Saturday, May 31, 2008

'இந்தியத் தடை நீடிப்பில் நமது படிப்பினைகள்"

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மே 15 ஆம் நாளன்று இந்தியப் பேரரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருக்கிறது.

இந்தியப் பேரரசு தனது வழமையான பொய்யான கருத்துப் பார்வையிலிருந்தே, அதாவது தமிழ்நாட்டிலும் இந்தியப் பேரரசின் கீழ் இருக்கும் இதர தேசிய இனங்களிடத்திலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தடுக்கவே இத்தடை என்று கூறியிருக்கிறது.

தடைகள்தான் தாக்கத்தை ஏற்படுத்துமே தவிர- தடை நீக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது இந்திய ஆளும் வர்க்கம் குடிகொண்டிருக்கும் புதுடில்லியின் தெற்கு மாடம் எனப்படுகிற ~சௌத் புளொக்|கிற்கு இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் தெரியவில்லை போலும்!

இந்தியாவை இதற்காக நாம் கரித்துக் கொண்டிருப்பதற்கு அப்பால் நமக்கான உரத்த சிந்தனைகளை இத்தடை ஏற்படுத்தியதாக உள்வாங்க வேண்டிய தேவையும் இருக்கிறது.

உலக நாடுகளிலெல்லாம் புலம்பெயர் தமிழர்கள் அந்தந்த நாடுகளுக்கு அமைய தங்களது பரப்புரைகளை தடைகள் இருக்கின்ற நிலையிலும் மேற்கொண்டு வருகிறோம்.

அதன் விளைவாகவே சிறிலங்கா அரசாங்கமானது ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்புரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது.

ஆனால், இந்தியாவைப் பொறுத்த வரை தமிழ்நாட்டுத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ புலம்பெயர் உறவுகளின் தொடர்பாடல்கள் காத்திரமானதாக இல்லாதும் இருக்கிறது.

உலக நாடுகளில் எல்லாம் சிறிலங்கா தூதரகங்கள்- தமிழர்களைக் கண்டு அச்சப்படும் நிலையில், இந்தியாவில் இன்னமும் தமிழ்நாட்டில் சிறிலங்கா தூதரகம் திமிர்த்தனத்தோடே செயற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள ஈழ விடுதலை ஆதரவுச் சக்திகளின் நிலைதான் என்ன?

சமூக விடுதலை இயக்கங்களாக தங்களை அர்ப்பணித்துக்கொண்டு ஈழத் துயரிலும் பங்கேற்பாளர்களாகவே அவை இருக்கின்றன.

அரசியல் கட்சிகளோ அரசியல் தகமைகளுக்கு ஏற்ப நின்று கொண்டு ஈழத்துயரில் பங்கேற்பவர்களாக இருக்கின்றனர். அவர்களின் செயற்பாட்டுத் தளம் என்பது அங்கு நிலவும் சமூக- அரசியல் நிகழ்வுகள் அல்லது சூழல்களைப் பொறுத்ததாக அமைகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு பெருந்துயர் நேர்கையில் பெருங்குரலில் ஆதரவுக்கரம் நீட்டாமலும் அவர்கள் இல்லை.

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவைத் தழுவியதைத் தொடர்ந்து 'இந்திய அரசே! சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்காதே!" என்ற கோரிக்கை பெரியார் திராவிடர் கழகத்தால் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டு புதுடில்லி வரை அது விரிவடைந்து சென்றது.

புதுடில்லியில் எதிரொலித்த அந்த அதிர்வலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

அதற்கு தமிழ்நாட்டு உணர்வாளர்கள் மட்டுமே பொறுப்பானவர்கள் என்று புலம்பெயர் உறவுகள் கைகட்டி நின்றுவிட முடியாது.

தமிழ்நாட்டு உணர்வாளர்களில் பெரும்பாலானோர் குக்கிராமங்களில் வாழ்கின்றவர்களாக - நாளொன்றுக்கு 100 ரூபாய் அளவில் குறைந்த ஊதியம் பெறுகிறவர்களாக வாழ்கின்ற நிலையிலும் ஈழத் தமிழர்கள் தங்களது தொப்புள்க்கொடி உறவுகள் என்கிற சதையாட்டத்தால் நமக்காக கொடி பிடித்து சிறையேகின்றனர்- தொடர் வண்டியேறுகின்றனர்.

இந்தப் பணியையே தொடர்ந்தும் அவர்களால் செய்து கொண்டிருக்க முடியாது.

அதே நேரத்தில் அவர்கள் அரசியல் களத்தில் - அதாவது நடைமுறைக் களத்தில் நிச்சயமாக அரசாங்கத்தை அதிர வைக்கின்ற காத்திரமான பங்களிப்பாளர்களாக உருவெடுப்பதை நாம் நிராகரிக்கவே முடியாது.

இத்தகைய மன உறுதி கொண்ட தோழர்கள், இத்தகைய சமூக இயக்க- அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என்கிற சக்திகளுக்கு அப்பால் புத்திஜீவிகளை நாம் எந்த வகையில் கைக்கொண்டிருக்கிறோம் என்பதே இப்போது நம் முன் உள்ள பிரதான விடயம்.

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களே பரப்புரை செய்பவர்களாக இன்றளவும் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களை மட்டுமே சந்திப்பவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். இந்திய அரசியல் சூழல் - தாங்கள் சந்திக்கின்ற நபர்கள் - தாங்கள் பங்கேற்கின்ற கூட்டம் ஆகியவை பற்றிய எதுவித புரிதலும் அற்றவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிழையாக இதனை நாம் கருதவும் வேண்டியதில்லை.

புதுடில்லியில் நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பங்கேற்றார்.

தமிழீழம் குறித்து பேசுவதைக் கேட்க புதுடில்லியில் தமிழ்நாடு தவிர்த்த தங்களது தேசிய இனங்களின் விடுதலை குறித்த அக்கறையுடைய - ஆதரவு கொண்டோர் பங்கேற்ற அந்தக்கூட்டத்தில்,

'தமிழீழம் விடுதலை பெற்றால் இந்தியாவுக்குத்தான் நாங்கள் விசுவாசமாக இருப்போம்" என்று பேசினார்.

அங்கிருந்த அசாம் மற்றும் நாகா மாணவர்கள், 'எங்கள் தேசிய இனங்களை ஒடுக்குகிற இந்தியாவுக்குத்தான் நீங்கள் விசுவாமாக இருப்பீர்கள் எனில் எங்களின் ஆதரவு உங்களுக்கு எப்படிக் கிடைக்கும்?" என்று மடக்க, நமது கூட்டமைப்பு உறுப்பினரோ வெலவெலத்துப் போயிருக்கிறார். உடன் பங்கேற்ற தமிழ்நாட்டு புத்திஜீவி காப்பாற்றியிருக்கிறார்.

எல்லா நாடுகளிலும் தன் முனைப்பு அரசியல் உண்டு. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. நமது ஆதரவுத்தளங்களும் அதற்கு விலக்கானவை அல்ல.

தமிழ்நாட்டில் எந்த எந்த இயக்கங்கள்- எப்படியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன?

தமிழ்நாட்டில் நமக்காக தீவிரமாகச் செயற்படும் இயக்கங்களின் நிர்வாகிகள் யாவர்? அவர்களுக்கும் பிற இயக்கங்களுக்கும் இடையே உள்ள உறவுத்தன்மை என்ன?

அவர்களிடையே கருத்து வேற்றுமை அல்லது தன்முனைப்பு அல்லது ஏதோ ஒன்று இடைவெளி இருந்தாலும் அதனைத் தாண்டியதாக அவர்களை எப்படி நாம் ஒருங்கிணைப்பது என்று சிந்திப்பது அவசியமானது.

ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரோ, ஒரு இயக்கத்தின் ஊரறிந்த தலைவர் ஒருவரைச் சந்தித்த போது மற்றொரு தலைவரின் பெயரைச் சொல்லி, நான் உங்களைப் பற்றி அந்தத் தலைவரிடம் சொல்லுகிறேன்.... உங்களையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள நான் வலியுறுத்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு அவர் அழுவதா? சிரிப்பதா? எனச் சிந்திப்பாரா? எரிச்சலடைவாரா?

இங்குள்ள ஊடகங்கள் தொடர்பிலும் எதுவித புரிதலுமின்றி தொடர்பாடல்களை கூட்டமைப்பு உறுப்பினர்கள் மனம் போக போக்கில் கையாளுகின்ற பொறுப்பற்ற தன்மையை நாம் கண்கூடாகக் கண்டு தலையால் அடித்துக்கொள்ள வேண்டிய அவலத்தில் இருக்கின்றோம்.

என்னதான் வழி?

புத்திஜீவிகளைத் தெரிவு செய்வோம்.

ஓய்வு பெற்றவர்கள் - புலமை பெற்றவர்கள் - ஈழத் துயர் அறிந்தோர் - மக்கள் மத்தியில் பணிபுரிந்தோர் என ஒரு கலவையான ஒரு பரப்புரை அணி உருவாக்கப்படவே இல்லை என்றுதான் கூற முடியும்.

அதற்கான பொறுப்பு தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத்தான் உண்டு என்பதில்லை.

நிச்சயமாக புலம்பெயர் தமிழர்களுக்கே உண்டு.

தமிழ்நாட்டுத் தமிழர்களுடனான தொடர்பாடல்களை - தமிழ்நாட்டுப் புத்திஜீவிகளுடனான தொடர்பாடல்களை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்படுத்த எதுவித தடையும் இல்லை. அவர்களை ஒருங்கிணைத்துச் செயற்பட தமிழ்நாட்டில் வல்லமை கொண்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் இல்லாமலும் இல்லை.

அவர்கள் தங்களது சக்திகளுக்கு ஏற்ப இயங்கினாலும் புலம்பெயர் தமிழர்களினது நெருக்குவாரங்கள் - இடைவிடாத அழுத்தங்கள் - என்பவனற்றினூடே இயக்குகிறவர்களாகவும் நாம் இயங்கியாக வேண்டும்.

நாம் சொல்லித்தான் அவர்கள் செய்வார்களா? இல்லைதானே என்று எதிர்க் கேள்வியிட்டுக் கொள்ள வேண்டியதுமில்லை நாம். அதனைத்தான் முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ளோம். அங்குள்ள சமூக- அரசியல் சூழல்கள் அவர்களின் செயற்பாடுகளை அவர்களின் இயக்கங்கள் - கட்சிகளின் நோக்கங்கள் அவர்களின் செயற்பாடுகளைத் தீர்மானிக்கின்றன.

அதே நேரத்தில் பெருந்துயர் நமக்கு நேர்கையில் நமக்காக அழவும், குரல் கொடுக்கவும் அவர்கள் தவறுவதில்லை.

அவர்களின் நாளாந்த இயக்க- அரசியல் செயற்பாடுகளுடன் நமக்காக புத்திஜீவிகளை ஒருங்கிணைத்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது என்பது நிச்சயமாக உண்மையான ஈழத் தமிழ் ஆதரவுத் தலைவர்களுக்கு ஒரு இடையூறாக அமைந்து விடாது என்றே நம்புவோம்.

அத்தகைய புத்திஜீவிகள் இயங்க வேண்டிய தளங்களை ஏற்படுத்துவதிலும் நாமே பங்கேற்பாளர்களாகவே இருக்கிறோம். அப்படியான ஒரு செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு ஒரு பரப்புரையை புதுடில்லியில் மேற்கொண்டிருந்தால் இப்படியான விடயங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும்.

எப்படி என்கிறீர்களா?

இந்திய உள்துறை அமைச்சகத்தின் 2007-2008 ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில் ஜம்மு காசுமீரம் - நாகலாந்து - அசாம் - நக்சல் என பல்வேறு பிரச்சினைகள் அதன் தாக்கங்கள் குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது.

ஊடகங்கள்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவல் - அவர்களுக்காக கடத்தல்கள் என்று செய்தி வெளியிடுகின்றன.

ஆனால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பிலான அறிக்கையில் ஒரு இடத்தில் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயர் வருகிறது. அது தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலிலே இருக்கிறது.

ஆளும் வர்க்கம் எனப்படுகிற தெற்கு மாட அதிகார வர்க்கத்தின் சிந்தனைப் போக்கை நாம் விமர்சிக்கும் அதே நேரத்தில் பாரிய அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தினால் விரும்பியோ விரும்பாமலோ அவர்கள் சில விடயங்களை செய்தாக வேண்டிய நிலையும் வரலாம்தானே. அத்தகைய அரசியல் அழுத்தங்களை நாம் உருவாக்கினோமா?

இந்த புத்திஜீவிகள் குழுவினரை அத்தகைய அரசியல் அழுத்தங்களுக்கு பயன்படுத்தலாம்தானே?

அதேபோல்,

ஈழத் தமிழர் துயரை உடனுக்குடன் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அறிந்து கொள்ளவோ
அல்லது உண்மை நிலைகளை அவர்கள் அறிந்து கொள்ளவோ எதுவித வாய்ப்புகளும் இல்லை. தாயக ஏடுகள் எதுவும் தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவதும் இல்லை. புலம்பெயர் ஏடுகள் எதுவும் தமிழ்நாட்டுக்குள் வருவதும் இல்லை. அப்படியான ஏடுகள் புலம்பெயர் நாடுகளில் ஏராளமாக வெளிவந்த போதிலும் எந்த ஏடும் வருவதில்லை.

தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஏடுகள் தான் சட்டப்பூர்வமாக உள்ளே அனுமதிக்கப்படக்கூடாது என்று வைத்துக் கொண்டாலும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் போல்தானே இதர புலம்பெயர் நாட்டு ஊடகங்களும் போராளிகள் தொடர்பான செய்திகளை வெளியிடுகின்றன. ஆகக்குறைந்த பட்சம் அந்த ஏடுகள் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு சென்றால்தான் பல்வேறு களநிலைமைகளை அவர்கள் உணர்ந்து அதனை இதர தோழர்களுக்கும் பரப்புரைக்காக பகிர்ந்தளிக்க முடியும்.

தமிழ்நாட்டு ஊடகங்கள்- இந்திய ஊடக முகாமையாளர்கள் கொடுக்கின்ற செய்திகளைத்தான் பிரதி செய்கின்றன. ஒன்றிரண்டு ஊடகங்களே ஈழத் தமிழ் இணைய ஊடகங்களிலிருந்து உருவி எடுக்கின்றன.

ஆக ஊடக வகையில் அதாவது உண்மை நிலைமைகளை தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் உள்ள தமிழர்களுக்கும் சென்று சேர்க்கின்ற சூழலையும் உருவாக்க வேண்டியது நமது கடமையே.

நன்றி: நிலவரம் (30.05.08)

0 Comments: