Friday, May 30, 2008

'வரலாறு வழங்கப் போகும் தீர்ப்பை யாரால்தான் தடுக்க முடியும்?"

வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதன் தவறுகளை மீளவும் செய்ய சபிக்கப்பட்வர்களாவர் - இது ஜேர்மனிய சிந்தனையாளர் ஜோhஜ் சத்நயணாவின் வார்த்தை. சமீப காலமாக சிங்களத்தின் இறுமாப்பு நிறைந்த வார்த்தைகளை கேட்க நேரும் போதெல்லாம், நான் இந்த வரிகளை நினைத்துக்கொள்வதுண்டு.

உலக மேலாதிக்க அரசியல் வரலாற்றில் இந்த வரிகள் யாருக்கெல்லாம் பொருந்திப் போகும் என்ற ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் ஒடுக்குமுறைகளின் ஏகபோகவாதிகளாக எப்போதுமே இருக்க முடியும் என நம்புவோருக்கெல்லாம் இந்த வரிகள் பொருந்தும்.

சிங்களத்தின் நவீன அரசியல் வரலாறு என்பதே தமிழர்களை அடக்கி ஆண்டதன் வரலாறுதான். ஓவ்வொரு கால கட்டத்திலும் தெற்கின் ஆட்சியைக் கைப்பற்றும் சிங்கள ஆளும் வர்க்கம் அந்த ஒடுக்குமுறை வரலாற்றைத் தொடர்வதில் அப்பழுக்கற்ற முறையில் ஒற்றுமையைப் பேணி வந்திருக்கின்றது.

இன்று அந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பை மகிந்த தலைமையிலான சிங்கள ஆளும் வர்க்கம் பொறுப்பேற்றிருக்கிறது.

'அடுத்த வருடம் யுத்தம் இருக்கப் போவதில்லை. நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவரை இல்லாமலாக்கி விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து விடுவோம். இப்பொழுது அங்கு சிறு தொகையான புலிகள் மட்டும்தான் எஞ்சியிருக்கின்றனர். அவர்களையும் விரைவில் அழித்து விடுவோம்". சமீப காலமாக இப்படியான வசனங்களை அடிக்கடி கேட்க முடிகின்றது.

இப்படியான வீரவசனங்களைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.தீட்சித் 87 களில் கூறிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்து போகும். இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தை ஏற்கும் படி பல்வேறு வகையான பசப்பு வார்த்தைகளைப் பயன்படுத்திய தீட்சித் இறுதியில், 'எனது சுங்கான் பற்றி முடிவதற்குள் உங்களை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்" என ஆவேசமாகக் கூறினார்.

அன்று தீட்சித்தின் ஆவேசமான இந்த வார்த்தைகளை அமைதியாகச் செவிமடுத்த திரு. பிரபாகரன் அவர்கள் 'சரி பார்ப்போம்" என்றார். இப்பொழுதும் அவரது நிலைப்பாடு அப்படித்தான் இருக்கின்றது. எவ்வேளையிலும் தடுமாறாமல் புலிகள் வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்டு தமது பயணத்தைத் தொடர்கின்றனர்.

இந்த இடத்தில் நாம் கடந்து வந்த அரசியல் வரலாற்றின் ஒரு சிறு பகுதியை நினைத்துக் கொள்வோம்.

தமிழர் தேசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் வளர்ச்சியானது கோரிக்கை அரசியலில் இருந்து விடுபட்டு, எதிர்ப்பு அரசியலாகப் பரிணமித்த காலத்திலிருந்து இன்று வரையான சிங்களத்தின் பௌத்த தேசியவாத கொள்கை என்பது தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டதே. இது தவிர வேறு எந்த நோக்கமும் அதற்குக் கிடையாது. அந்த நோக்கத்திற்கு இசைவாகவே இன்று வரை சிங்களம் செயலாற்றி வருகின்றது.

70-களின் பிற்பகுதியிலிருந்து, தமிழர் தேசிய விடுதலை என்பது, ஒரு ஆயுத வழி புரட்சிகர அரசியல் வழிமுறையினூடாகவே சாத்தியப்படக்கூடியது என்ற வாதம் தமிழ் மக்கள் மத்தியில் வலுவடைந்தது.

இதன் தொடர்ச்சியாகத்தான் பல ஆயுத வழி அரசியல் இயக்கங்களும் தோன்றின. அவ்வாறு தோன்றிய இயக்கங்கள் தமக்குள் கோட்பாடு மற்றும் அரசியல் நிலைப்பாடுகளில் சில வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்தல், தமிழ் மக்கள் சுய கௌரவத்துடனும், தன்னாட்சி அதிகாரத்துடனும் வாழ்தல் போன்றவற்றில் உடன்பாடுகளைக் கொண்டிருந்தன.

இத்தகைய பின்புலத்தில்தான் அவ்வாறான இயக்கங்களினால் ஒன்றிணைந்து திம்புப் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ள முடிந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் தோல்வியையே இந்தியா தனது நேரடி தலையீட்டிற்கான ஒப்பந்தமாக வளர்த்தெடுத்தது.

இந்தக் காலத்தில் இந்தியா தனது மேலாதிக்க நலனின் கீழ் தமிழர் பிரச்சினையை அணுகியது. இதன் ஆபத்தை விளங்கிக்கொண்ட விடுதலைப் புலிகள் ஆரம்பம் தொட்டே இந்தியாவுடன் ஒரு வகையான பனிப்போரில் ஈடுபட்டனர். அதுவே காலப்போக்கில் இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நேரடி மோதலாகப் பரிணமித்தது.

இந்த இடத்தில் குறித்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நரித்தனமான அரசியலில் கைதேர்ந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் மனதில் ஒரு தெளிவான நிகழ்சி நிரல் இருந்திருக்க வேண்டும்;. ஜே.ஆரைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைப் போராட்டத்தை மிக இலகுவில் அழித்தொழித்துவிட முடியுமென்றே அவர் கருதியிருந்தார்.

இதனால்தான் 1979 இல் பயங்கரவாத தடைச்சட்டத்தை நிறைவேற்றியதுடன் ஆறு மாத காலத்தில் தமிழரின் அயுதப் போராட்டத்தை அடக்கி தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு இராணுவத் தளபதிகளுக்கு கட்டளை பிறப்பித்திருந்தார். இதனை ஒரு சிங்கள ஆய்வாளரே 'தீவிர சுய மகிழ்ச்சி எதிர்பார்ப்பு" என்று வர்ணித்திருந்தார். ஆனால் இலங்கை உள்விவகாரங்களில் இந்தியா தலையிட்டதைத் தொடர்ந்து ஜே.ஆரின் மூளை வேறு ஒரு விடயத்தைச் சிந்தித்திருக்க வேண்டும்.

அதாவது இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒன்றிணைந்த தமிழர் போராட்ட சக்தியை சிதறடித்தல் மற்றும் இந்தியாவுடன் தமிழர்களுக்கு இருக்கும் உறவை வலுவிழக்கச் செய்தல்.

நான் இவ்வாறு கூறுவதற்கெல்லாம் எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. ஆனால், பிற்காலங்களில் நடைபெற்ற சம்பவங்களையும் அரசியல் போக்குகளையும் அடியொற்றிச் சிந்திக்கும் போது இவ்வாறானதொரு மதிப்பீட்டிற்கான நியாயப்பாடு உண்டு.

இந்தியா - சிறிலங்கா ஒப்பந்தத்தின் போது இந்தியாவிற்கு ஒரு நலன் இருந்தது. அதேபோன்றே ஜே.ஆருக்கும் ஒரு நலன் இருந்தது. இலங்கையின் தமிழ் ஆயுத இயக்கங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தைத் தனது மேலாதிக்கத்தினுள் கொண்டு வருவதே இந்தியாவின் நலனாக இருந்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனவைப் பொறுத்த வரையில் நான் மேலே குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் ஜே.ஆரின் நலன்களாக இருந்தன. ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தனமான அரசியல் தந்திரோபாயத்திற்கு இந்தியா பலியானது. இறுதியில் இந்தியாவின் முயற்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுடன் மோதுவது என்ற இந்தியப் படைத்துறை முடிவால் படுதோல்வியடைந்தன.

ஜே.ஆர். எதிர்பார்த்தது போன்றே தமிழர் விடுதலை இயக்கங்கள் இந்தியா என்னும் மாயமானுக்குப் பின்னால் அணிதிரண்டன. விடுதலைப் புலிகள் ஒரு அணியாகவும், இந்தியாவிற்கு பின்னால் நின்ற இயக்கங்கள் ஒரு அணியாகவும் மாறியதில் தமிழர் போராட்ட வலு சிதறியது. அத்துடன் அதுவரை இந்தியா குறித்த கற்பனைகளில் இருந்த ஈழத் தமிழ் மக்கள் இந்தியாவை எதிர்க்கத் தொடங்கினர்.

இந்தக் காலத்தில் ஜே.ஆரால் போடப்பட்ட சிங்கள அடித்தளத்தில்தான் இன்றுவரை சிங்களம் இயங்கி வருகின்றது. இராணுவ ரீதியான ஒரு வழிமுறையினுடாக தமிழர் போராட்டத்தை அழித்தொழிக்கும் அதேவேளை தமிழர் சமூகத்தில் எதிர்ப் போராட்ட அணிகளை உருவாக்கி உள்ளக ரீதியாகவும் தமிழர் போராட்டத்தை அழித்தொழித்தல் என்னும் இருமுனை யுத்த தந்திரோபாயம்தான் ஜே.ஆரின் பால பாடமாகும்.

ஜே.ஆரின் தந்திரோபாயத்திற்கு நமது தலைமுறை பலியாகியிருக்கின்றது என்பதை நாம் மனந்திறந்து ஏற்கத்தான் வேண்டும். இன்றுவரை விடுதலைப் புலிகளுக்குச் சவாலாக இருப்பது சிங்களத்தின் இராணுவம் அல்ல, தமிழ் சமூகத்திற்குள்ளே இருந்து தொழிற்படும் அவ்வறான தமிழ்த் தேசிய எதிர் அரசியல் அமைப்புக்கள்தான்.

1987 இன் பின்னர் சிங்களத்தின் அரசியல் கொள்கை என்பது பலமடைந்து வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்தொழிப்பதாகத்தான் இருந்தது. அதற்கான எவரது உதவியையும் பெறுவது, அதற்காக அவர்களுடன் எவ்வாறான உடன்பாடுகளையும் செய்வது என்ற நிலைப்பாட்டிற்கு சிங்களம் சென்றது. சிங்களத்தின் இன்றைய வெளிநாட்டுக்கொள்கை என்பதே விடுதலைப் புலிகளை மையப்படுத்தியதுதான்.

ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை முற்றிலும் ஒரு விடுதலை இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டு இருப்பது சிறிலங்காவில் மட்டுமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இத்தகைய பின்புலத்தில்தான் ஜே.ஆர். நினைத்து முடியாமல் போனதை, பிரேமதாசா நினைத்து முடியாமல் போனதை, சந்திரிகாவும் அவரது மாமனாரும் கற்பனை செய்து முடியாமல் போனதை இப்பொழுது மகிந்தவும் அவரது சகோதரர்களும் இணைந்து கற்பனை செய்கின்றனர்.

கிழக்கில் கருணா விடயத்தால் ஏற்பட்ட சில தடைகளால் புலிகள் கிழக்கிலிருந்து போரியல் சார்ந்து பின்நகர வேண்டிய தேவை ஏற்பட்டது. வெளித் தோற்றப்பாட்டில் இது ஒரு பின்னடைவுதான்.

இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்ட மகிந்த தலைமையிலான சிங்களம் அதே போன்று வடக்கையும் இராணுவ ரீதியாக வெற்றி கொள்ள முடியுமென்ற நப்பாசையில் தனது படைகளை நகர்த்தி வருகின்றது. இப்பொழுது தடுமாறுகிறது.

எப்போதுமே சொந்த மூளையில் இயங்காத சிங்களத்தின் படைத்துறை, எப்போதுமே சொந்த மூளையை மட்டுமே நம்பும் போரியல் திறன் கொண்ட புலிகளை எதிர்கொள்வதில்
தடுமாறுகின்றன.

சிங்களம் இன்று இறுமாப்புடன் நோக்கும் அதன் கிழக்கு வெற்றிகளையும் அதிக காலத்திற்கு அது தக்க வைக்கப் போவதி;ல்லை. சிங்களம், புலிகளை அழித்தொழித்து விடுவதாக அங்கலாய்க்கும் போதெல்லாம் புலிகளோ, திரு. பிரபாகரன் அவர்கள் அன்று தீட்சித்திடம் சொன்ன வார்த்தைகளுடன் தமது பயணத்தை எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் தொடர்கின்றனர்.

வரலாற்றில் இருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத சிங்களத்திற்கு (மகிந்த அணியினருக்கு) வரலாறு வழங்கப் போகும் தீர்ப்பை யாரால்தான் தடுக்க முடியும்?.
-தாரகா-
நன்றி: நிலவரம் (30.05.08)

0 Comments: