அண்மையில் மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் பிரகாரம் அதிகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக யுத்தம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதாக அறியக்கிடக்கிறது. அவ்வாறாயின் வாழ்க்கைச் செலவு விஷம்போல் உயர்ந்துசெல்வதன் காரணமாக திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட ஏழை எளிய மக்கள் கூட யுத்த வெறியூட்டப்பட்டதன் பயனாக எவ்வளவு தூரம் மயங்கிப்போயுள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதாவது யுத்தத்தில் விரைந்து வெற்றியீட்ட முடியும். அண்மையிலும் அதற்கு முந்திய காலகட்டங்களிலும், உதாரணமாக முகமாலையில் அரச தரப்பில் முகங்கொடுத்திருந்த இழப்புகள் சர்வசாதாரண நிகழ்வுகளே ஒழிய, அவை படுதோல்வியல்ல அது எந்தவொரு சாதாரண போர் வீரனுக்கும் தெரிந்த விடயமாகும் என தீவிரமாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதைக் காணமுடிகிறது.
தனது பதவிக்காலம் முடிய முன்னதாக யுத்தத்திற்கு முடிவு கட்டப்போவதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா மீண்டும் அடித்துக்கூறியுள்ளார். தம்மிடம் 167,000 படையினர் உள்ளனர் எனவும், அண்மையில் முகமாலை மோதலின் பின்னர் படையினரின் மனோநிலை பாதிக்கப்படவில்லை எனவும் ஜெனரல் பொன்சேகா வழங்கிய பிந்திய செவ்வியொன்றில் குறிப்பிட்டுள்ளார். வடக்கு, கிழக்கில் அன்று ஏறத்தாழ 125,000 இந்திய அமைதிப்படையினர் (IPKF) குவிக்கப்பட்டிருந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 7 ஆயிரம் புலி இயக்க உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ள படியால் கிளிநொச்சியைக் கைப்பற்றுவது தமக்கு கடினமாயிருக்காது என ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளார். கிழக்கில் சம்பூர் கைப்பற்றப்பட்ட காலத்திலிருந்து புலிகள் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். எஞ்சியிருப்பவர்களில் 2000 பேரைக் கொன்றுவிட்டால் அவர்களால் எதிர்காலத்தில் தலையெடுக்க முடியாமல் போய்விடும் என அன்று கூறப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது.
பாதுகாப்புச் செயலாளரின் புகழாரம்
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அண்மையில் அரச தொலைக்காட்சி சேவையொன்றுக்கு வழங்கிய செவ்வியில், முகமாலையில் சென்ற மாதம் நடந்தது, "பெரிய இழப்பு" என ஒப்புக்கொண்ட அதேவேளை, அது நிச்சயமாக ஒரு படுதோல்வியோ பின்னடைவோ அல்ல என்று கூறியுள்ளார். 23.04.08 முகமாலை இழப்புகள் நீண்டகாலத்திற்குப் பின் இடம்பெற்றுள்ளன. எவ்வாறாயினும் தாம் பொருட்படுத்த வேண்டியது இறுதி இலக்கையே ஒழிய இழப்புகளை அல்ல என பாதுகாப்புச் செயலாளர் சூளுரைத்துள்ளதுடன், விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்துவதே இராணுவத் தளபதியின் மூலோபாயம் எனவும் எடுத்துரைத்துள்ளார். முப்படைத் தளபதிகள் திறமையாகச் செயற்பட்டுள்ளதாகவும் அவர் புகழாரம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கும் முன்னாள் தளபதிகளுக்கும் வெகு விமரிசையாக விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இன்றும் அதே மூலோபாயம்
இராணுவத் தளபதியின் மூலோபாயம் பற்றிப் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது, ஏறத்தாழ 20 வருடங்களுக்கு முன் ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சராயிருந்தவராகிய காலஞ்சென்ற லலித் அத்துலத் முதலியின் பதவிக்காலம் தெரிகிறது. விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்வதையே தனது குறிக்கோளாகக் கொண்டு அத்துலத் முதலி மிகத் தீவிரமாக உழைத்து வந்தவர். அடிக்கடி இராணுவ முகாம்களுக்கும் களமுனைகளுக்கும் பறந்து பறந்து சென்றவர். அதன்பின்னர் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராயிருந்தவராகிய ரஞ்சன் விஜேரத்ன, படைகளைக் கண்டால் புலிகள் நடுங்கி காற்சட்டைகளை நனைத்து விடுவார்கள், பிரபாகரன் உயிரோடில்லை அவரைப் போல் ஒருவர் (Look alike) தான் இப்போது காட்சியளித்து வருகிறார் என்றெல்லாம் பிரசாரம் செய்துவந்தவர். அதன்பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சர் பதவியேற்றவர். ஏற்கனவே தொண்டர்படையில் பதவி வகித்தவராகிய கேணல் அனுருத்த ரத்வத்த. அவர் இராணுவ சீருடையும் அணிந்து களமுனை களமுனையாகச் சென்று போர்வீரர்களுடன் உடனிருந்து உணவருந்தி உற்சாகமூட்டி வந்தவர். 1995 இல் "றிவிற\u2970?" தாக்குதல்கள் மூலம் யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகள் பிடியிலிருந்து கைப்பற்றுவதற்கு காலாயிருந்தவர். அத்தோடு `ஜெனரல்' எனும் அதிஉயர் பட்டத்தையும் ஜனாதிபதி சந்திரிகாவிடமிருந்து தட்டிக் கொண்டவர். அதன்பின்னர் ஏ9 பாதையைக் கைப்பற்றுவதற்கு `ஜயசிக்குறு" எனும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கையை ஒரு வருடகாலத்திற்கு மேலாக மேற்கொண்டு படுதோல்விக்கு இட்டுச் சென்றவர்.
இத்தகையதொரு நீண்ட வரலாற்றின் பின், இன்றைய இராணுவத் தளபதி, தனது பதவிக்காலம் முடிய முன்னர் யுத்தத்திற்கும் முடிவு காண்பேன் என்று கூறிவருவது புரியாத புதிராகவே உள்ளது. இவ்வருடத்தில் புலிகளைத் தோற்கடித்து விடமுடியும் என்பது ஆரம்ப இலக்காயிருந்தது. எமக்குத் தெரிந்தவரை இராணுவத்தளபதியின் பதவிக்காலம் இந்த வருட இறுதியில் முடிய விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான காலக்கெடு பின்னர் 2009 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவத் தளபதியின் சேவைக் காலமும் நீடிக்கப்படவுள்ளதாகக் கொள்ளலாம். அதற்குப் பின்னர் நடைபெறுவதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முகமாலை சம்பவத்தின்பின்னர் இராணுவத் தளபதி பல்குழல் ரொக்கட்டுகள் அடங்கலான பல்வேறு ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளுமுகமாக 6 நாள் விஜயத்தினை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ளார் என்பது தெரிந்த விடயமாகும்.
எவ்வளவு காலம் சென்றாலும் யுத்தத்தில் வெற்றியடைய முடியாது என்கிறார் முன்னாள் மேஜர் ஜெனரல். இதனிடையில் இராணுவ சிறப்புப்படைப் பிரிவின் முன்னாள் தளபதி ஜயவி பெர்னாண்டோ அண்மையில் "லங்காதீப" சிங்கள இதழுக்கு வழங்கிய செவ்வியில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இராணுவ முனைப்பு தொடர்பாக சற்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதாவது குறிப்பாகச் சொன்னால், எவ்வளவு காலம் சென்றாலும் யுத்தத்தில் வெற்றியடைவது இயலாத காரியமென விலாவாரியாக எடுத்துக் கூறியுள்ளார்.
நிலைமைக்கேற்ப மக்களை அதாவது சிங்கள மக்களை, ஏமாற்றுவதற்காகவே ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் இவ்வருடத்திற்குள் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளனர் எனவும் மக்கள் அந்த கயிற்றை விழுங்கி விட்டார்கள் எனவும் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். மக்களை முட்டாள்களாக்கி போரின் பக்கம் இழுக்கவே குறுகிய காலக்கெடு விதிக்கப்பட்டு, புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என 90 சதவீதம் எண்ணுமளவுக்கு பொய்பொய்யாகச் சொல்லி வருகின்றனர். ஒருபோதும் போரை முடிக்க முடியாது. அரசு புலிகளுடன் அன்றி தமிழ் மக்களுடனேயே போரிடுகின்றது என்பதை தான் உறுதியாகவும் பொறுப்புடனும் கூறமுடியுமென பெர்னாண்டோ அடித்துக் கூறியுள்ளதைக் காணமுடிகிறது.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் ஜனநாயகத்தின் பேரிலானதொரு மோசடி, கிழக்கில் அரசாங்கம் தனது பேரினவாத ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு மேற்கொண்டுள்ள பகீரதப் பிரயத்தனம் என ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். வடக்கைப் பொறுத்தவரை அங்கே தற்போது தேர்தல் நாடகம் மேடையேற்ற முடியாத நிலைமையில் ஒரு இடைக்கால சபை நிறுவப்பட வேண்டுமென முன்னர் அரச தரப்பினரால் முடிவு எடுக்கப்பட்டது. ஆயினும், "இடைக்கால சபை" எனும் சொற்பதம் தென்னிலங்கை பேரினவாத சக்திகளுக்கு ஏற்புடையதல்ல என்பதற்காக அங்கே ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அடங்கலாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான நிர்வாக சபையொன்று அமைக்கப்படவுள்ளது. அத்தோடு, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அரசியல்வாதிகளுக்கிடையே போட்டா போட்டியும் முறுகல் நிலையும் ஏற்பட்டிருந்ததாலேயே சிங்களவர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டியதாயிற்று என நியாயம் கற்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு முன்னாள் கடற்படை அதிகாரி மொஹான் விஜேவிக்ரம ஆளுநராயிருந்து வருகிறார். வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னின்று உழைத்தவர் விஜேவிக்ரம, திருகோணமலை அரசாங்க அதிபராயிருப்பவரும், முன்னாள் மேஜர் ஜெனரல் என்பதையும் காணமுடிகிறது. இவ்வாறான சிங்கள மயமும் இராணுவ மயமும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மேலோங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து வடக்கு, கிழக்கில் ஒரு பொம்மலாட்டமே நிதர்சனமாகியுள்ளது எனலாம்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா பின்னர் அவுஸ்திரேலியாவிலும் இந்தோனேசியாவிலும் இலங்கைக்கான தூதுவராகப் பதவி வகித்தவர். வடபகுதியில் தளபதியாயிருந்த காலத்தில் மிகக் கடும் போக்காளராகச் செயற்பட்டவர். அவர் கூட தனது பட்டறிவிலோ என்னவோ ஏனைய மக்களோடு நாம் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லவேண்டும். அதற்கு மனித கௌரவமும், மனித உரிமையும், இதய சுத்தியாக மதிக்கப்பட வேண்டும். பிரிவினைப் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தத்தில் வெற்றியடைவதற்கு அது அவசியமாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார். தனது இராணுவ பதவிக்காலத்து அரச பயங்கரவாதம் தான் "பிரிவினைப் பயங்கரவாதம்" என்பதற்கு வித்திட்டது என்பதையும் அவர் மறந்து விடக்கூடாது.
இலங்கையில் யுத்தம் தொடர்வது, அழிவு தொடர்வதற்கே ஒழிய, இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கோ, நாட்டை முன்னேற்றுவதற்கோ ஒருபோதும் உதவப் போவதில்லை. மாறாக தெற்காசியாவின் குணப்படுத்த முடியாத நோயாளி என்ற அபகீர்த்தியே எம்மிடம் எஞ்சிநிற்கும். இதை நாம் ஏற்று உறைந்து கிடக்கப்போகின்றோமா?
நன்றி :- தினக்குரல்
Wednesday, May 7, 2008
போர் வெறியூட்டலால் மயக்க நிலையில் தென்னிலங்கை சிங்கள மக்கள்
Posted by tamil at 11:58 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment