Wednesday, May 28, 2008

'மஹிந்த சிந்தனை' ஆட்சியில் தகிக்கின்றது இலங்கைத் தீவு

"குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடிய கதையாக' இருக்கிறது ஜே.வி.பி. இப்போது மேற்கொள்ளும் பிரசாரமும் சூளுரையும்.

தற்போது ஆட்சியிலிருக்கும் அரசை வீழ்த்தி விரைவில் நாட்டுக்குப் பொருத்தமான மக்களின் விருப்பை நிறைவேற்றக்கூடிய அரசை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் அது பிரதிக்ஞை செய்திருக்கின்றது.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அதன் ஐந்தாவது தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வா இவ்வாறு சபதம் செய்திருக்கின்றார்.
நல்லது. இன்று தான் சூளுரைக்கும் விவகாரத்தைத் தன்னால் செய்யக்கூடியதாக இருந்தபோது, "மஹிந்த சிந்தனை'யைத் தூக்கிப்பிடித்து, அந்த வாய்ப்பைக் கோட்டை விட்ட ஜே.வி.பி., இப்போது "கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல' தத்துவம் பிளக்கின்றது.

கடந்த வருட இறுதியில், இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின்போது, இந்த அரசை வசமாக வீழ்த்தி, பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்லும் முழு வாய்ப்புகளும் இருந்தன.

ஆனால் ஆளும் தரப்பின் சில "தரகு' முகவர்களுக்கு விலைபோன ஜே.வி.பியின் மூத்த தலைவர்கள், இந்த அரசைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் அந்த நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது செயற்படுவதற்கு எதிர்க்கட்சிகள் தீட்டியிருந்த திட்டத்துக்குக் காலை வாரிவிட்டன. அதன் மூலம் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்குக் கிடைத்த பெரு வாய்ப்பை சிதறடித்து நாசமாக்கினர் அந்த ஜே.வி.பி. தலைவர்கள்.

ஒன்று திரண்டிருந்த எதிர்க்கட்சிகளோடு ஜே.வி.பி. அன்று ஐக்கியப்பட்டுச் செயற்பட முன்வந்திருந்தால், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செருக்குக்கு நல்ல பதிலடியை அப்போதே கொடுத்திருக்கலாம்.

ஆனால் அச்சமயத்தில் சோரம்போன ஜே.வி.பி. தலைவர்களினால் எதிர்க்கட்சிகளின் அந்த முயற்சியும் சோர்ந்து போயிற்று.

இப்போது மீண்டும் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. தலைமை வரிந்துகட்டி நிற்கின்றது.
ஆனால் தற்போது ஜே.வி.பி. இண்டாக உடைந்துவிட்டது என்பதுதான் யதார்த்தபூர்வ உண்மையாகும். நாடாளுமன்றத்தில் ஜே.வி.பியைச் சேர்ந்த 38 எம்.பிக்களில் பதினொரு பேர் பிரதான ஜே.வி.பி. அணியில் இன்று இல்லை.

இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப இப்போது ஜே.வி.பி. தீர்மானித்தாலும் அதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இந்தச் சமயத்திலாவது கூட்டுச் சேர்ந்தாலும் கூட தற்போதைய அரசை நாடாளுமன்றில் தோற்கடிப்பதற்கான பலம் எதிரணிக்குக் கிட்டுவது துர்லபமே.
அத்தகைய முயற்சி ஒன்றின்போது, தற்சமயம் ஜே.வி.பியை விட்டு விலகித் தனி அணி உருவாக்கியிருக்கும் விமல் வீரவன்ஸ குழுவினர் அரசுத் தரப்புக்கு முதுகு கொடுத்து முண்டு கொடுத்து அரசைக் காப்பாற்றி விடுவார்கள் என்பது திண்ணம்.

ஜே.வி.பியின் உதவி, ஒத்துழைப்பால் ஜனாதிபதி அதிகாரத்தைப் பிடித்த மஹிந்த ராஜபக்ஷ தமது அந்தப் பதவி நிலைச் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. உட்பட சகல கட்சிகளையும் வரிசையாக உடைத்தார். பதவி ஆசைக்கு அடிமைப்பட்ட அரசியல்வாதிகளைப் பகடைக்காய்களாக்கி ஒவ்வொரு கட்சியாக உடைத்துப் பிளந்த மஹிந்தரின் கைகளில் ஜே.வி.பியாலும் தப்பமுடியவில்லை. அதையும் பிளந்து, தாம் பதவிக் கதிரைக்கு ஏற உதவிய ஜே.வி.பி. ஏணியையும் பிளந்தார் மஹிந்தர். அதன் பின்னர்தான் இப்போது சூடு, சுறணை வந்திருக்கிறது ஜே.வி.பிக்கு. அதனால்தான் இப்போது அரசைக் கவிழ்ப்பது பற்றியும் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது குறித்தும் சீறுகின்றது அக்கட்சி.

அத்தோடு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா இன்றைய அரசியல் சூழல் தொடர்பாக கட்சியின் தேசிய மாநாட்டில் தெரிவித்த ஒரு கருத்தும் இங்கு கவனிக்கத்தக்கது.
கிழக்கில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இனக்கலவரத்தை மஹிந்த ராஜபக்ஷவின் அரசே தூண்டிவிட்டிருக்கின்றது என்று அவர் அங்கு குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அதேநேரம், கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற இடங்களிலும் அப்பாவிகளைக் கொன்றொழிக்கும் கொடூரக் குண்டு வெடிப்புகளை மேற்கொள்வதன் மூலம் தெற்கில் மீண்டும் ஓர் இனக்கலவரத்துக்குப் புலிகள் தூபமிடுகின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியிருக்கின்றார்.

இத்தகவல்களும், பரஸ்பரக் குற்றச்சாட்டுகளும், இலங்கையில் கள நிலைமை முற்றி மிக மோசமடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகின்றன.
நிலைமையை உடன் சீர் செய்யக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் முழு இலங்கைத் தீவுக்குமே விபரீதம் நேர்வதைத் தடுக்க முடியாது என்பது திண்ணம்.
வடக்கு, கிழக்கில் தமிழர் தாயகத்தில் என்றுமில்லாத போர்த் தீவிரத்தில் தரப்புகள்.
கிழக்கில் தமிழர் முஸ்லிம் உறவில் மிக நெருக்கடியான, மோசமான நிலைமை.
தெற்கில் எந்நேரமும், எங்கும் குண்டுகள் வெடிக்கலாம் என்று அச்சம். இனக்கலவரம் பரவும் ஆபத்தும் கூட.

இப்படி "மஹிந்த சிந்தனை' ஆட்சியின் சூட்டில் தகித்துக்கொண்டிருக்கின்றது தேசம்.


நன்றி :-உதயன்

0 Comments: