Tuesday, May 20, 2008

மண் மீட்புப் போர் போல மொழி மீட்புப் போரும்!

"மண் மீட்புப் போர் போன்று, மொழி மீட்கும் போரும் அவசியமானது. இதில் தமிழ் மக்கள் முழு மூச்சுடன் ஈடுபடுவது கட்டாயமானது.'' இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழீழக் கல்விப் பொறுப்பாளர் வெ. இளங்குமரன்.

மண் மீட்புப் போர் எவ்வாறு ஓர் இனத்தின் அரசியல், வாழ்நிலை விவகாரங்கள் சார்ந்ததோ, அந்தளவு முக்கியமானது மொழி மீட்புப் போரும் கூட. இதுதான் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையாகும்.

பேரினவாதத்தின் ஆதிக்கத்தில் ஈழத் தமிழரின் தாயக மண் பறிபோய்க்கொண்டிருப்பது போல், தொன்மை மிக்க தமிழினத்தின் சிறப்பும் அந்நிய மொழிக்கலப்பு ஆதிக்கத்துக்குட்பட்டு தனித்துவத்தைப் பறிகொடுக்கும் போக்கால் கெட்டழிந்து கொண்டிருக்கின்றது.
தாயக மண் மீட்புக்காக ஒரு போராட்டம் நடத்துவதுபோல தாய்மொழி தமிழைப் பேணித் தக்கவைப்பதற்காகவும் ஒரு போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயநிலை தமிழினம் மீது இன்று சுமத்தப்பட்டிருப்பதையே இளங்குமரன் சுட்டிக்காட்டுகின்றார்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வளமான வாய்த்த மொழியாகத் தமிழ் விளங்கி வருகின்றது. சங்க இலக்கியங்களின் சொற் களஞ்சியங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. வியப்புத் தரும் சிறப்புடன் காலங்கடந்து உயர்ந்து நின்ற நிற்கின்ற மொழி நம்முடையது.
தொன்மையான பல மொழிகள் வழக்கிழந்து, அழிந்துபோன நிலையில் இரண்டு மொழிகள் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தம் மக்கள் மத்தியில் சாகாவரம்பெற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன என இளங்குமரன் சுட்டிக்காட்டுகின்றார்.
ஒன்று சீனம். மற்றையது தமிழ்.

இன்று உலக மக்கள் தொகையில் கால் பங்கினர் சீனர்கள். அவர்களில் 95 வீதத்திற்கும் அதிகமானோர் ஒரே மொழியான சீனத்தைப் பேசி, ஒரு தேசியத்துள் கட்டுண்டு கிடப்பவர்கள். இதனால் மேலைத்தேய ஆதிக்கம் ஊடுருவ முடியாத ஒரு காப்பரணுக்குள் தம் மொழி பேணி, தம் தேசியம் பேணி, தம் தாயகம் பேணி, தமது தனித்துவம் பேணிப் பாதுகாப்புடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

தொடராக ஆட்சி அதிகாரத்திலிருக்கும் தமது தேசியப் பண்பியல்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆட்சி முறையின் கீழ், சீன மொழியின் தனித்துவமும், சிறப்பும் பாதுகாக்கப்பட்டு, பேணப்பட்டுவந்துள்ளன.

ஆனால் தமிழ் மொழியின் நிலைமை அதுவல்ல. இலங்கையிலும் சரி, இந்தியாவிலும் சரி, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் வாழும் இன்னோரன்ன பிற தேசங்களிலும் சரி, ஆட்சி மொழி அந்தஸ்து சட்ட ஏற்பாடுகள் மூலம் தமிழருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அங்கெல்லாம் தமிழர்களின் அடிமை வாழ்வு தொடர்கின்றது. இன்றும் இன்னும் சுதந்திர, சுயாதீன, சுரண்டலற்ற வாழ்க்கைமுறை மாறவேயில்லை; மாற்றப்படவேயில்லை.
செயலளவில் அதிகார வகையில் ஆட்சி மொழி உரிமை இத்தேசங்களில் தமிழுக்குக் கிடைக்காவிட்டாலும் கூட, சீன மொழிக்கு நிகராகவும், பூகோளப் பந்தில் தமிழ் மொழி சிறப்புற்று, சீர்பெற்று, தொடர்ந்து தலைநிமிர்ந்து நிற்கின்றது என்றால் அதற்குக் காரணம் அம்மொழியின் தனிச்சிறப்பும், வளமையான இனிமையும்தான் என்று சுட்டிக்காட்டுகின்றார் இளங்குமரன்.

பல மொழிக்கலப்பினாலும், ஆதிக்க ஊடுருவல்களினாலும் தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்கும் ஆபத்து உள்ள இச்சூழ்நிலையில் அதன் சிறப்பைப் பேணிப் பாதுகாக்கின்ற ஒரு வரலாற்றுக் கடமை இந்தச் சந்ததியின் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த வரலாற்றுக் கடமையைப் புரிவதற்குத் தயாராகுமாறு தமிழர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கின்றார் இளங்குமரன்.

தமிழ் இனத்தின் கௌரவ வாழ்வை மீட்பதற்காக மண் மீட்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவது போல தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்கான உயிர்ப்புள்ள போராட்டம் ஒன்று தீவிரத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டிய காலகட்டம் இது என்று அவர் குறிப்பிடுகின்றார்.

நமது மொழி காக்கப்பட வேண்டும். நமது கலை, பண்பாடு, கலாசாரம், வாழியல் விழுமியங்கள், மரபு ரீதியான மகிமைகள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதற்கான விழிப்புணர்வு தமிழ் மக்களிடையே கிளர்ந்தெழ வேண்டும்.

தமிழ் மொழியைப் பேணும் போராட்டத்தை வழிப்படுத்துவதிலும், அதற்காகத் தமிழ் மக்களைக் கிளர்ந்தெழச் செய்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெகுஜன ஊடகங்களின் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களின் பங்கு முக்கியமானது. தமிழ் ஊடகங்கள் தமது பங்களிப்பை சுயபரிசோதனை செய்து அளவீடு செய்துகொள்வதும் கூட இன்றைய தேவையாகவுள்ளது.
தமிழை மேலும் வளப்படுத்தி, செழுமைப்படுத்தி, உலக வாழ்வியல் பெறுமானங்களுக்கு ஏற்றதாக அதனை நேர்சீரமைக்கும் உயரிய சேவை ஒருபுறமாகவும்
பிறமொழிக் கலப்பாலும், பொறுப்பற்ற பாவனையாலும் தமிழ்மொழி கெட்டழிவதைத் தடுப்பது மறுபுறமாகவும்
இருமுனைப் பணியாக இது முன்னெடுக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இதுவும் ஒரு மீட்புப் போரே.

நன்றி :- உதயன்

0 Comments: