Thursday, April 17, 2008

பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு

இந்திய அரசுக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள்.
""இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.'' என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகள் வெறும் வாய்ச் சொற்களே தவிர வேறெதுவும் இல்லை என்றுதான் தமிழ்மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு நேரடியாகவே இந்தியா மீது குற்றப்பத்திரம் வாசித்துள்ளார்கள் புலிகள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் இப்படி அப்பட்டமாக இந்தியாவைக் குறை கூறியிருக்கின்றது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும், அரசியல் தீர்வு காணப்படவேண்டும், சமாதானம் உருவாக வேண்டும் என்றெல்லாம் இந்தியா கூறுவது வெறும் வாய்ப்பந்தல் நடிப்பு; பசப்பு வார்த்தை. ஆனால் இந்தியாவின் உள்ளக்கிடக்கையோ வேறு என்பதையே புலிகள் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு தத்தளிக்கும் இலங்கை அரசுக்கு அதன் இன அழிப்புப் போருக்கு இராணுவ உதவிகள் புரிந்து, தமிழ் மக்களைக் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ள இந்திய அரசு, தனது இச் செயற்பாடு மூலம் சர்வதேச சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் அதன் ஆசிரிய தலையங்கமாகவே இக்கருத்து முன்வைக்கப்பட்டிருப்பதால் அது புலிகளின் உத்தியோகபூர்வ கருத்தியலாகவே கருதப்பட்டு கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இதற்கு அப்பால் இன்னொரு விடயத்தையும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அதுவும் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியது.

இலங்கை அரசின் போரியல் போக்குக்கு ஒத்தாசையாக இருக்கும் அதேசமயம், இலங்கை அரசு ஆக்கிரமித்த தமிழர் நிலப் பகுதிகளில் பொருண்மிய நன்மை பெறும் சிறுமைத் தனத்திலும் இந்திய அரசு அக்கறை காட்டி வருகின்றது எனப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியைப் படைகள் ஆக்கிரமித்த கையோடு அங்கே ஓர் அனல் மின் நிலையத்தை இலங்கை அரசுடன் இணைந்து அமைப்பதற்கு இந்திய அரசு உடன்பட்டமையையும் புலிகள் மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

"எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்ற கணக்கில் இந்தியா நடந்து கொள்கின்றதோ என்ற சிந்தனைப் போக்கைப் புலிகளின் இந்தக் குற்றச்சாட்டு நமக்கு ஏற்படுத்துகின்றது.
இக் குற்றச்சாட்டுகள் விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்பட்டாலும் இத்தகைய சந்தேகமும் சிந்தனையோட்டமும் சராசரி ஈழத் தமிழர் ஒவ்வொருவரினதும் மனதிலும் இழையோடுகின்றது என்பதை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகளின் குற்றச்சாட்டில் உண்மை இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். அவை வெறும் அபாண்டக் குற்றச்சாட்டுதலாகக் கூட இருக்கலாம்.

ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியே செயற்பட வேண்டும். "கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை' போல இரண்டுங்கெட்டானாக அது நடந்து கொள்ளக்கூடாது.
தாய் சேய் போல இந்தியாவின் தென்னகத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் தொப்புள்கொடி உறவுமுறை கொண்டவர்கள். "தானாடாவிட்டாலும் தசை ஆடும்' என்பதுபோல ஈழத்தமிழர்களுக்காகத் தென்னகம் கிளர்ந்தெழும் சூழல் நிலவும் இச்சமயத்தில், இந்தியா இரண்டு பக்கமும் சமாளிப்பது போலப் போலி வேடமிட்டு நடிக்கக்கூடாது; புரட்டுப் பண்ணக்கூடாது.

இலங்கைப் படைகளுக்குப் பயிற்சி உதவி, ஆயுத, தளபாட விநியோகம், கூட்டுக் கடல் ரோந்து, செய்மதி மூலமான உளவுத் தகவல் சேகரிப்பும் பரிமாற்றமும்,வான் பாதுகாப்புத் திட்டம், இலங்கை உயர் இராணுவ அதிகாரிகளுக்கு கௌரவ வரவேற்பு என்று நீண்டு செல்லும் இந்தியாவின் இலங்கைக்கான உதவித் திட்டங்கள் இலங்கை விவகாரத்தில் பாரதத்தின் பங்களிப்புத் தொடர்பாக ஈழத் தமிழர்களுக்கு சந்தேகத்தைத் தருவனவாக மட்டுமல்லாமல், தமக்கு எதிராக அயல் வல்லாதிக்கம் பெரும் துரோகம் இழைப்பதான உணர்வு நிலையையும் ஏற்படுத்தி நிற்கின்றன.

"புலிகளை அழித்துத் தமிழர்களுக்குத் தீர்வு' என்ற பெயரில் பௌத்த சிங்களப் பேரினவாதம் வரித்துக் கொண்டிருக்கும் அடக்குமுறைக் கொள்கைப் போக்கை இந்தியாவும் சுவீகரித்துக் கொண்டு விட்டதோ என்பதுதான் ஈழத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதில் இன்று நெருடும் ஒரே கேள்வியாகும்.

பாரத மாதாவே! பாவப்பட்ட இந்த ஈழத் தமிழர்களுக்கான உனது பதில்தான் என்னவோ.......?

நன்றி - உதயன்

0 Comments: