இலங்கையின் நாடாளுமன்றம் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் திடீரென ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.நாடாளுமன்ற அமர்வுகளை ஜூன் 5ஆம் திகதி வரை இடைநிறுத்தும் முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தச் சந்தர்ப்பத்தில் அதுவும் முன்பின் கோடிகூடக் காட்டாமல் திடீரென எடுத்தமை குறித்து அவரது அரசுக்குள்ளேயே மூத்த தலைவர்கள் சிலர் ஆச்சரியம் தெரிவித்திருக்கின்றனர்.
எதற்காக இத்தீர்மானத்தை ஜனாதிபதி அதிரடியாக எடுத்தார்?
நான்கு குருடர்கள் யானையைத் தொட்டுணர்ந்து அதனடிப்படையில் அதன் தோற்றத்தை விமர்சித்தமை போல ஜனாதிபதியின் இந்த திடீர் அரசியல் முடிவுக்கும் பலரும் பலவித காரணங்களைக் கூறுகின்றார்கள்; அர்த்தங்களைக் கற்பிக்கின்றார்கள்.
நாடாளுமன்ற இடைநிறுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அடிப்படையான காரணங்களாகக் கூறப்படுபவை பல. அவற்றில் சில வருமாறு:
* கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் அரசுத் தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புலிகளுக்கும் இடை யில் இருந்த உடன்பாடு குறித்து விசாரித்து, உண்மையைக் கண்டறிவதற்கு ஒரு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும்படி கோரும் எதிரணியின் பிரேரணை ஒன்று நாடாளுமன்றின் முன் நிலுவையில் உள்ளது. மேற்படி நாடாளுமன்ற இடைநிறுத்த முடிவின் விளைவாக அந்தப் பிரேரணை செயலிழக்கச் செய்யப்படுகின்றது.
* அரசுத் தரப்பில் இப்போது உள்ள பல மூத்த அரசியல் தலைவர்களை பலகோடி ரூபா ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளில் சிக்க வைத்துள்ள, பொது நிறுவனங்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றக் குழு மற்றும் பொதுக் கணக்குகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு போன்ற நிலையியல் குழுக்கள் இவ்வாறு நாடாளுமன்ற இடைநிறுத்தத்தால் செயலி ழந்து போயுள்ளன. இதனால் மேற்படி ஊழல் பிரமுகர்களுக்கு வரவிருந்த நெருக்கடிகளைத் தணிய வைத்திருக்கிறார் ஜனாதிபதி.
* நடக்கவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசுத் தரப்பு மேற்கொள்ளவுள்ள தில்லுமுல்லுகள் குறித்து பரப்புரை செய்வதற்கான தகுந்த மேடையாக நாடாளுமன்றத்தை எதிரணி பயன்படுத்துவதைத் தடுக்கவே இப்படிச் செய்யப்பட்டது.
* கிழக்கு மாகாணத் தேர்தலில் அரசுக்குக் கிடைக்கக் கூடிய தோல்வியை அடுத்து நாடாளுமன்ற ஆசனங்களின் அட்சரகணித சமன்பாட்டில் தமக்கு ஏற்படப்போகும் சிக்கல்களை எதிர்கொள்ளாமல் தவிர்த்துத் தள்ளிப்போடும் எத்தனமாகவே முன்கூட்டியே இந்த ஏற்பாட்டை அரசுத் தரப்பு செய்து கொள்கின்றது.
இப்படி யானை பார்த்த குருடர்கள்போல எதிரணிப் பக்கத்திலிருந்து பலரும் பலவிதமான விளக்கங்களைத் தந்தபடி இருக்கின்றார்கள்.
ஆனால் அரசுத் தலைமை எடுத்த இந்த முடிவை அதன் தற்போதைய செயற்போக்கின் பின்புலத்தில் வைத்து நோக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள எல்லைகளற்ற எதேச்சாதிகார அதிகாரப்பலத்தை வைத்துக்கொண்டே தனது ஆட்சியைக் கொண்டிழுக்கும் அரசுத் தலைமை, இப்படி நாடாளுமன்றம் இடைநிறுத்தப்படுவதன் மூலம் அந்த அவசரகாலச்சட்டம் காலாவதியாகிவிடாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதில் கண்ணாக இருந்துள்ளது என்பது தெளிவு.
அதன் காரணமாகவே அவசரகாலச் சட்ட நீடிப்புத் தொடர்பாக அரசமைப்பு வலியுறுத்தியுள்ள ஒரு மாத காலக்கெடுவுக்கு மேற்படாமல் நாடாளுமன்றம் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அன்றைய தினமே (நேற்று முன்தினமே) நாடாளுமன்றமும் ஒருமாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நீடிக்க வேண்டிய இறுதிக்கால எல்லை வரும்போது ஜூன் 6 ஆம் திகதியன்று நாடாளுமன்றம் கூடி, அந்த வேலையை நிறைவேற்றுவதற்கு வசதியளித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருகின்றது.
அரசுத் தலைமையின் இந்தச் செயற்பாட்டை, அண்மையில் அரசுத் தலைமையிலிருந்து பிரதிபலிக்கப்பட்ட சில தகவல்கள் மற்றும் கருத்துகளோடு இணைத்தே நாம் நோக்கவேண்டும்.
* வடக்கில் புலிகளுக்கு எதிராகப் பெரும் படை நடவடிக்கை விரைவில் முன்னெடுக்கப்படும்.
* தேவையானால் யுத்தச் செய்திகள் தொடர்பாக பத்திரிகைத் தணிக்கையையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவை இரண்டும் அரசுத் தலைமையால் அண்மையில் கோடி காட்டப்பட்டு வந்த விடயங்கள்.
பெருத்த எடுப்பில் படை நடவடிக்கை ஒன்றை எடுக்கும்போது உயிர், உடைமைகளுக்குப் பேரழிவு ஏற்படும். மனிதப் பேரவலம் உருவாகும். அப்பாவிகளின் உயிர்கள் பல நூற்றுக் கணக்கில் அநியாயமாகக் காவுகொள்ளப்படும். அட்டூழியங் கள் அரங்கேறும். அராஜகம் தலைவிரித்தாடும். அடக்குமுறை கட்டவிழும். அதேவேளை, அரசுப் படைகள் பேரிழப்புகளை யும் நாசங்களையும், மோசமான பின்னடைவுகளையும் எதிர்கொள்ளும் நிலைமை கூடநேரலாம்.
இந்தக் கொடூரங்கள் பற்றிய தகவல்கள் மக்களுக்கு எட்டுவதைத் தணிக்கை மூலமும், ஊடக அடக்குமுறை எத்தனங்கள் மூலமும் கட்டுப்படுத்தலாம். ஆனால் நாடாளுமன்றத்தை மேடையாகப் பயன்படுத்தி உண்மைகளை எதிரணியினர் புட்டுவைப்பதை அம்பலப்படுத்துவதை தணிக்கை விதிகளால் தடுக்கவே முடியாது. நாடாளுமன்ற உரைகள் பற்றிய செய்திகளையோ, நாடாளுமன்ற நடவடிக்கைகளையோ செய்தித் தணிக்கைச் சட்டங்கள் கட்டுப்படுத்த மாட்டா என்பதால், யுத்தத்தை ஒட்டி அரசு எடுக்கப்போகும் அதிதீவிரச் செயற்பாடுகள் பற்றிய உண்மைகள் அம்பலமாவதைத் தடுப்பதற்கு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெறாமல் இடைநிறுத்துவதே ஒரே வழி. அதுவே இப்போது முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றம் ஒரு மாத காலத்துக்கு ஒத்திவைக்கப் பட்டு, அதி தீவிர யுத்த நடவடிக்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. இனி என்ன? செய்தித் தணிக்கையும் அதைத் தொடர்ந்து போர் முனைப்பும் கட்டவிழும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி - உதயன்
Thursday, May 8, 2008
தீவிர யுத்தத்துக்குக் கட்டியமே நாடாளுமன்ற இடைநிறுத்தம்
Posted by tamil at 6:49 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment