Friday, May 2, 2008

'ஆனையிறவிற்கான விலை"

கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக வெற்றியை உறுதிப்படுத்திய தாக்குதல்களைத் திட்டமிடும்படி முப்படைத் தளபதியும் சனாதிபதியுமான மகிந்த ராஜபச்க முப்படைத் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

முப்படையினரும் இணைந்த ஒரு நடவடிக்கையாக அது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புக்களும் கொழும்பில் இருக்கும் படைத்துறை வட்டாரங்களில் நிலவுவதாகத் தெரிகிறது. கிழக்குத் தேர்தல் முடிந்த கையோடு அங்கிருந்தும் சில அணிகளைத் தருவிக்கும் வாய்ப்புக்களையும் சிலர் கோடி காட்டுகின்றார்கள்.

உத்தரவுகளும் விருப்பங்களும் எப்படி அமைந்தாலும் கள யதார்த்தத்திற்கு அமைவாக திட்டமொன்றைத் தீட்டுவதில் சிங்களப் படைத் தளபதிகள் சிண்டைப் பிய்த்துக்கொள்ளப் போவது உறுதி.

குறிப்பாக, கிளாலி-முகமாலை-கண்டல்-நாகர்கோவில் என்று கிட்டத்தட்ட 12 கி.மீ. நீளமான அந்த முன்னரங்கு, பட்டாலியுன் கணக்கில் சிறிலங்காப் படையினரைத் தின்று தீர்த்திருக்கிறது என்ற யதார்த்தத்திற்கு வெளியே நின்று திட்டமெதையும் தீட்டிவிட முடியாது.

இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த நாளில் இருந்து இன்றுவரை எந்தவொரு தனியிலக்கிற்குமான சமர்களிலும் சிறிலங்காப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட, ஆனையிறவிற்காக அதன் உள்ளும் புறமும் நிகழ்ந்த மோதல்களே சிறிலங்காப் படைத்தரப்பிற்கு அதிக இழப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அதன் புவியியல் அமைவிடமும், தரைத்தோற்ற இயல்பும் அதற்கு முக்கிய காரணிகளாக இருந்தபோதிலும், அதனால் உண்டாகும் சாதக பாதகங்கள் இருதரப்பினருக்கும் உள்ளவை என்றே கொள்ளல் வேண்டும்.

ஆகாயக் கடல் வெளிச் சமரில் விடுதலைப் புலிகள் குறித்த இலக்கை அடைய முடியாவிட்டாலும், நூற்றுக்கணக்கில் சிங்களப் படைகளைக் கொன்றிருந்தார்கள்.

அதன்பின்னர் ஓயாத அலைகள் நடவடிக்கைத் தொடரில் 2,000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றிய போது சிறிலங்காப் படைத்தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றிச் நாம் சொல்லவேண்டியதல்லை.

ஓற்றைச் சமரில் ஒரு டிவிசனையே இழுத்து மூடியது சிறிலங்கா தரைப்படை என்ற தகவல் மட்டுமே அச்சமரில் சிறிலங்கா தரப்பினர் அடைந்த இழப்பின் ஏனைய பரிமாணங்களையும் புரிந்துகொள்ளப் போதுமானது.

அதன்பின்னர், ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்காப் படையினர் முன்னெடுத்த 'அக்கினிச் சுவாலை" நடவடிக்கையின் இழப்புக்கள் உலகப் பிரசித்தம் பெற்றன என்றால் மிகையில்லை. இறந்த தொகையைவிட இரு மடங்கானோர் களத்திற்குத் திரும்ப முடியாயாதபடி காயப்பட்டனர்.

அச்சமரில் சிறிலங்காப் படையினர் வாங்கிய அடியின் வேகம் சில காலத்திற்கு பாரிய வலிந்த தாக்குதல் நடவடிக்கை எதையும் நினைத்தும் பார்க்க முடியாது என்ற நிலைக்கு அவர்களை இட்டுச்சென்றது. அதன்பின்னர் ஏற்பட்ட சமாதான ஒப்பந்த காலத்தில் பல மாதங்கள் கழிந்த நிலையிலேயே அந்த டிவிசன்கள் மீண்டும் முழுமையாக்கப்பட்டன.

பின்னர் நாலாம் கட்ட ஈழப்போரில் 2006 ஆம் ஆண்டின் ஓகஸ்ட் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் நிகழ்ந்த மோதல்களிலும் நூற்றுக்கணக்கில் படையினர் கொல்லப்பட்டார்கள். ஒக்ரோபர் மாதச் சண்டையில் பலத்த இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அந்த முன்னரங்கில் கிட்டத்தட்ட ஒன்றரை வருட காலத்திற்கு பெருமெடுப்பிலான படையெடுப்புக்களை ஒத்திப்போட்டிருந்தது சிறிலங்காப் படைத்தரப்பு.

இப்போது, 2008 ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் அங்கே படையெடுத்து கையைச்சுட்டுக்கொண்டு நிற்கிறது சிங்களப்படை. இருநூறு சிப்பாய்கள் வரை உயிரிழந்தார்கள், கிட்டத்தட்ட அதே அளவானோர் களத்திற்குத் திரும்ப முடியாதபடி காயப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஆனையிறவிற்காக மீண்டும் விலை கொடுப்பதற்குச் சிங்களம் கங்கணங் கட்டி நிற்பதன் மூலகாரணங்களை அலாதியானவை.

இந்தப் படைச் செயற்பாடுகளின் அவசரமும் அதில் ஏற்பட்ட இழப்புக்களை ஒழித்து மறைக்க முயன்ற விதமும் படைய நோக்கங்களை விட அரசியல் உள்நோங்கங்களையே கோடிகாட்டுகின்ற என்று கொழும்பு ஊடகங்களில் பத்திற்கு ஒன்பது விழுக்காடானவை கருத்து வெளியிட்டிருக்கின்றன.

அதை உண்மையாக்குவது போலவே வடபோரரங்கில் மீண்டும் மோதல்களைத் தீவிரப்படுத்துவதற்கான சிறிலங்காப் படைத்தரப்பு நடவடிக்கைகள் காணப்படுகின்றன. ஆயினும் ஆனையிறவின் மீது போர் தொடுப்பதற்கான படைய நோக்கங்களையும் குறைத்து மதிப்பிட முடியாது.

சிறிலங்காவின் படைய வரலாற்றில், இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சம்பவமாக ஆனையிறவு இழக்கப்பட்டதையே சொல்லவேண்டும். ஆனையிறவு இழக்கப்பட்டதால் குடாநாட்டின் முக்கிய கேந்திர நிலையமான பலாலி வான்தளம் புலிகளின் கணை வீச்செல்லைக்குள் வந்துவிட்டது மட்டுமல்லாது, குடாநாட்டின் மீது புலிகள் படையெடுப்பைச் செய்ய வசதியான பல கரையோர நிலைகளும் புலிகளின் வசம் வந்துவிட்டன.

ஆனையிறவு புலிகளின் கைகளிலே வீழ்வதற்கு முன்பாக அங்கு வருகை புரிந்த பன்னாட்டுப் போர் விற்பன்னர்கள், அந்தத் தளத்தை வீழ்த்துவது புலிகளுக்குச் சாத்தியமில்லை என்று கற்பூரம் கொழுத்தாத குறையாகச் சத்தியம் செய்திருந்தார்கள்.

அவர்கள் மதிப்பீட்டு அறிக்கை வழங்கி ஒரு வருட காலத்திற்கு உள்ளேயே, வரலாறு அவர்களைப் பொய்யர் ஆக்கியது.

அந்தத் தளத்தை வீழ்த்துவதற்காகப் புலிகள் பயன்படுத்திய படைவலு, படைக்கலச் சக்தி மற்றும் உத்திகள் என்பவை பற்றிய முழுமையான ஆய்வொன்றை சிறிலங்கா படைத்தரப்போ அல்லது எந்தவொரு பன்னாட்டு விற்பன்னரோ இதுவரை செய்து முடித்ததாகத் தெரியவில்லை.

இப்போது நடைபெறுவதைப்போல தமக்குள்ளே ஆள் ஆளுக்குக் கரிபூசுதல் மற்றும் அதிகாரிகளுக்குக் காற்றை இறக்கி விடுதல் போன்ற செயற்பாடுளிலேயே சிறிலங்கா படைத்தரப்பு அப்போதும் இறங்கியது. பன்னாட்டு விண்ணர்கள் வாய்களை இறுக மூடிக்கொண்டார்கள்.

இவ்வாறான பின்னணியில்தான், அக்கினிச் சுவாலை, 2006 ஒக்ரோபர் மாத நடவடிக்கை மற்றும் 2008 ஏப்ரல் மாத நடவடிக்கை என்பவற்றைச் செய்துவிட்டு நெட்டுயிர்த்து நிற்கிறது சிறிலங்கா படைத்தரப்பு.

செறிவான காலாட்படை நகர்த்தல், பல கிலோ மீற்றர்கள் அகலமான முனையை ஏக காலத்தில் திறத்தல், வரலாற்றுச் சாதனை படைக்கும் அளவிற்குச் செறிவான கணைவீச்சு, கவசப் படைகளின் செயற்பாடு, இப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட மக்-இன்பன்றியின் பங்கேற்பு, இரவு நகர்வுகள், வான்படை ஆதரவு என்று ஈரூடக முயற்சி போன்ற ஓரிரு உத்திகளைத் தவிர இன்னோரன்ன எல்லாவற்றையும் செய்து பார்த்துவிட்டது சிறிலங்காப் படைத் தரப்பு.

இதைவிட, நாலாம் கட்ட ஈழப்போரில் சிறிலங்கா தரப்பு பெரிதும் நம்பியிருக்கும் படைக்கலச் சக்திப் பயன்பாட்டில் அடியொற்றிய மூலோபாயத்தில் ஆண்டுக்கணக்கில் தொங்கி நிற்பதற்கான ஆயத்தங்களையும் கொள்வனவுகளையுமே படைத்தரப்பினர் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

தமது தரப்புப் படைக்கலச் சக்தி மேம்பாட்டிற்குத் தாரளமாக உதவக்கூடிய கூட்டாளி நாடுகளையே மகிந்தர் தேடித்தேடிப் பிடிப்பதாக தாயகப் படைத்துறை அவதானி ஒருவர் தெரிவித்தார். ஆயினும், முக்கிய படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடையே கொழும்பு நிருவாகம் அமைத்து வரும் கூட்டணிகள் தொடர்பான கருத்து வேற்றுமைகள் இருப்பதாகவும், அவை நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்றும் அவர் சொன்னார்.

இயற்கை, வாழ்வு அனுபவம், வரலாறு என்பவற்றில் இருந்து தனது உத்திகளையும் மூலோபாயங்களையும் வகுத்துக்கொள்ளும் விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் அவர்களின் வியூகங்களின் சிறப்பு, ஆனையிறவைக் கைப்பற்றுதல் மற்றும் அதற்கான பாதுகாப்பு வியூகங்களை வனைதல் என்பவற்றில் மிளிர்வதை இலங்கைத் தீவின் படைய நிகழ்வுகளை ஆய்வு செய்வோர் எவரும் மறுப்பதில்லை.

அந்த நுட்பங்களுக்கு முன் வெறும் படைக்கலச் சக்தி எடுபடாது என்பதை ஏப்ரல் மாத இறுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மீளவும் நிரூபித்திருக்கிறது என்ற கருத்தையே அவர்களும் கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் மீண்டும் முகமாலை வட போரரங்கில் ஏற்படக்கூடிய மோதல்கள் இத்தீவின் படைய வரலாற்றில் புதிய சில பரிமாணங்களை வெளிப்படுத்தும் என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளார்கள்.

நன்றி: வெள்ளிநாதம் (02.05.08)
-சேனாதி-

0 Comments: