Sunday, April 27, 2008

இந்தியாவிற்கு இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே

தாரகா
சமீப காலமாக இந்தியாவின் இலங்கை மீதான கரிசனைகள் அதிகரித்து வருகின்ற பின்னனியில் நமது அரசியல் சூழலில் பரவலாக எழுந்திருக்கும் கேள்வி இந்தியா தமிழ் மக்களுக்கு சாதகமான வகையில் ஒரு நியாயமான தலையீட்டினை செய்யுமா அல்லது கடந்த காலங்களைப் போல பழைய குருடி கதவைத் திறடி என்ற கதைதானா? சமீப நாட்களில் வைகோ- மன்மோகன் சிங் சந்திப்பு, ராமதாஸின் வலியுறுத்தல் மற்றும் தமிழக சட்டசபை தீர்மானம் ஆகியவற்றின் பின்னனியில் பார்க்கும் போது மேற்படி கேள்விகள் எழுவது நியாயமானதே! ஆனால், கடந்த கால வரலாற்று அனுபவத்தில் நோக்கும் போது நிலைமைகள் அவ்வளவு எளிதானதாக இல்லை என்பதுதான் எனது அபிப்பிராயம். ஆனாலும் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவினை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது உண்மைதான்.

இந்தியாவின் தற்போதைய பிரச்சினை, சீனா முன்னர் எப்போதுமில்லாதவாறு மகிந்த தலைமையிலான சிங்களத்துடன் பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியான உறவுகளை பேணுவது ஆகும். இந்த பின்புலத்தில்தான் இந்தியா ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை கைக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆசியாவில் தனது இராணுவ ரீதியான தளங்களை விஸ்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் சீனா, அதன் ஒரு பகுதியாகவே ஷ்ரீலங்காவுடனான தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றது. இந்தியா எப்போதுமே தனது பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் இலங்கை அரசியலில் தலையீடு செய்யும் உரிமையை வெளிப்படுத்த தயங்கியதில்லை. ஆனால், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறிப்பாக தமிழர் பிரச்சினையை கையாள்வதில் இந்தியாவிற்கு ஏற்பட்ட பாரிய தோல்வி போன்ற விடயங்களால் இந்தியாவிற்கு மீண்டும் நேரடியாக இலங்கை பிரச்சினையில் தலையிடுவதில் தயக்கங்கள் இருந்தன. ஆனால், இந்த காலத்திலும் இலங்கை பிரச்சினையில் தலையிடும் ஏகபோக உரிமையை எதிர்காலத்தில் பிரயோகிப்பதற்கான இடைவெளிகளை இந்தியா பேணத் தவறவில்லை. கொழும்பிற்கு இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கி வந்ததுடன் கொழும்பிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையிலும் இந்தியா செயற்பட்டு வந்திருக்கிறது.

குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்த்த காலத்தில் இலங்கையில் அந்நிய தலையீடுகள் அதிகரிப்பது குறித்து இந்தியா அதிருப்தியடைந்தாலும் இலங்கையில் ஒரு சுமூக நிலைமையை பேணுவதில் நோர்வே ஏதோவொரு வகையில் பங்களிப்பை செய்வதையிட்டு இந்தியா அமைதிப்பட்டது. இந்த பின்புலத்தில்தான் மகிந்த ராஜபக்ஷ அரசு வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியா பேச்சுவார்த்தையை தொடருமாறு அழுத்தங்களை பிரயோகித்தது. இந்தியாவிற்கு அப்போது இருந்த உடனடி நலன், இலங்கையில் மீண்டும் பாரியளவில் யுத்தம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான். இலங்கையில் மோதல்கள் வலுவடைந்தால் அது தெற்காசிய பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றே இந்தியா கருதியது. ஆனால் இந்தியாவிற்கு மகிந்த ராஜபக்ஷ குறித்து தெளிவான கணிப்பு இருந்ததா என்ற கேள்வியைத்தான் நாம் இந்த இடத்தில் கேட்க வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாது இந்தியா தனக்கு சாதகமான சூழல் வரும்வரை காத்திருந்த போது எதிர்பாராமல் சீனா என்ற பூதம் உள்நுழைந்து விட்டதா? இதிலுள்ள சீனாவின் தலையீடானது சமீப காலமாக அமெரிக்க-இந்திய கூட்டுநலன் சார்ந்த உறவுகள் வலுவடைந்துவரும் பின்னனியில் நோக்கப்பட வேண்டியதாகும். அது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

உண்மையில் மகிந்தவின் வரவைத் தொடர்ந்து இந்திய ஆளும் வர்க்க குழுக்கள் சில, தமது அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியிருந்தன. மகிந்த ராஜபக்ஷ சிங்கள தேசியவாதத்திற்கு முன்னேறியிருப்பதன் ஆபத்துக்களை சுட்டிக் காட்டிய அக் குழுவினர், இந்தியா 87இன் உடன்படிக்கை கால அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இலங்கை விடயத்தில் நேரடியாக தலையிடுமாறு மன்மோகன் சிங்கிற்கு அழுத்தங்களை கொடுத்திருந்தன. அவர்களது கணிப்பின்படி இலங்கை சம்பந்தமான இந்திய கொள்கைகள் ஆபத்தான திருப்பத்தை ஏற்படுத்துவதற்கு முன் அதனை கட்டுப்படுத்த வேண்டிய இந்திய கடப்பாட்டை வலியுறுத்துவதாகவே இருந்தன. இது பற்றி அப்போது கருத்துத் தெரிவித்திருந்த இந்திய அரசியல் பகுப்பாய்வாளர் ஏ.பி.மஹாபற்றா புதுடில்லிக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் அயல்நாடுகளின் குழுவில் இலங்கை விரைவில் சேரக் கூடும் என எச்சரித்திருந்தார். நான் நினைக்கிறேன், இவ்வாறான பல எச்சரிக்கைகளை இந்தியா கருத்தில் கொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்தியா இவ்வாறு இருந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, சிங்களத்தை கட்டுப்படுத்துவதற்கான தனது ஆற்றல் குறித்து இந்தியா மிகவும் மிகையான மதிப்பீட்டைக் கொண்டிருந்திருக்க வேண்டும். மற்றையது, நிலைமைகளை இந்தியா குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்‌ஷ ஆட்சியை கைப்பற்றுவதற்காக சிங்கள அடிப்படைவாத அரசியல் கட்சிகளுடன் மேற்கொண்டிருந்த உடன்பாடுகள் எவையுமே இலங்கையில் ஒரு போர்தணிப்பையோ சுமூகமான நிலைமைகளையோ ஏற்படுத்துவதற்கு ஏற்புடையவையாக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீளாய்வு செய்தல், கடல்கோள் பொதுக் கட்டமைப்பை இரத்து செய்தல், எந்தவொரு சமாதான உடன்படிக்கையும் சமஸ்டி கோரிக்கையை நோக்கி செல்வதை தடுத்தல் போன்ற சமானத்திற்கு முற்றிலும் விரோதமான நடவடிக்கைகளையே உட்கொண்டிருந்தது. ராஜபக்ஷவின் மேற்படி தீவிர நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டே இந்திய ஆய்வாளர்கள் பலரும் அந்த நேரத்தில் மன்மோகன் சிங்கை எச்சரித்திருந்தனர்.

ஆனால், இவ்வாறன பின்னனியில் ஆட்சியைக் கைப்பற்றிய மகிந்தவிடமிருந்தும் இந்தியா சமாதானத்திற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டது. மகிந்தவை இந்தியாவிற்கு அழைத்து உத்தியோகபூர்வமாக பாராட்டிய மன்மோகன் சிங், புலிகளுக்கு எதிரான ஆக்ரோசமான நடவடிக்கைளை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், மகிந்த விடுதலைப்புலிகளின் பகுதிகள் மீது வலிந்து யுத்தத்தை தொடுத்த போதும், புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து ஒரு தலைப்பட்சமாக விலகிக் கொண்ட போதும் இந்தியாவால் கொழும்பை எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. மகிந்த தலைமையிலான சிங்களம் இவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு முக்கிய அனுசரனையாக இருந்தது பாகிஸ்தானும் சீனாவும் கொடுத்த உற்சாகங்கள்தான். ஆரம்பத்தில் இராணுவரீதியான முன்னெடுப்புகளுக்கான ஆயுத உதவியாக இடம்பெற்ற சீன உள்வருகை தற்போது பொருளாதார, ராஜதந்திர உறவுகள் என்பதாக வலுவடைந்திருக்கிறது.

தற்போது இதனை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் வெறுமனே கொழும்பை எச்சரிக்கும் நிலைமைகளை தாண்டிவிட்டது. கடந்த 2007 மேயில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கொழும்பு சீனா, பாக்கிஸ்தானிடம் ஆயுதங்களை பெறுவது தொடர்பில் சிங்களத்தை எச்சரித்திருந்தார். இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்பதை ஷ்ரீலங்கா விளங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அதனை மறந்து ஷ்ரீலங்கா சீனாவிடமோ அல்லது பாகிஸ்தானிடமோ ஆயுதங்களை பெற முயலக் கூடாது, இலங்கைக்கு தேவையானவற்றை நாம் எங்களது வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப வழங்குவோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு உடனடியாகவே கொழும்பின் பாகிஸ்தான் தூதரகம் தனது பதிலையும் தெரிவித்திருந்தது. அதில் பாகிஸ்தான் பிராந்தியத்தில் எந்தவொரு நாட்டினதும் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளமாட்டாது . ஆனால், இந்த விடயம் இலங்கையின் தீர்மானத்துக்குரியதாகும் என தெரிவித்திருந்தது. நாராயணனின் கூற்றுக்கு முன்பதாகவே இந்திய கொள்கைவகுப்பு மட்டத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கியமான சிந்தனைக் குழுவான பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் கற்கைகளுக்கான நிறுவனம் தனது மதிப்பீட்டை வெளியிட்டிருந்தது. சீனாவும் பாகிஸ்தானும் இலங்கையில் தலையிடுவதற்கான இந்தியாவின் செல்வாக்கை குறைக்கும் வகையில் செயற்பட்டுவருவதாக சுட்டிக் காட்டியிருந்த ஐ.டி.எஸ்.ஏ, பாக்கிஸ்தான் தனது நோக்கங்களுக்காக இலங்கையில் இருக்கும் முஸ்லிம் சமூகத்தை பயன்படுத்த முயல்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.

தற்போது நிலைமைகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. மேற்கில் பெருமளவு அம்பலப்பட்டு நிற்கும் சிங்களம் தற்போது சீனா, பாக்கிஸ்தான், ஈரான் ஆகியவற்றின் துணையுடன் தன்னை இராணுவ, பொருளாதார ரீதியில் பலப்படுத்திக் கொண்டு வருகிறது. இதில் மேற்கின் எச்சரிக்கைகளையும் சிங்களம் பெருமளவு கருத்தில்கொண்டதாக தெரியவில்லை...

ஆகவே, தொடர்ந்தும் இலங்கை அரசியலில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலான பிரதான சக்திகளின் தலையீடு அதிகரித்தே செல்லும். இந்த சூழலில் இந்தியா ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த முடிவு தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதுதான் நம் முன்னிருக்கும் கேள்வி. இந்த இடத்தில் கேட்க வேண்டிய இன்னொரு கேள்வி, இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு குறித்து கொள்கை வகுப்பின் அடிப்படை என்ன? இலங்கையில் தலையீடு செய்துவரும் சகல அந்நிய சக்திகளும் தமது உள்நுழைவிற்கான வாயிலாக பயன்படுத்திக் கொள்வது தமிழர் விடுதலைப் போராட்டத்தைத்தான். சிங்களம் இன்று இந்தியாவிற்கு எதிரான வரலாற்று எதிரிகளை உள்நுழைய விட்டிருப்பதும் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தல் என்னும் இலக்கில்தான். எனவே, இந்திய பிராந்திய பாதுகாப்பினை பேணக் கூடிய தகைமை யாருக்கு உண்டு என்பதில் இந்தியா தனது கடந்த கால அனுபவங்களை புறமொதுக்கி விட்டு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா இதுவரை காலமும் தமிழர் போராட்டம் தொடர்பில் சொல்லி வந்திருக்கும் விடயங்கள் அனைத்துமே நமக்கு நல்ல மனப்பாடமாக இருக்கின்றன. ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களின் உரிமைகள் பேணப்பட வேண்டும். தனி அரசு கோரிக்கையை ஏற்க முடியாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் அதனை பாகிஸ்தான் காஷ்மீர் விடயத்தில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டு தொடர்ந்தும் இந்தியா, பழைய குருடி கதவை திறடி என நடந்து கொள்ளுமா? அல்லது நிலைமைகளை துல்லியமாக விளங்கிக் கொண்டு நீண்டகால நோக்கில் தனது கொள்கை முன்னெடுப்பினை மேற்கொள்ளுமா? பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. ஆனால், இந்தியாவிடம் இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டும்தான். ஒன்று இலங்கையில் தனது வரலாற்று எதிரிகளின் உள்நுழைவை தடுக்கும் வகையில் சிங்களத்தை திருப்திப்படுத்தி சிங்களத்தின் போர் வெறிக்கு துணைபோவது அல்லது தமிழர்களின் போராட்டத்தை விளங்கிக் கொண்டு அதனைச் சார்ந்து தனது பிராந்திய நலன் பாதுகாப்பிற்கான திட்டங்களை வகுப்பது. நமது கடந்த கால அரசியல் அனுபவங்களில் ஒருபோதும் இந்தியா நமக்கு சார்பாக இருந்ததற்கான சான்றுகள் இல்லை.

நன்றி-
தாரகா
தினக்குரல்

0 Comments: