Monday, April 28, 2008

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

""இலங்கைத் தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று எட்டப்படுமானால் அது நிச்சயம் அவர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகக் கோட்பாட்டை அங்கீகரிப்பதை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய முடியும். அதைத் தவிர்ந்த வேறு எந்தத் திட்டமும் நிரந்தரமான, நிலைத்து நீடிக்கக் கூடிய தீர்வாக அமையப்போவதில்லை. இதனை இந்தியாவும் உணர்ந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.''
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் "டெக்கான் குரோனிக்கல்' ஊடக மையத்தின் செய்திப் பிரிவுத் தலைவருமான ஆர். பகவான் சிங் இவ்வாறு கூறியிருக்கின்றார்.
சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் லண்டன் ஹரோவில் நேற்று முன்தினம் நடத்திய கருத்தரங்கில் பகவான் சிங் உட்படப் பல ஊடகவியலாளர்களின் காத்திரமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. "இலங்கைப் பிணக்கின் மத்தியில் ஊடகம்: உண்மை எங்கே?' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்தக் கருத்தரங்கில் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்தும், ஈழத் தமிழர் பிரச்சினையின் போக்குக் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் பங்களிப்புப் பற்றிய விடயமும் விரிவாக அலசப்பட்டது.

""பதினேழு வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த துன்பியல் நிகழ்வில் சிக்கி நிரந்தரமாகத் தடைப்பட்டுத் தங்கிவிட முடியாது. கடந்த கால அனுபவச் சிந்தனையில் தேங்கி இடக்குப் பட்டு நிற்காமல் எதிர்கால நலன் நோக்கிச் சிந்தித்து ஆக்கபூர்வமாகச் செயற்பட வேண்டிய கட்டம் இந்தியாவிற்கு வந்துவிட்டது. அதற்கான ஆக்கபூர்மான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கிவிட்டன.'' என்று இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும், "டெக்கான் குரோனிக்கல்' ஆங்கில நாளிதழின் சென்னைப் பதிப்பின் ஆலோசக ஆசிரியராகப் பொறுப்பேற்கவிருப்பவருமான பகவான் சிங் மேலும் குறிப்பிட்டார்.

""ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைக்குப் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இப்போது ராஜீவின் மகள் பிரியங்கா சிறைச்சாலைக்குச் சென்று நளினியைச் சந்தித்து உரையாடியிருக்கின்றார்.

""இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தியல் நிலைப்பாடே மாநில அரசின் நிலைப்பாடுமாகும் என்று தெரிவித்து, இவ்விடயத்தில் ஒதுங்கி நின்று செயற்பட்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இப்போது தமிழகத்தின் தனியான கருத்தை வெளிப்படுத்தி, மத்திய அரசை வழிப்படுத்தும் நிலைக்கு மாறிக்கொண்டுள்ளார். இவை புதிய ஆக்கபூர்வமான பிரதிபலிப்புகள்.

""கடந்த கால சரித்திரத்தை இறுகப் பற்றிநின்று எதிர்காலச் சுபீட்சத்தைத் தொலைத்து விடமுடியாது என்ற உண்மையை இந்தியர் புரிந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
""ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு தீர்வே அது மட்டுமே சாத்தியப்படக் கூடும் என்று நான் நம்புகிறேன். இதனை இந்தியாவும் புரிந்துகொண்டிருக்கும் எனக் கருதுகிறேன்.'' என்று பகவான் சிங் மேலும் குறிப்பிட்டார்.
இந்த யதார்த்தத்தை இந்தியா உண்மையில் புரிந்துகொண்டதா? அல்லது வெளியில் ஒரு படத்தைக் காட்டிக்கொண்டு, மறைவில் தென்னிலங்கையோடு கைகோக்கும் கபடத்திட்டம் ஒன்றைத் தொடர்ந்தும் நிறைவேற்றுகின்றதா? என்ற சந்தேகம் ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை விவகாரங்களை உன்னிப்பாகக் கவனித்துவரும் நோக்கர்களுக்கும் ஏற்படவே செய்கின்றது.

இலங்கை விவகாரத்தை ஒட்டிய இந்தியாவின் நடத்தையைக் காரசாரமாக விமர்சிக்கும் விதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கையிலும் அதேபோன்று, இந்தியாவின் செயற்போக்கைக் குறைகூறும் விதத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' மாத சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கத்திலும் கூறப்பட்ட கருத்துகளும் கூட இவ்வாறு இந்தியாவின் நிலைப்பாடு குறித்த தமிழர்களின் பெரும் சந்தேகத்தைப் பிரதிபலிப்பனவாகவே கொள்ளப்பட வேண்டும்.
உண்மையில் இந்தியா என்னசெய்கின்றது? என்ன செய்யப்போகின்றது?

மீண்டும் புலிகளின் வான்தாக்குதல் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. திரும்பவும் தனது "ராடர்' சாதன வசதிகளையும் உதவிகளையும் மேம்படுத்துவதாகக் கூறி ஓடோடி வந்து ஒத்தாசை புரிந்து, இலங்கைப் படைகளின் தமிழர் தாயக ஆக்கிரமிப்புக்கு உதவப் போகின்றதா? அல்லது, இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை அரசு மீது அழுத்தம் பிரயோகித்து இலங்கையை அதன் போர் வெறிப் போக்கிலிருந்து அமைதித் தீர்வுக்கான சமாதான முயற்சிகளின் பக்கம் திருப்பும் எத்தனத்தில் ஈடுபடப்போகின்றதா?
""இப்பொழுது இந்தியா தனது வெளியுறவுக் கொள்கைப் போக்கில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது இருப்பது எப்போதும் போல இந்தச் சந்தர்ப்பத்திலும் கூட உணரப்படுகின்றது. தனது நலன்கள் எவை, அவற்றுக்குத் துணை போகின்றவர்கள் யார், அல்லது துணைபோகின்ற தரப்புகள் எவை? எத்தரப்பை அரவணைத்துக் கொள்வது போன்ற விடயங்களில் பல தடுமாற்றங்கள் கொண்டதாக இந்தியா உள்ளது'' எனப் புலிகளின் மூத்த பிரமுகர் வே. பாலகுமாரன் குறிப்பிடும் கருத்தும் இங்கு ஈண்டு கவனிக்கத்தக்கது.

இலங்கை விவகாரத்தில் சீனாவும், பாகிஸ்தானும் அதிகம் மூக்கை நுழைத்துள்ளன.
இந்தியாவின் நலன்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில், அதன் விரோதப் போக்கு நாடுகளான பாகிஸ்தானையும், சீனாவையும், இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள இலங்கையில் காலூன்றுவதற்கு வாய்ப்பு, வசதி அளித்து, வெற்றிலை வைத்து நிற்கின்றது கொழும்பு.
இதன் அர்த்த பரிமாணங்களையும் ஆழமான பாதிப்புகளுக்கான அடிப்படைகளையும் புரிந்துகொள்ளாத புதுடில்லி, இரண்டுங்கெட்டான் நிலையில் நடந்து கொள்கின்றது என்பதே தமிழர்களின் ஆதங்கம்.

உண்மையான நண்பர்கள் யார், கபட வேடம் தரித்த எதிரி யார் என்பதை அடையாளம் காணாமல், வெறும் அரசுக் கட்டமைப்புகளின் அடிப்படையில் மட்டும் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு, தனது நாட்டுக்குரிய தொடர்ச்சியான, விவேகம் மிக்க இராஜதந்திர வெளியுறவுக் கொள்கையை வகுக்க முடியாமல் தடுமாறும் இந்தியா, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படிச் செய்யப்போகின்றது?

மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங் குறிப்பிடுவது போல அல்லது எதிர்பார்ப்பது போல ஈழத் தமிழர்களின் போராட்டத்தின் நியாயமான பக்கத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா வகுத்துக்கொள்ளுமானால் அது இந்தியாவுக்கும் நல்லது. அவலப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும் நியாயம் கிடைக்கவும் வழி செய்யும்.

பாரதத்தை எப்போதும் தனது நட்புச் சக்தியாகக் கருதும் ஈழத் தமிழினம் இந்தியா நல்லதையே செய்யும் என்று இன்னமும் நம்பிக் காத்திருக்கவே செய்கின்றது.

நன்றி - உதயன்

0 Comments: