவு குறித்து மட்டும் கருத்தில் எடுக்கும் "ஜனநாயகக் குருட்டுத்தனம்' இலங்கை போன்ற தோல்வி யுறும் தேசங்களையே இறுதியில் உருவாக்கும் என்ற படிப் பினை இந்த நாட்டின் அரசியல் அனுபவப் பாடமாக உல குக்குப் போதிக்கப்பட்டிருக்கின்றது.

எண்ணிக்கைப் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எண்ணத்தில் அநீதியாகச் செயற்படும் தென்னிலங்கைச் சிங்களம் போன்ற தரப்புகளுக்கு காப்பரணாகவும், அநீதிகளை மூடிமறைத்து நியாயப்படுத்தும் உருமறைப்புத் திரையாக வும் "ஜனநாயகம்'என்ற பண்பியல்பு விளங்குவதே, அந்தப் பொறிமுறையின் சிறுமைத்தனத்துக்கு நல்லதோர் உரைகல்.
மனித வாழ்வில் முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. தனித்தனி மனிதர்களுக்கிடையேயே கருத்தொருமைப் பாடும் இணக்கமும் இல்லாத நிலையில், இனங்கள் மற்றும் தேசியங்கள் இடையே முரண்பாடுகளும், இணக்க நிலைப் பிறழ்வுகளும், பிணக்குகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததே.

இந்த முரண் நிலையை நீக்கி அல்லது தணித்து, சமூ கங்கள், இனங்கள், தேசியங்கள் இடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் அடிப்படை நீதியை உறுதி செய் கின்ற உயரிய பண்பியல்பு மட்டுப்படுத்தப்பட்ட இந்த ஜன நாயக முறைகளில் இல்லை.
அதுவே, பல தேசங்களில் ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பு தோல்வி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாகும்.

இத்தகைய ஜனநாயகக் குருட்டுத்தனத்தை அல்லது ஜனநாயகக் கேலிக்கூத்தை நிவர்த்தி செய்யும் ஒரு புதிய நவீன ஜனநாயகப் பண்பியல்பு அல்லது மாற்று ஆட்சிமுறை நடை முறைக்கு வராதவரை சொலமன் சிறில் எம்.பி. சுட்டிக்காட்டுவதுபோல இலங்கை போன்ற தேசங்களில் ஜனநாயக வரம்பு களுக்குள் தன்னைப் பாதுகாத்தபடி இன ஆதிக்க வெறிப்போக்கும், வெளிப்பாடும் அரசாட்சிப் பீடத்திலிருந்து பீறிடுவதைத் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாதுதான்.

நன்றி - உதயன்

0 Comments: