மூதூரில் சர்வதேச மனித நேயத் தொண்டர் அமைப்பின் பதினேழு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகப் புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கின்றது.
இந்தக் கொடூரத்தின் சூத்திரதாரிகள் யார், அதன் பின்புலத்தில் செயற்பட்ட அதிகாரத்தின் அரூபக் கரம் எது என்பவை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியிருக்கின்றது "மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள்' என்ற அமைப்பு
கலாநிதிகள் ராஜன் ஹுலே, ஸ்ரீதரன் போன்றோரைக் கொண்ட இந்த அமைப்பு இலங்கையில் பல்வேறு கள முனைகளிலும் இழைக்கப்படும் அராஜகங்கள் தொடர்பாக அவ்வப்போது தனது சொந்தப் புலனாய்வு அறிக்கைகளை விலாவாரியாக வெளியிட்டு வருகின்றது.
இப்போதும் கூட அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தொண்டு நிறுவனப் பணியாளர்களின் படுகொலைச் சூத்திரதாரிகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிந்த முடிவுகள் அல்ல. மேலதிக சட்ட விசாரணைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் அவை. அத்தகைய நேர்மையான நியாயமான விசாரணைகள் சாத்தியமாகும்போது, அவற்றுக்கு வழி காட்டக்கூடிய அடிப்படை அம்சங்களும், விடயங்களும் இந்த அறிக்கையில் அடங்கியிருக்கலாம்.
இந்த மனிதநேயத் தொண்டுப் பணியாளர்கள் படுகொலைக்கு அரசுத் தரப்பே காரணம் என்று குறிப்பிட்டு, அந்தக் கொடூரத்தின் பின்புலத்தில் நின்ற அதிகாரிகளின் பெயர், விவரங்களை விலாவாரியாக அம்பலப்படுத்தி மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக அமைப்பு எல்லா விடயங்களையும் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றது.
இந்த அமைப்பின் புலன் விசாரணைகளும், உண்மைகளை அம்பலப்படுத்த அது எடுத்த சாதுரியமான முயற்சிகளும் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவை என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் சில சிலாகித்துக் கூறியிருக்கின்றன.
இந்த அமைப்பினால் இப்போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் முற்றிலும் உண்மையாக இருக்கலாம். சில சமயம் உண்மையும் பொய்யும் கலந்தவையாகக் கூட அவை இருக்கலாம்.
ஆனால், இவ்வளவு காலமும் இந்த அமைப்பு வடக்கு, கிழக்குக் கள நிலைவரத்தை ஒட்டி வெளியிடும் அறிக்கைகள் பெரும்பாலும் புலிகளைக் குறை கூறுவனவாக இருந்து வந்தமையால் அந்த அறிக்கைகளைத் தூக்கிப்பிடித்து, அவற்றை அப்படியே உண்மையுள்ள "அரிச்சந்திர வாசகமாக' பிரபலாபித்து வந்தவை தென்னிலங்கை அரசும் தென்னிலங்கையும்தான்.
இப்போது மஹிந்தர் அரசின் முகமூடியைக் கிழித்து உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு இவ்விவகாரத்தில் புலனாய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கும்போது கொழும்பு என்னதான் செய்யப்போகின்றது?
இதேசமயம், இந்த மனித நேயப் பணியாளர்களின் படுகொலைகள் உட்பட முக்கியமான மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும் மேற்படி அறிக்கை குறித்து என்ன செய்யப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.
ஏற்கனவே இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளைக் கண்காணிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்களின் குழு, இவ்விசாரணையை ஒட்டி நடக்கும் குளறுபடிகள், காலதாமதங்கள், இழுபறிகள் போன்றவற்றைத் தாங்க முடியாது நேற்று முன்தினத்தோடு தனது பணியில் இருந்து ஒதுங்கிக்கொண்டு விட்டது.
இந்தச் சமயத்தில், மனிதநேயப் பணியாளர்களின் படுகொலை தொடர்பாகப் பூதம் போல் கிளம்பியிருக்கும் இந்தப் புலனாய்வு அறிக்கை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது?
ஆணைக்குழு விசாரிக்கும் ஒரு முக்கிய விவகாரத்தில் ஆணைக்குழுவின் முடிவுக்கும் தீர்மானத்துக்கும் முந்திக்கொண்டு, தன்பாட்டில் திட்டவட்டமான தீர்க்கமான தீர்மானம் ஒன்றை மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு வெளியிட்டு அம்பல படுத்தியதன் மூலம் ஆணைக்குழுவுக்கு அவதூறு ஏற்படுத்தி, ஆணைக்குழுவின் பணிக்கு ஊறு விளைவித்து விட்டது என்று தெரிவித்து அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க முயலுமா?
அல்லது பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு புட்டுப்புட்டு வைத்த உண்மைகளையும், கவனத்தில் எடுத்து அவற்றின் அடிப்படையிலும் மேலதிக விசாரணைகளை நடத்தி, உண்மைகளைக் கண்டறியும்படி உரிய புலனாய்வுப் பிரிவுகளுக்கு அது உத்தரவிட்டு, உரிய வழிகாட்டுதல்களை வழங்குமா?
அல்லது பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு அம்பலப்படுத்திய விவகாரங்களை ஒதுக்கி, உதாசீனப்படுத்தி விட்டு, ஏற்கனவே தான் கடந்து வந்த மெத்தனப் பாதையையே தொடர்ந்தும் பின்பற்றி, உண்மை, உள்ளாந்தரம் ஏதும் அம்பலமாகாமல் ஆணைக்குழு பார்த்துக்கொள்ளுமா?
இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளை நேரடியாகக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட சர்வதேசப் பிரமுகர்கள் குழு தனது பணியிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விட்டாலும் முழு சர்வதேசத்தின் பார்வையும் இந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டில் வைத்த கண் வாங்காமல் பதிந்தே இருக்கின்றது.
அதனால் இத்தகைய மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து அம்பலப்படுத்தாமல் சமாளிப்பது அல்லது சளாப்புவது இந்த ஆணைக்குழுவுக்குக் கஷ்டமான காரியமாகவே இருக்கும்.
அத்தகைய நெருக்குவாரத்துக்குள் ஆணைக்குழுவைக் கொண்டுபோய் தள்ளியிருக்கின்றது மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் தற்போதைய புலனாய்வு அறிக்கை.
நன்றி:- உதயன்
Wednesday, April 2, 2008
மெல்ல வெளிவரும் உண்மைகள்
Posted by tamil at 7:03 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment