Tuesday, May 27, 2008

ஏட்டுச் சுரைக்காயாகும் சட்டக் கட்டமைப்புகள்

ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. இது நமக்கு நன்கு தெரிந்ததுதான்.
இலங்கையில் இப்போது பெரும் சர்ச்சைக்குரியதாகி இருக்கும் மனித உரிமைகள் விவகாரத்திலும் இதுவே உண்மை நிலைமை என்பதைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் இலங்கை அரசுக்கு உணர்த்தியிருக்கின்றது அமெரிக்கா.

ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் எரிக்கா பார்க்ஸ் ரகில்ஸ் இலங்கை அரசுக்கு இதனைத் தெளிவு படுத்தியிருக்கின்றார்.

மூன்று நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த எரிக்கா அம்மையார் இங்கு, அரசுத் தரப்பின் உயர் தலைவர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியபின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே மேற்படி விவரத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

""இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுவதற்குத் தேவையான கட்டமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவை நடைமுறையில் செயல்திறன் உள்ளவையாகப் பணியாற்றுகின்றனவா என்பதே கேள்வி. இத்தகைய சட்டக் கட்டமைப்புகள்உள்ளன என இலங்கை கூறுவது உண்மையானாலும் நடைமுறையில் கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடராமல் தடுத்து நிறுத்த அரசு விரைந்து ஏதேனும் செய்தாக வேண்டும். உண்மையில் மனித உரிமைகள் மீறப்படாமல் பேணப்படுவதற்காக வெறும் சட்டங்கள் எழுத்தில் இருந்து பயனில்லை. செயல்ரீதியில் அவ்வாறு மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம்.''

""ஆகவே மனித உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பது சட்டத்தில் எழுத்தில் இருப்பதைவிட செயலில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே அவசியமானது. அதை இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்கடத்தல்கள், காணாமற் போகச்செய்தல் போன்றவற்றைத் தடுத்து நிறுத்த அரசு காத்திரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' என்றும் அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.

இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும் நிலைமை உருவாகியிருப்பது தொடர்பான உண்மையான அடிப்படையான விவகாரத்தை அமெரிக்கா அடையாளம் கண்டு சுட்டிக்காட்டுகின்றது என்பதையே எரிக்கா அம்மையாரின் கருத்து பிரதிபலிக்கின்றது.
மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தித் தடுக்கவும், மனித உரிமைகளைப் பேணி நிலைநிறுத்தவும் தேவையான அடிப்படைச் சட்டங்கள், ஒழுங்கு விதிகள் இந்த நாட்டில் உள்ளன.

ஆனால், அவற்றை முழு அளவில் நடைமுறைப்படுத்தி, செயற்படுத்துவதற்கான திடசங்கற்பமோ, விருப்பமோ, அதற்கான ஈடுபாடோ, உடன்பாடோ அந்தச் சட்ட அமுலாக்கத்தை வலியுறுத்தி நிலைநிறுத்தவேண்டிய பொறுப்புடைய அரசுத் தலைமையிடம் இல்லவே இல்லை.

அது மாத்திரமல்ல. அந்தச் சட்டக் கட்டமைப்பு ஒழுங்குகளைநடைமுறைப்படுத்தும் ஈடுபாடு இல்லை என்பதை விட, அந்தச் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, மனித உரிமைகளுடன் விளையாடித் தனது கைவரிசையைக் காட்டும் சட்ட முரண் போக்கிலேயே ஆட்சித் தலைமை ஊறிக் கிடக்கின்றது. அதன் விளைவாகவே ஆட்கடத்தல்கள், காணாமற் போகச் செய்தல்கள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள், வகை தொகையின்றி எல்லை மீறி "அரச பயங்கரவாதமாக' இங்கு தொடர்ந்தும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
எங்கேனும் ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதலைப் புலிகள் நடத்தினால், அந்தத் தற்கொலைக் குண்டுதாரியின் பாவனையில் இருந்த கைத் தொலைபேசியின் சேதமடைந்த "சிம்'அட்டையின் ஒரு சிறிய துண்டுப் பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, அத்தாக்குதலாளியின் பூர்வீகத்திலிருந்து நதிமூலம், ரிஷிமூலம் எனத் தாக்குதலுக்குத் திட்டமிட்டவர் வரை அனைத்தையும் துப்பறிந்து, புலனாய்வு செய்து, உளவு பார்த்துக் கண்டுபிடித்துவிடும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு தலைநகர் கொழும்பில் சந்திக்குச் சந்தி இருக்கும் சோதனைத் தடைகள், திடீர் வழிமறிப்பு சோதனை நிலையங்கள் என்பவற்றையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக வெள்ளைவானில் மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களையோ, அவற்றை ஒட்டி இடம்பெறும் கப்ப அறவீடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டும் அவற்றின் சூத்திரதாரிகளையோ கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

நிமலராஜன், நடேசன், சுகிர்தராஜன் போன்ற ஊடகவியலாளர்கள்களின் படுகொலைச் சூத்திரதாரிகளையோ
"உதயன்' அலுவலகத்துக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தியோரையோ
அல்லது "சுடர் ஒளி' அலுவலகம் மீது கிரனேட் தாக்குதல்களை நடத்தியோரையோ
ஊடகவியலாளர்கள் குருபரன், கீத் நொயர் போன்றோரைக் கடத்தியோரையோ
அல்லது "ரூபவாஹினி' ஊழியர்களை அச்சுறுத்தி அவ்வப்போது தாக்கி வருபவர்களின் பின்னணியில் இயங்கும் சூத்திரதாரிகளையோ
இந்தப் பாதுகாப்புத் தரப்பினரால் கண்டுபிடிக்கவோ அடையாளம் காணவோ முடிவதில்லை.
இத்தகைய புலனாய்வு பாதுகாப்பு கட்டமைப்புகள் மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான். அவை நடைமுறைக்கு உதவா.

நன்றி :- உதயன்

0 Comments: