Wednesday, May 28, 2008

கொசோவா சுதந்திரப் பிரகடனம் காலனித்துவத்தின் வேறு ஒரு வடிவமா?

கடந்த மாதம் நடுப்பகுதியில் ஆஸ்திரிய வியன்னா பல்கலைக்கழகத்தில் 'கொசோவாவின் எதிர்காலம்" என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எனது பல்கலைக்கழக ஆய்வு ஒன்றிற்காகாகச் அங்கு சென்றிருந்த நான் எனது பணிகளைப் புறந்தள்ளி விட்டு இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் ஆவலைத்தூண்டியது மேற்படி தலைப்பு.

அத்தோடு இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்திலிருந்து கோபமும் சீற்றமுமாய் வந்திருந்த கொசோவாவைத் தாயகமாகக் கொண்ட எனது தோழி ஒருத்தியும் எனது ஆவலை மேலும் தூண்டிவிட்டாள்.

கொசோவா சுதந்திரப்பிரகடனம் செய்ததிலிருந்து 'கொசோவா" ஈழப்பரப்பில் ஒரு மந்திரச்சொல்லாகவே மாறிவிட்டது. சிலர் ஈழத்து ஊடகப்பரப்பில் அதற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியிருந்ததன் விளைவு அது.

எமது ஊடகங்கள் தொடர்ந்து கட்டமைத்த இந்த மாயத்தன்மையினூடாக ஒரு 'புரிதலை" பெற்றுக்கொண்ட சாதாரண ஈழத்துப் பிரஜை ஒருவர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசப்பட்ட விடயங்கள், சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளை பார்க்க நேரிட்டால், பின்பு அனேகமாக நாம் அவரை ஒரு மனநல விடுதியில்தான் சந்திக்க நேரிடும். இதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. ஏனெனில் 'கொசோவா" பற்றிய அவரது புரிதலை இக்கருத்தரங்கு கலைத்துப் போட்டிருக்கும்.

இன்று விடுதலை அடைந்திருக்கும் ('விடுதலையடைய வைக்கப்பட்டிருக்கும்" என்ற சொற்பிரயோகம்தான் சரியாக இருக்கும்) கொசோவாவின் எதிர்காலத்தை ஒரு சூனிய வெளியில் வைத்து பார்த்தது மட்டுமல்ல, இத்தகைய சுதந்தரம் அந்த இனத்திற்கு தேவைதானா? போன்ற கேள்விகளையும் பல சந்தேகங்களையும் ஒரு சேர முன்வைத்தது மேற்படி கருத்தரங்கு.

'சட்டி சுடுகிறது என்று துள்ளி அடுப்பில் விழுந்த" கதையாகவே கொசோவாவின் இன்றைய விடுதலையை கொசோவாவின் உண்மையான சுதந்திரத்தில் அக்கறையுள்ள மனிதநேயத்தில் விருப்புக்கொண்டுள்ள அறிவுஜீவிகளும், புத்திஜீவிகளும் பார்க்கிறார்கள்.

எமது ஊடகங்களில் கொசோவா பரபரப்பான பேசுபொருளாக மாறியபோதே 'கொசோவா பற்றிய எமது ஊடகங்களின் புரிதல் சரியானதுதானா?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுவதாகவிருக்கிறேன் என்று சக ஊடகத்துறை நண்பர் ஒருவரிடம் கூறியபோது, 'சோர்ந்து போயிருக்கும் மக்களுக்கு தெம்பளிக்கும் விடயமாக அது இருக்கிறது, அதை ஏன் கலைத்துப்போடுகிறீர்கள்" என்று கேட்டார்.

அவரது கூற்று எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு போராடும் இனத்திற்கு நம்பகத்தன்மை என்பது மிக முக்கியமான விடயம். அது அரசியல் சார்ந்த விழிப்புணர்வில் இருந்து பிறக்கிறது. மக்களுக்கு சரியான அரசியல் விழிப்புணர்வை கொடுக்காமல் பொய்கள், புனைவுகளின் ஊடாக போலியான நம்பிக்கைகளை ஊட்டுவது மோசமான பின்னடைவுகளுக்கு வழி வகுக்கும். கடந்த சமாதான காலத்தில் அது ஒரு வரலாறாகவே பதிவாகியிருக்கிறது.

கொசோவாவின் விடுதலை என்பது போராடும் இனம் என்ற அடிப்படையில் எமக்கு முன்தோன்றியுள்ள ஒரு நம்பிக்கைப்புள்ளி. உலக வரைபடத்தில் புதிதாக ஒரு தேசம் உருவாகியிருக்கிறது. அவ்வளவுதான்... ஆனால், எமது ஊடகங்கள் அதை ஒரு பெரிய வட்டமாக வரைந்துவிட்டன.

சொசோவாவிற்கும் தமிழீழத்திற்கும் இடையில் நிலவியல், அமைப்பு, தன்மை, தளம், கேந்திர முக்கியத்துவம் சார்ந்து மட்டுமல்ல அவற்றின் போராட்டம் சார்ந்தே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை இங்கு பட்டியலிட முடியாது. அது பேசவந்த கருத்தின் தொனியையே மாற்றக்கூடியது. சாதாரண உலக அரசியல் அறிவுள்ள ஒருவரால் மிக இலகுவாகப் புரியக்கூடியவிடயங்கள் அவை.

'அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்" என்பது இன்றைய உலக ஒழுங்கின் நவீன இராஜதந்திர சொல்லாடல்களில் ஒன்று. இது குறித்த புரிதலின் பலவீனமாகத்தான் கொசோவாவையும் தமிழீழத்தையும் ஒப்பிட்டு எமது ஊடகங்கள் 'உளறியதை" புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அடுத்தது தமிழீழம் தான் என்று சிலர் அறைகூவல் விடுத்தார்கள். சிலர் ஜோதிடக்காரர்களாக மாறி தமிழீழம் அங்கீகரிக்கப்படும் கால எல்லையைக்கூட தீர்மானித்தார்கள். வேறு சிலரோ கொசோவா -தமிழீழ ஒப்பீட்டு அட்டவணையைத் தயாரித்து எமது அங்கீகாரம் குறித்து அப்பாவித்தனமாக அறிக்கை விட்டார்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தமிழீழம் என்று ஒரு நாடு உருவாகப்போவது நிச்சயம். அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால் அது மேற்கண்ட 'உளறல்களின்" அடிப்படையில் ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

கடந்த சமாதான காலத்தில் அதற்கான விதை ஆழமாகவே ஊன்றப்பட்டு விட்டது. தோற்றுப்போன புரிந்துணர்வு உடன்படிக்கையையும், தற்போதைய கள நிலவரங்களையும் முன்வைத்து 'தமிழீழம் சாத்தியமில்லை" என்று உளறுபவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. இவற்றிற்கும் அப்பாற்பட்ட சாத்தியங்களை தமிழீழத் தலைமை நீண்ட காலங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டது. ஆனால் 'கொசோவா" போன்ற அபத்தங்களினூடான சாத்தியங்களை விலத்தி தனித்துவமான முறையில் அது வரையப்பட்டுள்ளது.

உலக ஒழுங்கை சரியாக உள்வாங்காததன் விளைவே மேற்கண்ட கொசோவா - தமிழீழ ஒப்பீட்டு குழப்பம். நாம் கடந்து வந்த பல பாதைகளும் முறிந்து போன கடந்த புரிந்துணர்வு உடன்படிக்கையும் எமக்கு அழுத்தமாகச் சொல்லும் செய்தி - ஒற்றை வரியில் சொல்வதென்றால் எமது விடுதலையை நாம்தான் வென்றெடுக்க வேண்டும். அதாவது எமது பலத்தில்தான் எமது விடுதலை தங்கியுள்ளது. எனவே நாம் பலமானவர்களாக மாறி வலுச்சமநிலையை எம்பக்கம் திருப்புவதனூடாகத்தான் எமது விடுதலையின் அடுத்த கட்டத்தை அடைய முடியும். இந்த அரசியல் புரிதலை ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் புரிய வைக்க வேண்டியது எமது ஊடகங்களின் தலையாய கடமை. இது அவசியமானது மட்டுமல்ல தற்போதைய அரசியற், கள நிலவரங்களின் அடிப்படையில் அவசரமானதும் கூட.

நாம் எல்லாம் எமது முரண்பாடுகளைக் களைந்து தேசியத் தலைமையின் கீழ் ஓரணியாகத் திரண்டு போராடிப் பெற வேண்டிய விடுதலை என்ற உண்மையை மேற்குறிப்பிட்ட அபத்தமான ஒப்பீடுகள் கலைத்தும் போடும் அபாயத்தை எமது ஊடகங்கள் மறந்துபோனது வேதனைக்குரியது.

போராட்டத்தின் பலம், பலவீனம் தொடர்பாக உண்மைச்செய்திகளை சூழலுக்கு ஏற்றவாறு சற்றே முன்பின்னாக மாற்றிக் கூறலாம். அது தவறில்லை. ஆனால் திரிக்கக்கூடாது. ஒரு போராடும் இனக்குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகங்கள் இராணுவ - படைத்துறை செய்திகளை திரித்து வெளியிடுவதையே உச்ச பின்னடைவாகப் பார்க்கப்படும் சூழலில் ஒரு அரசியல் நிகழ்வை திரிப்பது எத்தகைய அபத்தம்?

இன்று நாம் செய்யும் யுத்தம் என்பது எமது அரசியல் உரிமைக்கானது. எனவே மக்களை அரசியல் விழிப்புணர்வுள்ளவாகளாக வைத்திருக்க வேண்டியது ஊடகங்களின் கடமை. நாம் யுத்தத்தில் பின்னடைவுகளைச் சந்திந்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்காக மக்களின் அரசியல் விழிப்புணர்வை சிதைக்கக்கூடாது. மழுங்கடிக்கக்கூடாது. அதை இன்னும் கூர்மையுடன் வைத்திருக்க வேண்டும்.

உண்மையில் கொசோவா ஒரு இறைமையுள்ள தேசம், அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு, சேர்பியர்களால் அவர்கள் அடக்கப்படுகிறார்கள் -ஒடுக்கப்படுகிறார்கள் என்ற அக்கறையில் கொசோவாவிற்கு இந்த 'நீதி" வழங்கப்படவில்லை. மேற்குலக வல்லரசுகளுக்கிடையில் நடந்த சதுரங்க ஆட்டத்தில் ஒரு சாரார் பிறிதொரு சாராருக்கு வைத்த 'செக்"தான் கொசோவா சுதந்திரப்பிரகடனம்.

தமது பிராந்திய நலன், பிராந்திய மேலாண்மை தொடர்பான ஒரு வளைகோட்டுத் தத்துவத்தைக் காவித்திரியும் வல்லரசுகள், அதனூடாக வரையும் ஒற்றை அறத்தின் மிகச் சரியான சமீபத்திய உதாரணம்தான் கொசோவாவின் 'சுதந்திரப்பிரகடனம்".

1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கவாட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு ஒன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்குமிடையில் 'பிணக்குத் தீhக்கும்" முயற்சி ஒன்றில் ஈடுபட்டது. ஆனால் ஜெயசிக்குறு வெற்றி மமதையில் அந்த முயற்சியை சிங்கள அரசு புறந்தள்ளியது பல பேருக்குத் தெரியாத வரலாறு. இதன் பின்னணியில் ஒரு ஆலோகராக இருந்த ஒரு பேராசிரியரை கடந்த வருடம் டிசம்பரில் அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

அவரின் கூற்றுப்படி புரிந்துணர்வு உடன்படிக்கை அமுலில் இருந்த காலப்பகுதியில் இலங்கைத்தீவில் அனைத்து வல்லரசுகளும் தனித்தனியாக ஒரு இரகசியமான (சில வெளிப்படையாகவே) ஆய்வில் ஈடுபட்டதாகவும் தெற்காசியப் பிராந்தியத்தில் தமது பிராந்திய நலன், செல்வாக்கு, மேலாண்மை குறித்து ஒரு சதுரங்க ஆட்டத்தில் இறங்கியதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவினதும் சீனாவினதும் மறைமுகமான தலையீடுகள் மேற்குலகத்தின் காய்நகர்த்தலுக்கு பெரும் இடைஞ்சலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். உண்மையில் இலங்கைத்தீவை தமக்கான இராஜதந்திர களமாக மாற்றுவதற்கு பலரும் போட்ட போட்டியில் ஒருவருக்குமே வெற்றி கிடைக்கவில்லை என்பதுதான் நிஜம் என்று குறிப்பி;ட அந்த பேராசிரியர் அதை தனது தொலைநோக்குப் பார்வையினூடாக வெற்றிகரமாக முறியடித்தவர் நமது தேசியத்தலைவர் பிரபாகரன் என்றும் குறிப்பிட்டார். அந்த சீற்றத்தின் விளைவாகவே புலிகள் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்டதும் சில முட்டுக்கட்டைகள் புலிகளுக்கு எதிராக போடப்பட்டதும் என்பது அவரது வாதம்.

ஆச்சர்யப்படத்தக்க வகையில் உலக வல்லரசுகளுக்கு சிங்களமும் இடம் கொடுக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார். (சிங்களத்தின் தீர்க்கதரிசனமற்ற - தூரநோக்கில்லாத முட்டாள்தனமான முடிவு அது என்பதும் அவரது மேலதிக வாதமாக இருந்தது. ஏனெனில் புலிகளை வெற்றிகொள்ளலாம் என்ற மமதையில் தனது சர்வதேச நட்பை இழந்துள்ளதாகவும் அதன் விளைவாகவே தற்போதைய மனித உரிமை விவகாரங்களில் சில நெருக்கடிகளை அது சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்) விளைவு புரிந்துணர்வு உடன்படிக்கை முறிவு. இரண்டு தரப்பும் தம்மை கைவிட்ட நிலையில் தற்போது வெற்றி கொள்பவனின் பக்கம் சாயலாம் என்ற நிலையில் கள நிலவரங்களை உலகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதுதான் இலங்கைத்தீவு தொடர்பான உலகின் தற்போதைய பார்வை மட்டுமல்ல யதார்த்த நிலையும்கூட. சர்வதேச வல்லரசுகள் கொசோவாவில் பிரயோகித்த வளைகோட்டுத் தத்தவத்திற்கும் ஒற்றை அறத்திற்கும் அப்பால் விலகியே நிற்கிறது 'தமிழீழம்".

எனவே என்றைக்கும் எம்மை அங்கீகரிக்க அவை ஓடிவரப்போவதில்லை. ஆனால் எமது பலத்தை நாம் நிருபித்து ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்கும் பட்சத்தில் அவை எம்மை அஙகீகரிக்க வேண்டிய ஒரு புறநிலை ஒன்று தோன்றியிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டம் சார்ந்து இது ஒரு முக்கியமான அம்சம். ஊடகங்கள் அதைப் புரிந்து கொண்டு மக்களை அதனூடாக ஒட்டுமொத்த விடுதலையை நோக்கி அவர்களை நகர்த்தி செல்ல வேண்டும்.

கொசோவாவிற்கு பிறகு தற்போது சில அதிமேதாவிகள் நேபாளத்தில் நடந்து முடிந்த தேர்தலை முன்னிறுத்தி மாவோயிஸ்ட்கள் மாதிரி புலிகளும் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று உளறத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் மன்னராட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தையும் ஒருசேர குழப்பி ஆய்வு என்ற பெயரில் சில இந்திய, சிங்கள ஊடகங்கள் கதை விடத்தொடங்கிவிட்டன. நாம் விழிப்படைய வேண்டும். உடனடியாகவே இந்த அபத்தக்கூத்தை மறுதலித்து 'புதினம்" இணையத்தளம் ஒரு செய்தி ஆய்வை வெளியிட்டிருந்தது. பாராட்டப்பட வேண்டிய முயற்சி அது. ஊடக விழிப்புணர்வுக்கு நல்லதொரு உதாரணம் அது.

சமாதான காலத்தில் எமது தலைமையும் காங்கேசன்துறையை ஒருத்தருக்கும், திருகோணமலையை ஒருத்தருக்கும், புல்மோட்டையிலுள்ள இல்மனைட் மணலை அள்ளுவதற்கு ஒருத்தருக்கும், மன்னாரில் கடல் வளத்தை அகழ்வதற்கு வேறு ஒருத்தருக்கும் குத்தகை ஒப்பந்தம் எழுதியிருந்தால் ஒருவேளை கொசோவாவிற்கு முன்பாக நாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். கொசோவா சேர்பியாவிடம் நீட்டியிருந்த பிச்சைப் பாத்திரத்தை தற்போது உலக வல்லரசுகளை நோக்கி நீட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறது. அப்படி நாமும் நீட்டிப்பிடித்துக்கொண்டிருந்திருக்கலாம்.

கொசோவாவின் 'சுதந்திரப்பிரகடனத்தின்" பின்னுள்ள யதார்த்தமும் உண்மையும் இதுதான். கருத்தரங்கின் இறுதியில் கொசோவாவைச் சேர்ந்த ஒரு ஆய்வு மாணவி வாசித்த ஆய்வுக்கட்டுரையின் இறுதிவரிகள் இப்போதும் மனதின் ஆழத்தில் அறைந்தபடியேயுள்ளது.

'சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு வேறு ஒரு அடிமைத்தளைக்குள் இடம் மாறுவதில்லை, அடிமைத்தளைகளிலிருந்து முற்றாக விடுபடல். வல்லரசுகளே சுதந்திரம் என்ற பெயரில் இன்று எமக்கு நீங்கள் வழங்கியிருக்கும் நீதி காலம் காலமாக நீங்கள் காப்பாற்றி வரும் காலனித்துவத்துவ சிந்தனைகளின் வேறு ஒரு வடிவமா? எம்மை நாமே ஆள்வதற்கு விட்டு நீங்கள் வெளியேறுங்கள்."

நாம் ஐரோப்பிய காலனித்துவத்தின் பிடியிலிருந்து நழுவித்தான் சிங்களத்தின் பிடிக்குள் சிக்கினோம். ஏன் மீண்டும் இந்த இடமாற்றம்? அந்த மாணவி குறிப்பிட்டது, போல் சுதந்திரம் என்பது ஒரு அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு வேறு ஒரு அடிமைத்தளைக்குள் இடம்மாறுவதில்லை, அடிமைத்தளைகளிலிருந்து முற்றாக விடுபடல். நாம் முற்றாக விடுபடுவோம்.

தனது தொலைநோக்குப் பார்வையினூடாக உலக வல்லரசுகளுக்கே 'செக்" வைத்து, எத்தகைய இடர்வரினும் தலைசாயாது உறுதியுடன் போராட்டத்தை நடத்திவரும் அற்புதமான தலைமை எமக்கு வாய்த்திருக்கிறது. எமது முரண்பாடுகளைக் களைந்து அந்தத் தலைமையின் கீழ் நாம் அணி திரளவேண்டியது காலத்தின் கட்டாயம். அந்த திரட்சியே எந்த எதிர்பார்ப்புகளுமின்றி எம்மை அங்கீகரிக்கும் நிலைக்கு சர்வதேசத்தைத் தள்ளும்.

-பரணி கிருஸ்ணரஜனி-
நன்றி: சுடரொளி

0 Comments: