நாட்டில் துறைமுகங்களினதும் கடற்படைத் தளங்களினதும் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கப்பல்கள் மீதான கடற்கரும்புலிகளின் இரு தாக்குதல்களையடுத்தே கடற்படையினர் தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும் இந்தப் பாதுகாப்பையும் மீறி கடற் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தி விடலாமென்ற அச்சமும் அவர்களுக்குள்ளது.
கடந்த வருடம் புலிகளின் பல ஆயுதக் கப்பல்களை ஆழ்கடலில் வைத்து அழித்து மூழ்கடித்ததாக கடற்படையினர் தெரிவித்திருந்தனர். இதில் உண்மையில்லாமலில்லை. கடற்படையினரின் இந்தத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளுக்கு பெரும் சவாலாயிருந்த நிலையில் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் தொடர்ந்தும் வந்து கொண்டேயிருக்கிறன்றன.
புலிகளின் அனைத்து ஆயுதக் கப்பல்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு இனி ஆயுதங்கள் கிடைக்கமாட்டாதென கடற்படையினர் கூறினர். கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கடற் படைத் தளபதி வைஷ் அட்மிரல் வசந்த கரணகொட, புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதுடன் புலிகளுக்கான ஆயுத விநியோகமும் தடுக்கப்பட்டுவிட்டது. அவர்களிடமிருக்கும் ஆட்லறி ஷெல்களும் மோட்டார் குண்டுகளும் மூன்று மாதங்ககளுக்கே போதுமானது. அதன் பின் அவர்களால் எதுவுமே செய்ய முடியாதென அடித்துக் கூறியிருந்தார்.
எனினும் வடபகுதிக் களமுனையில் தற்போது படையினருக்கேற்படும் இழப்புகளில் 70 வீதமானவை புலிகள் மேற்கொள்ளும் ஷெல் தாக்குதலாலும் மோட்டார் தாக்குதலினாலுமே ஏற்படுவதாக படைத்தரப்பு கூறுகிறது. கடற்படைத் தளபதியின் எதிர்பார்ப்புக்கு மாறாக புலிகள் ஆயுதங்களைத் தொடர்ந்தும் குறைவின்றிப் பெற்று வருவதையே இது காண்பிப்பதுடன் கடந்த சில மாதங்களில் அவர்களது ஆயுதக் கப்பல்கள் பல தடவைகள் வந்து சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது. இது கடற்படையினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், களமுனையில் படையினரின் இழப்புக்களையும் அதிகரிக்கச் செய்கிறது.
இதனால்தான் புலிகளின் கடல் வழி விநியோகத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டுமென படையினர் முனைப்புக்காட்டி வருகின்றனர். இதையடுத்தே மன்னாரில் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்றி தமிழகத்திலிருந்து கிடைக்கும் விநியோகங்களை தடுக்கவும் முல்லைத் தீவு கரையோரத்தை கைப்பற்றி, சர்வதேச கடற்பரப்பூடான ஆயுத விநியோகத்தை தடுக்கவும் படைத்தரப்பு தீவிர முனைப்பு காட்டுகிறது.
புலிகளின் கடல்வழி விநியோகத்தை தடுக்க படையினர் முனையும் அதேநேரம், கடற்படையினரின் பலத்தை முடக்க புலிகளும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கடற்படையினரின் அதிகவேக டோரா பீரங்கிப் படகொன்று தாக்கி அழிக்கப்பட்ட அதேநேரம், கடந்த 10 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்படையினரின் விநியோகக் கப்பலொன்று தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
வழமையான தாக்குதல்களைப் போலன்றி, நடைபெற்ற இவ்விரு தாக்குதல்களும் கடற்படையினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளுடன் நேரடி மோதலில் ஈடுபட்டு அந்தக் கடும் மோதலின் நடுவே கடற்கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் நுழைந்து கடற்படைப் படகுகளை தாக்கியழிக்கும் நடைமுறைக்கு மாறாக, கடற்புலிகள் தந்திரமான தாக்குதல்கள் மூலம் கடற்படையினருக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது கடற்புலிகளின் இழப்புகளை வெகுவாகக் குறைத்துள்ள அதேநேரம், இந்தத் தாக்குதல்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் கண்டறிய முடியாது படையினர் தடுமாறியும் வருகின்றனர்.
நாயாறு கடற்பரப்பில் மிகவேகமாக நகர்ந்து கொண்டிருந்த அதிவேக டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டது. திருகோணமலைத் துறைமுகத்தினுள் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தரித்து நின்ற கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முதல் தாக்குதல், அதிவேகமாக நகரும் இலக்கு மீதும் அடுத்த தாக்குதல், நகராத இலக்கு மீதும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இவ்விரு தாக்குதல்களும் எப்படி நடைபெற்றதென்பதை கடற்படையினரால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அப்படி நடந்திருக்கலாம் அல்லது இப்படி நடந்திருக்கலாமென வெறும் ஊகங்களை மட்டுமே அவர்களால் தெரிவிக்க முடிகிறது.
இவ்விரு தாக்குதல்களும், கடற்பரப்பின் மேலாக வந்து மேற்கொள்ளப்பட்டவையல்ல. கடலடித் தாக்குதல்களென்பதால் அவை குறித்து கடற்படையினரால் சரியான தகவல்களை வெளியிட முடியாதுள்ளது. எனினும், கடற்கண்ணி வெடிகள் மூலம் அல்லது மனித வெடி குண்டுகள் மூலம் இந்தக் கப்பல்கள் தாக்குதல்களுக்கிலக்காகியிருக்கலாமென கடற்படையினர் கருதுகின்றனர்.
நாயாறிலும் திருமலைத் துறைமுகத்தினுள்ளும் நடைபெற்ற இரு தாக்குதல்களும் கடற்படையினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இரு தாக்குதல்களின் போதும் கப்பல்கள் அழிக்கப்பட்ட பின்னரே தாக்குதலொன்று நடைபெற்றதை படையினரால் அறிய முடிந்துள்ளது. நாயாறில் ஆழ்கடல் பகுதியில் அதிவேக டோரா படகுகள் பல ரோந்தில் ஈடுபட்டிருந்த போதும் எந்தவொரு படகினதும் ராடர் திரையிலும் சிக்காது மிகத் துல்லியமாக நீருக்கடியில் மிகவேகமாக நகர்ந்து சென்றவர்கள், அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த டோரா பீரங்கிப் படகைத் தாக்கி அழித்துள்ளனர்.
அதேநேரம், திருமலைத் துறைமுகத்தினுள் கடற்படைத் தளத்தில் பலத்த கண்காணிப்புக்கு மத்தியிலும் பத்திற்கும் மேற்பட்ட டோராப் படகுகள் தீவிர ரோந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையிலும் கடற்படையினரின் நீரடிப் பாதுகாப்பு பொறி முறையையும் (under water defence systems) தாண்டி கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு கரும்புலிகள் இத்தாக்குதலை நடத்தியதன் மூலம் இத்துறைமுகத்தினதும் கடற்படைத் தளத்தினதும் பாதுகாப்பு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து துறைமுகங்களினதும் பாதுகாப்பை புலிகள் கேள்விக்குறியாக்கியுள்ளதுடன் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் இனி அவர்கள் தங்கள் தாக்குதல்களை விஸ்தரிக்கக் கூடுமென்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
நாயாறில் நடுக்கடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்த மர்மத்தை கடற்படையினராலேயே இது வரை அறிய முடியாதுள்ளது. ஆனால் திருமலைத் துறைமுகத்தினுள் கடற்புலிகள் எவ்வாறு தாக்குதல் நடத்தினார்களென கடற்படையினர் பல்வேறு ஊகங்களை தெரிவிக்கின்றனர். எனினும் அது சரியானது தான் என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
சுழியோடிகள் உடலில் வெடிகுண்டுகளை பொருத்திக் கொண்டு எதிரியின் கண்களில் படாதவாறு நீருக்கடியால் சென்று இலக்குகளைத் தாக்கி அழிப்பது -
நீரடி நீச்சல் மூலம் கப்பல்களின் அடிப்புறத்தை தொட்டு கப்பலின் அடியில் வெடிகுண்டைப் பொருத்தி பின் அதனை வெடிக்கச் செய்து கப்பலை அழிப்பது -
திருமலைத் துறைமுகத்தினுள் இடம்பெற்ற தாக்குதல் மூலம் அழிக்கப்பட்ட `எம்.வி.இன்வின்சிபிள்' கப்பல், தாக்குதலுக்கிலக்காகி 13 நிமிட நேரத்தில் கடலின் அடியில் மூழ்கிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்ற போதும், தாக்குதலுக்கிலக்காகி சுமார் இரு மணி நேரத்தின் பின்னரே இக்கப்பல் மூழ்கியதாக கடற்படைதரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதைவிட கடல் கண்ணிவெடிகளை கப்பலின் அடிப்புறத்தில் படரவிட்டு நேரக்கணிப்பு கருவி மூலம் அல்லது சத்தத்தை எழுப்புவதன் மூலம் அல்லது அமுக்கத்தை பிரயோகித்து அல்லது அப்பகுதியில் மேற்கொள்ளப்படும் நடமாட்டம் மூலம் கண்ணிவெடிகளை வெடிக்கச் செய்து கப்பலை அழிக்கலாம். இவ்வாறானதொரு தாக்குதலை மேற்கொள்ளும் போது, கண்ணிவெடியை கடலினடியில் விதைத்த சுழியோடி அவ்விடத்திலிருந்து அகன்று விடவும் முடியும்.
திருகோணமலைத் துறைமுகக் கடலும் துறைமுகத்திற்கு வெளிப்புறக் கடலும் ஆழமானவையென்பதால் இவ்வாறான தாக்குதல்கள் இங்கு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தாக்குதலின் பின்னர் அப்பகுதியில் சுழியோடித் தேடுதல் நடத்திய கடற்படையினர், சிதைந்த உடற்பாகமொன்றை மீட்டதாக கடற்படையினர் கூறியிருந்தனர். எனினும், கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகளே இத்தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் கூறியிருந்தாலும் இத்தாக்குதலில் ஏதாவது உயிரிழப்புகள் ஏற்பட்டதா எனப் புலிகள் கூறாததால் இந்தத் தாக்குதல் எப்படி நடைபெற்றதென்ற ஊகங்கள் மேலும் அதிகரிக்கின்றன.
இதேநேரம், கப்பலின் மீது மனித வெடி குண்டுத் தாக்குதலை நடத்தி அதனை அழிக்க முடியும். புலிகளைப் பொறுத்த வரை தரையிலும் கடலிலும் மிகக் கடினமான இலக்குகளைத் தாக்க மனித வெடிகுண்டுகளை (Human Torpedoes) பயன்படுத்துவதும் இங்கு குறிப்பிட்டத்தக்கது. நாயாறில் அதிவேக டோரா பீரங்கிப் படகை புலிகள் இதுபோன்ற தொரு தாக்குதல் மூலமே அழித்ததாகக் கருதப்படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது திருமலைத் துறைமுகத்தில் கடற்படையினரின் நீரடிப் பாதுகாப்பு பொறிமுறையை ஊடறுத்துச் சென்ற கடற் கரும்புலிகள் கப்பலின் அடியில் வெடிகுண்டைப் பொருத்தி அதனை வெடிக்க வைத்து அழித்துள்ளதாக கடற்படையினர் கருதுகின்றனர்.
எனினும் தாக்குதல் நடைபெற்ற ேவளையில் அந்தக் கடற்பரப்பில் பத்துக்கும் மேற்பட்ட ரோந்துப் படகுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. அவை மிகவும் சக்திவாய்ந்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தும் அவர்களுக்கு எதுவித சந்தேகத்தையும் ஏற்படுத்தாது கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
துறைமுகப் பாதுகாப்பில் ஈடுபடும் ரோந்துப் படகுகளில் எப்போதுமே, நீருக்கடியில் சந்தேகத்திற்கிடமான நகர்வுகள் ஏதாவது இடம் பெறுகின்றனவா என்பதைக் கண்டறியக் கூடிய `சோனர்' கருவிகள் (sonar) பொருத்தப்பட்டிருக்கும். இவை எதிரொலி மூலம் நீருக்கடியிலான எந்தவொரு நடமாட்டத்தையும் இலகுவாக கண்டு பிடித்து விடக் கூடியவை. சுழியோடிகளைக் கண்டறியும் பொறிமுறையானது (Diver Detection Sonar System - DDS) நீருக்கடியிலான தாக்குதல்களை முறியடிக்க மிக நன்கு உதவக் கூடியவை. அந்தக் கருவிகள் இந்த ரோந்துப் படகுகளில் பொருத்தப்பட்டிருந்தால் இந்தத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமெனவும் படை வட்டாரங்கள் கூறுகின்றன.
இதை விட, கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவினர் (சுழியோடிகள்) மேற்கொள்ளும் தாக்குதலை, கடற்படைப் படகுகளின் இடைவிடாத கண்காணிப்பும் நீருக்கடியில் கடற்படைச் சுழியோடிகள் அடிக்கடி எழுந்தமானமாக மேற்கொள்ளும் திடீர் சோதனைகள் மூலமும் முறியடிக்க முடியுமென படைத்தரப்பு கூறுகின்றது.
அத்துடன் கடற்படைச் சுழியோடிகள் கப்பல்களின் அடிப்புறப் பகுதிகளில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் தேடுதல்களை நடத்துவதன் மூலம் கப்பலின் அடிப்புறப் பகுதியில் வெடி குண்டுகள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என்பதைக் கண்டறிய முடியும். இதன் மூலம் கப்பல் பயன்படுத்தக் கூடிய நிலையிலுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும். இதேபோல் கப்பலின் மேல் புறத் தட்டிலிருந்தும் மேற்கொள்ளப்படும் சோதனைகள் மூலம் கடலுக்கடியில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளைக் கண்டறிய முடியுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
துறைமுகங்களைப் பொறுத்தவரை அவற்றின் நீரடிப் பாதுகாப்புக்கென வகுக்கப்பட்ட விஷேட திட்டங்களில், துறைமுகத்திற்குள் நீருக்கடியால் சுழியோடிகள் நுழைவதைத் தடுக்க கம்பிவேலிகள் பொருத்தப்படும். கண்ணாடி நாரிழையிலான `நெற்' களை கடலுக்கடியில் பொருத்துவதன் மூலம் சுழியோடிகள் நீருக்கடியால் நுழைவதைத் தடுக்க முடியும். கடலுக்கடியில் கொங்கிறீற்களில் பொருத்தப்பட்ட துருப்பிடிக்காத இந்த கண்ணாடி நாரிழை நெற்கள் கடலுக்கு மேலே சுமார் 2 மீற்றர் வரை நீட்டிக் கொண்டிருக்கும். `நெற்' பொருத்தப்பட்ட பகுதிகளில் கப்பல்களின் நடமாட்டம் இருக்காது. `நெற்' பொருத்தப்படாத பகுதிகளினூடாகவே கப்பல்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்லும்.
திருகோணமலைத் துறைமுகத்திலும் வடக்குப்பக்கமாகவே இந்தப் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. தென்புறப் பக்கத்தில் இந்தப் பாதுகாப்பு வேலி இருக்கவில்லை. இதுபோன்று அங்கு பல பாதுகாப்புக்குறைபாடுகள் இருந்துள்ளன. இதனைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் நன்கு அவதானித்து அதற்கேற்பவே திட்டமிட்டு கடற்புலிகளின் நீரடி நீச்சல் பிரிவு துறைமுகத்தினுள் புகுந்து தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டபோது மட்டுமல்லாது, கடற்புலிகள் துறைமுகத்தின் பாதுகாப்பு குறித்து நீண்ட புலனாய்வுத் தகவல்களை சேகரித்த போது கூட கடற்படையினரிடம் அவர்கள் அகப்படாதது அவர்களது சிறப்பு புலனாய்வுப் பிரிவையும் சிறப்பான பயிற்சியையும் காண்பிப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடற்புலிகள் தாக்கிய கப்பல் தொடர்பாக சற்று குழப்பமுள்ளது. கடற்படையினரின் தாக்குதல் கப்பல்கள் பல அவ்வேளையில் அங்கு நின்றுள்ளன. புலிகளின் தாக்குதலுக்கிலக்கான `எம்.வி.இன்வின்சிபிள்' கப்பலுக்கு 500 மீற்றர் தூரத்தில் தாக்குதல் கப்பலான `எஸ்.எல்.என். சக்தி' நின்றுள்ளது. `இன்வின்சிபிள்' துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறைக்கு வடக்கேயும் `எஸ்.எல்.என்.சக்தி' இறங்குதுறைக்கு தெற்கேயும் 500 மீற்றர் இடைவெளியில் நின்றுள்ளன.
`சக்தி' யை தாக்க வந்த புலிகள் தவறுதலாக `இன்.வின்.சிபிள்' ளைத் தாக்கி விட்டார்களோ என்றும் கருதப்படுகிறது. அதேநேரம், தாக்குதலுக்கிலக்கான `இன்வின்சிபிள்' கப்பலிலிருந்து கிழக்குப் பக்கமாக ஒரு கி.மீற்றர் தூரத்தில் கடற்படைத் தளத்தினுன் இறங்கு துறையில் கடற்படையினரின் தாக்குதல் கப்பல்களான எஸ்.எல்.என்.சயுர, எஸ்.எல்.என்.சமுத்திரா, எஸ்.எல்.என்.சுரநிமல ஆகியனவும் தரித்து நின்றுள்ளன.
கடற்புலிகளின் இந்தத் தாக்குதலானது கடற்படையினரை பலத்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆழ்கடலிலும், துறைமுகத்தினுள்ளும் நுழைந்து கடற்படைக்கப்பல்களை தாக்கியழிக்கும் வல்லமையை புலிகள் பெற்றுள்ளமையானது வடபகுதிக் கடற்பரப்பில் கடற் புலிகளின் கையை ஓங்கச் செய்து விடலாமென்ற அச்சம் படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. விமானப் படைத் தளங்களினுள் புகுந்து ஒரேநேரத்தில் பல விமானங்களை கரும்புலிகள் அழித்தது போல் கடற்படைத் தளங்களினுள்ளும் புகுந்து கரும்புலிகள் ஒரேநேரத்தில் பல தாக்குதல் கப்பல்களை அழித்து விடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது.
புலிகளின் ஆயுத விநியோகத்தை தடுப்பதற்காக அவர்களது ஆயுதக் கப்பல்களை கடற்படையினர் அழிக்க முனைகையில், தங்கள் ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்த முயலும் கடற்படைக் கப்பல்களில் புலிகள் கைவைக்கத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம் கடற்படையினருக்கு ஏற்பட்டுள்ளது. புலிகளின் விநியோகங்களை தடுக்க படையினர் முற்படுகையில் அதனை முறியடிக்கும் நடவடிக்கையில் புலிகள் இறங்கியுள்ளனர்.
புலிகளின் இவ்வாறான தாக்குதல்களானது படையினருக்கான ஆயுத விநியோகத்திற்கும் கடல் வழியூடான படையினரின் போக்குவரத்திற்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.குடாநாட்டுக்கான விநியோகம் தற்போது பிரதானமாக கடல்வழியூடாகவே மேற்கொள்ளப்படுகிறது. குடாநாட்டிலுள்ள படையினரும் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் கப்பல்கள் மூலமே திருமலைக்கான பயணத்தை மேற்கொள்வதால் குடாநாட்டிற்கான விநியோகத்திற்கும் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாயாறு தாக்குதலும் திருகோணமலைத் துறைமுகத் தாக்குதலும் வழமையானதொரு தாக்குதலாகக் கருதப்பட முடியாது. கடற்புலிகள் தங்கள் தாக்குதல்களை விஸ்தரிப்பார்களேயானால் அது படைத்தரப்புக்கு மட்டுமல்ல, பொருளாதாரத்திற்குமே பேரச்சுறுத்தலாகி விடும். இதனால் கடற்புலிகளால் எழுந்துள்ள புதிய அச்சுறுத்தலைத் தடுக்கும் தீவிர நடவடிக்கைகளில் கடற்படையினர் இறங்கியுள்ளனர்.
நன்றி :- தினக்குரல்
Sunday, May 18, 2008
கடற்படையின் செயற்பாட்டை சீர்குலைக்கும் கடற்புலிகள்
Posted by tamil at 10:30 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment