Wednesday, May 28, 2008

அப்பாவிகளை இலக்கு வைப்பது கண்டிக்கப்பட வேண்டியதே!

""பொதுமக்களை இலக்கு வைக்காதீர்கள். அப்பாவிகளை இலக்கு வைக்கக் கூடாது என்பதைப் பயங்கரவாதிகளுக்கு ஊடகங்களும் எடுத்துச் சொல்லவேண்டும்.''
இவ்வாறு பத்திரிகைகளின் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு உபதேசம் செய்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஊடகவியலாளர்கள் குறிப்பாக ஊடகப் பொறுப்பாளர்கள் முன்னெடுக்கவேண்டிய முக்கிய பணி ஒன்றை நினைவூட்டியிருக்கின்றார் இலங்கைத் தேசத்தின் ஜனாதிபதி.
சரி. இந்தப் பணியை முன்னெடுப்பதற்குப் பொறுப்பான ஊடகங்கள் இவ்வேலையை எப்படிச் செய்யப்போகின்றன என்பதே கேள்வி. அப்பணியைச் செய்வதற்கு ஊடகப் பொறுப்பாளர்களுக்கு சில வரைவிலக்கணங்கள் தெரிந்திருப்பது புரிந்திருப்பது அவசியமானது; கட்டாயமானது.

அப்பாவிப் பொதுமக்கள் எனப்படுவோர் யார்? ஆக, வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியில் வசிக்கும் சிவிலியன்கள் மட்டும்தான் அப்பாவிப் பொதுமக்களா? அல்லது வன்னியில் வசிக்கும் சிவிலியன்களும் அப்பாவிப் பொதுமக்களா? அல்லது வன்னியில் பெரும்பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு வாழ்பவர்கள் எல்லோருமே "பயங்கரவாதிகளாகவே' அடையாளப்படுத்தப்பட வேண்டுமா? இவை முக்கியமான கேள்விகள்.

இவை தவிரவும் ஊடகவியலாளர் தரப்பிடம் குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களிடம் மற்றொரு நியாயமான கேள்வியும் உண்டு.
எது பயங்கரவாதம்? என்பதே அது.

அரசும் ஜனாதிபதியும் கூறுவது போல வியாக்கியானப்படுத்துகின்றமை போல "பயங்கரவாதிகளான' விடுதலைப் புலிகள் மேற்கொள்கின்ற வன்முறைகள் மட்டும்தாம் பயங்கரவாதமா? அல்லது தமிழர் தரப்புக் கூறுவது � பால சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் தமிழர் தேசம் மீது அரச படைகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை எனச் சுட்டிக்காட்டப்படும் "அரச பயங்கரவாதமும்' இதற்குள் அடங்குமா?

இந்தக் கேள்விகள் குறித்துத் தமக்குள் சரியான விடைகளைக் கண்டு பிடித்துத் தெளிவான நிலைப்பாடு ஒன்றை எடுக்க முடியாத பின்னணியில் போலும், ஜனாதிபதி கோரும் "அப்பாவிகள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புக் காட்டும் பிரசாரத்தை' முன்னெடுக்க முடியாமல் ஊடகவியலாளர்கள் தடுமாறுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினாலும் , காட்டாவிட்டாலும் நேற்றுமுன்தினம் தெஹிவளை அருகே ரயிலில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுத் தாக்குதல் போன்ற அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிரான கொடூரத் தாக்குதல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட்டேயாக வேண்டும். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

பத்து அப்பாவிகளைப் பலிகொண்ட அத்தாக்குதலையும் அதற்குப் பின்புலத்தில் இருந்தவர்களையும் வன்மையாகக் கண்டிக்கும்போது, அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் முறிகண்டியில் சிறுவர், பெண்கள் உட்படப் பதினாறு அப்பாவிகளின் உயிர்களைக் காவுகொள்ளும் கோழைத்தனமான கிளைமோர்க் குண்டுத் தாக்குதலையும், அதன் சூத்திரதாரிகளையும் கூட அதே அழுத்தத்தோடும், உறுதியோடும் கண்டிக்க ஊடகத் தரப்புகள் முன்வரவேண்டும்.

அதுமட்டுமல்ல. இத்தகைய கொடூரங்கள் தொடர்பான விடயத்தில், இலங்கையில் உள்ள அனைத்து மக்களினதும் சட்டபூர்வமான அரசு எனக் கூறிக்கொள்ளும் இந்த ஆட்சி எப்படி நடந்து கொள்கிறது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது அவசியமானதாகின்றது.
அரசு குறிப்பிடுவது போல தெற்கில் இடம்பெறுகின்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி சிவிலியன்கள் கொல்லப்படும்போது, அல்லது காயமடைகின்றபோது அக் கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயத்தின் இரத்தம் உறைவதற்கு முன்னரே அரசுத் தரப்பின் அமைச்சுப் பட்டாளங்கள் அங்குபோய் நின்று பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்க முண்டியடிக்கின்றன. ஆனால் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றவை போன்ற கொடூரங்கள் நடக்கும்போது அதில் பாதிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்கள் குறித்து அரசு அலட்டிக் கொள்வதேயில்லை. ஏன் அவ்வாறு கொல்லப்பட்ட அப்பாவிகள் தமிழர்கள் என்பதால் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் கொல்லப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் "பயங்கரவாதிகள்' ஆகியிருக்கின்றனரா? எனவே அங்கு இத்தகைய தாக்குதல்களில் உயிரிழக்கும் அல்லது காயமடையும் அனைவரும் "பயங்கரவாதிகள்' என்பதால் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவது அரசின் பொறுப்பல்ல என்பது அரசின் கருத்தா?

எனவே, அப்பாவிகள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி பயங்கரவாதிகளை வற்புறுத்துங்கள் என்று கோரும் ஜனாதிபதியும் அவரது அரசும் "யார் பயங்கரவாதிகள்?', "எது பயங்கரவாதம்?' என்பதையும் ஒரு தடவை தெளிவுபடுத்தினால் நல்லது.
உலகைத் திருத்துவது நாட்டைத் திருத்துவது சமூகத்தைத் திருத்துவது இவையெல்லாம் முதலில் வீட்டைத் திருத்துவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

அப்பாவிகளை இலக்கு வைப்பதைத் தவிருங்கள் என்ற நீதியான பிரசாரத்தை முன்னெடுப்பதற்கான எத்தனத்துக்கும் கூட இது பொருந்தும் என்பதை சம்பந்தப்பட்டோர் மறந்துவிடக்கூடாது.

thanks- uthayan

0 Comments: